Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் – 10.05.2010

யாழ் சிறைச்சாலையில் மீண்டும் பஸ்தியாம்பிள்ளைகளோ?

யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளாக உள்ள 8 பேர் மீது,  சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த 30ம் திகதி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஒரு பக்கமாக உள்ள கம்பி ஒன்று கழற்றப்பட்டிருந்ததாகவும், இதனால் அங்கிருந்து இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறி சுமார்  10க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள்  குறித்த 8 பேர் மீதும் பல மணி நேரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .

அவர்களில் இருவரது கை மற்றும் கால்கள் உடைந்துள்ளன. அவர்களது அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவப்பட்டும் உள்ளன. சிறுநீருடன் இரத்தம் கலந்து செல்வது உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கத்தினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

30 ம் திகதி இச் சம்பவம் இடம் பெற்றுள்ள போதிலும், இன்றுவரை இவர்கள் எவருமே வைத்திசாலையில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை. தொடர்ந்தும் இவர்கள் சிறைச்சாலையிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து யாழ்ப்பாண நீதிவான் திடீர் விஜயமாக சிறைச்சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அவ்வேளையிலேயே கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகின. குறித்த 8 அரசியல் கைதிகளும் நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் சிறைச்சாலையில் 30-வருடங்களுக்கு முன்பாக பஸ்தியாம்பிள்ளை பாணியில் செய்த சித்திரவதைகள் மனக் கண்முன் வருகின்றன. இதைச் சிறைச்சாலை தமிழ் அதிகாரிகளோ செய்கின்றர்கள்? எனப் பலர் மனவருத்தம் அடைகின்றனர், அங்கலாய்கின்றார்கள். அதிகாரத்தில் இருக்கும்போது, தமிழர்களுக்கு அதிகார வெறியை சுவைக்கத் தெரியாதோ?  டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களும், ஏனைய ஜனநாயக நீரோட்டக்காரர்களும், கடந்தகாலங்களிலும் தற்போதும் “மகிந்த பாசிச சர்வாதிகார பேரினவாதப் பானத்தைப்” பருகிக் கொண்டுதானே இருக்கின்றார்கள். அது சரி  இந்த அரசியல் தமிழ் கைதிகள் இப்படி கோரத்தனமாக தாக்கப்படுவதற்கு அவாகள் செய்த குற்றம்தான் என்னவோ? சிறைச்சாலையின் ஓர் பக்கக் கம்பியொன்று கழன்றிருக்க இதை அவர்கள்தான் செய்தார்கள் என்பதே, இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாக தெரியுமென்பார்கள். அப்பாங்கிலேயே பல விடயங்கள் தொடராய்த் தொடர்கின்றன. யாழ் மக்களின்  “பெரும் விருப்பைப் பெற்றவர்”  இன்னும் “தன் விருப்பை”  செப்பவில்லையே?  அவர் ன் சொல்வார் என்பது ஊரறிந்ததே.

குரங்கின் கையில் சவரக்கத்தியைக் கொடுத்ததுபோல, அதிகாரத்தைப் பயன்படுத்தமுடியாது.   இருக்கின்ற சட்டம் போதுமானதே. அவசரகாலச்சட்டம் தேவையில்லை. –பாராளுமனறத்தில் சரத்பொன்சேக

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும்,  மக்களிடையே நம்பிக்கை கட்டியெழுப்பப்படவில்லை என்பதுடன், சரணடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு உரிய நீதி இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்தி விடுதலை செய்யவேண்டும். அல்லது வழக்கு தாக்கல் செய்யவேண்டும்” என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ள நாட்டில் அவசரகாலச் சட்டம் தேவையில்லை, சிறைப்படுத்துவதன் மூலமாக உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியாது. அதிகாரத்தை குரங்கின் கையில் சவரக் கத்தியை கொடுத்தது போல பயன்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கன்னியுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

“எனக்கு 40 லட்சம் மக்கள் வாக்களித்து அரசியலுக்கு அழைத்திருக்கின்றனர். பொதுத்தேர்தலில் 4 1/2 லட்சம் பேர் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு வாக்களித்ததுடன் கொழும்பில் எனக்கு 98 ஆயிரம் பேர் விருப்பு வாக்களித்தனர். அதேவேளைஇ நாட்டின் நிர்வாகத்திற்கு எதிராக 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

வாக்களித்தவர்களுக்கும், என் மீது சேறு பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

30 வருடகால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை அரசியல்வாதிகளினால் அபகரிக்க முடியாது. யுத்தம் செய்த படையினருக்கும் களத்தில் நின்றவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கை, கால்களை இழந்தவர்களுக்கும்,  திட்டமிட்டவர்களுக்குமே இது உரித்துடையதாகும்.

யுத்த வெற்றியை நாட்டின் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்ற வேண்டும். யுத்த காலத்தில் வடக்குகிழக்கு மக்கள் துன்பப்பட்டனர். இன்னும் இன்னும் துன்பப்படவேண்டுமா? மக்களை சாதாரண சட்டத்தின் கீழ் வாழ வழிசமைக்க வேண்டும். என்பதனால் அவசரகாலச்சட்டத்தை என்னால் அனுமதிக்க முடியாது.

அவசரகாலச் சட்டத்தின் கீழேயே சுதந்திரம் தெரியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். சாதாரண சட்டத்தின் கீழ் மக்கள் வாழ வேண்டும். சட்டம் மக்களை பாதுகாக்கவும், சக்தி படைக்க வேண்டும். எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சட்டம் தேவையில்லை.

