புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45
"தமிழீழ விடுதலைப் போராட்டம்" குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம்
இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றிருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை இனவாத அரசு வடக்கு-கிழக்கு மக்கள் மீதான போருக்குத் தயாராகிக் கொண்டிருக்க, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையிலானதும், இயக்கங்களுக்குள்ளானதுமான முரண்பாடுகளும் மோதல்களும் - ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளே காணப்பட்ட அரசியல் வறுமை காரணமாக தோற்றம் பெற்றிருந்த முரண்பாடுகளும் மோதல்களும் - வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
"சமூகவிரோதி"கள் ஒழிப்பு, "துரோகி"கள் ஒழிப்பு, உரிமை கோரப்படாத கொலைகள், கொள்ளைகள் என மக்கள்விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் (TELO) தோன்றிய உள்முரண்பாடுகள் காரணமாக அவ்வியக்கத்திலிருந்து 1984இல் வெளியேறியவரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக இருந்தபோதும் இடதுசாரி அரசியலிலும், இடதுசாரி அரசியல் கருத்துக்களிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராக விளங்கியவரும், சீன சார்பு கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவரான சண்முகதாசனை அழைத்து வந்து வடமராட்சி எங்கும் கூட்டங்களை நடாத்தியவருமான கம்பர்மலையைச் சேர்ந்த மனோ மாஸ்டர் (துரைசாமி பஞ்சலிங்கம்) தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னரான காலகட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் (TULF)யைச் சேர்ந்த மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினரான விஸ்வநாதன் தர்மலிங்கம், கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினரான முருகேசு ஆலாலசுந்தரம் ஆகியோர் படுகொலைகள் உரிமை கோரப்படாமல் நடந்தேறியிருந்தன.
மனோ மாஸ்டர் (துரைசாமி பஞ்சலிங்கம்)
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) புளொட்டுக்குமிடையில் கூர்மையடைந்து விட்டிருந்த முரண்பாடுகள் பகிரங்கமாகவே துப்பாக்கி முனையில் தீர்வை நோக்கியதாக மாறிவிட்டிருந்தது. புளொட் உறுப்பினர்களான கொக்குவில் ரவிமூர்த்தி, கைதடியைச் சேர்ந்த பண்டா, அரியாலையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்ட வடிவம் பெறத் தொடங்கியதில் இருந்து ஜனநாயக மறுப்பும், சுத்த இராணுவக் கண்ணோட்டமும், சகோதரப் படுகொலைகளும் ஈழவிடுதலைப் போராட்டத்தையும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் பங்குபற்பற்றிய இயக்கங்களினது நோக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது.
ஈழவிடுதலைப் போராட்டம் அதன் உண்மையான அர்த்தத்தில் ஈழவிடுதலைக்கு எதிரான போராட்டமாக, இலங்கை அரசுக்குப் பலம் சேர்க்கும் போராட்டமாக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் இத்தவறான போக்குகள் குறித்து மக்களை விழிப்படையுமாறும், எச்சரிக்கையடையுமாறும் கேட்டுக்கொள்ளும் பொருட்டு, ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள் தோன்றிவிட்டிருந்த தவறான போக்குகளுக்கெதிராகப் போராடுமாறும் கேட்டுக்கொள்ளும் பொருட்டும் "ஓர் அவசர வேண்டுகோள்" என்ற தலைப்பில் டொமினிக்கால் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தோம்.
புளொட்டுக்குள் தோன்றி விட்டிருந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு புளொட்டின் தளமாநாடு கூட்டப்பட்டது. புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணனும், அரசியற் செயலர் இரா வாசுதேவாவும் மாநாட்டில் கலந்து கொள்ளவென இந்தியாவிலிருந்து தளம் வந்திருந்தனர்.
"புளொட்டின் அராஜகவாதம் மாநாட்டில் கண்டிக்கப்பட்டிருந்தது". "கழகத்தின் உயர் அங்கத்தில் அங்கம் வகித்த தோழர் சந்ததியார் கழகத்தின் உயர் அங்கத்தாலேயே மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்" என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தளமாநாடு "இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும், இவரைப் பற்றி ஸ்தாபனம் எடுக்கவேண்டிய கணிப்பீடு பற்றியுமான வாதப்பிரதிவாதங்கள் அமைப்பினுள் நடைபெற்று வருகின்றன" என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தளமாநாட்டை ஒட்டிய செய்தியில் கூறப்பட்டிருந்தது.
