Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்  – 25/05/2010

அமெரிக்காவில் நடைபெற்ற நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் மாநாட்டில் அதன் தலைவராக  உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இம்மாநாட்டில் அமெரிக்காவின் சட்டமா அதிபரும், வியட்னாம் போருக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான ராம்ஸே கிளார்க் அவர்கள் பேசுகையில்

“உங்களுடைய சவால் மிகப் பெரியது.  சுதந்திரம் என்பது சாத்தியம் தான். ஆனால் நீங்கள் அதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தோடு நீங்கள் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் சரியாகத் தான் செயற்படுகீறீர்கள் என்பதை மற்றையவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.  அது மட்டுமன்றி உங்களுடைய வரலாற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வரலாற்றுணர்வு கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். அத்தோடு ஒரே தீவில் வாழ்கின்ற சிங்கள மக்களை விட வேறுபட்ட தனித்துவமான மக்கள் என்பதனைப் புரிந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

நாம் நாடு கடந்த ஈழக்காரர்களை கேட்கின்றோம். கடந்த 30-ஆண்டு காலத்தில் தங்களின் தலைவர் எதில் சரியாக இருந்தார். எதைச் சரியாக செயற்படுத்தினார். மற்றையவர்கள் ஏற்றுக்கொள்ளும் படி எதை முன்வைத்தார். எந்த வரலாற்றை வரலாற்றுணர்வு கொண்டறிந்தார்.  “நாம் ஆண்ட பரம்பரை, எமது தாகம் தமிழீழத் தாயகம்” இதற்கு ஊடாகவே சகலதையும் பார்த்தார். இந்த ஈழத்தை வட்டுக்கோட்டையில் இருந்து இழுத்து வந்து நந்திக் கடலில் தள்ளிவிட்டுச் சென்றார். தற்போது இதை உருத்திரகுமாரன் கண்டெடுத்து நாடு கடந்த தமிழ்ஈழம் ஆக்கியுள்ளார். இதுவும் இன்றைய தேசிய-சர்வதேசிய வரலாற்றுச் சூழலை, தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை கணக்கில் கொண்டு இழுத்துச் செல்லப் போவதாக தெரியவில்லை. “பிரபாகரனப் பாணியில்”  அதே தெருவில் தான் இழுக்கப் போகின்றேன் என்கின்றார்  இந்த உருத்திரகுமாரன்.  உதுவும் இன்னொரு ஆறு-கடல் நோக்கித்தான் செல்லும். இதில் எவ்வித சந்தேகமும்  இல்லை. இந்தநாடு கடந்த ஈழத்தை, கடந்த தேர்;தலில்  “காங்கிரஸின் பொன்னம்பலத்திற்கு”  ஊடாக விட்டுப் பார்த்தார்கள். இதை தமிழ்மக்கள் கண்டு கொள்ளவேயில்லை.  அத்துடன் தமிழ் மக்கள் இன்றைய நிலையில்,  தமிழ் ஈழம் என்றால்  “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் இந்த நாடுகடந்த ஈழம் யாருக்கு? உருத்திரகுமாரன் போன்றவர்கள் உந்த நாடு கடந்த ஈழத்தை “புட்பகவிமான மூலம்”, அல்லது வேறேவது  ஆகாயமார்க்க பறப்பனவுக்களுக்கு ஊடாக கண்டம் விட்டு கண்டம் பாயச் செய்து வடகிழக்கிற்குள் இறக்கப் போகின்றார்களோ?

அத்துடன்  கருணா அம்மான் உந்த நாடு கடந்த தமிழ் ஈழம் பற்றி சொல்லுறதையும் பார்ப்போம்.

இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவின்றி எவ்வாறு தனிநாடு ஒன்றை புலம்பெயர் தமிழர்களினால் நிறுவ முடியுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் முரண்பாடு காணப்பட்டால், அவர்களினால் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழம் என்ற கோட்பாட்டினை முன்வைத்துள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவை மையாகக் கொண்டு இயங்கி வரும் ருத்ரகுமாரன் அணி மற்றும் நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நெடியவன் அணி மற்றும் பிரித்தானியாவை மையமாக கொண்ட அனி என மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் முரண்பாடான கருத்து நிலவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனி இராச்சிய உருவாக்கத்தை வலியுறுத்தும் எந்தவொரு புலி ஆதரவு அமைப்பிற்கும் இலங்கை வாழ் தமிழர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழளர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் சிக்கித் தவிக்கவில்லை எனவும், அவர்கள் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ள அவர் யுத்தத்தின் பெயரால் அவர்களுக்கு வெளிநாடுகளில் வாழ முடிந்ததாகவும் கூறியுள்ளார். எனினும் சில புலம்பெயர் தமிழர்கள் தற்போது உண்மையை நிலையை விளங்கிக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உருத்திரகுமாரனும்  “தன்ரை ஈழத்தை” தமிழ்மக்கள் நம்புகின்றார்கள் என்பது போல், அம்மானுக்கும் தமிழ் மக்கள் மகிந்தா மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக ஓர்  “ஐதீக மூட நம்பிக்கை” . இவர்களின் இந்த நம்பிக்கையை என்னவென்று சொல்வது? சண்டாளப் பிரார்த்தனைதான் செய்யவேண்டும். செய்தாலும் பரிகாரம் கிடையாது.

இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவுவோர் களைத்துவிட்டனர்

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசியமாகத் தேவைப் படும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் விடயத்தில் உதவி வழங்கும் நாடுகள் அமைப்புகள் களைப்படைந்துள்ளதாக ஐ.நா. எச்சரித்திருக்கிறது. இடம் பெயர்ந்த மக்களுக்குத் தேவையான நிதி உதவியில் 24சதவீதமே கிடைத்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டிருந்த தேவைகளிலும் பார்க்க யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான தேவைகள் மிகவும் அதிகமானவையென்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஓராண்டு நிறைவை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அதே சமயம் யுத்தத்தினால் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான பாதிப்புகளை வெற்றி கொள்வதற்கு நிவாரணப் பணியாளர்கள் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.  2004 இல் ஏற்பட்ட கடல்கோளின் பின்னரான மோசமான பாதிப்பாக இது காணப் படுவதாக ஐ.நா. வின் சிரேஷ்ட அதிகாரியொருவர்  கூறியுள்ளார். சுமார் மூன்று இலட்சம் மக்கள் தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் மே 19 இல் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தது. ஆனால்இ பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் திரும்பிச் சென்றிருக்கின்றபோதும் அழிக்கப்பட்ட வீடுகளையே தமது கிராமங்களில் பார்த்திருக்கின்றனர். இல்லங்கள் அழிக்கப்பட்ட நிலையிலும் வயல்ளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்ற அவலமான நிலைமையையே அவர்கள் காணமுடிகிறது.

இதேவேளை இந்த மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமான சமூகம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. போதிய நிதி வசதிகள் இல்லாமையால் இந்த இக்கட்டான நிலைமை தோன்றியுள்ளது. உதவி வழங்குவோரிடம் இருந்து  நிதி வசதிகள் மோசமான முறையில் பற்றாக் குறையாகக் காணப்படுகின்றது. உடனடியாக சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வராவிடில், எதிர்வரும் ஜூனுடன் நாங்கள் பணமில்லாத நிலையை எதிர்நோக்க நேரிடுமென்று  இலங்கையிலுள்ள ஐ.நா.வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் நீல்புனே கூறியுள்ளார்.

