அண்ணை கேக்கிறன் எண்டு குறை நினையாதையுங்கோ. ஏனண்ணை கொஞ்சம் முகம் வாட்டமாய் சோந்துபோய் வாறியள்.
எனக்கு வாற விசருக்கு நீயும் பத்தாக்குறைக்கு என்னிட்டை வாங்கிக் கட்டப்போறாய்.
அப்ப நான் கேட்டது சரியாப் போச்சு ஏதோ கொதிப்பில தான் வீட்டிலயிருந்து நடையண்ணை நடையைக் கட்டியிருக்கிறியள். என்ன ஏதும் விசயம் பாரதூரமே.
சோத்துக்கு வழியில்லாமப் பண்ணியிட்டாங்களடா என்னை, என்ரை மனிசியும் பிள்ளையளும்.அவங்கள் இண்டைக்கு சமைக்கேல்ல.
ஏன் என்ன? வீட்டில நீங்கள் ஏதாவது நெருப்பெடுத்திருப்பியள் மனுசி சமையல்ல ஸ்ரைக் அடிச்சிருப்பா. உங்களுக்கு இப்ப வயிறு பசியில காந்துது அதுதானே விசயம்.
நிப்பாட்டு. நீ அதுக்குள்ள உன்ர கற்பனையை கன்னா பின்னா எண்டு ஓடவிடாதை. அவங்கள் இண்டைக்கு வீட்டில ஏதோ பாபகியூ எண்ட கண்டறியாத ஒண்டை செய்து போட்டு வெந்ததும் வேகாததுமா இறைச்சியை வாட்டி எடுத்து திண்டாங்கள். நாசமாப் போக. எனக்கு ஒரு பருக்கை சோறில்லாமல் தலை சுத்துதடா தம்பி.
அட அதுவே விசயம். இதுக்களுக்கெல்லாம் போய் கோபப்பட்டா எப்பிடியண்ணை. அங்க போய் குந்துங்கோ அந்த மேசையில. டேய் தம்பி பரமசிவம் நடையண்ணைக்கு மேசையைத் துடைச்சுப் போட்டு இலையைப் போடு. கொஞ்சம் றேடியோவில சவுண்டைக் கூட்டி வை. நல்ல பாட்டுகள் போகுது.
'வரலாறுகள் மாறுதடா. . பசியால் பல ஏழைகள் சாவது தேசியமாதனடா. . இனித் தேன்வருமென்பதும் பால் வருமென்பதும் யோசியமானதடா. . சாட்டைகளே இனித் தீர்வுகளென்பது சூசகமானதடா மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் . . . "
இண்டைக்கு றேடியோவும் புரட்சி செய்யுது. ஆனா நடையண்ணை தான் குழம்பிப் போய் வந்திருக்கு. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையா நடையண்ணை சொன்ன வீட்டுக்கதையோட, வழமையா அவரைக் கிண்டிக் கிளறுகிற நான் தெளிவடைஞ்சு போனன். அந்தாள் வீட்டில இறைச்சி சுட்ட கதையோட கொதிச்சுப் போய் வந்து சொல்லேக்குள்ளயே எனக்கு போனமுறை சொன்ன சட்டி வந்த கதையின்ர சங்கதி வெளிச்சுப் போச்சு.
தம்பி பரமசிவம் நடையண்ணையைக் கவனி. அப்பளம் மிளகாய் பொரியல் ஊறுகாய் தயிர் மேசையில வை. சாப்பிட்டு முடிச்ச பிறகு நடையண்ணைக்கு நான் தான் கதை சொல்லப் போறன்..
ஆனால் இந்த மனிசன் இதில உள்ள ஒரு நல்ல விசயத்தைப் பாக்காம ஒரு சோத்துப்பருக்கை இல்லையெண்டதுக்காக வீட்டில கோவிச்சுக் கொண்டு வந்திருக்கு. வயசும் போகுது தானே.
அட இந்த கண்டறியாத அவசரமான உலகத்தில ஆத்தையோட பிள்ளை பேசுறத்துக்கே நேரம் இல்லையெண்டு சொல்லுதுகள். இதில இருக்கிற ஒரு நல்ல விசயத்தை இவருக்கு நான் ஒருக்கா சொல்லத்தான் வேணும்..