"கழக அராஜகவாத" த்தை பொதுவாகக் கண்டித்ததுடன் சந்ததியாரின் படுகொலையை "பகிரங்கமாக ஒப்புக் கொண்ட" தளமாநாடு, சந்ததியார் படுகொலையை பகிரங்கமாகக் கண்டிக்கத் தவறியதுடன், சந்ததியார் பற்றி "ஸ்தாபனம் எடுக்கவேண்டிய கணிப்பீடு" என்றும், "வாதப்பிரதிவாதங்கள் அமைப்பினுள் நடைபெற்று வருகின்றன" என்றும் கூறியதுடன் தளமாநாட்டில் பங்குபற்றியவர்கள் தமது கடமையை முடித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் பயிற்சி முகாம் பொறுப்பாளர் மதன், புளொட்டின் ஆரம்பகால உறுப்பினர் சிவனேஸ்வரன், அகிலன், பவான் உட்பட பயிற்சிமுகாம்களில் நடைபெற்ற பல படுகொலைகளையோ அல்லது புளொட்டின் முன்னணி உறுப்பினர்களான செல்வன், அகிலன் தளத்தில் படுகொலை செய்யப்பட்டமை குறித்தோ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தளமாநாட்டை ஒட்டிய செய்தியில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
உமாமகேஸ்வரனால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அராஜக நடவடிக்கைகளுக்கும் தமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியவர்களான படைத்துறைச் செயலர் கண்ணன், அரசியற் செயலர் இரா வாசுதேவா ஆகியோரின் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்ட தளமாநாடு ஒருவித குழப்பத்திலும் அணிச் சேர்க்கைகள் உருவாகுவதை நோக்கியதாகவும் முடிவுற்றது.
இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புளொட்டுடன் இணைந்து போராடப் புறப்பட்ட பலர் புளொட்டிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவும், பலர் மேற்கு ஜரோப்பிய நாடுகளை நோக்கியும் செல்லவும் இது வழிகோலியது.
சந்ததியார் படுகொலையும், புளொட்டின் தளமாநாட்டில் குறிப்பிடக்கூடிய எந்தத் திருப்பமுமில்லாத நிலையும் தளத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்லாமல் புளொட்டின் சர்வதேசக் கிளைகளில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களிடத்திலும் புளொட் தலைமைக்கெதிரான உணர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.
புளொட் தலைமையின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த மேற்கு ஜரோப்பாவில் புளொட்டுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பலர் எமக்கு ஆதரவளிக்க முன்வந்திருந்தனர். புளொட்டின் பிரித்தானிய செயற்பாட்டளரான மகாலிங்கம் மகாஉத்தமன், சண், கேசவன், மோகன் உட்பட பலரும், சுவிற்சலாந்தில் செயற்பட்ட ராஜன், ரவி(புளொட்டிலிருந்து வெளியேறி சுவிற்சலாந்து சென்றவர்) உட்பட பலரும், மேற்கு ஜேர்மனியில் செயற்பட்டுவந்த செல்வராஜா, சிவம், கோபாலசிங்கம், மோகன், உட்பட பலரும் எம்முடன் இணைந்து செயற்படவும், புளொட் தலைமையின் அராஜகங்களை அம்பலப்படுத்தவும் முன்வந்ததுடன் எமது செயற்பாடுகளுக்கு நிதியுதவி அளிக்கவும் முன்வந்தனர். தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினரின் (NLFT) நிதியுதவியில் மட்டுமே தங்கியிருந்த நாம், பிரித்தானியா, சுவிற்சலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் எமக்காதரவாக செயற்பட முன்வந்தவர்களிடமிருந்து நிதியுதவியைப் பெறத் தொடங்கினோம்.
கண்ணாடிச்சந்திரன் "தீப்பொறி"க் குழுவிலிருந்து வெளியேறிய பின் "தீப்பொறி" பத்திரிகையின் வருகை தடைப்பட்டது. சிறு குழுவாக இருந்த எம்மத்தியிலிருந்து பத்திரிகைத்துறையில் அனுபவம் பெற்றிருந்த கண்ணாடிச்சந்திரன் உட்பட ரஞ்சன், விசுவப்பா போன்றோர் விலகிச் சென்றிருந்ததும் "தீப்பொறி" பத்திரிகை தடைப்பட்டதற்கு காரணமாய் அமைந்திருந்தது. கண்ணாடிச்சந்திரனின் வெளியேற்றத்தையடுத்து கைதடியைச் சேர்ந்த சண்முகநாதன் செயற்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.