யுத்தத்தால் 60 வீதத்திற்கும் அதிகமான வீடுகள் மோசமாகச் சேதமடைந்துள்ளன. அப்பகுதியிலுள்ள ஆட்களின் தொகையைப் பார்த்தால், அப்பகுதிக்கென சிறிய தொகைப் பொருளாதாரமே காணப்படுகிறது. இது மிகவும் மோசமான நிலைமையாகும். கடல்கோளின் பின்னரான நிலைமையிலும் பார்க்க இந்த நிலைமை மிகவும் மோசமானதாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இடம் பெயர்ந்த மக்கள் தமது வீடுகளை மீளநிர்மாணிப்பதற்கும் அந்தப் பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கும் ஜீவாதாரங்களை மீள ஏற்படுத்திக்கொள்வதற்கும் இந்த வருடத்துக்கு 337 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக ஐ.நா. கூறுகிறது. விவசாயிகளுக்கு விதை பொருட்களையும் மீனவ சமூகங்களுக்கு படகுகளையும் வழங்குவதற்கு நிதி தேவைப்படுகிறது. தற்போதும் 80 ஆயிரம் பேர் முகாம்களிலுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி போன்ற வசதிகள் வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆனால்  80 மில்லியன் டொலர்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டிருப்பதாக  நீல்புனே கூறினார். தேவைப்படும் தொகையில் 24 சதவீதம் மட்டுமே கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவை இடைநிறுத்தப்படும் ஆபத்து தோன்றியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நாம் கவலையடைந்திருக்கிறோம். பல்வேறு காரணங்களால் இலங்கை தொடர்பான சர்வதேச சமூகத்தின் ஆர்வம் குறைந்து வருகிறது. யுத்தத்தின் முடிவில் திடப்படுத்திக்கொள்ள வேண்டிய தருணத்தில் இது ஏற்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வழங்கிய தொலைபேசி பேட்டியில் நீல்புனே கூறியுள்ளார்.

3-லட்சம் தமிழ் மக்களும் களைப்படையவில்லை. கடந்த 30- ஆண்டுகளாக அரசு-புலிப் பயங்கரவாத்தை சந்தித்தவர்கள். எத்தனையோ இடப்பெயர்வுகளை இழப்புக்களை அழிவுகளை சந்தித்தவர்கள். இவையெல்லாவற்றிற்கும் ஊடாக வந்த துன்ப – துயர – துக்கங்களை பலமாக மாற்றியவர்கள். இப்பேர்ப்பட்ட மக்கள்,  இவைகளையும்  இழந்தவைகளையும் மீளப்பெறுவர். அது சரி கொஞ்சநாளைக்கு முன்பாக, இந்த மக்களுக்கு “புரட்சி செய்யப் புறப்பட்ட தன்னார்வக்காரர்களும்” களைப்படைந்து விட்டார்களோ? அல்லது தன்னார்வ-மகிந்த மொத்த சில்லறை வியபார ஒப்பந்தங்கள் பேரம் பேசல்கள் சரி வரல்லையோ?

மனிக்பாம் முகாமிற்கு  செல்ல விடாது தடுத்த அரசின்  எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க  சர்வதேசமே!    – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  வேண்டுகோள்

வவுனியா  “மனிக்பாம்” முகாமுக்குச் செல்லவிடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பன்னிருவரையும் தடுத்த இலங்கை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரச் செயலை தக்கவாறு கவனத்தில் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கூட்டறிக்கை யிலேயே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப் பதற்கு விடாது தடுத்தமை ஜனாநாயக உரிமைகளை கேவலப்படுத்தி, ஜனநாய முறைமைகளையும் உதாசீனம் செய்வதாகும் என்றும் அவர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளவை வருமாறு :
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினு டைய 12 நாடாளுமன்ற உறுப்பினர்களால் வன்னியில் பொதுமக்கள் வைத்திருக்கப் பட்டிருக்கின்ற பல முகாம்களையும், தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தடுப்பு முகாம் களையும்,  மீள் குடியேற்றமும் புனர்வாழ் வும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகின்ற பிரதேசங்களையும் மக்களையும் பார்வையிடுவதற்காக விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

உண்மையான நிலையை அறிந்து கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம். இந்த விஜயம் குறித்து  ஜனா திபதிக்குக் கடிதங்கள் மூலமாக நாடாளு மன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந் தன் அவர்கள் அறிவித்து இந்த விஜயத் திற்குத் தேவையான ஒழுங்குகளைச் செய்து உதவும்படியாகக் கேட்டிருந்தார். இது சம்பந்தமாக திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களுடன் தொடர்பாடலை வைத்திருந்தார். அதன் பிரகாரம் இந்த விஜயம் மே 21 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து மே 22 சனி 23 ஞாயிறு தொடர இருந்தது. ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க அவர் களுக்கு இத்தகவல் திருவாளர் சம்பந்த னால் அறிவிக்கப்பட்டு இந்த விஜயத்திற்கு அவர் தனது முற்றுமுழுதான சம்மதத் தைத் தெரிவித்தார். இதன் மூலம் இவ் விஜ யத்திற்கு ஜனாதிபதி அவர் களின் சம்மதமும் இருந்தது என்பது தெளிவு.