எனது அனுபவம் பாதுகாப்பு, அறிவு என்பவற்றை வைத்து பார்க்கின்ற போது தற்போது இருக்கின்ற சட்டம் போதுமானதாகும். அவசரகாலச்சட்டத்தின் மூலம் மக்கள் துன்பப்படுகின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் அதிகாரத்தை நாட்டின் நன்மைக்காகவே பயன்படுத்தினர். வைராக்கிய அரசியலுக்காக சட்டத்தை பயன்படுத்த முடியாது. அது நன்மை பயக்காது. அவ்வாறு நடந்தால் உலகம் இந்த நாட்டை மிலேச்சத்தனமான நாடாகவே பார்க்கும்.

என்னுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒவ்வொருவர் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். எனினும் எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டம் தனது பணியை செய்கின்றபோது உண்மை வெளிவரும்.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் மக்கள் உண்மையாகவே சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. பலர் அஞ்சி இருக்கின்றனர். வெளியேறியும் இருக்கின்றனர்.

நாட்டின் நிலைமையை பார்க்கின்ற போது வாழும் சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இராணுவம் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பல சிரேஷ்ட அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரவோடிரவாக வெளியேற்றப்படுகின்றனர்.

அதிகாரிகள் மட்டுமன்றி அவர்களின் பிள்ளைகளும் அச்சுறுத்தப்படுகின்றனர். மனித உரிமைக்கு மரியாதையில்லை. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும்,  இலங்கையில் சௌஜன்யம் ஏற்படுத்தவில்லை.

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்

யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது. எனினும் மக்களுக்கு இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவில்லை. இன, மத, மொழி பேதங்கள் இன்றி மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். அதற்கான சூழலை கட்டியெழுப்ப வேண்டும்.

அதிகாரத்தை சரியான முறையில் செயற்படுத்தாவிடின் சட்டத்தை முன்னெடுக்க முடியாது. பயங்கரவாதிகள் அங்கும் இங்கும் இருக்கின்றார்கள் என்பதற்காக அவசரகாலச்சட்டத்தை தொடர முடியாது.

அமெரிக்காவுக்கு அல்-கொய்தா சவாலாக இருக்கின்றது. எனினும் அங்க அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.”

தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர் அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்து போனவர்களும் அல்லர்— பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரன்

கெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இறந்துபோன உறவுகளின் எலும்புத் துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்து போன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின்  அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு,  தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ் பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.
இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணு குண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத் தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.
தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு. துருக்கிய பேரரசாலும்  ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.

உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.

இப்பேரழிவின் பின்னால் இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும்  பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள் கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.

மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக  எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?

நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு,  எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்புஇ எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப் போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.

எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம்,  தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின் போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.

புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.

இலங்கை “பெண்களின் சொர்க்கம்” என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர்.

ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால்,  அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும்,  தூரப்பார்வையையும்,  இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.

30-வருடப் போரில், போரை நடாத்தியவரதும், பாதிக்கப்பட்ட-அழித்தொழிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பாக பேசுபவரதும் பாராளுமன்ற உரைகளைக் பார்க்கின்றோம். 30-வருடப் போர் “விடுதலைப் போராக” பர்ணமித்திருந்தால் இவ்வுரைகளுக்கான சந்தர்ப்பங்களே ஏற்பட்டிருக்காது. மே 18-ற்குப் பின்னான அரசியல், அரசியல் போராட்டத்தலைம, ஸ்தாபன அமைப்பற்ற வெற்றிடத்திலேயே இவ்வுரைகள் அமைகின்றன. தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமைக்கான விடுதலைப்போரை  “அரிவரியில்”  இருந்தே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அவ்வகையில் இவ்வுரைகள் காத்திரமானவையே. இதைச் சில குறுந்சாதிய “தலித் கம்பனி அந்தரப் புரட்சியாளர்கள்”  அந்தரத்தில் நின்று விமர்சிக்கின்றார்கள். தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் ஆண்ட பரம்பரைக்காரர்களையும், பிற்போக்குவாதிகளையும் தேர்ந்தெடுத்துள்ளார்களாம். தமிழ்மக்களின் கடந்த 60-ஆண்டு அரசியல் இவர்களுக்கு ஊடாகத்தானே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்குள் மாற்று என்ற அரசியல் என்ற கதைக்கே இடமிருக்கவில்லை. இது இந்த “பண்ணாடை சமூக விஞ்ஞானிகளுக்கு” தெரியாதோ? சமகால அரசியலில் கூட்டமைப்பு, உந்த “நாடுகடந்த தமிழ் ஈழம்” , வட்டுக்கோட்டைக்கு வாக்களிப்பது போன்ற சாத்தியமற்றதுகள் பற்றி பேசாது, தமிழ்மக்கள் பிரச்சினைகக்கு தீர்வுபற்றி பேசுவதே பெரும்காரியம்.   கடந்த தேர்தலில் வடபகுதியில் உயர்சாதியினரை விட தாழ்த்தப்பட்ட மக்களே பெரும்பான்மையெனவும்,  3-தொகுதிக ளும் தங்களுக்கே எனப் புறப்பட்ட சிறுபர்ன்மைத் தமிழர் மகாசபைக்கு கிடைத்த வாக்குகள் ஓராயிரம் மாத்திரமே. போட்டியிட்ட சகல சுயேட்சைக் குழுக்களுக்கும் கட்டுக்காசே இல்லை. புதிய ஜனநாயகக் கட்சிக்கே 1500-வாக்குகள்கூட கிடைக்கவில்லை. இது எதைக் காட்டுகின்றது. வடபகுதி மக்கள் உங்களை அடையாளமே காணவில்லை. முதலில் தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடத்தில்  பிற்போக்கு அரசியலுக்கு எதிராக மக்கள் மத்தியிலான வேலைகளைச் செய்தால், ஆண்ட பரம்பரையும் அடிமை குடிமையும் இல்லாதொழியும். அதுவரை இவைகள் தொடரவே செய்யும்.