இந்த பாபகியூ எண்டது அந்தப் புராதன காலத்தில மனுசர்கள் வேட்டையாடிய மிருகங்களை நெருப்பில வாட்டி கூட்டமா குழுமியிருந்து பகிர்ந்துண்டு மகிழ்ந்த கூட்டுவாழ்க்கைப் போக்கின் சிறு அடையாளம். இண்டைக்கிருக்கிற அவசர காலத்தில மனுசருக்கு இதுக்காவது நேரம் கிடைச்சா கூழானாலும் கூடிக்குடி எண்டது போல அக்கம் பக்கத்தார் அறிஞ்சவர் தெரிஞ்சவர் கூட்டாளியள் சிநேகிதம் ஒண்டாய்ச் சேர்ந்து வெட்டவெளியில நெருப்புத்தணலச் சுத்திக் கூடியிருந்து குதூகலமாக வாட்டிவதக்கிய இறைச்சியை சுவைத்தபடி பலதையும் பத்தையும் பேசி குழுமமாயிருக்கிறதெண்டது. வருசத்தில ஒருநாளைக்கோ ரெண்டுநாளைக்கோ நடக்கிற விசயம். விவசாய நிலங்கள்ல வேலைசெய்யிற ஒரு கூட்டுழைப்பில் சாப்பாட்டு முறை இண்டைக்கும் இப்படித்தான் இருக்குது.
தனிமனிசனாக உடைச்சுப் போட்டு உழைப்பை உறிஞ்சிகிற இந்தக்காலத்தில இந்த மாதிரியெல்லாம் மனிச உறவை வளர்க்கேலாது. ஆடிப்பாட ஏலாது. இப்படிப்பட்ட நிலையில இந்தாள் போய் பாபகியூவைச் சொல்லி மனுசி பிள்ளையோட கோவிச்சுக்கொண்டு இஞ்சை வந்திருக்கு.
இறைச்சிய நெருப்பில வாட்டி எடுத்துச் சாப்பிட எப்படி மனிசன் பழகிக் கொண்டான் எண்டதுக்கு அத்தாட்சியாய் இருக்கிறதும் அந்தக்காலத்திய மனிசர் சகமனிசரோடே கலந்து பகிர்ந்து உறவாடி வாழ்ந்ததுக்கும் இந்தக் காலத்துப் பிள்ளையளுக்கு உதாரணமாக சொல்லக்கூடியது பாபகியூக்குள்ள கொஞ்சமாவது ஒளிஞ்சிருக்கிறத நடையண்ணை கண்டு கொள்ளயில்லைப் போல.
என்னடா தம்பி நான் சாப்பிட்டு முடிச்சிட்டு பார்த்துக்கொண்டேயிருக்கிறன். நீ என்னடா எண்டால் கல்லாப் பெட்டியில இருந்து கொண்டு கப்பல் கவிண்ட மாதிரி யோசிச்சுக் கொண்டிருக்கிறாய்.
அண்ணை நீங்கள் தான் என்னை திடுக்கிடப் பண்ணிப் போட்டியள் நீங்கள் தான் காரணம் என்ர யோசினைக்கு.
ஏன்டா அப்பனே சட்டி வந்த கதைக்கோடா இப்பிடி மண்டையை உடைக்கிறாய்.
நீங்கள் அந்த முடிச்சை எப்பவோ அவிட்டுப் போட்டியள். எப்பிடியெண்டு சொல்றுறன் கேளுங்கோ.
நீங்கள் வந்தவுடன் பாபகியூ கதை சொன்னனியளெல்லோ. அந்த பாபகியூ எண்டது தகிக்கிற நெருப்புத்தணலுக்கு மேலே ஒரு வட்ட வடிவில இரும்பு கம்பிவலையை போட்டு அதுக்கு மேல இறைச்சியை அடுக்கி வாட்டி வேகப்பண்ணுகிறது தானே. சும்மா தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருங்கோ நான் சொல்லிக்கொண்டிருக்கிறன்.
நெருப்புத் தணலுக்கு மேல ஒன்றோட ஒண்டு படுமாப் போல நேரடியா இறைச்சித் துண்டுகளைப் போட்டு வேகவைச்சா இறைச்சித் துண்டு பொசுங்கி தணல் படுகிற இடமெல்லாம் அது கருகி கரியாப் போயிடும் வேகிறதுக்கிடையில இறைச்சித் துண்டில நெருப்பும் பிடிச்சு விடும். இறைச்சி கருகிச் சாம்பலாகி விடும். தடுக்கிறதுக்கு என்ன வழி?
