Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநிகரில்வெளிவந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கு திமோரின் சுதந்திரத்திற்காகப் போராடிய போராளி ஒருவர் ஈழப்போராட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் உலகிலேயே மிக மோசமான உட்படுகொலைகள் நடந்த போராட்டம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஈழத் தமிழ் சமுதாயத்தில் நிலவி வந்த வன்முறை, ஆயுதம் தாங்கிய போராட்டம் எழுச்சி பெற்ற போது அதன் உச்சக்கட்டத்தை அடைந்ததையே மேற்கூறிய கருத்து வெளிப்படுத்துகின்றது. இனியொரு இணையத்தில் வருகின்ற அய்யரினது போராட்ட வரலாறும், தமிழரங்கம் இணையத்தில் வருகின்ற சீலனது தொடரும்; ஈழப் போராட்டத்தின் கோர முகங்களை, அரசியலற்ற தன்மையை, மனிதநேயம் என்பதை அறியாத தலைமைகளால் போராளிகள் சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப் பட்டதையும், கொல்லப் பட்டதையும் வெளிப்படுத்துகின்றன.

 

போராட்டத்திற்கு எதிரானவர்களைக் கொல்வது என்பது தமது இயக்கத்திற்கு எதிரானவர்களைக் கொல்வது என்பதாகி, இறுதியில் தமது தலைமைக்கு எதிரானவர்களைக் கொல்வது என்பதில் போய் முடிந்தது. புலிகளின் ஆரம்ப கால உட்படுகொலைகள், பின்பு மாத்தையா குழுவினர், கருணா குழுவினருக்கு எதிரான கொலைகள் என நூற்றுக் கணக்கான போராளிகளின் கொலைகள் நீண்டு சென்றது. தமது இயக்கம் புனிதமானது, தமது போராளிகள் கட்டுப்பாடு மிக்கவர்கள் எனப் புலிகளால் பிரச்சாரம் செய்யப் பட்டு வந்தது. மற்றைய இயக்கங்களை அழிப்பதற்கு அவர்கள் துரோகிகள், கட்டுப்பாடற்றவர்கள் என்பதே புலிகளால் தமது கொலைகளிற்கான காரணங்களாகக் கூறப்பட்டு வந்தது. தமது இயக்கத்தவரை ஒழுக்க சீலர்களாகவும் உத்தம புத்திரர்களாகவும் படம் காட்டி வந்த புலிகள் தமக்குள் பிளவு ஏற்படும் மறுகணமே தமது சொந்த உறுப்பினரையே துரோகிகள், இந்திய அரசின் கைக்கூலிகள், இலங்கை அரசின் ஒட்டுக்குழு எனக் குற்றஞ்சாட்டிக் கொலை செய்தனர். புலிகளில் இருந்து பிரிவதற்கு முதல்நாள் இறந்திருந்தால் மாவீரர் எனப் பட்டம் பெற்றிருக்கக் கூடியவர்கள் சில மணிநேரம் பிந்தி துரோகி என இறந்தது புலிகள் இயக்கத்தில் மட்டுமே காணக் கூடிய குரூரமான நகைச்சுவை ஆகும்.

எந்தவிதமான அரசியல் அறிவுமின்றி ஒரு ஒடுக்குகின்ற அரச இராணுவம் போன்றே ஈழவிடுதலை இயக்கங்களின் இராணுவ அமைப்புகள் பதவிகளின் படிநிலை அதிகாரம் மிக்கதாகக் காணப்பட்டது. புலிகளின் மட்டக்களப்புத் தேசியத் தலைவர்களான கருணா, பிள்ளையான் என்பவர்களால் துரோகிகள் எனப் பலர் கொல்லப் பட்டனர். இந்தத் தேசியத் தலைவர்கள் இன்று புலிகளின் துரோகிகள். இந்தத் துரோகிகளால் கொல்லப் பட்டவர்களின் குடும்பங்களிற்கு புலிகளால் என்ன பதிலைக் கூறமுடியும். மேலும் இந்த உத்தம புத்திரர்கள், கொள்கைக் குன்றுகள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று நாவறண்டு திரிந்தவர்கள், புலிகளில் இருந்து விலகிய மறுகணம் கொலைகாரன் மகிந்தவின் காலைக் கழுவிய தண்ணீரில் தமது தாகத்தைத் தீர்த்தனர்.

