செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்: 07-0702010
இலங்கை நாடாளுமன்றில் ரணில் மீது தண்ணீர் போத்தலினால் தாக்குதல் !
நாடாளுமன்றத்தில் நேற்று 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது போத்தல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, அவரது கையால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எறியப்பட்ட போத்தலை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்த போத்தல் ரணிலை தாக்கவில்லை.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க பிரதியமைச்சரான சரத்குமார குணரத்னவே இந்த போத்தல் தாக்குதலை நடத்தியவராவார். இதனையடுத்து போத்தல் ரணில் மேசையில் வீழ்ந்ததுடன் அவரின் ஆவணங்கள் நீரினால் நனைந்தன. இதன் போது ஆளும் கட்சியின் அமைப்பாளர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரதியமைச்சரிடம் சென்று அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் பிரதியமைச்சர் குணவர்த்தனவை சபையில் இருந்து வெளியேற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் கோசம் எழுப்பினர். மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர்.
மக்களுக்காக-மக்களால்-ஆனதே பாராளுமன்ற ஆட்சி என்கின்றார்கள். “ஜனநாயக வல்லுனர்கள்.” ஆனால் நம்நாட்டின் மக்கள் பாராளுமன்றமோ, ரவுடிகளால் “ரவுடிகளுக்கான” பாராளுமன்றம் ஆகிவிட்டதே! ஓன்று பொன்சேகாவை கொல்ல வேணடுமென்றும், அந்த நல்லகாரியத்தை நானே செய்வேன் என்கின்றது. இன்னோர் ‘மந்திரி, இன்னொன்று பேரினவாதப் போதையில் ஜ.நா.சபையையே இல்லாததாக்க வேண்டும் என்கின்றது. கூட்டிக்-கழித்துப் பார்த்தால் எம் பாராளும் மன்றம் (கொஞ்ச) ரவுடிய-கோமாளிய-பாமரத்தின் ‘மன்றமே!’ இதுகளுக்கு சபாநாயகர் என்போர் புத்திமதிகளும் சொல்வார்.
அவையில் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு சபாநாயகர் சமால் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனிப்பட்ட நபர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையிலான விமர்சனங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற பார்வையாளர் கூடத்தில் குழுமுவதனால் அவதானமாக செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவை நடவடிக்கைகளை பார்ப்பதற்காக மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் நிதானத்துடன் செயற்படுமாறு உறுப்பினர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பக்கச் சார்பற்ற முறையில் சபாநாயகர் எடுத்தத் தீர்மானம் பாராட்டுக்குரியதென எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு பொருத்தமற்ற வசனங்களைப் பயன்படுத்தக் கூடாது என சபாநாயகர் எச்சரித்துள்ளார்.
தாங்கள் ஒழுக்கம் பற்றி போதித்த ஓர் மூன்று நாட்களிலேயே தங்களின் “ஒழுக்க சீலர்கள்” இப்படி (தண்ணீர்ப் போத்தலால்) எறிந்து விளையாடுகின்றார்கள். அதுசரி பாடசாலை மாணவர்கள் அவைக்கு வருவதால் அவதானம் தேவை என்கின்றீர்கள். இவ்வேளையில் இம் மாணவர்ர்கள் பாராளுமன்றம் வந்துபோனபின், அதன் சிறப்பை எழுதுங்கள் என ஓர் கேள்வி வந்தால், அவர்களின் பதில் எப்படியிருக்கும்? மதுபான நிலையங்களிலும், அதன் முன்னாலும் போதையிலுள்ளவர்கள் எதை எதைச் செய்கின்றார்களோ, அதைத் தான் நம் மக்கள் பாராளும் மன்ற உறுப்பினர்களும், மந்திரிகளும் அங்கு செய்கின்றார்கள் என பதிலளிப்பர். இதுகளை விடுத்து மற்றவர்களும் எதைச் சொல்கின்றார்கள் என்பதையும் பார்ப்போம்.