இந்த நிலையில் மே 22 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் பொதுமக்கள் வைக்கப்பட்டி ருந்த சில முகாம்களில் ஒன்றான வலயம்  4 இன் வாசலை வந்தடைந்தனர். அங்கே அதற்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடி யர் இந்த முகாம்களுக்குள்ளே செல்வ தற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை என்றும்,  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்த விஜயத்தைத் தடுக்கும்படியாகக் கட் டளையிட்டிருக்கின்றார் என்றும் நாடாளு மன்றக் குழுவுக்குக் கூறினார். உடனடியாக திரு. இரா. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர்  லலித் வீரதுங்கவுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியபோது வீரதுங்க இந்த விடயத்தைத் தான் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகக் கூறி,  அதுவரைக்கும் நாடா ளுமன்றக் குழுவினை அங்கேயே தரித்து நிற்கும்படியும் கூறினார். அந்த முகாம் வாசலிலே சுமார் ஒரு மணிநேரம் காத் திருந்த பின்னர் ஜனாதிபதியின் செயலாளரைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற் சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந் நிலையில் திரு. இரா. சம்பந்தன் அவர் களுடன் தொடர்புகொள்ளக்கூடிய தொலை பேசி இலக்கங்களை ஜனாதிபதிச் செயலகத்திற்குக் கொடுத்து விட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதன் பின் னர் திரு. இரா. சம்பந்தனோடு எந்தவித மான தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை.

இந்த முகாம்களிலே தடுத்துவைக்கப் பட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்கு அவர் களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி களைத் தடுக்கும் இச்  செயலானது அந்த மக்களுடைய நியாயபூர்வமான ஜனநாயக உரிமைகளைக் கேவலப்படுத்துகின்ற ஒரு செயலாகும். அத்தோடு முழு ஜனநாயக முறைமையையும் உதாசீனம் செய்யும் ஒரு செயலாகவும் இது அமையும். பாரிய பல விடயங்களை ஒளித்து மறைக்க விரும்பு கின்றவர்களுடைய சர்வாதிகார செயல் இது என்பது தெளிவாகிறது. இலங்கை யிலும் இலங்கையிலிருக்கின்ற எல்லா மக்களையும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பல்வேறு அங்கங்களை உள்ளடக்கிய சர்வதேசம் முழுவதையும் கட்டுக்கடங் காத இந்த எதேச்சதிகாரச் செயலைத் தங் களுடைய முழுமையான கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு நாம் வேண்டுகின் றோம்.
இந்த சர்வாதிகாரச் செயலை நாம் வன் மையாகக் கண்டிப்பதுடன் இதனை உடன டியாக நிவர்த்தி செய்வதற்குத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத் திடம் கோருகிறோம்  என்றுள்ளது.

இது கோமாளிகளின் அரசு,  இதில் அண்ணன் தம்பி முதல் அதிகாரிகள் வரை  கோமாளிகளே. “போகலாம் ஆனால் போகக்கூடாது” என்ற அரசின், இந்தக் கோட்பாட்டை நாம் எதிலும் சரிவரக் கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் எம் சமுதாயம் தப்பிப் பிழைக்கும்.

அரசே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கவுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு திருமணம் முடித்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாத முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் மாத நடுப்பகுதி அளவில் 20 முன்னாள் விடுதலைப் புலி ஜோடிகளுக்கு இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது.

பெற்றோர் மற்றும் ஜோடிகளின் ஒப்புதலுடன் இந்த திருமண வைபவம் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தனித் தனியான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் திருமணத்தின் பின்னர் ஒரே இடத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தராஜபக்ச குடும்பத்தினர் திருமணம் ஆகாத முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு திருமணம் செய்துவைக்க சித்தமாகியுள்ளனர்.  இப்படிச் செய்தால் தீவிரவாத  “மூட்”  இல்லாது  போய்,  ஜனநாயக நீரோட்ட “மூட்” வந்து விடும் என்றொரு கணிப்பு. இத் திருமணப் புறோக்கர்கள் இன்னொன்றை மறந்து விடுகின்றார்கள். எதிர்காலத்தில் மகிந்தாவின் பேரினவாத “மூட்” தொடரத் தொடர பிரபாகரனின் தவறுகளில் இருந்து பாடம் படித்த, பல்லாயிரம் விடுதலைப் போராளிகள் தோன்றப் போகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் உங்கள் புறோக்கர் வேலைகள் சரிவராது.

