செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் – 06-06-2010
அரசாங்கத்துடனான பேச்சின் போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக்கூடாது – ஜாதிக யஹல உறுமய எச்சரிக்கை
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமது இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ள வேண் டுமானால், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக் கூடாது என ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹெலஉறுமய கட்சி நேற்று நடத்திய ஊடக வியலாளர் மாநாட்டின் போது கலந்து கொண்டிருந்த அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தேரர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் கொள்கைகளை முன் வைத்து அவர்களின் நிழலாக செயற்பட எண்ணக் கூடாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொடுத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தை விடுத்து பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும். அதனைத் தவிர்ப்பார்களானால் தமிழ் மக்களே அதில் பெரிதும் பாதிப்பினை எதிர் நோக்குவதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தீபம் காட்ட முன்பே, பேரினவாத வெறி கொண்டு உருவாடுதுகள், இந்த “கெல உறுமயததின் ஆசாமிகள்”. அத்தோடு எம்மவர்கள் இந்தியப் பக்தியில் மூழ்கி, கேள்வி ஞானமின்றி, கும்பலில் கோவிந்தா போடுதுகள். இதில் எம்மவர்கள் இந்த கோவிந்த பக்திப் பஜனையைப் எப்படி பாடுதுகள் எனப் பாருங்கள்.
.
அரசியல் தீர்வு வழங்க இலங்கை தாமதம் : இந்தியா நேரடியாக தலையிடவு ள்ளது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மந்த நிலையில் இயங்குகின்றமையை அடுத்து, இந்திய அரசாங்கம் நேரடியாக இதில் தலையிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் இலங்கையின் சிறுபான்மை கட்சிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் நேரடியாக அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
யுத்தம் நிறைவடைந்து ஒரு வருட காலம் நிறைவடைந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க அரசாங்கம் தாமதப்படுத்துவதனாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்படி இலங்கை சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் அடிப்படையிலான தீர்வுத் திட்டம் ஒன்று இந்தியாவினால் தயாரிக்கப்பட்டு இலங்கையிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரியவருகிறது.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் எட்டாம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையில் உள்ள அனைத்து சிறுபான்மை கட்சிகளும் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு இது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த கலந்துரையாடல்கள் தனித்தனியாக இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முதலில் அழைப்பு விடுக்கப்படும் எனவும் அதன் பின்னர் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் மலையக கட்சிகளும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை இந்தியாவின் இந்த நேரடித் தலையீட்டை ஏனைய பெரும்பான்மை கட்சிகள் எதிர்க்கக் கூடும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத்தான் தூக்கும். அதே போல் தான் இந்த சிங்களப் பேரினவாதத்தின் துறவிக், கூத்தாடிகளும், கூட்டாளிகளும். பேச்சுவார்த்தை என்றவுடன் இக்கூட்டமும் (பிரிவினையென்று) காலைத்தான் தூக்குதுகள். இந்தியா எமது நாட்டுப் பிரச்சினையில் “குரங்கு பூனைக்கு அப்பம் பறித்த வேலையைத் தான் செய்தது. இன்னும் செய்யும்”. எம்மவர்களும் “இந்தியக் குரங்கின் சேட்டைகளை” கடந்தகாலப் பட்டறிவில் இருந்து கற்றுக் கொள்ளவில்லையே. இலங்கையில் தங்களின் “சனீஸ்வர வேலையை” எப்படித் தொடரலாம் என்பதற்காகவே இந்த அட்டமத்துக்கள், அடுத்தவார 8-ல் ஒரே இடத்திற்கு வருகின்றன. கூடுகின்றன. மகிந்தராஜனுக்குத் தேவை தமிழ்மக்கள் பிரச்சினையைத் தீர்க்காது, தனது குடும்ப பேரினவாத அரசியலை எப்படி தொடரலாம் என்பது, இந்திய ராச்சியத்திற்கு தேவை தேசிய இனப் பிரச்சினை இலங்கையில் தன்ராச்சியத்தை எப்படித் தக்கவைப்பது என்பதே. இவர்கள் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் எம் நாட்டிலே. இவ் எமாற்றை எம்மவர்கள் எத்தனை காலம்தான் இன்னும் நம்புவார்.
தமிழர் போராட்டம் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல : பேராசிரியர் சிவத்தம்பி
“இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப்போராட்டத்தை நாங்களே நாடி நாங்களே வெல்ல வேண்டும்” என யாழ். பல்கலைக் கழகத் தகைநிலை பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.
