இலங்கை மக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான புதிய இராணுவ முகாங்கள்...
மக்களைக் கண்டு அஞ்சும் மகிந்த அரசு, இராணுவத்தை பலப்படுத்தி நாட்டை இராணுவ மயமாக்குகின்றது. நாடு முழுக்க ஏற்கனவே இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக நூற்றுக்கணக்கான புதிய இராணுவ முகாங்களை நிறுவவுள்ளதாக மகிந்தா குடும்பம் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கிலோ கெடுபிடியான இராணுவ ஆட்சி தான் ஏற்கனவே நடக்கின்றது. இராணுவத் தலையீடு இல்லாத சிவில் சமூக நிகழ்வுகள் அங்கு கிடையாது. இதை மீறி நடந்தால் அதை சட்டவிரோத செயலாகவும், இராணுவத்துக்கு எதிரான சதியாகவும் கூறி, அதற்கு எதிராக இராணுவத்தைக் கொண்டு கெடுபிடிகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவுகின்றது.
வடக்கு நோக்கி செல்லும் பெரும் வீதிகளில் உள்ள தேநீர் கடைகளைக் கூட மக்களிடம் விட்டுவைக்காது, அதை இராணுவம் தான் நடத்துகின்றது. வடக்குக்கிழக்கில் இராணுவம் தலையிடாத எதுவும் கிடையாது. புத்தர் சிலையை ஆங்காங்கே நிறுவுவது, வடக்கு கிழக்கு மக்களின் ஆதி வரலாற்றை மாற்றி எழுதுவது என்று, எங்கும் இராணுவம் தன் மூக்கை நுழைத்து வருகின்றது.
யுத்தம் நடந்தபோது மக்களுக்கும் இராணுவத்துக்கும் இருந்த பாரிய இடைவெளி, வெளிப்படையாகவே கொலை, பாலியல் வன்முறை, சித்திரவதை, கடத்தல், சொத்தழிப்பு ..., என்று பல தளத்தில் இயங்கியது. யுத்தத்தின் பின்னாக, மக்களின் அன்றாட வாழ்வினுள் தலையிட்டு அதன் கலாச்சார சமூக கூறுகளுக்குள் புகுந்து ஒடுக்குமுறையை ஏவுகின்றது. ஓரினம், இனமாக நீடிக்க அடிப்படையாக இருக்கின்ற பொருளாதாரம், நிலத்தொடர், மொழி, பண்பாட்டுக் கூறு என்பன அடிப்படையானது. இன்று பண்பாட்டுக் கூறு மீது கூட, இராணுவம் தலையிட்டு தாக்குதலை நடத்துகின்றது.
தமிழ்மக்களின் பண்பாட்டுக் கலாச்சாரத்துடன் அந்நியமானவர்கள், அதுவும் தமிழ்மக்களை ஆயுத முனையில் ஒடுக்கியவர்கள் தமிழ்மக்களின் அன்றாட சமூக வாழ்வியலில் தலையிட்டு இராணுவமயமாக்கல் மூலமாக மக்களை அடக்கியொடுக்கி ஆள்வதை தொடர்கின்றனர்.
இதன் பின்னணியில் இன்று வடக்கு கிழக்கில் பௌத்தத்தைப் பரப்புவதற்காக, மகிந்த குடும்பம் எடுகின்ற மற்றோர் அடாவடித்தனமான நடவடிக்கை தான் பௌத்தத்தைப் பரப்பும் சங்கம். இதன் மூலம் மக்களை மதரீதியாகவும் பிரித்து அடக்குமுறையை ஏவியும் ஆள நினைக்கின்றது. இதற்கு அமைவாக சாதிய முரண்பாட்டை கூர்மையாக்கி, பௌத்த மதத்தை வடக்கில் திணிப்பதன் மூலமும், மக்களை பிரித்து மோதவிடுவதன் மூலமும் இராணுவ ஆட்சியை திணிக்கின்றனர்.
வடக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள இராணுவமயமாக்கலை, வடக்குக் கிழக்கு அல்லாத பகுதிக்கு மகிந்தா குடும்ப சர்வாதிகாரம் படிப்படியாக முன்நகர்த்துகின்றது. நாடு தழுவிய அளவில் நூற்றுக் கணக்கான புதிய இராணுவ முகாங்களை நிறுவும் முயற்சி, நாட்டை இராணுவமின்றி இனி மகிந்தா குடும்பம் ஆள முடியாது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி, ஆசிரியர்களுக்கான இராணுவப் பயிற்சி, வடக்குக் கிழக்கு கடந்து பிரதேசங்களில் இராணுவம் உருவாக்கியுள்ள மலிவு விலைக் கடைகள், இராணுவத்தை முன்நிலைப்படுத்திய அரச நிகழ்வுகள் மற்றும் இலங்கை முழுக்க அதிகரிக்கும் இராணுவத் தலையீடுகள், இலங்கை முழுக்க இராணுவ ஆட்சியை படிப்டியாகவே மகிந்தா குடும்பம் பிரகடனம் செய்கின்றது.
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது, இந்த இராணுவ மயமாக்கலுக்கு எதிரான திசையில் தான் அது இயல்பில் இருக்கின்றது. இந்த இராணுவமயமாக்கல் கூட, தீர்வுத் திட்டத்தை சாத்தியம் அற்றதாக்குகின்றது. அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், திருத்துதல் என்பதெல்லாம், இந்த இராணுவமயமாக்கல் உள்ளடக்கத்துக்கு உட்பட்ட எல்லையில் தான் முரண்டுபிடித்து நிற்கின்றது.
தனது குடும்ப சர்வாதிகார ஆட்சியை பாதுகாக்க, சர்வதேச நாடுகளுக்கு இடையிலான முரண்பாட்டை கையாள்வது, இயல்பில் அவர்கள் தலையீடுகளை அதிகரிக்க வைத்துள்ளது. இது அரசுக்கு எதிரான கூலிக் குழுக்களை ஆயுதமேந்திய வடிவில் தோற்றுவிக்கும் எல்லையில் தான், அரசு தனக்கு எதிரான சர்வதேச முரண்பாடுகளை உருவாக்கி வருகின்றது. மக்களைப் பிளக்கின்ற முரண்பாடுகளை கூர்மையாக்கிய படி, இராணுவம் மூலம் கண்காணிக்கும் ஆட்சி அமைப்பாக மாற்றியபடி, இலங்கையை கொந்தளிப்பான சூழலுக்குள்ளும், சதிகளுக்குள்ளும் அடக்கியொடுக்கி ஆள நினைக்கின்ற மகிந்தா குடும்ப சர்வாதிகாரம் இலங்கை வாழ் அனைத்து மக்கள் மேலான இராணுவ ஆட்சி தான், மகிந்த சிந்தனையிலான சாரப்பொருள். மக்களைக் கண்டு அஞ்சும் மகிந்த குடும்பம் இராணுவத்தை நம்பி செயலாற்றுகின்றது.
இதை புரிந்துகொண்டு, அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து போராடாத வரை, நாம்
எதையும் வெல்லப் போவதில்லை. இதுதான் எம் முன்னுள்ள அனைத்தும் தழுவிய உண்மையுமாகும்.
முற்றும்
இரயாகரன்
முன்னணி (இதழ் -2)