புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42
உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டம்
"புதியதோர் உலகம்" நாவல் மட்டுமல்லாமல் "தீப்பொறி" பத்திரிகையும் கூட புளொட் உறுப்பினர்களையும் மக்களையும் சென்றடையத் தொடங்கியிருந்தது. உமாமகேஸ்வரனால் புளொட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்தையும் பயிற்சிமுகாம் சித்திரவதைகளையும் படுகொலைகளையும் பெரும்பாலான புளொட் உறுப்பினர்களும் மக்களும் தகவல்களாகவே அறிந்திருந்தனர். ஆனால் இப்பொழுது "தீப்பொறி" பத்திரிகை மூலம் பல சம்பவங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.
"தீப்பொறி" பத்திரிகை மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட உண்மைத் தகவல்களால் புளொட்டுக்குள் நெருக்கடிகள் ஆழமடையத் தொடங்கின. புளொட்டுக்குள் செயற்பட்டுக் கொண்டிருந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளும், மனிதநேயம் கொண்டோரும் புளொட் தலைமைக்கெதிராக புளொட்டுக்குள்ளேயே தமது போராட்டத்தை தீவிரபடுத்த தொடங்கியிருந்தனர். நாம் புளொட்டிலிருந்து வெளியேறி புளொட்டின் அராஜகங்களை பகிரங்கப்படுத்தியமையும் கூட புளொட்டுக்குள் தலைமையின் தவறான போக்குகளுக்கெதிராகப் போராடுவதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. புளொட்டின் தலைமை விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் சரியான பதில் தரவேண்டும் அல்லது புளொட் உறுப்பினர்கள் பங்குபற்றும் ஒரு மகாநாட்டின் மூலமாக பிரச்சனைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடையத் தொடங்கின.
இக்காலப் பகுதியில் தம்மை "இடதுசாரிகள்" என அழைத்துக் கொண்டு நடைமுறையில் சந்தர்ப்பவாதப் போக்குகளுடன் வலம்வந்த பல "இடதுசாரிகள்" புளொட்டுக்குள் வளர்ந்துவிட்டிருந்த அராஜகத்திற்கு "இடதுசாரிகள் பார்வை" யில் "அரசியல் விளக்கம்" கொடுத்துக்கொண்டிருந்ததொடு புளொட்டுக்குள்ளே குமுறி எழுந்துகொண்டிருந்த உண்மையான முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் மனிதநேயம் கொண்டோரையும் "அவசரம்" காட்டாமல் "பொறுமை" காக்கும் வண்ணம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
லெபனானில் பயிற்சி முடித்தபின் மத்தியகுழு உறுப்பினர் பரந்தன் ராஜனுடன் ஒரு குழுவினர் இந்தியா திரும்பியிருந்த போது, பரந்தன் ராஜன் எதிர்பார்த்திராத பல விடயங்கள் புளொட்டுக்குள் நடந்து முடிந்திருந்தன. புளொட் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் முன்னணிப் பாத்திரம் வகித்துச் செயற்பட்ட சந்ததியாரும் அவருடன் ஒரு குழுவினரும் புளொட்டிலிருந்து வெளியேறிவிட்டிருந்ததையும், உமாமகேஸ்வரன் அனைத்து அதிகாரங்களையும் தன்வசமாக்கி தனது உளவுப்படையின் உதவியுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதையும், புளொட்டில் உள்ளவர்கள் அனைவரையும் பீதிக்குள்ளாக்கி வைத்திருந்ததுடன் தனது தலைமையை மட்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதையும் கண்டுகொண்டார்.
