இலங்கை அரசின் மீதும், அதன் ராணுவத்தின் மீதும் போர்க்குற்றம், சர்வதேச விசாரணை என, அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், யுத்தம் முடிந்து இரு வருடங்களின் பின்னர் மிகவும் ஆக்கிரோசமாக பொங்கி எழுகின்றன. ஏன் இந்தத் திடீர் கரிசனை. இந்த இருவருட காலத்தில் என்னதான் நடந்தன என்பதனை, சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இன்றைய புதிய பொருளாதார ஒழுங்கில், அமெரிக்கா ஐரோப்பிய மேற்குலக நாடுகள் ஓர் அணியாகவும், ரஸ்சியா சீனா இன்னோர் அணியாகவும் பிரிந்து நின்று, தமது உற்பத்திகளிற்கு சந்தை பிடிப்பதிலும், மூன்றாம் உலக மற்றும் வளர்முக நாடுகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளை இடுவதிலும், மிக அடிமட்டக் கூலிக்கு மனித உழைப்பினை உறிஞ்சுவதிலும், இவ்விரு அணிகளிற்கு இடையே மறை முகமான போட்டா போட்டி நிலவுகின்றது. குறிப்பாக தென் கிழக்காசியாவில் இந்திய ஆளும் வர்க்கம் முழு நாட்டையுமே அமெரிக்க வல்லரசிற்கும், அதன் நட்பு நாடுகளிற்கும் தாராளமாக கொள்ளையிட திறந்து விட்டுள்ளது. இதற்கு பரிகாரமாக இந்திய முதலீடுகளில் இந்தியப் பெரும் முதலாளிகளையும் தம்முடன் இணைத்துக் கொண்டதன் மூலம், மேற்கத்திய சுரண்டல் தாராள மயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெரு முதலாளிகளான ரிலயன்ஸ் பிர்லா போன்ற கம்பனிகள், வால்மாட் ரெஸ்கோ போன்ற பன்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து புதுப்புது பெயர்களில் (பிரஸ்) கம்பனிகளை ஆரம்பித்து, உள்நாட்டு உற்பத்திகளிற்கும் அவற்றின் சந்தைகளிற்கும் ஏற்கனவே பெரும் வேட்டுக்களை வைத்து விட்டனர். மேலும் மலைவாழ் மக்களின் இருப்பிடங்களிற்கு கீழ் உள்ள கனிம வளங்களை கொள்ளையிட, மேற்கத்திய கம்பனிகள் வேலைகளை ஆரம்பித்து விட்டன.
இதற்காக இந்திய ஆளும் முதலாளி வர்க்கத்தின் அரசு, மலைவாழ் மக்களை கொன்றும் – விரட்டியும் ஒரு பெரும் மனித அவலத்தினையே நடத்திக் கொண்டிருக்கின்றது. அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களின்படி, இந்திய அரசில் எந்தக் கட்சி ஆட்சி புரிய வேண்டும் என்பதனை தீர்மானிப்பது அமெரிக்கா என்பதுவும், இந்திய ஆளும் வர்க்கம் அமெரிக்கர்களிற்கு கூசா தூக்கும் எடுபிடிகள் தான் என்பதும், மிகவும் தெளிவாகின்றது. இந்தியா ஒரு வல்லரசாகிவிட்டது என்பதெல்லாம் அடிமட்ட மக்களை ஏமாற்ற கட்டவிழ்த்து விடப்படும் கட்டுக் கதைகளே.
மறுபுறத்தே, சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலவசமாக ஐந்து பாரிய கடற்தளங்களை இலங்கை உட்பட பலநாடுகளிற்கு கட்டிக்கொடுத்து, இந்தப் பிராந்தியத்தில் தனது இருப்பினை நிலைநாட்டி உள்ளதுடன், இலங்கை அரசிற்கு பெருவாரியான பணத்தினையும் அள்ளிக் கொடுத்து, யுத்தத்தில் வெற்றியீட்ட அனைத்துஉதவிகளையும் ஏனைய நாடுகளை விட முன்னின்று செய்தது.
