நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாகி வருகின்றன அவற்றின் வெளிப்பாடாகவே அண்மையில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெயின் விலைகளும் மின்சாரக்கட்டணமும் உயர்த்தப்பட்டன. அதன்மூலம் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் போக்குவரத்துக் கட்டணங்களும் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தொடர்ந்து விலை அதிகரிப்புக்களும் கட்டண உயர்வுகளும் இடம்பெறப்போகின்றன. இவை இன மொழி மத பேதமின்றி அனைத்து உழைப்புக்கும் மக்களுக்கு எதிரானவைகளேயாகும் தமது ஆட்சி அதிகாரத்தை தேவைக்காக மக்களை இனப்பகை மூலம் பிரித்து வைத்தும் பொருளாதார நெருக்கடிகளை எல்லா மக்களின் மீதும் சுமத்தியிருக்கின்றனர். இதனால் தெற்கிலே உழழைக்கும் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
பறிக்கப்படும் தமது வாழ்வாதாரங்களுக்கும் உரிமைகளுக்கும் போராட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு எதிராக நீட்டப்பட்டுவந்த துப்பாக்கிகள் இப்போது தெற்கின் மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டுள்ளன. அதன் மூலம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் கொடுர அடக்குமுறை முகம் சிங்கள மக்கள் மத்தியில் அம்பலமாக ஆரம்பித்துள்ளது. கடந்த வருட நடுப்பகுதியில் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு இளம் ஊழியர் போலீஸ் துப்பாக்கிக்கு பலியானார் இப்போது மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பை எதிர்த்த சிலாபம் மீனவர்களுக்கு எதிராகத் திருப்பப்பட்டது துப்பாக்கிக் குண்டினால் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஒரு நடுத்தர வயதுடைய மீனவர் கொல்லப்பட்டிருக்கின்றார். மூன்று வருடங்களுக்கு முன்பு இறுதி யுத்தத்தின் போது பல ஆயிரம் தமிழ் மக்கள் இதே துப்பாக்கிகள் மூலமே வகை தொகை இன்றிக் கொல்லப்பட்டனர். அதன் வலிகளும் வேதனைகளும் எத்தகையவை என்பதை இன்று சிங்கள உழைக்கும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இவ்வேளை பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் தமிழ் முஸ்லீம் மலையக மக்கள் சிங்கள உழைக்கும் மக்கள் முன்னெடுத்து வரும் வெகுஜெனப் போராட்டங்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து ஒன்றினைந்து போராட முன்வரல் வேண்டும் . சிங்கள உழைக்கும் மக்களுக்குத் தமிழர் தரப்பில் இருந்து நீட்டப்படும் நேசக்கரங்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளைச் சிங்கள மக்கள் மத்திக்கும் கொண்டு சென்று சேர்க்கக் கூடிய புதிய அரசியல் சூழலைத் தோற்றுவிக்கும். அதனால் இதுவரை காலத்தில் இரு புறத்திலும் முன்னெடுக்கப்பட்டு வந்த இனப்பகை அரசியலுக்குப் பதிலாக உழைக்கும் வர்க்க மக்களின் ஜக்கியத்தின் ஊடாக மாற்று வெகுஜென அரசியல் பாதையும் பயணமும் திறக்கப்படமுடியும்.