புளொட்டின் ஆரம்பகாலங்களில் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவரான பரந்தன் ராஜன் புளொட் வளர்ச்சிபெற்றுவிட்டிருந்த நிலையில் உமாமகேஸ்வரனுக்கு வேண்டப்படாத ஒருவராக மாறிவிட்டிருந்தார். புளொட்டின் ஆரம்பகாலங்களிலிருந்து புளொட்டின் வளர்ச்சிக்காக தன்னலம் கருதாது விசுவாசத்துடன் செயற்பட்ட உடுவில் சிவனேஸ்வரனும், சந்ததியாரும் புளொட்டின் வளர்ச்சியின் பின் உமாமகேஸ்வரனுக்கு எவ்வாறு வேண்டத்தகாதவர்களாக இருந்தனரோ அதே இடத்துக்கு பரந்தன் ராஜன் இப்பொழுது வந்து சேர்ந்திருந்தார்.
"புதியதோர் உலகம்" நாவல், "தீப்பொறி" பத்திரிகை என்பன வெளிவந்ததிலிருந்து பயிற்சி முகாம்களில் சந்ததியாரின் ஆட்களைத் தேடி வலைவிரித்துத் திரிந்த உமாமகேஸ்வரனின் உளவுப்படை உசாரடைந்தது. பயிற்சிமுகாம்களில் தங்கியிருந்தவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகத் தொடங்கியதோடு இராணுவப்பயிற்சியை முடித்தவர்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்க முடியாத பயங்கரமான பயிற்சி முகாம் சூழலில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமும் அதில் தமது பங்களிப்பு குறித்த கவலைகளுடனும் பயிற்சி முகாம்களில் முடங்கிக் கிடந்தனர்.
தளத்தில் புளொட்டுக்குள் தோன்றிவிட்டிருந்த நெருக்கடி நிலைக்கு ஒத்ததான ஒருநிலை இந்தியாவில் பயிற்சிமுகாம்களில் தோன்றியிருந்தது. உமாமகேஸ்வரனினதும் அவரது உளவுப்படையினதும் நோக்கத்தை அறிந்துகொண்ட பயிற்சிமுகாம் பொறுப்பாளர்களும், புளொட்டில் முன்னணியில் நின்று செயற்பட்ட பலரும் பயிற்சி முகாம்களில் இருந்தவர்களின் நிலை குறித்து சிந்திக்கத் தலைப்பட்டனர். தங்களை "இடதுசாரிகள்" என்று அழைத்துக்கொள்ளாத அல்லது அழைத்துக்கொள்ள விரும்பாத இவர்கள் மனிதநேயத்துடன் ஈழவிடுதலையையே தமது ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவுக்கு இராணுவப்பயிற்சிக்கெனச் சென்று, பயிற்சிமுகாம்களில் எதுவித உரிமைகளுமற்று "சிறை" வைக்கப்பட்டிருந்த போராளிகளை விடுவித்து தளம் அனுப்பிவைக்கும் செயற்பாடுகளில் இறங்கினர்.
நானறிந்தவரை அனைத்துமுகாம் உதவிப் பொறுப்பாளர் செல்வராஜா (கருணா), அனைத்துமுகாம் மருத்துவப் பொறுப்பாளர் அழகன், லெபனானில் பயிற்சிபெற்ற சுந்தரலிங்கம்(அருணா) உட்பட பலரும், பயிற்சிமுகாம்களில் "சிறை" வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு தளம் செல்வதற்கு பல வழிகளிலும் உதவியிருந்தனர். அத்துடன் புளொட்டின் ஆரம்பகாலங்களில் உமாமகேஸ்வரன் மேல் பெருமதிப்புக் கொண்டிருந்த, ஆனால் பிற்காலங்களில் உமாமகேஸ்வரனின் போலிமுகத்திரையை இனம்கண்டு கொண்ட பாலமோட்டை சிவமும்(பெரிய மென்டிஸ், சண்முகம்) கூட பலரை இந்திய பயிற்சிமுகாம்களிலிருந்து தளம் அனுப்பிவைக்க உதவியிருந்தார்.