இந்தியா, கோவையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாகவும் அங்கு பேசப்படவுள்ள இலங்கை விடயங்கள் பற்றியும் அறிந்துகொள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
இந்த மாநாட்டுக்குச் செல்ல வேண்டாம் என சில தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருவது தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன்”என அவர் மேலும் கூறினார்.
இப்பேராசான் பின் நவீனத்துவப் பாணியில் ஏதோ கட்டுடைக்கின்றார். கருணாநிதி புகழ்பாடும் மாநாட்டிற்கு செல்வதற்காக, எல்லோருக்கும் காதில் பூ வைக்கின்றார். “தமிழ் மக்களைக் கொன்ற கொலைஞன் மகிந்தா” அவரும் அரசும் நடாத்தும் திரைப்பட விழாவிற்கு இந்தியக் கலைஞர்கள் வரக்கூடாது என்கின்றனர் “தமிழ் உணர்வாளர்கள்.” இந்த மகிந்தக் கொலைஞனுக்கு உதவி, “தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கின்றார் கருணாநிதி” என்கின்றார் அவரின் உடன் பிறப்பொன்று. செம்மொழி மாநாடு இந்தப்பழிக்கு பிராயச்சித்தம் ஆகுமோ எனவும் கேட்கின்றார்கள், அப்போது, இப் பேராசானும் “புலிகளின் பீஸ்மராக” இருந்து, கருணாநிதியை இப்படித்தான் விமர்சித்தவர். இப்போது இந்தக் “கொலைப் பழியரின்” மாநாட்டிற்கு இந்த “நவீன பீஸ்மர்ச்சாரியார்” புகழ்பாடச் செல்லலாமோ? இது நியாயமோ? தருமம்தானோ? அன்பான “தமிழ் உணர்வாளர்களே;” இதற்கு உங்களின் பதில் என்னவோ?
இலங்கையில் தமிழர் பகுதி சுடுகாடாகியுள்ள நிலையில் தமிழகத்தில் சேம்மொழி மாநாடா? என தலையை “சிலுப்பி” கர்ச்சிக்கின்றார்: டி. ராஜேந்தர்
ஈழத்தமிழர்களைக் கொன்று தீர்த்த பழியை கருணாநிதி சுமந்து நிற்கிறார். ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர் தெரிவித்தார்.
தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு குறித்த அறிவிப்பு தொடர்பாக நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், நடைபெறவுள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழர் ஆட்சி மாநாடு! ஆளும் கட்சியின் மாநாடு!. ஆனால் ஜூன் 12ம் தேதி நடைபெறும் மாநாடோ தமிழர்களுக்காக நடத்தப்படும் தமிழர் மீட்சி மாநாடாகும்.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்தபோதுகூட இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை. இலங்கையில் தமிழர்கள் பகுதி சுடுகாடாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடா?
“தமிழுக்கு இதுவரை நடந்த மாநாடுகள் செய்த ‘சேவையை’ விட இந்த மாநாடு எதையும் செய்துவிடாது. ஜ.பி.எல். கிரிக்கெட்டில் பெண்கள் நடனம் நடக்கவில்லையா? அதுபோல் சில “பிரமிப்புக்கள்” இருக்கும். கிரிக்கெட்டிற்கும் நடனத்திற்கும் சமபந்தம் இல்லை. அதேபோல் தமிழுக்கும் இந்த “பிரமிப்பிற்கும் சம்பந்தம் இருக்காது.” என்கின்றார் “துக்ளக்கின் சோ”
இப்படிப் பார்த்தால் சிவத்தம்பி பேராசான் போவது, ஓர் கட்டுரை வாசிப்போடு, கலைஞரின் “மான் ஆட, மயில் ஆட” போன்ற ஏனைய களியாட்டங்கள், வாணவேடிக்கை, வண்ண விளக்குகள் பார்ப்பதற்கும், குஷ்புவின் “மாநாட்டு கன்னியுரை” கேட்பதற்கும், “அறிஞர் அழகிரியின் ஆராய்சி உரை” கேட்பதற்குமமேயாகும்., கலைஞருக்குள்ள “கொலைப் பழியர் என்ற கறை”, இவர் கொண்டுவரும் “நந்திக்கரைக் தீர்த்தத்தை” தெளிப்பதன் மூலம் நீங்கிவிடும். இதன்மூலம் “இம் மூதறிஞர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகின் மோட்சம் கிடைக்கும.”
அருந்ததிராயின் கண்டிப்பும் – மென்மைப் போக்கும்
கடந்தவாரம் சென்னையில், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் காட்டு வேட்டைப் போரை கண்டித்து, கண்டனக் கூட்டம் நடைபெற்றது, இதில் அருந்ததிராய் உட்பட பலர் பேசினர்.