"தீப்பொறி"க் குழுவுக்கான கொள்கை மற்றும் வேலைத்திட்டம் என்பனவற்றை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்குழுவுக்குள் விவாதங்கள் ஆரம்பமாயின. கடந்தகாலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது சரியானதா? தமிழீழ விடுதலைப் போராட்டம் தான் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வா? என்ற விவாதம் தேவையானதென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் இடதுசாரிகள் என்ற நிலையிலிருந்து நோக்குகையில் தமிழீழக் கோரிக்கை சரியானதொன்றா என்ற கேள்வியும் கூடவே எழுப்பப்பட்டது.
புளொட்டுக்குள் நாம் எதிர்கொண்ட முரண்பாடுகளில் ஒன்றான அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்குமிடையிலான முரண்பாடுகளின் தோற்றம், அதன் அரசியல் பின்னணி குறித்து ஆய்வு செய்வதோடு அவற்றிலிருந்து படிப்பினையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அரசியலுக்கும் இராணுவத்துக்குமிடையிலுள்ள உறவு குறித்து ஒரு கையடக்க தொகுப்பை வெளியிடுவதென்றும் முடிவெடுத்தோம். இதனடிப்படையில் காந்தனால் (ரகுமான் ஜான்) "அரசியலும் இராணுவமும்" என்ற தொகுப்பு எழுதப்பட்டு எம்மால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
"தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் தேசிய இனப்பிரச்சினை குறித்து இரண்டுவிதமான பார்வைகள், இரண்டுவிதமான போக்குகள் வெளிப்படத் தொடங்கின. தமிழீழ விடுதலைப் போராட்டம் - பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான போராட்டம் - என்பது இடதுசாரிகளின் பார்வையில் சரியானது மட்டுமல்ல "தீப்பொறி" க் குழுவால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியதுமாகும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
சிறுபான்மை தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் போது, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முற்போக்கு சக்திகளும், உழைக்கும் மக்களும் அதற்கெதிராகப் போராட முன்வராதபோது, சிறுபான்மை தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசு அமைப்பது இடதுசாரிகளின் கண்ணோட்டத்தில் சரியானதே என்று வாதிக்கப்பட்டது. இவ்வாதங்களுக்கு ஆதரவாக 1977 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் முன்வைக்கப்பட்டடிருந்த தமிழீழக் கோரிக்கைக்கு தமிழ்மக்கள் வாக்களித்ததன் மூலம் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்திருந்தனர் என்றும், எனவே தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையை நாம் முன்னெடுப்பது தவிர்க்க முடியாததாகும் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. இக் கருத்து "தீப்பொறி" செயற்குழுவின் பெரும்பான்மைக் கருத்தாக மட்டுமல்லாமல் "தீப்பொறி" செயற்குழுவினுள் ஆதிக்கம் செலுத்திய கருத்தாகவும் இருந்தது, இருந்து வந்தது.
ஆனால், "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் எனது கருத்தோ மாறுபட்ட தொன்றதாக இருந்ததுடன் சிறுபான்மைக் கருத்தாகவும் இருந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம், அதாவது பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான போராட்டம் என்பது இடதுசாரிகளின் நிலைப்பாடாக இருக்க முடியாது. புளொட்டில் நாம் அங்கம் வகித்த போது சிங்கள மக்களுடனான ஜக்கியத்தை முன்னிறுத்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தோம். புளொட்டில் நாம் அங்கம் வகித்த போது எம்மிடமிருந்த அரசியல் அறிவென்பது மிகவும் குறுகியதொன்றாகவே காணப்பட்டது. நாம் "தீப்பொறி" க் குழுவாக செயற்படத் தொடங்கியதிலிருந்து எமது அரசியலறிவின் வளர்ச்சியில் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருந்ததுடன் எமது பார்வைகளும் கூட விரிவடையத் தொடங்கியிருந்தன. இத்தகையதொரு நிலையில் - நாம் அரசியல்ரீதியில் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில் - இடதுசாரிகளாகிய நாம் பிரிவினையை எல்லா சூழ்நிலைகளிலும் ஆதரிப்பவர்களாக இருக்கமுடியாது.
தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கெதிராக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக - பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்காக – நாம் போராடும் அதேவேளை, சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகளுடனும், சிங்கள உழைக்கும் மக்களுடனும் இணைந்த போராட்டமாக அப்போராட்டம் அமைய வேண்டும்.
தமிழ், சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலமாக மட்டுமே தமிழ் மக்கள் இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதென்பது நடைமுறையில் சாத்தியமாகும். சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்படும் போது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முற்போக்கு–ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் அதற்கெதிராகப் போராட முன்வந்திருக்கவில்லை என்று கூறுவது தவறான ஒரு வாதமாகும்.