"தீப்பொறி" பத்திரிகைக்கூடாக புளொட்டின் அராஜகங்களை அம்பலப்படுத்தியதோடு ஈழவிடுதலைப் போராட்டம் சரியான திசைவழியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திவந்த நாம், எமது முதலாவது செயற்குழுக் கூட்டத்தை கொக்குவில் பகுதியிலுள்ள நந்தாவிலில் கூட்டினோம். செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் தமது கடந்தகால அரசியற் செயற்பாடுகள் குறித்து சுயவிமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து நாம் ஒவ்வொருவரும் எமது சுயவிமர்சனத்தை முன்வைத்திருந்தோம். இந்தச் சுயவிமர்சனம் ஒரு முழுமையானதென்று கருதமுடியாதென்ற போதும் எமது பக்கத தவறுகளையும், அரசியல்ரீதியான பலவீனங்களையும் புரிந்துகொள்ள முற்படுவதன் ஆரம்பமாக இருக்குமென கருதினோம். எமது சுயவிமர்சனத்தின் முடிவில் நாம் ஒவ்வொருவரும் அரசியல் ரீதியாக எம்மை வளர்த்துக் கொள்ளப்பட வேண்டிய தேவை அனைவராலும் உணர்ந்து கொள்ளப்பட்டதையடுத்து, செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் மட்டுமல்லாமல் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அரசியல் நூல்களை - இடதுசாரி அரசியல் நூல்களை - கற்றுக்கொள்ள ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்றும் முடிவானது. புளொட்டில் செயற்பட்டபோது அரசியல் நூல்களைக் கற்கத் தவறியது எமது தவறென்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு எமது அடுத்த கட்ட செயற்பாடுகள், சமகால நிலைமைகள் பற்றியும் பேசினோம்.
உமாமகேஸ்வரனினதும், அவரது கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரு பகுதி இராணுவப் பிரிவினராலும் எமக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டதோடு, ஏனைய இயக்கங்களுடன் நட்புறவை வளர்த்தல் அவசியம் என உணர்ந்த நாம் அவர்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி தொடர்ச்சியாக பேசுவதென்று முடிவெடுத்ததன் அடிப்படையில், ஏற்கனவே எம்முடன் உறவிலிருந்த தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணி(NLFT) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம்(TELO), ஈழமக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி(EPRLF), ஈரோஸ் (EROS), தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை போன்ற அமைப்புக்களுடன் பேசுவதென முடிவானது. அத்துடன் உமாமகேஸ்வரன் குறித்தும், அவரால் தலைமை தாங்கப்படும் புளொட் குறித்தும் நாம் எத்தகைய போக்கைக் கடைப்பிடிப்பது, என்ன நிலைப்பாட்டை கொண்டிருப்பது என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் நாம் புளொட்டிலிருந்து வெளியேறி "தீப்பொறி" குழுவாக செயற்பட்டுக் கொண்டிருந்த போதும், உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்பிரிவும், தளத்தில் உமாமகேஸ்வரனின் துதிபாடும் ஒரு கூட்டமும் எம்மை அழித்தொழிப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இத்தகையதொரு நிலையில் உமாமகேஸ்வரன் குறித்தும், புளொட் குறித்தும் நாம் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் செயற்குழுவில் முன்வைக்கப்பட்டன. "புளொட்டினுள் நடைபெற்ற அனைத்துக் கொலைகளுக்கும் உத்தரவிட்ட உமாமகேஸ்வரனை நாம் உயிருடன் விட்டுவைத்தால் எம்மை உமாமகேஸ்வரன் அழித்தொழித்துவிடுவார்; இதனால் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதன் மூலம்தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்; இது தான் எமக்கிருக்கும் ஒரே வழி" என காந்தன் (ரகுமான் ஜான்) தனது கருத்தை முன்வைத்தார்.
"உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதன் மூலம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை, அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால் புளொட்டுக்குள் இருக்கும் முற்போக்கு சக்திகள் எம்முடன் வந்து இணைந்து கொள்வர்" என்ற கருத்தையும் கூடவே புளொட்டில் மத்திய குழுவிலும் கட்டுப்பாட்டுக் குழுவிலும் அங்கம் வகித்திருந்ததோடு, உபசெயலதிபராகப் பணியாற்றிய பல கசப்பான அனுபவங்களை கடந்து வந்த காந்தன் (ரகுமான் ஜான்) முன்வைத்தார்.
