அய்யாமுத்து பூசையிலே மனமுருகி நின்றான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி பக்தி என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, அவனிற்கு முன்னாலே நின்றவர்கள் ஏதோ பெரிதாக கதைத்து அவனது சிந்தனையை குழப்பி விட்டார்கள். வகுப்பறையிலே பெடியன்கள் சத்தம் போட்டால் தமிழ் படிப்பிக்கும் நாகலிங்கம் வாத்தியார் சொல்லும் “காவோலையிலே நாய் ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி சளசளக்காதேயுங்கடா” என்பது ஞாபகம் வந்தது. முன்னிற்கு நிக்கிறவர்கள் பூசையையும் கவனிக்காமல் அப்படி என்ன கதைக்கிறான்கள் என்று காதைக் கொடுத்துக் கேட்டான். இப்ப எவ்வளவு போகுது என்று ஒருத்தன் மற்றவனை கேட்டுக் கொண்டு நின்றான். யாழ்ப்பாண முறைப்படி செய்யப்படும் காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்த் தூள் போட்ட கறியை ஒவ்வொரு நாளும் போட்டுத் தாக்குவதால் மூலக்கொதி வந்து அல்லல்படும் அய்யாமுத்துவிற்கு இதைக் கேட்டதும் கொதி உச்சந்தலை வரைக்கும் ஏறியது. ஏண்டா இதையெல்லாமாடா அளக்கிறது. அதையும் கதைக்க இடமில்லாமல் கோயிலிலை வைச்சா கதைக்கிறது எண்டு அவங்களைப் பார்த்து கத்தினான். வங்கியிலே வட்டி வீதம் எவ்வளவு போகுது என்டதை கோயிலிலே வைச்சு கேக்கக் கூடாதோ என்று அவங்கள் அய்யாமுத்துவை பார்த்துக் கேட்டார்கள்.
அசடு வழிந்த படி வெளியே வந்த அய்யாமுத்துவை தெருவிலே அறுவைதாசன் வழிமறிச்சான். எலி ஏன் எட்டுமுழ வேட்டி கட்டிக் கொண்டு வருகுது தெரியவில்லையே எண்டு அய்யாமுத்து யோசிச்சுக் கொண்டிருக்க, அறுவைதாசன் சிரிச்சுக் கொண்டு கல்லிலே செய்த கடவுளை கும்பிட்டு விட்டு வாறாய் ஆனா இங்கை ஒரு கண்கண்ட தெய்வம் மண்டையை போட்டு விட்டது என்றான். இதென்ன சின்னப் பிள்ளைத்தனமா இருக்கு. கடவுள் எப்பிடியடா சாக முடியும் என்று அய்யாமுத்து கோபப்பட்டான். அதைத் தான் நானும் கேக்கிறேன். அவதாரம் என்றும் கடவுள் என்றும் தன்னைத் தானே சொல்லி மற்றவர்களையும் சொல்ல வைச்சவர், தீராத நோய் வந்த பக்தர்களின் நோய்களை எல்லாம் தீர்த்து வைத்தவர் என்று விளம்பரப்படுத்தப்பட்டவர், தன்னுடைய வியாதிகளை குணப்படுத்த முடியாமல் செத்துப் போனார். அய்யாமுத்து புற்றுநோய் வந்த பக்தகோடிகள் எல்லாம் அவதாரத்திட்டை ஆறுதல் தேடி போவான்கள், அந்த அவதாரத்திற்கே புற்றுநோய் வந்தால் யாரால் ஆறுதல் சொல்ல முடியும். மண்டையிலே மயிர் காய்ஞ்சு போன மொட்டையன்கள் எல்லாம் பகவானின் குரோட்டன் தலையைப் பார்த்து சந்தோசப்படுவான்கள். அந்த தலையே மொட்டையாகிப் போனால் யாரால் ஆறுதல் சொல்ல முடியும் என்றான் அறுவைதாசன்.
வசனமாடா கதைக்கிறாய். நீ சொல்லுறதை உன்ரை மனிசி கூடக் கேட்காது. அவர் சொல்லுறதை கேக்கிறதிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர் எத்தனை ஆயிரம் பேருக்கு சேவை செய்தவர். தனக்கு வந்த காணிக்கைகளை எல்லாம் சனங்களிற்கு உதவி செய்யிறதிற்கு தான் செலவு செய்தார் என்றான் அய்யாமுத்து.