இதில் உரையாற்றிய அருந்ததிராய்: மாவோயிஸ்டுகள் குறித்து நமக்கு சொல்லப்படுவதையும், அதனடிப்படையில் நாம் அவர்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. மாவோயிஸ்டுகள் மீது தொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப் போரை அரசாங்கம் தவிர வேறு எவருமே விரும்பவில்லை. 2004ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியபோது, இந்தியாவில் உள்நாட்டு அபாயம் மாவோயிஸ்டுகள் தான் என்று கூறினார். அப்போது இருந்த நிலைமை என்ன?
பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிரான இந்தக் கூட்டத்திற்கு இவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் ஆட்சிக்கு வந்ததும் பன்னாட்டு நிறுவனங்களான வேதாந்தா, எஸ்ஸார் நிறுவனங்களுக்கு மாவோயிஸ்டுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார், ஆந்திராவில் நக்சல்பாரிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள்.
பங்குச் சந்தையில் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. நிறுவனங்களின் கைகளில் நிலங்கள் சென்றது மக்கள் சாவை நோக்கித் துரத்தப்பட்டனர். சுமார் 550 கிராமங்களில் இருந்து மக்கள் துரத்தப்பட்டனர். அந்த நிலங்களை இந்திய அரசு அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விட்டது. இது தான் அம் மக்களின் அமைதியைக் குலைத்தது. தங்களின் பூர்வீக நிலங்களுக்காக அவர்கள் போராடுகிறார்கள்.
அவர்களை ஆதரிக்கிற என்னையும் மாவோயிஸ்டுகள் என்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன. நான் சொன்னதை திரித்து வெளியிடுகிறார்கள். எங்களை நீங்கள் ஆதரிக்க வில்லை என்றால் நீங்கள் அவர்களின் பக்கம் என்று அமெரிக்காவின் குரலை இங்கே சொல்கிறார்கள். நான் இப்போதும் சொல்கிறேன் மக்கள் கொலையை நான் ஆதரிக்கவில்லை.
ஆனால் வில்லும் அம்பும் வைத்திருக்கிற மக்களை கனரக ஆயுதங்களைக் கொண்டுக் கொல்கிறீர்களே, நான் எப்படி உங்களின் பக்கம் நிற்க முடியும்?. நான் கைது செய்யப்படுவதைப் பற்றி அஞ்சவில்லை. நியாத்துக்காக போராடுகிறேன் நான். 2 லிருந்து மூன்று கோடி மக்கள் வரை காடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்வார்கள். நான் கூட முன்னர் பேசும் போது சொன்னேன் நான் உங்களுடன் இருக்கிறேன் உங்களைக் கொல்வதை இனி அனுமதிக்க மாட்டேன் என்றேன். ஆனால் என்ன நடந்தது அன்றாடம் கொல்கிறார்கள். நம்மால் என்ன செய்ய முடிந்தது. அவர்கள் கொன்று கொண்டே இருக்கிறார்கள். காங்கிரஸோ, பிஜேபியோ, அதிமுகவோ, திமுகவோ உங்களை ஆள்வதாக நீங்கள் நினைக்காதீர்கள். டாடாவும், எஸ்ஸாரும், வேதாந்தாவும் தான் உங்களை ஆள்கிறார்கள். இந்திய பெரு நிறுவனங்கள்தான் இனி ஈழ மக்களையும் ஆட்சி செய்வார்கள்.
இவர்களின் வர்த்தக நலனுக்காக ஈழ மக்கள் கொல்லப்பட்டார்கள். வெளிப்படையான போர் ஒன்றைத் தொடுத்து பெருந்தொகையான மக்களைக் கொன்றொழித்தது இலங்கை அரசு. அந்த இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது. கூட்டம் கூட்டமாக மக்களை வெகு வேகமாகக் கூட்டுக் கொலை செய்தது இலங்கை அரசு. ஆனால் இந்தியா அப்படிச் செய்யாது மக்களைக் கொல்ல இந்தியா தந்திரத்தைக் கையாள்கிறது. இலங்கை அரசு நடத்திய படுகொலையில் இருந்து படிப்பினையைப் பெற்று அதை வேறு வடிவத்தில் தண்டகாரண்யாவில் செயல்படுத்துகிறது இந்திய அரசு. இலங்கையில் நடந்த போரை தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாகவோ, ஒற்றுமையாகவோ இல்லாததால் இவர்கள் அதைச் செய்யவில்லை.
