Language Selection

இதழ் 2
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1.உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்...

'உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்" என்ற மகிந்த ராஜபக்சாவின் குற்றவாக்கு மூலத்தில் எதற்காக, எதைக் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்கின்றனர்? யுத்தக் குற்றம் எதையும் நாங்கள் செய்யவில்லை என்று கூறிவருகின்ற அரசு, மறுபுறம் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்கின்றது. எதை? குற்றம் இழைக்கவில்லை என்றால், காட்டிக்கொடுக்க எதுவுமில்லை. காட்டிக் கொடுக்க ஏதோ இருக்கின்றது என்றால், அங்கு குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது.

"காட்டிக் கொடுக்கமாட்டோம்" என்று கூறி, குற்றம் நடந்ததாக சுயவாக்கு மூலம் தருகின்றது அரசு. ஆக அரசு குற்றமிழைத்ததை ஒத்துக்கொள்ளும் அதேநேரம், யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்கின்றனர்? சரி யாரை? இங்கு உங்களை என்று குற்றஞ்சாட்டி, அது நாங்களல்ல என்று தமது குற்றத்தை அப்பாவி இராணுவ வீரன் மீது சுமத்துகின்றது. இப்படி தங்களின் குற்றத்தை மூடிமறைக்க, பேரினவாத தேசிய வெறியை முன்னிறுத்தி குற்றத்தை மற்றவர்கள் மேல் அபாண்டமாக சுமத்துகின்றது அரசு. ஆக இங்கு காட்டிக் கொடுக்க ஏதோ இருக்கின்றது. யாரோ போர்க்குற்றத்தை இழைத்துள்ளனர் என்பதை, ஜனாதிபதி மகிந்தாவின் இந்தக் கூற்றும் உறுதி செய்கின்றது.

 

இப்படியிருக்க நாங்கள் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்ற பாசிச கூச்சல்களுக்கு இடையில் தான், 'உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்' என்கின்றனர். இப்படி உலகறிய மகிந்த சாட்சியமளிக்கின்றார். நாங்கள் குற்றமிழைத்து இருக்கின்றோம், ஆனால் அதைக் காட்டிக்கொடுக்கமாட்டோம் என்கின்றார். இப்படி ஜனாதிபதியே குற்ற வாக்குமூலம் கொடுக்கின்றார். இதுவே ஒரு போர்க்குற்ற சாட்சியம் தான். குற்றத்தை மூடிமறைப்பதும், அதற்கு பாதுகாப்பு வழங்குவதும் கூட இங்கு மற்றொரு போர்க்குற்றமாகும். இங்கு போர்க் குற்றமிழைத்தது யார்? மகிந்தவும், மகிந்த குடும்பமும் தான். அவர்களுக்கு துதிபாடும் கூட்டமும் தான் குற்றமிழைத்தது. ஆக மகிந்த குடும்பம் தங்களைப் பாதுகாக்க, சிங்கள மக்களையும், இவர்களின் கட்டளையை ஏற்று கூலிக்கு யுத்தம் செய்த சிங்கள படையையும் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்று கூறுகின்றனர். இங்கு மகிந்த குடும்பமல்லாத மற்றொரு ஆட்சியில், உங்களை காட்டிக்கொடுக்க என எதுவும் இருப்பதில்லை என்பது மற்றொரு உண்மையல்லவா.

தங்கள் இனவழிப்பு குற்றங்களையும், அந்த இனத்தை கொள்ளையிட்டு குவித்த சொத்தையும் பாதுகாக்க, மக்களையும் படைவீரர்களையும் குற்றமிழைத்ததாக இவர்கள் உலகறிய கூறுகின்றனர். இப்படி இவர்கள் செய்யாத குற்றத்தை படைவீரர்கள் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இப்படி அடிக்கடி நான் "உங்களைக் காட்டிக் கொடுக்கமாட்டேன்" என்று கூறுகின்றார், இலங்கை ஜனாதிபதி. சிங்கள மக்களோ அல்லது அரசின் கட்டளையை ஏற்று யுத்தத்தில் சண்டை செய்தவர்களும் போர்க் குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆக மிஞ்சினால் உங்கள் இராணுவக் கட்டளையை ஏற்று, அதை அமுல்படுத்தியவர்கள். ஆக அவர்களைக் காட்டிக்கொடுக்க இங்கு எதுவுமில்லை. ஷசிங்களவன் என்றால் துரோகி| என்று குறுந்தமிழ்த்தேசியம் கூறுவது போலத்தான், மகிந்தாவும் சிங்கள மக்களையும் அவர்கள் புதல்வர்களையும் பார்த்து கூறுகின்றார், "உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்" என்று. ஆக தமிழ் சிங்கள குறுந்தேசிய அரசியல்வாதிகள் எந்த வேறுபாடுமின்றி, சிங்கள அப்பாவி மக்களை துரோகியாகவும், குற்றவாளியாகவும் காட்டுகின்றனர். இப்படி மக்களை பணயம் வைத்து நடத்தும் பித்தலாட்ட தேசிய அரசியல் மறுபக்கத்தில் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, மக்களை குற்றமிழைத்ததாக உலகறியக் கூறுகின்றனர்.

"வெளிநாட்டினர் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை" என்று தேசத்தின் இறைமை பற்றி கூச்சல் எழுப்பியபடி தான், மக்களை காட்டிக் கொடுக்கமாட்டேன் என்கின்றனர். இப்படி இதைக் கூறிக்கொண்டு, தங்களை பாதுகாக்க இட்டுகட்டி நடத்துகின்ற பேரினவாதக் காட்டிக்கொடுப்புத்தான் இது. தாங்கள் செய்த குற்றத்தை மூடிமறைக்க, அதை சிங்கள மக்கள் மீதாகவும் அவர்களின் குழந்தைகளுக்காகவும் செய்ததாக கூறி வழங்கும் குற்ற வாக்குமூலம், அப்பாவிகள் மேலான இட்டுக்கட்டிய காட்டிக் கொடுப்பாகும். இதற்கு எதிராக தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து, இந்தக் குற்றக் கும்பலை தனிமைப்படுத்தி போராடவேண்டிய தருணமிது. இந்த வகையில் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் முன் இந்த உண்மையை விளக்கி போராடுவதன் மூலம் தான், உண்மையான குற்றவாளிகளை சிங்கள மக்கள் முன் தனிமைப்படுத்தி அவர்களைத் தண்டிக்க முடியும்.

இரயாகரன்

முன்னணி (இதழ் -2)