ஸ்ரீலங்காவின் ராஜதந்திரங்கள் யாவும் தோல்விக்கண்டுள்ளது: விமல் வீரவன்ச
ஸ்ரீலங்காவின் ராஜதந்திர அனுகுமுறைகள் யாவும் தோல்விக்கண்டுள்ள நிலையில் இலங்கையில் உள்ள பொதுமக்களின் பலமே பான் கீ மூனின் முயற்சியை தோற்கடிக்கும் என நாடாளுமன்றில் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரைக்கு பதிலுரை ஆற்றிய போதே தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கே.பி.யை வடமாகாண முதலமைச்சராக்க முயற்சி : சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி.(குமரன் பத்மநாதனை) வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
கே.பியை கைது செய்த விதம் பற்றி குறிப்பிட்டால், அரச பாதுகாப்பு இரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றஞ் சுமத்துவார்கள் என்பதனால் அதனை கூற நான் விரும்பவில்லை.
இராணுவ வீரர்கள் சிறைக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கே.பி.வடக்கில் சுற்றுலா செய்கின்றார். அவரது கணக்கில் பில்லியன் டொலர்கள் இருக்கின்றன. வடக்கில் மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர் கூட்டங்களை நடத்துகிறார். கே.பியை. வடமாகாணத்தின் முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.
இந்த வரவுசெலவுத் திட்டமானது தாய் இறந்த நிலையில் பிறந்த குறைமாத குழந்தை: அரியநேத்திரன்
கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தை நடாத்துவதாலோ அல்லது பாசிக்குடாவில் நட்சத்திர விடுதி அமைப்பதாலோ யாழ்பாணத்தில் உள்ள நாகவிகாரைக்கு சென்று வருவதாலோ நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியதாக பொருள்படாது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 29ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.மேலும் இந்த வரவு செலவு திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்ட படை வீரர்களுக்கான உதவித்திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை அதே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்ட அல்லது உயிரிழந்த மற்றும் காணாமல்போன தமிழ் மக்களுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் எந்தவிதமான ஒரு உதவித்திட்டங்களும் இங்கு பரிந்துரைக்கப்படவில்லை. இது வேதனைக்குரிய விடயமாகும்.
அத்துடன் விவசாயிகளுக்கு எந்தவிதமான ஊக்குவிப்பு திட்டங்களும் இங்கு இல்லை. குறிப்பாக கிழக்கு மாகாண விவசாயிகள் தங்களது நெல் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் பெரிதும் கஸ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் தங்களது உற்பத்திகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வும் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கான திட்டங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
எனவே இந்த வரவு செலவு திட்டமானது ஒரு குறைமாத பிரசவம் போன்றது ஏனெனில் குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் சில வேளைகளில் தாய் இறக்கவேண்டிய நிலை ஏற்படும் இந்த நிலையில்தான் இந்த வரவு செலவு திட்டமானது அமைந்துள்ளது.
மொத்தத்தில் யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி படை வீரர்களை கௌரவப்படுத்தவும் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவுமே இந்த வரவு செலவுத்திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாறாக நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தவிதமான திட்டங்களும் இங்கு குறிப்பிடப்படவில்லை.
கௌரவ ஜனாதிபதி அவர்கள் சொல்வதைப் போன்று “இனப்பிரச்சினைக்கான தீர்வானது உடன் தயாரிக்கும் நூடில்ஸ்சை போன்றதாகாது” இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அறுபது வருடங்களாக நாம் நூடில்ஸ் தயாரிக்கிறோம் என்பதை அவர் மறந்துவிட்டார்.
புனர்வாழ்வு என்ற பெயரில் காடு அழிப்பில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் போராளிகள்! அனைவருக்கும் பொதுமன்னிப்பு வேண்டும் என்கிறார்
சிவசக்தி ஆனந்தன்
புனர்வாழ்வு என்ற பெயரில் முன்னாள் போராளிகள் பலர் படையினரால் காடுகளை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுத்தப்படு கின்றனர். இந்நாட்டில் மாறிமாறி வந்த அரசு கள் தமிழினத்தின் மீது ஏற்படுத்திய துவே சம்தான் இந்த நாட்டில் போராட்டம் ஒன்றுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது. எனவே அதற்கு இன்றைய அரசும் பொறுப் பேற்று அவர் கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
சொந்த மக்களின்மீது மூர்க்கத்தனமான போரைத் தொடுத்து, லட்சக்கணக்கில் வெலிக்கந்தை, கந்தக்காடு பகுதியில் முன்னாள் போராளிகள் என்று இனங் காணப்பட்டவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பது என்ற பெயரில் அவர்களைக் காடுகள் அழிக்கும் தொழிலில் பாதுகாப்புத்துறையினர் ஈடுபடுத்துகின்றனர். இவர்களிடமிருந்து கடினமான உழைப்பைக் கசக்கிப் பிழிந்து வாங்குகின்றனர். இது என்ன புனர்வாழ்வு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் இச்சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.