இவர்கள் மக்களையே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணம். பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டம் ஆக்கியதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்தியாவுக்கு வந்தது. தாராளமயக் கொள்கையை அறிமுகப்படுத்தி மக்கள் நிலங்களை கொள்ளையடிக்கத் துவங்கிய பின் மாவோயிட் தீவிரவாதம் வளர்ந்திருக்கிறது. இதற்கு இவர்கள்தான் பொறுப்பு” என்று பேசினார்.
அருந்ததிராய் போன்றவர்களின் அரச எதிர்ப்பை, மக்கள் நலன்சார் நடவடிக்கைகள், போராட்டங்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் மாவோயிஸ்ட்டுக்கள் பற்றிய மதிப்பீடு – மென்மைப் போக்குகள், பற்றிய விடயங்களையிட்டு, நாம் சில கேள்விகளை எழுப்பவேண்டியுள்ளது. மாவோயிஸ்ட்டுக்கள் பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இதுவென்கின்றீர்கள். இதுபற்றிய கடந்தகால-சமகால கொள்கைள் தான் என்ன?. மேற்கு வங்கத்தின் லால்கர் பகுதியீன் பழங்குடி மக்கள் 90-வீதமான பகுதிகளில், வெற்றிகரமான புரட்சிகரப் வெகுஜனப் போராட்டங்களை நடாத்தி அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். இதனால் இராணுவம் உள் நுழையவே அஞ்சியது. இது தான் “மாவோவின் மக்கள் போராட்டம்’’. இந்நிலையில் கறையான் புத்தெடுக்க பாம்பு குடிகொண்ட நிலையில், இந்த “மாவோயிஸ்டுகள்’’ எனப்படுவோர் வந்துவிட்டு, “புலிகளின் பாணியில்” கொலைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை செய்கின்றனர். இவர்களை எந்த அகராதி கொண்டு “மாவோயிஸ்டுகள்” எனலாம். சில ஈழவிடுதலை ஆதரவாளர்களின் “புலிக் கொப்பியடிப்பை’’, நீங்களும் “மாவோயிஸ்ட் கொப்பியாக்காதீர்கள்.”
இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம்
காசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான மெக்சிகோ நாட்டுத் தூதுவர் கிளவுட் ஹெல்லர் இது குறித்துக் கூறுகையில்.
”காசாவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல்களின் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பலவந்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும் காயமடைந்தவர்கள் குறித்தும் பாதுகாப்புச் சபை தனது ஆழமான கவலைகளை வெளியிடுகின்றது” என்று கூறினார்.
திங்களன்று நடந்த குறைந்தது 10 சிவிலியன்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்புச் சபை தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களும், கப்பல்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புச் சபை கேட்கிறது.
இந்தத் தாக்குதல் குறித்து துருக்கிய நாடாளுமன்றதத்தில் உரையாற்றிய அந்த நாட்டு பிரதமர் றெசப் தைப் எர்டோகன் ”இது ஒரு இரத்தக்களரியுடன் கூடிய படுகொலை” என்று கண்டித்துள்ளார்.
ஐநாவின் அறிக்கை கொஞ்சம் தணிவானதாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா விரும்புகின்ற அதேவேளை விமர்சனத்தின் தொனி தணிக்கப்படுவதை துருக்கி விரும்பவில்லை.
இருந்த போதிலும் இறுதி அறிக்கையில் இருந்த வாசகங்கள் மென்மையாக்கப்பட்டதாக ஐநாவில் உள்ள பாலத்தீன பார்வையாளரான றியாட் மன்சூர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
ஐநா விவாதத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்களுடைய சிரமமான நிலைமையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் கூறியுள்ளார். அந்தப் பகுதியில் இருக்கும் ஹமாஸ் காரணமாகத்தான் தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி சிவிலியன்களை இலக்கு வைப்பது தமது நோக்கமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்
இஸ்ரேலியக் கொலைஞர்களின் கொலையைக் கூட கண்டிக்க கூட மற்ற நாடுகளுக்கு உரிமையில்லை. படுகொலைகளை மென்மையாக, மற்றவர்களுக்கு தெரிவியுங்கள் என்கின்றது, இஸ்ரேலின் அமெரிக்க எஜமான். பயங்கரக் கொலைகளை செய்துவிட்டு, கமாஸை காரணம் காட்டி தப்பிக்கின்றது இஸ்ரேல். எளியோரை அடக்கி, வலியோரை வாழவைக்கும் உலகின் செயல்தான் எப்போ மாறும்.