இதுவரை காலமும் தமிழ் மக்களின் நீதியான கோரிக்கைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்க மறுத்து பேரினவாத ஒடுக்குமுறையை யுத்தமாக தெற்கின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வந்தனர். சிங்கள உழைக்கும் மக்களுக்கு அவ்யுத்தத்தைக் காட்டி அவர்களது பொருளாதார வாழ்வாதாரக் கோரிக்கைகளை மறுத்து வந்த சிங்கள மேட்டுக்குடி முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது அம்மக்களுக்குப் பதில் கூற முடியாதுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் பின்பற்றப்பட்டு வந்த தாராளமயம் தனியார் மயம் உலக மயமாதல் என்பனவற்றில் தவறான பொருளாதாரஅரசியல் கொள்கைகளின் மொத்த விளைவுகளே இன்றைய பொருளாதார நெருக்கடிகளும் விலை உயர்வுகளும் வாழ்க்கை செலவு அதிகரிப்புக்களுமாகும். வலுப்பெற்று வந்த நெருக்கடிகளை திரையிட்டு மறைத்து சிங்கள உழைக்கும் மக்களைத் திசை திருப்பி வைத்திருக்கவே அரசியல் தீர்வை மறுத்து கொடூரயுத்தம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. பயங்கரவாதம் என்பதை வளர்த்தவர்கள் பேரினவாத ஆட்சியாளர்களே. அதனை அழித்ததாக கூறிப் பெருமை பேசி கொண்டவர்களும் அவர்களே. யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்கள் ஆகப்போகும் இவ் வேளையில் பொருளாதார நெருக்கடிகள் மக்களின் தலைகளின் மீது மேன்மேலும் சுமத்தப்படுகின்றன. இது ஏன் என்பதற்கு ஆளும் தரப்பால் உரிய பதில் கூற முடியாத நிலையிலேயே மக்கள் மீது துப்பாக்கி ரவைகளை ஏவி வருகின்றனர். ஜனநாயக மறுப்பு,மனித உரிமை மீறல்கள் போன்ற அடக்குமுறைகள் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரு புறத்தில் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு முன்வைக்கக்க முடியாத பேரினவாத நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உள்ளனர். அத்தகைய நிலையிலே தற்போது ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முழுப்பூசனிக்காயை இலைச்சோற்றில் மறைக்க அரசாங்கம் பெருமெடுப்பில் முயற்சி செய்து வருகிறது. புத்த பெருமானின் போதனைகளையும் பௌத்த தர்மத்தையும் தலைமேல் தூக்கி வைத்து ஆட்சி நடாத்தும் ஜனாதிபதி தலைமையிலான இன்றைய அரசாங்கம் போர்க்குற்றம் மனித உரிமை மீறல்கள் இடம் பெறவே இல்லையென வாதிட்டு நிற்பதானது எத்தகைய தர்மம் என்று புரியாது உள்ளது. இது நீதி நியாயம் ஜனநாயகம் மனித உரிமைகள் என்பனவற்றை மதிக்கும் சாதாரண சிங்கள உழைக்கும் மக்களை உலகஅரங்கில் அவமானப்படுத்தித் தலைகுனிய வைக்கும் செயல் முறையேயாகும்.
மறுபுறத்தில் நிறைவேற்று அதிகாரம், குடும்ப சகோதரர் ஆட்சி, ஊழல், ஆடம்பரம், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றால் நாட்டு மக்களே சூறையாடப்படுகின்றனர் இவற்றையிட்டுக் கேள்வி எழுப்பி வீதிக்கு வரும் மக்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் நீட்டப்படுகின்றன; கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்படுகின்றன. இந்நிலையில் மக்களுக்கு தெளிவானதும், தூரநோக்குடனான மக்கள் சார்பு மாற்று அரசியல் பாதை தேவைப்படுகிறது. அதனை விடுத்து தெற்கிலே மற்றுமொரு பேரினவாதக் கட்சியான ஜக்கிய தேசியக்கட்சியையும் வடக்கு கிழக்கிலே பழைமைவாதக் கொள்கை மாறாத தமிழ் குறுந்தேசியவாதத் தலைமைகளையும் மீண்டும் ஆட்சிக்கும் பதவிகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் கொண்டு வருவதால் எந்தப்பலனும் ஏற்படப்போவதில்லை. இது நாறிப்போன பழைய சோற்றைக் கொதிப்பிப்பது அல்லது அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போன்ற பிற்போக்கு வாக்கு வங்கி அரசியலின் நீடிப்பாகவே அமைந்து கொள்ளும்.
எனவே தெற்கின் உழைக்கும் சிங்கள மக்களும் வடக்குகிழக்கு மலையகத்தின் உழைக்கும் மக்களும் ஒருவரது அரசியல் கோரிக்கையை மற்றவர் ஆதரித்து நிற்கும் மாற்று கொள்கையின் ஊடான வெகுஜன எழுச்சியும் போராட்டங்கள் இன்றைய சூழலில் அவசியமானதாகும்.
(யாழ்நகரில் 24.02.2012 அன்று புதிய-ஜனநாயக இளைஞர் முன்னணியின் வடபிராந்தியக் குழு ஏற்பாடு செய்த அரசியல் கலந்துரையாடலில் ஆற்றப்பட்ட உரையின் சுருக்கவடிவம்)
"http://thulaa.net/home/archives/351"