இன்று ஐரோப்பிய மக்கள் மத்தியில், குறிப்பாக இளம் சந்ததியினரிடம் முஸ்லீம் எதிர்ப்புச் சிந்தனையும், கருத்துக்களும் அதிகரித்துச் செல்கின்றது. இது எல்லா வெளிநாட்டவர் மீதுமான எதிர்ப்பு அலையாக இருந்தபோதும், குறிப்பாக முஸ்லீம் மீதான எதிர்ப்பாகத்தான் பெரிய அளவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறுசிறு அளவில் காணப்பட்ட இந்தவகை எதிர்ப்பு உணர்வுகள், தற்போது பேருருக்கொண்டு வன்முறையாக மாறியுள்ளது.
அண்மையில் நோர்வேயின் தலைநகரில், நூற்றுக் கணக்கான சொந்த மக்களையே கொலை செய்த கொலையாளி, தான் நோர்வேயினை பாதுகாக்கவே..! இந்த வன்முறைத் தாக்குதல்களை நடாத்தினேன் எனக் கருத்து வெளியிட்டுள்ளான். தனது சொந்த சகோதரர்களை அழித்தே.., இவன் தனது முஸ்லீம் எதிர்ப்பு உணர்வினை வெளிப்படுத்தியுள்ளான். அந்த அளவிற்கு அவனை மதம்பிடித்த மனிதனாக, ஒரு வன்முறைச் சிந்தனையாளனாக மாற்றியது யாரெனில்..,அவனுடைய மதமும், நோர்வே நாட்டு அதிகார வர்க்கமுமேயாகும். இவன் செய்தபேரழிவை இன்னும் பலர் ஆதரித்து, முகப்புத்தகத்திலே கருத்து வெளியிட்டிருந்தார்கள். இதை நோர்வே நாட்டவர் மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகள் தழுவிய எத்தனையோ பேர் இந்தக்கொலையாளியின் செயலுக்கு ஆதரவும்- வாழ்த்தும் தெரிவித்துள்ளார்கள். இது வெளிநாட்டவர் மீதான, அதிலும் குறிப்பாக அகதிகளாக புலம் பெயாந்து வாழும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இவர்களது எதிர்ப்பின் மனநிலையினையே வெளிப்படுத்துகின்றது. இந்த வன்முறைகளை தூண்டிவிடுபவர்கள் ஜனநாயக அரசியல்பேசி, ஆட்சியில் இருக்கும் அதிகார வர்க்கமேயாகும். இவர்கள் மற்றைய நாடுகள்மீது தமது ஆக்கிரமிப்பு யுத்தங்கள் செய்யும்போது, அந்த மக்களை தாமே பாதுகாக்க வேண்டுமெனக் கூறி, ஓர் குறிப்பிட்ட அளவான மக்களுக்கு அகதித் தஞ்சம் கொடுப்பதும், பின்பு அந்த மக்கள் மீது இப்படியான வஞ்சகக் கருத்துகளை பரப்புரை செய்யும்போது, தூண்டப்படும் ஒருவர் அல்லது குழுக்கள் உணர்ச்சி வேகத்தில், அந்த மக்கள் மீது அல்லது அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் மக்கள் மீது இப்படியான பாரமுக வன்முறை தாக்குதல்களை நடாத்துகின்றார்கள்.
ஈரான் நாட்டின் அன்றைய ஆயத்துல்லா கொமெய்னிக்கு எதிராக, சதாம் குசைன் என்ற சாரவாதிகாரியை உருவாக்கியது அமெரிக்க ஏகாதிபத்தியம். அதே ஏகாதிபத்திய அமெரிக்க அரசே, ரசியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லாடனையும் உருவாக்கியது. இறுதியில் அவர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டி, இருவரையும் தானே கொன்றது. இவர்களைத் தேடும் முயற்சியில் அமெரிக்காவும், அதன் எடுபிடிகளும் பல ஆயிரக்கணக்கான அரேபிய அப்பாவி மக்களைக் கொன்று குவித்தனர். பலநூறு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தது இவர்களின் இராணுவக் காடையர்கள்.