சிறீலங்கா அரசாங்கத்தில்  கே.பி முதன்மையான பாத்திரம்!
திடுக்கிடும் தகவல்கள்  அம்பலம்

நாடு கடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்கு பணிப்புரை வழங்கி விட்டு சிறீலங்கா அரசிடம் சரணாகதியடைந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான – காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக சிங்கள அரசாங்கத்தின் ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும் பேராசிரியர் ரொஹான் குணரட்ண, சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து சத்தம் சந்தடியின்றி கே.பி பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘‘தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும்இ வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி பணியாற்றுகின்றார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார்.

வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது.

அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறீலங்கா அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?

கே.பி அவர்களின் உதவியுடனேயே வெளிநாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்புக்களை சிறீலங்கா அரசாங்கம் உடைத்து வருகின்றது. விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்றை அவரது உதவியுடனேயே அரசாங்கம் கைப்பற்றியது.

சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கே.பி செயற்படுவதால் வெளிநாடுகளில் இருந்து ஆயுதக் கிளர்ச்சியை தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடங்க முடியாது.’’

இவ்வாறு சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகரான ரொஹான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுதும்,  அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளும், போராளிகளும் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னணியில் முதன்மையான பாத்திரத்தை வகித்த கே.பி,  வெளிநாடுகளிலும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரொஹான் குணரட்ணவின் ஊடகச் செவ்வி கடந்த ஓராண்டாக தமிழீழ மக்களிடையே நிலவிய சந்தேகங்களை மெய்யுண்மையாக்கியுள்ளது.

அத்துடன் தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கே.பியின் அடியாட்களும்,  அவரால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகளும் ஈடுபட்டு வருவதன் பின்னணியை ரொஹான் குணரட்ணவின் செவ்வி அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகச் செவ்வியை அளித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை ஒரு இனவாதியாக வர்ணித்ததோடு,  கே.பி அவர்களால் நியமிக்கப்பட்ட வி.உருத்திரகுமாரனுடன் பேசி சிறீலங்கா அரசாங்கம் சமரசம் செய்துகொள்ள முடியும் என்று கூறியிருந்தமை நினைவூட்டத்தக்கது

இதற்குப் போய் அரிவரி அரசியல் கூடத் தெரியாத சிற் சில தமிழ்த்தேசியவாதிகள் திடுக்கின்றார்கள். இவர்கள் திடுக்கிடுவதற்கும் – பயப்படுவதற்கும் இதற்குள் என்னதான் உள்ளதோ?  கே.பி.யையும் இவர் போன்ற ஏராளமான புலிகளையும் அரசு தன் உளவாளிகள் ஆக்கியுள்ளது. இவர்கள் புலம்பெயர்வில் தமிழ் மக்கள் வாழும் எல்லா நாடுகளிலும், தூதுவராலயங்களிலும, குடிபெயர்நதுள்ளனர். அங்கே இவர்கள் தங்கள் அரச உளவு வேலைகளை மிகக் கற்சிதமாக செய்கின்றார்கள்.  கே.பி. பிரபாகரன் காலத்திலே  விலாங்கு போல் செயற்பட்டவர் ஆச்சே. இதன் விளைவும் செயற்பாடும் தான் பிரபாகரனின் அரசியலை முள்ளியவாய்க்காலின்  300-மீற்றருக்குள் கொண்டுவந்து,  ஆளையே “அவுட்டாக்கிற்று”.  இந்த சூட்சும அரசியல்  புரியாத “அரசியல் ஞானிகளின்”  திடுக்காட்டத்திற்கு யாரும் எதுவும் செய்யமுடியாது.