உச்சி மீது குத்தி வீழ்ந்த சூரியன்
சடலமாய்க் கிடந்து தகிக்கின்றான்
எந்தன் காய்ந்த தலை முகட்டில்.நேற்றுப் பெய்த அடைமழையால்
எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேலென்ற பற்றைக் காடுகள்.
ஆனாலும்..,
விடம் கொண்ட பிராணியினம்
அடை காத்துப் பொரித்தவையும்
இவ்விடம் எல்லாம் தமதென்று
தனித் தலைதூக்கி
இரு நாவுகளை நீட்டிநீட்டி
எம் பாதச் சுவட்டிடையே
நெளிந்தோடிப் பயங்காட்ட
இப் பற்றைக் காடுகளில்
பெரு ஊனுண்ணிமரம் கொடிகள்
வாழ்ந்த கொலைகாரக் காடுகளாய்
மனதெனதில் காட்சியாகின்றேன்..!?
உந்தக் காட்டுக்குள்
ஏரிழுத்து சூடடித்து
ஏழ்மையான மாடடித்து
அதன் தோலுரித்து தறிதைத்து
அதைக் காலுறையாக்கிய சிலர்
பேயோட்டும் படையணியாய்
இந்தக் காட்டுப் பக்கந்தான்
அடிக்கடி வருவினமாம்..?
இடக்கு முடக்காய்
அவர்களிடம் அகப்பட்ட பலபெயர்கள்
அடி மாடாய்..! அனாதரவாய்..!!
அந்த ஊனுண்ணி வனத்துக்கு
வற்றாத தீனியாகிப் போயினராம்..!?
இந் நிலையெல்லாம் எதற்காக..!!?
வனமழித்து அறு திணை வளர்த்த ஓரினத்தை..!
கடலலைந்து கரையொதுங்கி
பேரினமாகியோரின் தறுதலைகள்
எங்களை ஏறி உழுதனராம் என்பதனால்..!?
எம்மினப் பண்பென்ற பெருமைகளை
சுமையாகப் பினாத்துகின்ற
சுந்தரத் தமிழினமே..!
நீ..!?
உந்தனுக்குள் மனிதமற்றுச் சாதிபார்த்து
உனை அறுக்கும் ஆரியத்து மதங்களோதி
மறு இனத்தை மதிக்காத துவேசங்கொண்டு
குறு நிலமறுக்கும் பிரதேசவாதம் பூண்டு
தமிழ்க் குறுந்தேசிய வர்க்கம் போர்த்து
திரிகின்ற உன் தடம் பார்த்தும்
நான் அஞ்சுகிறேன்..! அஞ்சுகின்றேன்..!!
உனையான ஊனுண்ணி வனமிருக்கும்
எந்தன் நிலமான நிலம் பார்த்து.
ஆனாலும் நான் வருவேன் எனையான தோழருடன்
உந்த ஊனுண்ணி வனமழித்து
ஏர் பூட்டி அதையுழுது
எப்போதும் மக்களுக்காய்
பொதுவான வயல் விளைக்க.
- மாணிக்கம்.
முன்னணி (இதழ் -2)