இவற்றை எல்லாம் தங்கள் சொந்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளாதவாறு, மிகச் சாதுரியமாகவே மூடிமறைத்துக் கொண்டார்கள். அரேபியப்பகுதியின் எரிபொருள் வளங்களை சுரண்டுவதற்காக, தங்களின் ஆக்கிரமிப்பினை அந்த நாடுகளில் மேற்கொண்டவாறு, அந்த நாட்டு மக்களைப் பயங்கரவாதிகளாக, தங்கள் நாட்டு மக்கள் மத்தியில் நியாயப்படுத்தி வருகின்றார்கள். இந்த முதலாளித்துவ அரசுகளின் போலித்தனத்தினையும் பொய்ப் பிரச்சாரத்தினையும் இனங்கண்டுகொள்ள முடியாத பெரும்பாலான அப்பாவி மக்களின் சிந்தனையில், முஸ்லீம் மக்களைப் பற்றிய தவறான கருத்தியலினை உருவாக்குவதோடு, வெறுப்பையும், எதிர்ப்பு மனநிலையினையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் நாட்டு வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளை, தமது மக்கள் மத்தியில் மறைத்துக் கொள்ள, இந்த முதலாளித்துவ அதிகாரவர்க்கம், வெளிநாட்டவருக்கு எதிரான பிரச்சாரங்களை, குறிப்பாக முஸ்லீம் எதிர்ப்புக் கருத்துக்களை, மறைமுகமாக பரப்புரை செய்கின்றனர். தனது பொய்முக ஜனநாயகத்திற்கும், சுரண்டல் அதிகாரத்திற்கும் எதிராக, மக்கள் கிளர்ந்தெழாதிருக்க இந்த அரசுகள் மேற் கொள்ளும் பல நடவடிக்கைகளில்.., வெளிநாட்டவருக்கு எதிரான சிந்தனைகள் மூலமாக தமது மக்களைத் திசைதிருப்பி விடுவதனை ஓர் முக்கியமான செயற்பாடாக இந்த அதிகார வர்க்கம் கையாண்டு வருகிறது.
இவர்களின் இந்தச் செயற்பாடுகள் சாதாரண அப்பாவி இளைஞர்களை வன்முறையாளர்களாக மனமாற்றம் செய்து விடுகிறது. பல உயிர்க் கொலைகளுக்கு ஒருவனைத் தூண்டிவிட்டு, தங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல்..!? கொலையாளிக்கு தண்டனை வழங்குவதன் மூலம் தங்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொள்கின்றது, இந்த அதிகாரவர்க்கம்.
உலகில் பல்லாயிரக் கணக்கான மக்களின் பெரும் பகுதி வாழ்வு போர்ச் சூழலிலும், அகதி முகாம் வாழ்க்கையிலுமே கழிந்துபோகின்றது. பல வருடங்கள் முகாமுக்குள்ளே முடக்கப்படுவதால், அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப்
பாதிக்கப்படுகின்றது. அந்த மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், கல்வி, வாழ்வாதாரம்…, சகலதும் சீரழிக்கப்படுகின்றது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களால் பாலஸ்தீன மக்களும், இந்திய அரசின் அடக்கு முறையினால் காஸ்மீர் மக்களும் பலவருட காலங்களாக இந்தச் சீரழிவு வாழ்வினைத் தான் அனுபவித்து வருகிறார்கள்.
இது போன்றதுதான், யாழ் மண்ணை விட்டு விரட்டப்பட்ட பல நூற்றுக் கணக்கான முஸ்லீம் குடும்பங்கள் காலாகாலமாக வாழ்ந்து வந்த அவர்களின் நிரந்தர வதிவிடத்தை வி ட் டு, இன் னொ ரு பி ர தேசத் தி ல் சகலதையும் இழந்து விட்ட அகதிகளாக, முகாமிற்குள்ளே முடக்கப்பட்டார்கள்.
இந்த நடவடிக்கையினால், அந்த முஸ்லீம் மக்களின் வாழ்க்கை கேள்விக் குறிக்குள்ளானது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள், மக்களின் பரந்துபட்ட சிந்தனையை மழுங்கடிக்கின்றது. அது ஒரு மனிதனை குறுகிய சிந்தனைக்குள்ளே தள்ளிவிட்டு, அவனை மக்களுக்கு எதிரான வன்முறையாளனாக மாற்றிவிடுகின்றது.
இது போல துப்பாக்கி அதிகாரத்தால் பிறப்பிக்கப்பட்ட அல்லது உருவான வன்முறைகள் ஏராளம். இந்த துப்பாக்கி வன்முறைகளுக்கு இளைஞர்களை தூண்டிவிட்டதும் இன்னொரு அதிகார வர்க்கமே. இவர்களின் தூண்டுதலினால் வெறும் உணர்ச்சி வேகத்தில் உருவான இந்த துப்பாக்கி வன்முறையினால் மக்கள் எந்த நன்மையும் அடையவில்லை. வெறும் அழிவுகளை மட்டும் தான் சந்தித்தார்கள். தங்களின் சொந்த நலன் கருதி அதிகாரவர்க்கமும், சுரண்டல்வாதிகளும் தூண்டிவிடும் இந்த வன்முறையே மக்களின் நலனுக்கு எதிராக.., மக்களின் அழிவிற்கு உடந்தையாக அமைந்து விடுகிறது.
-தேவன்.
முன்னணி (இதழ் -3)