செயற்குழுக் கூட்டத்தில் இருந்தவர்கள் இத்தகையதொரு கருத்தை எதிர்பார்த்திருக்காவிட்டாலும் காந்தனால் (ரகுமான் ஜான்) முன்வைக்கப்பட்ட இக்கருத்து குறித்து அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ வாதித்தனர். சிலர் இது குறித்து ஆதரவான கருத்தைத் தெரிவித்திருந்தனரே தவிர, இத் திட்டம் குறித்து நான் உட்பட எவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கவில்லை. ஆனால், நாம் எங்கோ தவறிழைக்கின்றோம் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.
காந்தனால் (ரகுமான் ஜான்) முன்வைக்கப்பட்டிருந்த உமாமகேஸ்வரனைக் கொலை செய்தல் என்ற கருத்தையும், திட்டத்தையும் என்னால் ஜீரணித்துக்கொளள முடியவில்லை. எனக்குள் பல கேள்விகள் எழுந்ததோடு எனக்குள்ளே ஒரு போராட்டம் கூட ஆரம்பமாகியது. மீண்டும் தவறான பாதையில் - தனிநபர் பயங்கரவாதம் என்கின்ற தவறான பாதையில் - செல்லப் போகின்றோமா என எண்ணத் தோன்றியது.
புளொட்டினுள் தோன்றிவிட்டிருந்த அராஜகத்தினால், அந்த அராஜகங்களுக்கெதிராகப் போராடுவதற்கென புளொட்ட்டில் இருந்து வெளியேறிவிட்டிருந்த நாம், எமக்கிடையே கருத்தொற்றுமை கொள்ளாமல் கடந்த காலத் தவறுகளில் ஒன்றான அரசியல் ரீதியில் எம்மை வளர்த்துக் கொள்ளல் என்பதை முதன்மைப்படுத்தி அதற்கூடாக சரியானதொரு அரசியல் மார்க்கத்தையும், இராணுவ மார்க்கத்தையும் வகுத்துக் கொள்ளாமல், அந்த அரசியல் மார்க்கத்தை நோக்கி பரந்து பட்ட மக்களை அணி திரட்டி உமாமகேஸ்வரனையும் அவரால் தலைமை தாங்கப்படும் புளொட்டையும் அம்பலப்படுத்தாமல் உமாமகேஸ்வரனை கொலை செய்வதற்கான திட்டம் என்பது மிகத் தவறான ஒரு போக்காகவே அமையும் என்பதாகவே உணர்ந்தேன். காரணம், காந்தனால் (ரகுமான் ஜான்) முன்வைக்கப்பட்ட உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வது பற்றிய கருத்தானது தனிநபர் பயங்கரவாத வழிமுறையேயன்றி வேறெதுவுமல்ல.
இக் கருத்து தவறானதென்று நாம் புளொட்டில் அங்கம் வகிக்கும் போதே கூறிவந்திருந்ததோடு, தனி நபர்களை அழித்தொழிப்பதன் மூலம் சமுதாயப் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும், ஒரு இயக்கத்தின் போக்கை மாற்ற முடியும் என்ற அரசியல் வழிமுறையை அல்லது நடைமுறையை தமது அரசியலின் ஆரம்பகாலததிலிருந்து பின்பற்றிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தனிநபர் பயங்கரவாதத்தின் பிரதிநிதிகள் எனக் கடுமையான விமர்சனம் செய்துவந்திருந்ததோம்.
