Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு கொழும்பில் விரிவான ஏற்பாடு

எதிர்வரும் ஜனவரி மாதம் 6, 7, 8, 9 ஆம் திகதிகளில், ஏற்கனவே திட்டமிட்டவாறு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு கொழும்பில் நடைபெறும் என்று இம்மகாநாட்டின் பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதியும் மகாநாட்டிற்கான இலங்கை இணைப்பாளரும் ‘ஞானம்’ ஆசிரியர் திருஞானசேகரனும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கலை, இலக்கிய ஊடகத்துறையில் அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல் என்ற அடிப்படை நோக்கத்துடன் இந்த மாநாடு கடந்த சில வருடங்களாகவே ஆலோசிக்கப்பட்டது எனவும் இது தொடர்பான விரிவாக ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடந்தது எனவும் இக்கூட்டத்தில் தகைமைசார் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கூறியதுடன் மகாநாடு எவ்வாறு அமையவேண்டும் எனவும் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேராசிரியர் சிவத்தம்பி, “அண்மைக்காலமாக தமிழ் எழுத்தாளர்களின் பரந்துபட்ட சந்திப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனை ஒரு தேக்க நிலையாகவே நோக்கலாம். நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச மட்டத்தில் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வரவேற்கப்படவேண்டியதொன்றாகும்.

இந்த மகாநாடு வெறுமனே தமிழ் எழுத்தாளர்கள் கூடிக்கலையும் மகாநாடாக அமைந்துவிடாமல் தமிழின் பெருமையை மேலும் விரிவுபடுத்துவதாகவும் வளமடையச் செய்வதாகவும் அமையவேண்டும். அதற்குரிய விதத்தில் திட்டங்கள் தயாரிக்கப்படவேண்டும். ஆரோக்கியமான வேலைத் திட்டமொன்றை முன்வைத்து அதற்கான செயற்பாடுகளை முன்கொண்டு செல்லவேண்டும்.

சர்வதேச மட்டத்தில் பரந்துபட்டுபோயுள்ள புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் இந்த மகாநாடு உள்வாங்கவேண்டும். அதற்கான கால அவகாசம் தாராளமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். 2011 ஜனவரியில் மகாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள்.

ஒருவருட காலம் உள்ளது. காத்திரமாக மகாநாட்டை நடத்த முடியும். எனவே மிகவும் ஆழமாக காரியமாற்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது” என்று பேராசிரியர் இக்கூட்டத்தில் மிகவும தெளிவாகவும் உறுதியாகவும் உரையாற்றி மகாநாட்டு ஏற்பாட்டாளர்களை உற்சாகமூட்டினார்.

இந்த மகாநாட்டுக்கான செலவுகளுக்குத் தேவையான நிதியுதவி புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படும் எனவும் வெளிநாடுகளில் வதியும் ஈழத்து எழுத்தாளர்கள் தலா நூறு டொலர்களை வழங்குவதன் மூலம் மகாநாட்டை திட்டமிட்டவாறு நடத்த முடியும் எனவும், மகாநாட்டில் ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கி போரினால், இயற்கை அனர்த்தத்தினால், விபத்தினால் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்படும் என்று மகாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி இக்கூட்டத்தில் தெளிவாகத் தெரிவித்துமிருந்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட பல படைப்பாளிகளுக்கு சீர்மிய  ஆதரவும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் மகாநாட்டிற்காக இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ் திரேலியா, கனடா, அமெரிக்கா உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்து தமது விண்ணப்பங்களையும் அனுப்பியிருக்கிறார்கள். மகாநாட்டு செலவுகளுக்கு நிதி சேகரிப்பதற்காக கொழும்பில் பிரத்தியேகமான வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு வெளிநாடுகளிலிருக்கும் இலக்கியவாதிகளுக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்பொழுது நடைபெற ஏற்பாடாகியுள்ள இம்மகாநாடு இனிவரும் காலங்களில் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். அதுபற்றிய தீர்க்கமான முடிவு நடக்கவுள்ள முதலாவது மகாநாட்டின் இறுதியில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் தீர்மானிக்கப்படும். இம்மகாநாடு இலக்கியவாதிகள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் புரிந்துணர்வுமிக்க ஒன்று கூடலாக அமையும்.

எனவே இதனை அரசியலாக்கி கொச்சைப்படுத்திவிட வேண்டாம் என்று பொறுப்புவாய்ந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் படைப்பாளிகளிடம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் இறுக்கத்தை தளர்த்தி நெருக்கத்தை ஏற்படுத்துவதும் இம்மகாநாட்டின் அடிப்படைச் சிந்தனை எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துகிறது ராஜபக்ஸ அரசு. இம் மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு உலகத் தமிழ் மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்

ஈழம்ஈநியூஸ்.

ஜெயபாலனின் பேட்டியொன்றிலிருந்து…..;

எதிர்வரும் சனவரியில் கொழும்பில் நடத்தப்படவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளனவே, நீங்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்களா?

இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது கேள்வி களத்தில், மக்கள் மத்தியில் கலை – இலக்கிய, சமூக செயல்பாடுகள் தொடர்பான மாநாடுகள் இடம்பெறக் கூடாது என்று சொல்ல களத்திற்கு வெளியில் வாழும் யாருக்காவது உரிமையுண்டா என்பது. இரண்டாவது, குறிப்பிட்ட மாநாட்டின் அரசியல் தமிழ் பேசும் மக்களது நலன்களுக்கு விரோதமானதா?

இக்கேள்விகளில் முதற் கேள்விக்குக் களத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய நன்மை தீமைகளைத் தாங்களே தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள் அவர்களுக்கு வெளியிலிருந்து உத்தரவிட யாருக்கும் அதிகாரம் இல்லை, அவர்கள் மத்தியில் வாழ்வு அதன் முழுமையோடு உயிர் பெற வேண்டும். இதுதான் எனது நிலைபாடு.

குறிப்பிட்ட அந்த மாநாடு களத்தில் வாழும் தமிழ் மக்களினது நலனுக்கு எதிரானது என்பது ஐயம் திரிபற உறுதிப்பட்டால் மட்டுமே நாம் அந்த மாநாட்டை எதிர்க்கலாம்.

வ.ச.ஐ.ஜெயபாலன்

**************************************************************

  • Shiva

முருக பூபதிக்கு இலங்கை அரசு ஆதரவு முத்திரை குத்துவோர் முதலில் ஆதாரங்களை முன்வைக்கட்டும்.

——–

ஈழத்தின் மூத்த தமிழ்ப் படைப்பாளியும், உரிமை வேட்கைப் போராளியுமான திரு எஸ்.பொ வின் கருத்தும், ஆதங்கமும் கவனிக்கப் படவேண்டியவை என்பதில் எள்ளத்தனை ஐயமும் இல்லை.

கலை-இலக்கிய அரங்கம் –அகிலன்(பகுதி 2)

கலை-இலக்கிய அரங்கம் –அகிலன்(பகுதி 1)