இதன் மூலம் இலங்கையின் மீது தனது செல்வாக்கினை அதிகரித்து, பல முதலீடுகளை மேற்கொண்டு வருவதுடன், சில பிரதேசங்களை தனது பூரண கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கின்றது. இலங்கையில் இருந்த மேற்குலக முதலீடுகளிற்கான வாய்ப்புக்கள் பறிபோன நிலையே, இன்று அங்கு காணப்படுகின்றது. பல்வேறு காரணங்களிற்காக, புலி அழிப்பு யுத்தத்தினை, கூட்டாக நடத்தி முடிக்க வேண்டிய தேவை, அனைத்து வல்லரசுகளிற்கும் இரு வருடங்களிற்கு முன்னர் இருந்தது.
1.புலிகளின் இராணுவ வெற்றிகள் ஏனைய போராட்ட அமைப்புகளிற்கு புதிய உத்வேகத்தினையும், நம்பிக்கையினையும் கொடுத்திருந்தமை.
2.புலிகளின் ஆகாய – கடற்படைகளின் பலமானது, இந்து சமுத்திர பிராந்தியத்தில், வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு பெரும் தலையிடியாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தமை.
3.உலகத்தின் ஏனைய பகுதிகளில் இருந்த கனிம வளங்களைக் கொள்ளையிட்ட பின்னர், புதிய கனிம வளங்களைக் கொண்ட இடமாக இந்தப் பிராந்தியம் விளங்குகின்றமை.
மேற்கூறிய காரணங்களிற்காக, இந்தப் பிராந்தியத்தில் தமக்கான சுமுக நிலையினை ஏற்படுத்த, புலிகளை அழிப்பதன் மூலமே தோற்றுவிக்கலாம் என்ற கட்டாய நிலை வல்லரசுகளுக்கு ஏற்பட்டது. இதன் பொருட்டு, அனைத்து வல்லரசுகளும் கூட்டிணைந்து, புலி அழிப்பு யுத்தத்தினை மேற்கொண்டனர். யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர், வவுனியா படைத் தளத்தில் அமெரிக்க – சீன – ரஸ்ய – இந்திய – ஜப்பானிய இராணுவத் தளபதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் இந்த அழிப்பு யுத்தத்திற்கான கூட்டுத்திட்டத்தினை தீட்டியதுடன், அதன் ஒவ்வொரு கட்டநடவடிக்கைகள் பற்றியும் எப்படி முடித்து வைக்கப்பட வேண்டும் என்றும், மிகவும் நன்றாகவே திட்டம் தீட்டி ஒப்புதல்களை வழங்கியதுடன், அனைத்து இராணுவ உதவிகள், செய்மதி ஊடான தகவல்கள் என்பனவற்றினை இலங்கை அரசிற்கு வழங்கின.
இந்த அமெரிக்கா உட்பட, ஏனைய மேற்குலக நாடுகளிற்கெல்லாம், இந்த இனப்படுகொலையில் போர்க் குற்றங்கள் இழைக்கப்படும் என்பது ஏற்கனவே நன்கு தெரிந்த விடயங்களேயாகும். இவர்களிற்கு இந்த போர்க் குற்றங்கள் குறித்த இவர்களின் சொந்த அனுபவங்கள் ஆப்கான், ஈராக், வியட்நாம் என பல்வேறு நாடுகளில் நிறையவே உண்டு.