புளொட்டுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அரசியல் வரலாறென்பது தனிநபர் கொலைகளும், கொலை முயற்சிகளும், பழிவாங்கல் கொலைகளும், ஆட்கடத்தல்களாகவுமே இருந்து வந்துள்ளது. இத்தகைய செயற்பாடுகளை தனிநபர் கொலைகளை, கொலைமுயற்சிகளை "புரட்சிவாதி" என்று கூறிக்கொண்டு உமாமகேஸ்வரன் புளொட்டுக்குள் நடைமுறையில் நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, உமாமகேஸ்வரனின் போக்கு தவறானது எனக் கூறியே நாம் புளொட்டிலிருந்து வெளியேறி உமாமகேஸ்வரனையும் அவரால் தலைமை தாங்கப்படும் புளொட்டையும் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தோம்.
புளொட்டிலிருந்து வெளியேறிய நாம், எம்மை முற்போக்காளர்கள், ஜனநாயகவாதிகள், இடதுசாரி அரசியலை – மக்கள் அரசியலை – பின்பற்றுபவர்கள் எனக் கூறிக் கொண்டு உமாமகேஸ்வரனைக் கொலை செய்யத் திட்டமிடுதல் என்பது நாம் மீண்டுமொரு தமிழீழ விடுதலைப் புலிகளையொத்த அல்லது புளொட்டையொத்த அமைப்பை உருவாக்குபவர்களாகவே இருப்போம் என்பதில் ஜயமில்லை.
இத்தகையதொரு கருத்து அல்லது நடைமுறை எம்மிடமிருக்குமேயானால் நாம் மக்கள்விரோத அரசியலை நோக்கி பயணிப்பவர்கள்களாகவே இருப்போமேயொழிய, ஒரு புரட்சிகர அரசியலை நோக்கிப் பயணிப்பவர்களாக இருக்கமுடியாது. ஒட்டுமொத்தத்தில் நாம் புரட்சிகரப் பாதையில் செல்லப் போகின்றோமா அல்லது மீண்டும் மக்களின் நலன்களை முன்னிறுத்தாத தனிநபர் பயங்கரவாதத்தை நோக்கிய பாதையில் செல்லப் போகின்றோமா என்ற இரண்டிலொரு தெரிவுமட்டும் எம்முன்னே இருந்தது.
சர்வதேசரீதியில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்ட அனுபவங்களைச் சுவீகரித்துக் கொள்வதென்பது ஒரு புறமிருக்க, நீண்ட கால இரத்தக்கறைபடிந்த எமது சொந்தப் போராட்ட அனுபவங்களுக்குப் பின்னும் மீண்டும் நாம் தவறான பாதையில் செல்லப் போகின்றோமா? தனிநபர் பயங்கரவாதம் தான் மீண்டும் எமது போராட்ட வழிமுறையாக இருக்கப் போகின்றதா? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் என்னிடம் எழுந்தது. உமாமகேஸ்வரனைக் கொலை செய்வது என்ற கருத்து எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்ததொடு என்னைப் பொறுத்தவரை உடன்பாடில்லாத ஒரு விடயமாகவும் இருந்தது. இருந்தபோதும் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான கருத்தை எதிர்த்து எனது கருத்தை செயற்குழுக் கூட்டத்தில் முன்வைத்து வாதாடத் தவறியிருந்தேன்.
உமாமகேஸ்வரன் கொலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை கண்ணாடிச்சந்திரனுக்கு வழங்கிய அதேவேளை உமாமகேஸ்வரனின் செயலாளராக இந்தியாவில் செயற்பட்டு வந்தவரும், சந்ததியார் வெளியேறியபோது சந்ததியாருடன் புளொட்டிலிருந்து வெளியேறியவருமான காசி (ரகு) உட்பட வேறு சிலரையும் கண்ணாடிச்சந்திரனுடன் இந்தியாவுக்கு அனுப்பி உமாமகேஸ்வரனை கொலை செய்வதென காந்தனால்(ரகுமான் ஜான்) முன்வைக்கப்பட்ட கொலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதென்று செயற்குழு முடிவெடுத்தது.
ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களினால் இலங்கை அரசபடைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்தும், இராணுவ முகாம்களை சுற்றிய பகுதிகளில் ஈழ விடுதலை போராட்ட இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் இராணுவ முகாம்களிலிருந்து இராணுவத்தினரின் வெளியேறும் முயற்சிகள் தடைப்பட்டுக் கொண்டிருந்தன. ரோந்து நடவடிக்கைகளிலும் ஈழ விடுதலை போராளிகளை தேடியழிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த இலங்கை இராணுவம் இராணுவமுகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையாக மாறியது.
இந்தியாவில் பயிற்சிபெற்ற ஈழவிடுதலை போராளிகளும் இயக்கங்களின் முன்னணி உறுப்பினர்களும், இயக்கத் தலைவர்களும் கூட இலங்கை இராணுவத்தினரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தங்கி நின்று தமது இயக்க செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தனர். "தீப்பொறி"ச் செயற்குழுவின் முடிவுக்கமைய ஏனைய இயக்கங்களைச் சந்தித்து அவர்களுடன் நட்புறவை பேணுவதை நோக்கமாகக் கொண்டு சந்திப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணியைச்(NLFT)சேர்ந்த மாறன், இரயாகரன், சபேசன் ஆகியோருடனும், தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவையினருடனும் டொமினிக் சந்தித்துப் பேசினார்.
ஈரோஸ்(EROS) இயக்கத்தைச் சேர்ந்த கைலாசுடன் தர்மலிங்கமும் பாலாவும் சந்தித்துப் பேசினர். தமிழீழ விடுதலை இயக்கம்(TELO), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF) ஆகிய இயக்கங்களுடன் காந்தனும் (ரகுமான் ஜான்) நானும் சென்று பேசுவதென்றும் முடிவானது.
தமிழீழ விடுதலை இயக்கத்(TELO) தலைவர் சிறீசபாரத்தினம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF) இயக்க இராணுவப் பொறுப்பாளர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததால் தயாசேகரம், சிவம் ஆகியோருடன் பேசி சிறீசபாரத்தினத்தைச் சந்திப்பதற்கும், சேகரின்(பாஸ்கரன்) தொடர்புக்கூடாக டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திப்பதற்கும் ஒழுங்கு செய்தோம். தமிழீழ விடுதலை இயக்கத்(TELO) தலைவர் சிறீசபாரத்தினத்தை கல்வியங்காட்டில் அவர் தங்கியிருந்த வீட்டில் சந்தித்துப் பேசியபோது அரசபடைகளுக்கெதிரான இராணுவத் தாக்குதல்களையே முதன்மைப்படுத்திப் பேசியதோடு எம்மையும் அத்தகைய தாக்குதல்களை செய்யும்படி வேண்டினார். அத்துடன் உமாமகேஸ்வரனால் எமக்கு வரவிருக்கும் ஆபத்துக்களை தான் உணர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்ட சிறீசபாரத்தினம் எமது தற்பாதுகாப்புக்கு வேண்டுமானால் தன்னால் ஆயுதங்கள் தந்துதவ முடியும் எனத் தெரிவித்தார். இச்சந்திப்பின் முடிவில் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொள்வதெனத் தெரிவித்து எமது முதல் சந்திப்பை முடித்துக் கொண்டோம்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) இராணுவப் பொறுப்பாளர் டக்ளஸ் தேவானந்தாவை மானிப்பாயில் உள்ள வீடொன்றில் சந்தித்துப் பேசினோம். எம்மை சந்திக்க வந்தபோது கையில் மார்க்சிய நூலைத் தன்னுடன் வைத்துக்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா சுமார் ஒருமணி நேரம் வரை எம்மிடம் பேசினார். எமது சந்திப்பானது நட்புறவின் பாற்பட்டதென்றும், புளொட்டுக்குள் நாம் முகம்கொடுத்த பிரச்சனைகள் மற்றும் புளொட்டினால் எமக்குத் தொடர்ந்து கொண்டிருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசிய நாம் தொடர்ச்சியாக சந்தித்துப் பேசுவதென முடிவெடுத்தோம்.
(தொடரும்)
03/02/2012
41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41