அன்றைய காலகட்டத்தில் கலவானை பாராளுமன்ற உறுப்பினரான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரத் முத்தெட்டுவேகம, எச்.என்.பெர்னாண்டோ தலைமையிலான இலங்கை ஆசிரியர் சங்கம், நவ ஜே.வி.பி அமைப்பின் உறுப்பினர்கள், புளொட்டுடன் இணைந்து கொண்டிருந்த சிங்கள முற்போக்கு சக்திகள், விஜய குமாரணதுங்க தலைமையிலான சிறீலங்கா மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்கள் மீதான இனவொடுக்குமுறைக்கெதிராகக் சிங்கள மக்கள் மத்தியில் குரல் கொடுத்துக் கொண்டும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருந்தனர் என்பது தான் உண்மை.
ஆக, சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகள் பலம் குன்றிய நிலையில் இருந்தனர் என்பது பொருத்தமானதல்ல என்பதுடன், சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகளை பலம் குன்றவைப்பதற்கான செயற்பாடுகள் தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட குறுந்தேசியவெறி கொண்டோரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன.
சிங்கள மக்களின் குடியிருப்புக்கள் மேலான தாக்குதல், அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலைகள் என்பன இதன்பாற்பட்டவையே.
எனவே, சிங்கள முற்போக்கு–ஜனநாயகச் சக்திகளோ அல்லது சிங்கள உழைக்கும் மக்களோ சிறுபான்மை இனங்கள் மீதான இன ஒடுக்குமுறைக்கெதிராக போராட முன்வந்திருக்கவில்லை எனக் கூறுவது இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் அவர்களின் பங்கை - அது சிறிய அளவினதாக இருந்தபோதும் கூட – மறுப்பது சிங்கள முற்போக்கு-ஜனநாயக சக்திகளையும், சிங்கள உழைக்கும் மக்களின் ஒரு பகுதியினரையும் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கமுடியும்.
1977 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் (TULF) முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் தமிழ்மக்கள் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்திருந்தனர் என்றும், தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற வாதம் கூட அடிப்படையில் மிகவும் தவறானதொன்றாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் (TULF) தமிழ்மக்களின் நலன் கருதியல்ல, தமது நலன் கருதி - பாராளுமன்ற ஆசனங்கள் என்கின்று தமது நலன் கருதி – தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்மக்களை தவறான பாதையில் அழைத்துச் சென்று அதில் வெற்றியும் அடைந்திருந்தனர். தமிழ்மக்கள் இனவாத அரசியல் மூலம் அணிதிரட்டப்பட்டு பாராளுமன்ற ஆசனம் என்ற குறிக்கோளை அடைந்திருந்தனர்.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் (TULF) பாராளுமன்றம் சென்ற பின்னர் அவர்களால் பின்னரங்குக்குத் தள்ளப்பட்ட அல்லது கைவிடப்பட்ட தமிழீழக் கோரிக்கையையும், தமிழீழத்திற்கான போராட்டத்தையும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் முன்னெடுத்துச் சென்றன. ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டமானது, அது எவ்வளவுதான் இடதுசாரிய சொற்பதங்களாலும், கோசங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த போதிலும் அதன் உள்ளடக்கத்தில் இடதுசாரியக் கண்ணோட்டத்தின் பாற்பட்டதல்ல என்பதே உண்மை நிலையாக இருந்தது.
எனவே தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் தமிழீழக் கோரிக்கைக்கு – ஒரு தவறான கோரிக்கைக்கு – வாக்களித்தனர் என்பதற்காக இடதுசாரிகளான நாம் அதை ஆதரிக்க வேண்டும் என்பதல்ல. தமிழ்மக்களில் பெரும்பான்மையானோரின் முடிவு தவறானது என்பதையும், அந்தத் தவறான முடிவால் தமிழ்மக்கள் இனவொடுக்குமுறையிலிருந்தோ, சமூக ஒடுக்குமுறையிலிருந்தோ அல்லது வர்க்க ஒடுக்குமுறையிலிருந்தோ விடுதலை பெற்றுவிட முடியாது என்பதையும் நாம் எடுத்துக் கூற வேண்டும்.
எமது போராட்டத்தின் வெற்றிக்கு சிங்கள முற்போக்கு–ஜனநாயக சக்திகளுடன் ஒன்றிணைந்து ஜக்கியத்தை ஏற்படுத்திப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுதான் இடதுசாரிகளின் கண்ணோட்டமாக இருக்க முடியும்.
"தீப்பொறி"க் குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டு தேசிய இனப்பிரச்சினை குறித்து தொடங்கப்பட்ட விவாதம் தேசிய இனப்பிரச்சினை குறித்த இரண்டு வெவ்வேறு பார்வைகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தது.
(தொடரும்)
24/02/2012
41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41
42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42
43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43
44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44