அவர்களுக்குச் சுகாதாரமான குடிதண்ணீர், சத்தான உணவு, சுகாதார வசதி என்பவை மறுக்கப்படுகின்றன. அங்குள்ள ஆற்றுநீர் ஒருவித மஞ்சள் நிறத்துடன் உள்ளது. முன்னர் அந்த நீரைக் காய்ச்சிக் கொடுத்தனர். இப்பொழுது அப்படியே குடிக்கச் சொல்கின்றனர். முன்பு தங்களுடைய உணவைத் தாங்களே சமைத்துக்கொண்டனர். இப்பொழுது பாதுகாப்புப் படையினர் சமைத்துக் கொடுக்கின்றனர். அதில் எது இருந்தாலும் அப்படியே உண்ணவேண்டும் என்று கட்டளையிடுகின்றனர்.
இங்குள்ளவர்களுக்கு தலையிடி, காய்ச்சல் என்றால்கூட அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மருத்துவம் செய்வதில்லை. இயலாதபட்சத்தில் படுக்கையில் கிடக்கும்போது மட்டுமே அவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். ஓராண்டுக்குள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று அறிவிக்கப் பட்டபோதிலும் இன்றுவரை அவ்வாறு நடைபெறவில்லை. வன்னியில் பிடிபட்டவர்கள் ஒன்றும் கிரிமினல் குற்றவாளிகள் அல்லர். இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் தமிழினத்தின் மீது ஏற்படுத்திய துவேசம்தான் இந்நிலையைத் தோற்றுவித்தது. எனவே அதற்கு இன்றைய அரசும் பொறுப்பேற்று அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஆதரவு வழங்கினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எத்தகைய வழக்கும் இன்றி, விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக இந்நாட்டின் சிறைகளில் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இவர்கள் அனைவருமே விடுவிக்கப்படவேண்டும்.
ஆயுதக் கலாசாரம் மேலோங்கி நீதித்துறையிலும் தலையீடு குடாநாட்டில் முப்படையினர் தவிர எவரும் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கக்கூடாது நடவடிக்கை எடுக்கக் கோருக
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவும் ஆயுதக்கலாசாரம் ஒழிக்கப்படவேண்டும். அங்கு ஆயுத கலாசாரம் மேலோங்கி நிற்பதனால் நீதித்துறையிலும் தலையீடுகள் இடம்பெறுகின்றன. இத்தகைய தலையீடுகளைத் தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். குடாநாட்டில் ஆயுத கலாசாரம் ஒழிக்கப்பட்டு சிவில் நிர்வாகம் பூரணமாக அமுல் செய்யப்படவேண்டும். முப்படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களுடன் நடமாடும் சூழல் மாற்றப்படவேண்டும். இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்.
வரவு செலவுத்திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு. யாழ்.குடாநாட்டைப் பொறுத்த வரையில் அங்கு கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வல்லுறவு என குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதுடன் கலாசாரமும் சீரழிந்து வருகிறது. யுத்த காலத்தில் இடம் பெற்றதைப் போன்று தற்போதும் அங்கு இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து வருவதனால் மக்கள் மத்தியில் பீதி நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, கடத்தல் சம்பவங்கள் தொடர்வதுடன் கலாசார சீரழிவும் இடம் பெற்றுவருவதாகவும், இதில் எமது உறவுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருவது மனவருத்தத்தை தருவதாக முன்னார் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஒருவர் மனம் வருந்தும் நிலைக்கு யாழ். குடாநாடு சென்றுள்ளது.
யாழ்.குடாநாட்டின் 4,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், தற்போது அரசுடன் இணைந்துள்ள கட்சி ஒன்று தமது தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட 50 பேருக்கு மட்டும் நியமனங்களை வழங்க முயன்று வருவதாக தெரியவருகிறது. இத்தகைய நடவடிக்கை முறையானதல்ல. எனவே பட்டதாரிகள் சகலருக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்.
சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள்
பல வருடங்களாக நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதி கள் எந்தவித விசாரணையும் இன்றி விடுதலையும் இன்றி வாடி வருகின்றனர். யுத்தம் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள், அவர்களை காட்டித்தர தவறினார்கள் என்ற குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி கள் தம்மை விடுவிக்கக்கோரி பல போராட்டங்களை நடத்திய போதிலும், அவை எதுவும் பலன் தரவில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கியஸ்தர்களாக இருந்தவர்கள் பலர் இன்று பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் போராளிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதிய மகஸின் சிறைச்சாலை மட்டக் களப்பு அனுராதபுரம் யாழ்ப்பாணம், பூஸா ஆகிய சிறைச்சாலைகளில் 500 இற்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்றார்.
அமைச்சர் டக்ளஸின் அபாண்டமான குற்றச்சாட்டு! நட்டஈடு கோர உள்ளேன்
யாழ்ப்பாணத்தில் நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலையை, சிங்களக் காடையர்களைக் கொழும்பில் இருந்து கூட்டிச்சென்று நானே இடிப்பித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார். என்று திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது:-
வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டிகள் வழங்கி அவர் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அந்தப் பேட்டி யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெளிநாட்டுத் தொலைக்காட்சியிலிருந்து மறுஒளிபரப்புச் செய்யப்பட்டிருக்கிறது. அவர் என் மீதான இந்த அபாண்டமான பழியை வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் மீது நூறு மில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளேன் என்பதனை இந்தச் சபையில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்
இலங்கையை தொடர்ந்தும் 3-ம் மண்டல நாடாக கருதமுடியாதென, “பொருளாதார நிபுணர்” டக்கிளஸ் தேவானந்தா அவர்கள் கூறியுள்ளார். அப்போ 2-வது மண்டல நாடாக கணிக்கலாமோ? தற்போது 2-ம் மண்டல நாட்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தைத்தான் அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதோ?. அந்த நினைப்பினில் இருந்து தான் ஜனாதிபதியின்-குடும்ப ஆட்சி, சகலதையும் சொல்கின்றது, ஆனால் செய்ய வக்கில்லை! கடந்த ஜனாதிபதி-கூட்டமைப்பு சந்திப்பின் போது, யுத்தத்தால் இல்லாமல் ஆக்கப்பட்ட வன்னிமக்களின் வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டுமெனக் கோரியபோது, அரசிடம் அதற்கு பணம் இல்லையென பிச்கைக்காரப் பதில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட-அங்கவீனமாக்கப்பட்ட படையினருக்கு நிவாரணம். அதேபோல் பாதிக்கப்பட்ட வன்னிமக்களுக்கு நிவாரனம் இல்லை. இது போன்ற இன்னும் (இயலாமை-வங்குரோத்து-சட்டம்-ஒழுங்கு- அரசியல் துஷ்பிரயோகம்) பலவற்றையே பா. உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மகிந்த அரசின் நடவடிக்கைகள் “பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை” என்ற போக்கிலேயே உள்ளது.
சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவான முறையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது– சரத் பொன்சேகா
சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவான முறையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இராணுவப் படையினரை குற்றச் செயல்களிலிருந்து விடுவிக்க தாம் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தகாலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவிற்கு தாம் அஞ்சப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை வென்றெடுக்கும் தருணத்தில் இராணுவத் தளபதியாக செயலாற்றியவன் என்ற அடிப்படையில் பொறுப்படன் தாம் இதனைக் குறிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஆஜராகத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிபுணர்கள் குழுவினைக் கண்டு இலங்கை அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்ட ஒழுங்குகள் நிலைநாட்டப்படுமாயின் தனது மருமகன் தானுக்க திலக்கரட்ன நீதிமன்றில் ஆஜராவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மருமகனை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டிய சட்ட கடப்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்தாவிற்கு இன்னொரு கே.பி. கிடைத்துள்ளாரோ? நீங்கள் என்ன தளபதியாரே! ஜனாதிபதி வேட்பாளாராகியபோது, மகிந்தாவை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வேன் என்றீர்கள், நான் இராணுவத் தளபதியாக இருந்து சகலதையும் சரியாகச் செய்ய, கோத்தபாயாதான் எல்லாத்தையும் பிழையாக்கினவர் என்றார். அப்போதுதான் சர்வதேச யுத்தவிதிகளும், மனித உரிமைகளும் மீறப்பட்டதெனவும், சொன்னீர்கள். இப்போ இதென்னையா சந்தர்ப்பவாத காற்றடிக்குது? மருமகனாரும், தாங்களும் வெளியில் வரத் தீர்மானமோ? அதென்னவோ இப்ப சட்டம் ஒழுங்கு சரியில்லை., சரியென்றால் மருமகன் வெளியில் வருவார் என்கின்றீர்கள். கடந்த வருடம் மே 19-ற்கு முன்பு சட்டம் ஒழுங்கு சரியான ஒழுங்காற்றலில் இருக்க, சர்வதேச விதிகளுக்கு அமைய, புலிகளுக்கு எதிராக மனிதஉரிமையுடன் கூடிய ‘தர்மயுத்தம்’ புரிந்தீர்களோ? மகிந்த-கோத்பாய குடும்ப ஆட்சி இப்பவல்ல (தங்கள் தளபதிக் காலத்திலும்) எப்பவும் கறைபடிந்த ஆட்சியே! இதை தங்களுக்கு முன்-தங்களுக்குப் பின் என்ற ‘கோமாளித்தன’ வரலாறு கற்பிக்க முயலாதீர்கள்! ஏதோ தங்கள் கையும் கறைபடியாக் கைபோல் கதையளக்கின்றீர்கள்.!