புளொட்டில் உமாமகேஸ்வரன், சங்கிலி, மாணிக்கதாசன் கும்பலினால் நூற்றுக்கணக்கான போராளிகள் கொல்லப் பட்டனர். சந்ததியார் புளொட்டின் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். 1983 இனக் கலவரத்தின் பின் ஈழ விடுதலை இயக்கங்கள் இந்திய கொடுத்த இராணுவப் பயிற்சி எனும் சூழ்ச்சி வலைக்குள் சிக்கி இருந்த போது ‘வங்கம் தந்த பாடம்’ எனும் நூலை வெளியிட்டவர். இந்திய அரசு வங்கதேச விடுதலைக்காகப் போராடிய முக்திபாகினி அமைப்பை எப்படித் தமது கைப்பாவையாக வைத்திருந்தது; வங்கதேசத்தின் உண்மையான புரட்சியாளர்களை அழித்தது; வங்கதேசத்தை முற்போக்கான சுதந்திரமான நாடாக வரவிடாமல் இந்திய முதலாளித்துவ நலன்களை ஏற்கக்கூடிய நாடாக மட்டுமே வரவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது என்பவற்றை ஈழப்போராளிகள் படிக்க வேண்டிய பாடமாக எழுதியிருந்தார். இத்தகைய ஒரு போராளி தான் உமாமகேஸ்வரனின் பிணம் தின்னும் அரசியலால் கொல்லப்பட்டார். சுதந்திரத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடுகிறோம் எனக் கூறிக் கொண்ட உமாமகேஸ்வரன் தனது துதிபாடிகளால் பெரியய்யா என பண்ணையடிமைக் கால மக்கள் தமது நிலப்பிரபுவை அழைப்பது போல் அழைக்கப் பட்டார்.

“மக்கள் பங்கேற்காத, மக்களின் கண்காணிப்பில் இல்லாத ஆயுதக் குழுக்களாக ஈழவிடுதலை இயக்கங்கள் இருந்தமையே இப்படுகொலைகளிற்கும் போராட்டத்தின் தோல்விக்கும் முதன்மையான காரணிகளாக அமைந்தன. மக்களின் கண்காணிப்பு இல்லாமல் போனதால் தான் மேதகுகளும் பெரியைய்யாக்களும் தமது சொந்தப் போராளிகளையே கொன்று பின்பு ஈழவிடுதலையையும் ஈழமக்களையும் பலி கொடுத்தனர்.”

ரெலோவில் சிறிசபாரத்தினத்தினால் அந்த இயக்க இராணுவப் பொறுப்பாளராக இருந்த ரமேஸ் உட்படப் பலர் கொல்லப் பட்டனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் தாஸ் – பொபி என்ற இரு ரெலோ குழுக்களிற்குள் நடந்த கொலைகளை எதிர்த்து பொதுமக்கள் நடாத்திய ஊர்வலத்தில் பொதுமக்கள் மீதே ரெலோவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் ஏற்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி புலிகள் ரெலோவைத் தடை செய்தனர். சிறிசபாரத்தினத்தின் தவறான போக்கினால் ரெலோவின் நூற்றுக் கணக்கான போராளிகள் புலிகளால் கொல்லப் பட்டனர். இவர்களில் பலர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணச் சுற்றாடல் அவர்களிற்குத் தெரியாததாலும் அடைக்கலம் கொடுப்பதற்கு தெரிந்தவர்கள் எவரும் இல்லாததாலும் அவர்களால் தப்பியோட முடியாமல் போனது. இப்போராளிகளின் உடல்கள் கிட்டு தலைமையில் ரயர்களில் போட்டுக் கொழுத்தப் பட்டன.

ஆரம்ப நாட்களில் இடதுசாரிப் பின்னணி கொண்டதாக இருந்த E.P.R.L.F இலும் பத்மநாபா – டக்ளஸ் தேவானந்தா பிளவின் பின் உட்கொலைகள் கூடுதலாக நடந்தன. டக்ளஸின் E.P.D.P யினால் புலிகள் எனச் சந்தேகிக்கப் பட்டு பலர் கொல்லப்பட்டனர்.

சோவியத் ஒன்றியம் தொடங்கி கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா, வியட்நாம், கொரியா என பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையில் தொழிலாளர்களும் விவசாயிகளும் தம் இன்னுயிரைக் கொடுத்து வென்றெடுத்த வர்க்கப் புரட்சிகள் மக்களினது கண்காணிப்பில் இருந்து விலக்கப் பட்டு கட்சித் தலைமைகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்பே சீரழிந்து போயின. மக்கள் பங்கேற்காத, மக்களின் கண்காணிப்பில் இல்லாத ஆயுதக் குழுக்களாக ஈழவிடுதலை இயக்கங்கள் இருந்தமையே இப்படுகொலைகளிற்கும் போராட்டத்தின் தோல்விக்கும் முதன்மையான காரணிகளாக அமைந்தன. மக்களின் கண்காணிப்பு இல்லாமல் போனதால் தான் மேதகுகளும் பெரியைய்யாக்களும் தமது சொந்தப் போராளிகளையே கொன்று பின்பு ஈழவிடுதலையையும் ஈழமக்களையும் பலி கொடுத்தனர்.

சுதந்திரத்திற்காகப் போராடி சுதந்திரம் மறுக்கப்பட்டு மடிந்த போராளிகளை நினைவு கொள்வோம்.

நன்றி

www.kuralweb.com