தொடங்கிட்டாண்டா தொடங்கிட்டான். வந்த காசை எல்லாம் செலவழிச்சிருந்தால் எப்பிடி கோடிக்கணக்கான சொத்துகளிற்காக ஆச்சிரமத்திலே சண்டை நடக்குது. கொஞ்ச காலத்திற்கு முதலிலே இருந்த இன்னொரு அவதாரமான ரமணர் வாழுற காலத்திலேயே ஆச்சிரம சொத்துகளிற்காக அவரது சகோதரரின் மகனிற்கும் பக்தர்களிற்கும் சண்டை வந்து வழக்கு வரை போனது. ஆச்சிரமம் பக்தர்களிற்கே சொந்தமானது தனிப்பட்டவர்கள் சொந்தமாக்க முடியாது. துறவிக்கு உறவு கிடையாது என்று பக்தர்கள் வாதிட்ட போது ரமணர் நீதிமன்றத்திற்கு வந்து “நான் எப்படா துறவி என்று சொன்னேன் லூசுப்பயலுகளா” என்று சகோதரர் மகன் சார்பாக சாட்சி சொன்னார்.
மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் ஒரு சிறுபங்கை இலவசம் சேவை என்று செய்வது போல, பாமரர்கள் படம் பார்ப்பதனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில லட்சங்களை மக்களிற்கு தொண்டு செய்கிறோம் என்று படம் காட்டுவது போல தான் இந்த சாமியார்களும் இறால் போட்டு சுறா பிடிக்கிறார்கள். இவர்களின் பக்தர்கள் இரண்டு வகையானவர்கள். ஏழை-நடுத்தர மக்கள் ஒரு பிரிவு, அரசியல் அதிகார பண முதலைகள் மறுபிரிவு. ஏழை மக்கள் தமது துன்பங்களிற்கு விடை காண இந்த சாமியார்களை நம்பி ஏமாறுகிறார்கள். ஆதிகார பணக்கார வர்க்கம் இந்த சாமியார்களின் ஏமாற்றுக்களை தெரிந்து வைத்திருப்பதால் பக்தர்கள் ஆகிறார்கள். ஏனென்றால் மக்களின் பிரச்சனைகளிற்கு உண்மையான தீர்வு இந்த மக்கள் விரோத அரசுகளையும், முதலாளிகளையும் உடைத்தெறிந்து ஓட ஓட விரட்டி அடிப்பது தான். ஆனால் அப்படி ஒரு போராட்டம் வராமல் தடுப்பதற்கு மதங்களும் சாமியார்களும் இந்த மக்கள் விரோதிகளிற்கு துணையாக இருக்கிறார்கள். மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக அதனை சகித்து சமாளித்துக் கொண்டு வாழுங்கள் என்று இவர்கள் போதிக்கிறார்கள். பகவத் கீதையிலே கள்ளபிரான் கடமையை மட்டும் செய் பலனை எதிர்பாராதே என்று சொன்னதும் எல்லா சமயங்களும் இந்த உலகத்தில் துன்பங்களை அனுபவிக்கிறவர்கள் மறு உலகான சொர்க்கத்தில் எல்லாம் இன்பமயம் என்று கைகாட்டி விடுவதும் இதற்க்காகத்தான். சைவசமயத்திலே சாகிறவர்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல சொர்க்கத்திற்கு போகும் அதே நேரம் ரம்பா ஊர்வசியின் நடனத்தையும் போனசாக கண்டு களிக்கலாம்.
வாழும் கலை என்று வகுப்பு நடத்தும் ரவிசங்கர் என்ற ஆசாமி இலங்கைக்கு போய் கொல்லும் கலையை கொள்கையாக வைத்திருக்கும் அரசுத் தலைவர்களை சந்திக்கிறார். கதவைத் திற காற்று வரட்டும் என்ற நித்தியானந்தா கட்டிலைப் போடு நடிகை வரட்டும் என்று லிங்க வழிபாடு பற்றி வயது வந்தோருக்கான படத்தில் நடிக்கிறார். இலங்கைத் தமிழ் மக்கள் மண்ணோடு மண்ணாக மடிந்த போது கூடநின்று கொன்று விட்டு எதுவும் நடவாதது போல தலையை சொறிந்து கொண்டு இருந்த தாடிவாலா சிங்கு, சாயிபாபா செத்ததும் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார். தமிழ் நாட்டு ஏழைக் கடல் தொழிலாளர்கள் இலங்கை கடற்படையிரால் கொல்லப்பட்ட போது மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி விட்டு கடமையை செய்து விட்டேன் என்று இருந்த கருணாநிதி, பாபாவிற்கு பாடைகட்ட மகனை தனி விமானத்தில் அனுப்புகிறார். இப்படி இவர்களின் புனிதக் கூட்டு எப்பொழுதும் மக்களிற்கு எதிராகவே இருக்கும் என்றான் அறுவைதாசன்.