ஐ.நா கிளை அலுவலகம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை– விமல் வீரவன்ச
ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளையை முற்றுகையிட்டு பணியாளர்களை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென கடந்த வாரம் தாம் வெளியிட்ட கருத்தில் மாற்றமில்லை என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜே.என்.பி. கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தாம் தமது நிலைப்பாட்டை வெளியிட்டதாகவும், அரசாங்க அமைச்சர் என்ற ரீதியில் தாம் கருத்துக்களை வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய தமது கருத்து தொடர்பில் எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் வரையில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளை உத்தியோகத்தர்களை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென தாம் வெளியிட்ட கருத்து ஜே.என்.பி தலைவர் என்ற முறையிலாகும் .
தமக்காக எவரும் ஐக்கிய நாடுகளின் மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினதும், படைவீரர்களினதும் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளும் பான் கீ மூனே மன்னிப்பு கோர வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நீதிமன்றில் இலங்கைத் தலைவர்களை ஆஜர்படுத்தும் முயற்சியின் முதல் படியே இந்த நிபுணர்கள் குழு உருவாக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விமல் வீரவன்சவின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மன்னிப்பு கோரக் கூடுமென ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பரான் ஹக் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் அடுத்தொரு பெரிய ‘பேரினத்-தேசியவாதி! இவருக்கு எதிலும் நிலைமாறும், தடம் புரளும், ஆக ஜ.நா.கிளையை முற்றுகையிடல், பணியாளர்களை கைதியாக்குதல், இதில் நிலைமாறாதாம். அதில்கூட மூலோபாயம்-தந்திரோபாயம்! ஜே.என்.பி கட்சியின் தலைவறென்ற ரீதியில் இது நிலைப்பாடாம். அரசாங்க அமைச்சர் என்ற ரீதியில் மௌனமாம். இந்த ‘வீர’ வெங்காய அரசியல் வாதிக்கு, பான் கீ மூனால் இலங்கை அரசிற்கும், அதன் ‘மக்கள்படை’வீரர்களுக்கும் களங்கமாம், நன்மதிப்பில்லையாம். இதெல்லாம் முன்பிருந்த மாதிரியும், இப்போ நிபுணர் குழு என்ற ஓன்று வந்ததால்தான் மகிந்த மன்னனுக்கு வினை வந்தமாதிரியும், இந்த நிலைப்பாட்டாளரின் கதையும் கற்பனவும். உங்களை இனம் கண்ட ஊர், உலக அரங்கில், உங்களின் உந்த உவையெல்லலாம் எடுபடாது! செல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை!
ஐ.நா நிபுணர் குழுவிற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காமை குறித்து மகிந்த ஆழ்ந்த கவலை!