ஈழ யுத்தத்தின் இறுதி நாட்களில், மக்களை கொத்துக் கொத்தாக கொன்றதனை, சற்றலைட்டில் படங்களாக எடுத்துப் பார்த்து தமது திட்டம் மிகவும் நன்றாகவே நடக்கின்றது என புளகாங்கிதம் அடைந்தவர்கள் தான் இவர்கள். அந்த வேளையில் போர்க்குற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என, எந்தவிதமான நடவடிக்கையினையும் எடுக்காதவர்கள் தான் இவர்கள். இந்த வல்லரசுகள் தீட்டிய திட்டத்தின் இன்னோர் அங்கம் தான் மக்களை திறந்தவெளி சிறைச்சாலைகளில், முகாம்கள் எனும் பெயரில் அடைத்து வைத்து, தப்பி வருகின்ற புலிகளை இனங்கண்டு கொலை செய்வது. புலி அழிப்பின் பெயரில் அப்பாவி மக்களின் மீதான கொடூரங்கள் முடிந்த பின்னர், உடனடியாக தமது கைப் பொம்மையான ஐ.நா செயலரினை அனுப்பி, தாம் ஜனநாயகவாதிகள் என்று பறைசாற்றிக் கொண்டனர். இந்த ஜ.நா. பான் கி மூனினை முன்னரே அனுப்பி, மக்களை புலிகளின் பிடியிலிருந்து காக்க, இந்த வல்லரசுகள் முன்வராது மௌனமே காத்தன. இங்கே தான் கிழிந்தது இவர்களின் மக்கள் மீதான கரிசனை.
யுத்தம் முடிந்த பின்னர், சீனா தான் செய்த மிகப் பெரிய ராணுவ உதவியின் காரணத்தினால், இலங்கையில் பெருமளவில் முதலீடுகளையும், அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதிலும் வெற்றி கண்டது. அமெரிக்காவிற்கும், மேற்குலகிற்கும் இலங்கையில் முதலிட பெரும் வாய்ப்புக்கள் அற்றுப்போயின. தென் கிழக்காசிய பிராந்தியத்தில் பூகோள ரீதியில் இலங்கைத் தீவானது அமெரிக்கா
உள்ளிட்ட மேற்குலக வல்லாதிக்க நாடுகளிற்கு சூழவுள்ள அனைத்து நாடுகளையும் கண்காணிக்க ஒரு கேந்திர முக்கியத்துவமான இடமாகவும் விளங்குகின்றது. இன்று சீனா இலங்கைக்கு இலவசமாக கட்டிக்கொடுத்த அம்பாந்தோட்டை துறைமுகமும், சீனர்களின் பெரும் எண்ணிக்கையிலான பிரசன்னமும், மேற்குலகத்தின் இராணுவ ரீதியிலான பிராந்திய ஆதிக்க நோக்கங்களிற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது.
இதனால் ஆத்திரம் கொண்ட மேற்குலக நாடுகள் இலங்கை மீது நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தன. இதில் ஒரு நடவடிக்கை தான் ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் மறுக்கப்பட்ட ஜி.பி.எஸ். சலுகை. சீனா இதற்கெதிராக இலங்கைக்கு பெரும் பணத்தினை உதவியாகச் செய்ததன் காரணத்தினால் அது பெரிய அளவிலான நெருக்கடியை இலங்கை அரசிற்கு கொடுக்கவில்லை எனலாம்.
1970 – 80களில் நிலவிய ஏகாதிபத்திய போட்டியில் இலங்கையினை அமெரிக்க சார்பு நிலையிலிருந்து மாற்றவும், தென்கிழக்காசியாவில் இந்தியப் பிராந்திய வல்லாதிக்கத்தினை நிலைநிறுத்தவும், இந்தியா விடுதலை இயக்கங்களை தனது நலன்களின் நோக்கில் இயக்கி, பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து, இறுதியில் ஜே.ஆருடன் இணைந்து, இந்திய பொருளாதார பிராந்திய வல்லாதிக்க நலன்களை உறுதி செய்த உடன்படிக்கையென, ஏதோ ஒன்றினை இலங்கைத் தமிழர்களிற்கான தீர்வென்ற ஒப்பந்தப் பேரில் மேற்கொண்டு, தனது நோக்கத்தினை சாதித்துக் கொண்டது.
1. சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலை திட்டமிட்டு இந்தியப் படை அதிகாரிகளை ரெலோவுடன் பங்குபற்ற வைத்து வெற்றிகரமாக முடித்தமை.
2. அநுராதபுரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி சிங்கள மக்களை புலிகளைக் கொண்டு படுகொலை செய்தமை. அந்தப் படுகொலைக்குள்ளான அப்பாவி மக்களின் எண்ணிக்கைக்கு சமனான அளவு ஆயதங்களை புலிகளிற்கு பரிசாக கொடுத்தமை.
3. வடமராட்சியில் லிபரேசன் ஒப்பிரேசன் நடந்தபோது, இலங்கை வான் பரப்பில் முன்னறிவித்தல் ஏதுமின்றி தனது விமானங்களை அனுப்பி, நிவாரணங்களை வழங்கியதன் மூலம், மறைமுகமாக இலங்கை அரசினை எச்சரித்தமை.
இப்படி பல மிரட்டல்கள், சதிகள் மூலம் இலங்கையினை அன்று அடிபணிய வைத்தது
இந்தியா. அன்று இந்தியா மேற்கொண்ட வழியினையே, இன்று அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பின்பற்றுகின்றனர்.
1.போர்க் குற்றம் மற்றும் சர்வதேச விசாரணை என்பதனை கையிலெடுத்து, இலங்கை அரசினை மிரட்டி தமது பொருளாதார நலன்களையும் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது பிரசன்னத்தினையும் நிலைநிறுத்த முனைகின்றனர்.
2.நாடுகடந்த அரசினை மறைமுகமாக ஆதரிப்பதன் மூலம், இலங்கை அரசிற்கு எச்செரிக்கை விடுகின்றனர்.
3. தங்களிற்கும் அடங்காத, இலங்கைக்கும் ஆபத்தான தீவிரவாத புலி (நெடியவன்) பேர்வழிகளைக் கைதுசெய்து, பிணையில் விட்டதன் மூலம் இவர்களையும் தாங்கள் கட்டுப்படுத்த முடியும் என்ற செய்தியினை தெரிவிக்கின்றனர்.
இந்த ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை, இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த கொடூரங்களையும், கொடுமைகளையும், உலகமக்களிற்கு வெளிக்கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றியுள்ளது. ஆனால் இந்த கொடூரங்களிற்கு எல்லாம் இந்த வல்லரசுகள் சாட்சியாகவும் பங்காளிகளாகவும் இருந்து பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு பின்புலத்தில் இருந்தனர் என்பதனை நாம் மறந்துவிட முடியாது. இன்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்த போர்க்குற்றத்தினைப் பற்றி குரல்கொடுப்பது எமக்கான பிடியென்று, நாடு கடந்த அரசுக்காரர் போலவும், தமிழின தேசியவாதிகள் போலவும், நாமும் செயற்படின்..? கடந்த 30 ஆண்டு கால போராட்டத்தில் நாம் கற்றுக் கொண்டவைதான் என்ன?
உண்மையில் இந்த வல்லரசுகள் இலங்கை மக்களின் மீட்பர்களோ, நண்பர்களோ கிடையாது. இவர்கள் ஆளும் வர்க்கங்களின் நண்பர்கள் மட்டுமேயாகும். இவர்கள், மக்களின் போராட்டங்களை தமது கைகளில் எடுத்து, அதற்கு ஊடாக தமக்கான நலன்களைச் சாதிப்பதனையே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றவர்.
இலங்கை மக்களின் போராட்டமானது, உண்மையான சுதந்திரத்தினையும், விடுதலையினையும் வேண்டின், பரந்துபட்ட மக்கள்; இந்த மக்கள் விரோத சக்திகள் பற்றிய புரிந்துணர்வுடன் இன – மத – மொழி பேதங்களை கடந்து ஐக்கியப்பட்டு, சிறுபான்மை இன மக்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரித்து போராடுவதன் மூலமே; இந்த வல்லரசுகளையும், இலங்கை ஆளும் பாசிச இனவெறி அரசினையும் வெற்றி கொண்டு, இலங்கைத் தீவிலுள்ள மக்களிற்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தினை பெற்றுக் கொள்ள முடியும்.
-ஜெகதீசன்
முன்னணி (இதழ் -3)