அப்ப ஒரு பலனுமே இல்லாமல் இந்த சாமியார்களை மக்கள் ஏன் நம்புகின்றார்கள் என்று அய்யாமுத்து கேட்டான். மனம் பலவீனமடையும் நேரங்களில் மன ஆறுதல் தேடி இவர்களிடம் போகிறார்கள். இதைத் தான் ஆசான்கள் மார்க்சும் ஏங்கெல்சும் மிகத் தெளிவாக ஒரு கவிதை போல சொல்கிறார்கள்.
“மதம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு. இதயமற்ற உலகின் இதயம். உணர்ச்சியற்ற சுhழலின் உணர்ச்சி ஆன்மா அற்ற உலகின் ஆன்மா. மதம் மக்களின் அபின்.”
ஆம் மதம் மக்களை போதையில் வைத்திருக்கிறது. உண்மையான உலகை அதன் பிரச்சினைகளை மனதில் இருந்து மறைக்கிறது. அந்த பிரச்சினைகளிற்கு எதிராக போராட விடாமல் மயக்கத்தில் வைத்திருக்கிறது.
உனக்கு நல்லதொரு உதாரணம் சொல்லுறன். இலங்கையிலே ஆசிரியராக இருந்த ஒருவரோடை கதைச்சு கொண்டிருந்தேன். அப்ப அவர் சொன்னார் தான் சின்ன வயதிலே படிக்கமாட்டாராம், வகுப்பிலே கடைசியாக தான் வருவாராம். தாய், தகப்பனோடை ஒரு முறை பாபாவை பார்க்க புட்டபர்த்திக்கு போயிருந்தாராம். பாபா இவரை கண்டதும் இவரின்ரை தலையை தடவி விட்டாராம். அதிலிருந்து இவரிற்கு ஞானம் பிறந்து ஒவ்வொரு பரீட்சையிலும் முதலாவதாக வந்தாராம். நான் சொன்னேன், சாயிபாபா வழக்கமாக பெடியன்களிற்கு வேறே எங்கையோ தான் தடவுவதாக கேள்விப்பட்டேன். அது இருக்கட்டும், சாயிபாபா உமக்கு தடவியது போல் எல்லோருக்கும் தடவினால் எல்லோரும் கெட்டிக்காரர் ஆகிவிடலாமே, ஏன் அதனைச் செய்யவில்லை? லிங்கம் எடுக்கிற (வாயிற்குள்ளால்) விளையாட்டை விட்டு விட்டு, எல்லோருக்கும் தடவினால் இலங்கை, இந்தியா எல்லாம் கல்வியிலே எங்கேயோ போயிருக்குமே என்றேன். என்னை எரிப்பது போலே பார்த்தார். ஆசிரியரான இவரிற்கே பகுத்தறிவு இவ்வளவு தான் இருக்குது எண்டால் மற்றவர்களை யோசிச்சு பார் என்றான் அறுவைதாசன்.
எனக்கு ஒரு சந்தேகம் என்றான் அய்யாமுத்து. ஆகா நான் கொடுத்த விளக்கங்களாலே இவன் திருந்தி விட்டான் போலே, ஏல்லாவற்றையும் கேள்வி கேள் என்பதை இவன் விளங்கி விட்டான் என்று சந்தோசப்பட்ட அறுவைதாசன் கேளு கேளு கேட்டுக் கொண்டே இரு என்றான்.
சீரடி பாபாவின் வாரிசு இந்த சாயிபாபா. அப்ப இவரின்ரை வாரிசு யார் என்று அய்யாமுத்து கேட்டான். கிழிஞ்சுது போ. சரி சொல்லுறேன் சாயிபாபாவின் வாரிசு நித்தியானந்தா தான். இரண்டு பேருமே லிங்கத்திலே விருப்பமானவர்கள். ஒரே ஓரு வித்தியாசம் அவர் வாயிற்குள்ளாலே எடுப்பார். இவர் வாயிற்குள்ளே கொடுப்பார்.
விஜயகுமாரன்
முன்னணி (இதழ் -2)