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆலோசனை பெறுவதற்காக நியமித்துள்ள நிபுணர்கள் குழுவிற்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்காமை குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா கவலையடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் நியமனத்திற்கு எதிராக ரஸ்யா உள்ளிட்ட 29 நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையிலும், அயல் நாடான இந்தியா அது பற்றிய கருத்து எதனையும் கூறாதது, ஐ.நா குழுவை ஏற்றுக்கொண்டதற்கு நிகரானது என ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சரிடம் கூறியுள்ளாதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்
நீங்கள் வீடு கொளுத்த, கொள்ளி தூக்கித் தந்தவர்கள் அவர்கள். இது ஊரறிந்த உண்மை, இந்நிலையில் அவர்களிடம் போய் நிபுணர் குழுவிற்கு எதிராக அறிக்கை விடவில்லையெனற் கவலை-எதிர்பார்ப்பு எதன்பாற்பட்டது? எதற்கும் ஓர் விபஸ்தை வேண்டாம்.
கருணாநிதியை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் – ஜெயலலிதா
கருணாநிதியும்-ஜெயலலிதாவும் ஈழத் தமிழ்மக்கள் விரோதத்தில் ஓர் நாணயத்தின் இரு பக்கங்களே!
இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் சபை விசாரனை குழுவினரை அதிமுக வினர் சந்தித்து இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் அந்நாட்டு ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் எனக் கருதப்படுகிறார்களோ, அதைப் போல தமிழக முதல்வரும் போர்க் குற்றவாளிதான் என அறிவிக்க வேண்டும் கோரிக்கை வைப்போம் என ஜெயலலிதா தெறிவித்துள்ளார்.
19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் “உண்ணாவிரதத்தை”நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.
மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழக மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!
நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும்” என சர்வதேச சட்டம் கூறுகிறது. போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துஇ நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காதஇ அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர். ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான். ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும் போது, அதிமுகவைச் சேர்ந்த குழு ஐக்கிய நாடுகள் குழுவைச் சந்தித்து, கருணாநிதி ஒரு போர் குற்றவாளி என்று பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையிலேயே பாடுபடுபவர்கள் தம்மை உணருவார்கள் ‐ கருணாநிதி
இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையிலேயே பாடுபடுபவர்கள் தம்மை உணருவார்கள் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து கருணாநிதி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடுள்ள அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த 2002‐ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை சட்டப் பேரவை வலியுறுத்தியது.
மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை மறந்துவிட முடியுமா? இலங்கையில் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச் சங்கிலிகளும், பொதுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அப்போது அறிக்கை விடுத்த ஜெயலலிதா, ஒரு யுத்தம், போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தமிழர்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக இராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார். இதேபோன்று, இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் 2009‐ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதுஇ இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான்.
நீங்கள் இருவரும் அசல் சினிமாக்காரர்கள். உங்களின் அறிக்கைகளில் ஓர் “சின்னத்திரைக்கு” உரிய பல அமசங்கள் உள்ளன. இதை மெகா தொடராக்கினால், அடுத்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரயோசனப்படும். இதை விடுத்து உங்கள் இருவரையும் அரசியல் ரீதியாகக் கணித்தால், ஈழத்தமிழர் பிரச்சினையில், குளிர் காய்பவர்கள். அதை இளவு வீடாக்கியும் அரசியல் செய்வீர்கள். செய்திருக்கின்றீர்கள், மொத்தத்தில் ஈழத்தமிழ் மக்கள் விரோதத்தில் நீங்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே!
அபாயங்களுடன் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் அபாயத்துக்குள் தள்ளமுடியாது: ஆஸி. பிரதமர்
இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அகதிகள் தொடர்பிலான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு, அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா அவுஸ்திரேலிய எதிர்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல், எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை தூக்குவது ஏற்புடையதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிரஇ உண்மையான கரிசனைக்கானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் வாரம் தாம் இலங்கை அதிகள் தொடர்பான தீர்வினை முன்வைக்க விருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில் பசுபிக் கொள்கை அடிப்படையில், அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிப்படகுகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்ட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர், பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, அபாயகரமான முறையில் அவுஸ்திரேலியா வருகின்றவர்கள் தொடர்பில் கரிசனை காட்ட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தெரிதலும் தேர்ந்து செயலும் ஓருதலையாய்ச் சொலல்லும் வல்லது அமைச்சு!
செயல் பற்றி ஆராய்தல், ஆராய்ந்தபின் செயல் புரிதல், அறிந்தவற்றை உறுதியாகச் சொல்லுதல்,
இவற்றில் சிறந்தவரே அமைச்சர்!!”