இப்ப இந்த இரும்புக்கம்பி வலை இருக்குது. இரும்போவேற எந்த உலோகங்களோ மனிச வரலாற்றில கண்டுபிடிக்கப்படாத பண்டைய காலத்தில இந்த இடையில இருந்த பொருள் என்ன எண்டது எனக்கு விளங்கிப் போச்சு.
என்னப் பெத்த அப்பனடா எனக்கு போட்ட வெறியும் முறிஞ்சு போச்சு. நீ சொல்லு சொல்லு. அண்டைக்கு நீங்கள் சொன்ன நெருப்புக் கதையில காடு, மழை, மண் எண்டும் சிலதுகளை நீங்கள் சொன்னனியள் தானே. அந்தக் கதையில மண் நெருப்பில கருகாம அழியாம இருந்ததெண்டு மனிசன் கற்றுக் கொண்டான் எண்டும் சொன்னளியள் தானே.
நூலின்ர ஒரு தலைப்பைப் பிடிச்சா மற்றத் தலைப்பைப் பிடிக்க என்னண்ண கஸ்டம். மனிச இன வரலாற்றில இந்த நிமிசம் வரைக்கும் மனிசன் தச்சனாக இருந்திருக்கிறான். அம்பு வில்லு எண்டு கூரிய வேட்டைக்கருவியள எல்லாம் அவன் தன்னுடைய தேவைக்கு தானே தயாரிச்சான்.
இப்ப தான் அவன் முதன்முதலா குயவனாக சமையற்காரனாக தன் வரலாற்றில கால் பதிக்கிறான். இதுக்கு எவ்வளவோ காலம் போன பிறகாலதான் அவன் கொல்லனாக மாறி இருக்க வேணும்.
நெருப்புக்கும் இறைச்சிக்கும் இடையில ஏதோ வந்தாகவேணும். இயற்கையிட்டயே மீண்டும் இதுக்கு அவன் விடை தேடினான். மழை பெய்தது. காடுகள் நனைஞ்சது மட்டுமல்ல மண்ணும் நனைஞ்சது. கழிமண் கிடைத்தது. விடையும் கிடைச்சது. கழிமண் நெருப்புக் கொண்டு சுடப்பட்டது. சட்டி சுட்டாகிவிட்டது.
தம்பி இப்ப நான் பறையிறன் நீ கேளு. உலோகப்பாத்திரங்களுக்கு முன்தோன்றி மூத்ததான மட்பாண்டங்கள் மனிசன்ர வரலாற்றை மாத்தி வைக்க ஆரம்பிச்சதடா தம்பி. நெருப்பு தான் தீண்டும் பொருட்களை எரிய வைக்கும் இல்லாட்டா இளகப்பண்ணி உருமாற வைக்கும். குளிர வைக்கும் போது அவை நெருங்கி இறுகி வரும் எண்ட இந்த அநுபவ அறிவு கன காலத்துக்குப் பிறகு உலோகங்கள மனிசன் கண்டுபிடிச்ச கையோட அவனுக்கு ஒரு அறிவுப் பொக்கிசமாப் போச்சு. அதோட சமுதாயமும் வேறா மாறிப் போச்சுதடா தம்பி.
சமுதாயம் இப்படித்தாண்டா தம்பி மாற்றங்களோட இயங்கிக் கொண்டிருக்கு. இதுக்குள்ள இந்தப் பணம் முளைச்ச பின்னால தான்ரா மனித உறவுகளுக்கும் உழைப்புக்கும் இடையில விரிசல் விழுந்ததடா தம்பி.
அண்ணை அதை விடுங்கோ இப்ப நீங்கள் ஏன் கோவிச்சுக் கொண்டு வந்தனியள்.
தம்பி உவன் எங்கட பரமசிவம் ஏன் ஒரு மாதிரி முழிக்கிறான் எண்டத அறிஞ்சு வை அதுக்குப்பிறகு நான் மிச்சத்த பிறகு சொல்லிறன். நடையண்ணை விறுவிறென்று நடையைக் கட்டினார்.
நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் - றேடியோ கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது.
தொடரும்
முன்னணி (இதழ் -2)