யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.
இதன் அடிப்படையில், இனம் என்று சொல்லி வாழக்கூடிய சமூகப் பொருளாதார அடிப்படைகளை அது இல்லாதாக்குகின்றது. அவர்களின் சொந்த வாழ்விடங்களிலேயே அவர்களுக்கு சமாதி கட்டும் செயற்பாட்டை, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலியப் பாணியில் நடைமுறைப்படுத்துகின்றது.
சொந்த வாழ்விடங்களை பறிப்பதற்கான முயற்சிகள் முதல், தமிழர்களின் சொத்துரிமை சார்ந்த தனிமனித உரிமைச் சட்டங்களைக் கூட இந்த அரசு விட்டுவைக்கவில்லை. இந்த வகையில், அந்த மண்ணில் வாழும் மக்களின் சட்டப்படியான நில உரிமைகளைக் கூட, இன்று கேள்விக்கு உள்ளாக்குகின்றது.
இனவாத யுத்தம் மூலம் தமிழ்மக்களைக் கொன்றும், சொத்தை அழித்தும், அனைத்து ஆவணங்களையும் யுத்தக் கொடூரத்தின் பின்னணியில் பறித்தும், எம்மக்களை இன நீக்கம் செய்கின்றது. இதன் பின்னணியில் மக்களைப் பெருமெடுப்பில் அகதியாக்கியது. இன்று அதைச் சாதகமாகக் கொண்டு, இனத்தின் அடிக் கட்டுமானத்தையே தகர்க்கின்றனர். மீள் குடியேற்றத்தைக் கோரிநிற்கும் மக்களை, மீள்குடியேற்றம் செய்ய முனையாத இந்த அரசு தான், இனக் கணக்கெடுப்பை நடாத்துகின்றது. வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிறுத்தி, சட்ட விரோதமான இராணுவ ஆட்சியை திணித்து வரும் இந்த அரசு, தீர்வுமூலம் சிவில் ஆட்சியை உருவாக்க மறுக்கின்றது.
தன் இராணுவத்தை நிறுத்தி வைத்துக்கொண்டும், அவசரகாலச் சட்டத்தை அமுல்ப்படுத்திக் கொண்டும் தான், வடக்கு கிழக்கு மக்களை தொடர்ந்தும் அடக்கியாள அதனால் முடிகின்றது. சிவில் சமூக கட்டமைப்புக்குப் பதிலாக, எடுபிடிகளின் பொம்மை ஆட்சி திணிக்கப் பட்டிருக்கின்றது. இப்படி அங்கு மீண்டும் அமைதி ஏற்படாத இந்தச் சூழலில், அந்த மண்ணில் இருந்து வெளியேறிய அகதிகள் திரும்பமுடியாத வண்ணம், அவர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்தும் வருகின்றது. அகதியாக இலங்கையின் பிற பாகங்களிலும், இந்தியாவிலும், மேற்கிலும் பல இலட்சம் தமிழர்கள் இன்று வாழ்கின்றனர்.
அவர்களுக்கு அந்த மண்ணின் உரிமையை மறுக்கும் செயற்பாட்டை, இந்த அரசு திட்டமிட்டு முடுக்கிவிட்டுள்ளது. புலம் பெயர்ந்தவர்களை இலங்கைப் பிரஜையாக அங்கீகரிக்காத போக்கும், அவர்களுக்கு வாக்குரிமை மறுப்பு, அவர்களின் சட்டப்படியான சொத்துரிமைமீது காலக்கெடு விதித்து, திடீர் பதிவின் மூலம் இல்லாதாக்குவது.., என பாரிய அளவில் இன நீக்கம் செய்கின்றது.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், அங்கு சென்று வாழ முடியாத, இராணுவச் சூனியப் பிரதேசங்களாக, தொடர்ந்தும் அவர்களது வாழ்விடங்கள் உள்ளது.
அகதிமுகாம் மக்கள், தடைபோட்ட திறந்தவெளியில் வாழ்தலே மீள் குடியேற்றம். இந்த நிலையில், இன நீக்கம் செய்வது மட்டும், இசகு பிசகின்றி அரங்கேறுகின்றது. வடக்குக் கிழக்கில் வாழ்ந்த மக்கள், 30 வருடமாக அங்குமிங்கும் அலைந்தபடி உலகெங்கும் அகதியாக வாழ்கின்றனர். இந்த நிலையில் இப் பிரதேசத்தில் இராணுவக் குடியிருப்புகள் முதல், இனவாத குடியிருப்புகள் வரை புகுத்தப்படுகின்றது. வடக்கு கிழக்கில் எங்கும் திடீர் புத்த சிலைகள் முதல், திடீர் வழிபாட்டு மையங்கள் உருவாகின்றது.
• இராணுவ அதிகாரத்தின் துணையுடன் முளைக்கும் வியாபார நிலையங்கள்.
• தொடர்கின்ற நிலஆக்கிரமிப்புகள்.
• அதிகாரம் மற்றும் பணத்தைக் கொண்டு நிலத்தை சொந்தமாக்கும் சட்டபூர்வமான அடாவடித்தனங்கள்.
• வளர்ச்சி மற்றும் மீள்கட்டுமானத்தின் பெயரில், திட்டமிட்டு வெளியாரைக் கொண்டு வருதல்.
• மீன்பிடிக் கடல் உரிமைகள் முதல் தொழில் உரிமைகளை மறுத்து, அதை இன ரீதியாக வெளியாருக்கு கொடுத்தல்.
• அன்னிய நாட்டுக்கு நிலத்தை அபகரித்துக் கொடுத்தல்.
இப்படி சிவில் சமூகமற்ற இராணுவ மயமாக்கப்பட்ட தமிழர் மண்ணில், வகைப்படுத்த முடியாத அளவில், பல முனைகளில் தமிழ்மக்கள் இன நீக்கம் செய்யப்படுகின்றனர். இதன் விளைவால் தமிழ்மக்கள் உழைப்புசார் பண்பாட்டையும், இனப் பண்பாட்டையும் இழந்து வருகின்றனர்.
இராணுவத்தையும்,எடுபிடிகளையும் அண்டிவாழும், பொறுக்கி வாழும் பண்பாட்டை, இந்த அரசு தீவிரப்படுத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னான இனவாதம், தமிழ்மக்களை அந்த மண்ணில் இருந்து இன நீக்கம் செய்வதில் குறியாக, அதைக் குறிப்பாக முடுக்கிவிட்டுள்ளது. தமிழ் மக்களை, சிங்கள மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டுதான், அரசு இதை தீவிரமாக்கியுள்ளது. இதனைப் புரிந்து கொண்டு, மக்களைச் சார்ந்து நிற்காதவரை, மக்கள் தம்மைத் தாம் அணி திரட்டாத வரை, ஒரு அடியைத் தன்னும், இந்த இன நீக்கத்துக்கு எதிராக முன்வைக்க முடியாது.
-இரயாகரன்
முன்னணி (இதழ் -3)