Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு:

புலி ஊடகங்களும்–உணர்வாளர்களும் குழம்புகின்றார்கள்!  குழப்புகின்றார்கள்!

‘‘தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துகிறது ராஜபக்ஸ அரசு. இம் மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு உலகத் தமிழ் மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்”

ஈழம்ஈநியூஸ்

“ஈழத்தின் மூத்த தமிழ்ப் படைப்பாளியும் உரிமை வேட்கைப் போராளியுமான திரு எஸ்.பொ வின் கருத்தும் ஆதங்கமும் கவனிக்கப் படவேண்டியவை என்பதில் எள்ளத்தனை ஐயமும் இல்லை”யென இப்படிச் சிலர்

“யாரை திருப்திப்படுத்த இம்மாநாடு” என்ற பாங்கில் பின்னூட்டங்களும் கேள்விகளும்?. இவைகளுக்குப் பின்னால் புலிகளும் புலி ஊடகங்களும்–இவர்களின் தமிழக (தமிழ் உணர்வாளர்கள்) ஏஐன்டுகளும் இருப்பதைக் காணமுடிகின்றது

சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் விட்ட பிழையையும்–அதனூடாக அன்றெழுந்த கண்டனங்களையும், இப்போ இம்மாநாட்டை நடாத்த முன்வந்த சூழ்நிலையில் அதை “உலகத் தமிழ் மக்கள் கண்டனமென” போட்டுக் குழப்பக்கூடாது, குழம்பக்கூடாது!

சிவத்தம்பி செம்மொழி மாநாட்டில் செய்த பிழை, காலம் காலமாக் காட்டி வரும் சந்தர்ப்பவாத “பேராசிரிய தத்துவ வித்தக” பேச்சும், பேட்டிகளுமே! கருணாநிதி தமிழ் மக்களை உய்விக்கும் “உலகமகா தமிழ்த் தலைவன்” என்றார்! அதற்கப்பாலும் சென்று ஏதோ செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது போல் கருணாநிதிக் கடன் தீர்த்தார். இதனால் தமிழ் கூறும் நல்லுலகமே இவரை வெறுத்தொதுக்கியது. ஏகப் பெரும்பான்மையான தமிழக எழுத்தாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தார். செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பியின் நடவடிக்கைகள் பற்றி அ. மார்க்ச் அவர்களின் அபிப்பிராயங்களைப் அவதானிப்போம்.

“தமிழாராய்ச்சி மாநாட்டைத் தானே நடத்த முடியாது என்கிறீர்கள் ‘உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு’ என்பதாகப் புதிய பெயரைச் சூட்டி நடத்துகிறேன் பாருங்கள் எனக் களமிறங்கினார் கருணாநிதி. சிவத்தம்பி முதலான மூத்த தமிழறிஞர்கள் அதற்கு ஒத்துழைத்தனர். சிவத்தம்பி அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவன் என்கிற முறையில், அவர் இத்தகைய முடிவெடுத்ததில் எனக்கு வியப்பில்லை. ஒரு நேரத்தில் விடுதலைப் புலிகள் இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வாய்ப்பிருந்த போது சிவத்தம்பி பெயர்தான் அதற்குச் சிபாரிசு செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம். நாங்களெல்லாம் அப்போது அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு அவரை வெளிநாட்டுத் தூதுவராக நியமிக்க முன் வந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. (எனினும் பேராசிரியர் அதை ஏற்கவில்லை) அந்த அளவிற்கு இரு தரப்பினரும் மதிக்கத்தக்கவராக இருந்தவர் இருப்பவர் அவர்.

பேராசிரியர் அவர்கள் வந்தது மட்டுமல்ல. அவர் அளித்த பேட்டிகள் இங்கே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின. ‘ஈழம்’ என்கிற சொல்லே சிங்கள மூலத்திலிருந்து உதிந்த சொல் அதை நான் தவிர்க்க விரும்புகிறேன்’ என்றார். தவிரவும் அப் பெயர் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட அரசியலுடன் தொடர்புடையதாகி விட்டதையும் சுட்டிக் காட்டினார். ‘நான் முதலில் இலங்கையன் எனது அடுத்த அடையாளமே தமிழன்’ என்றார். உங்களுக்கும் அப்படித்தானே முதலில் நீங்கள் இந்தியர்கள், அப்புறம் தானே தமிழர்கள்’ என்றார். ’வெறுமனே ஈழத் தமிழன் எனக் கூறி இலங்கை மீதுள்ள எனது பாரம்பரிய உரிமையை விட்டுவிட முடியுமா’ என்றார். உள்நாட்டுத் தமிழ் அகதிகள் பற்றி ஒரு பத்திரிகை வினவியபோது ‘அதெல்லாம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. இங்கே வந்து பேசக் கூடாது’ என்றார். ஆமாம் அவர்கள் பெரிய துன்பத்திற்காளாகியுள்ளார்கள். உடனடியான நிவாரணம் அவர்களுக்குத் தேவை என்கிற ரீதியிலும் கூட அவர் பேசத் தயாராக இல்லை. எனினும் முன்னதாக தினமணி இதழுக்கு அவர் பேட்டியளித்த பொழுது ‘இலங்கை எங்களது தீவு. தமிழர்கள் அங்கு இருந்தார்கள். இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இருப்பார்கள். இந்த உரிமையை நாங்கள் விட்டுவிட மாட்டோம்’ என்கிற ரீதியில் கூறியதைப் படித்தபோது எத்தகைய நைந்த நெஞ்சிலிருந்து இந்தச் சொற்கள் எழுகின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. எனினும் உலக அளவில் ஏற்கப்பட்ட தமிழாய்வின் தலைமகன் என்கிற பரிமாணத்தைத் தாண்டுவதற்கு அவர் விரும்பவில்லை.”

எனவே கொழும்பில் மாநாடு நடாத்தும் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் சிவத்தம்பியின் சந்தர்ப்பவாத கலை-இலக்கிய அரசியலையும் கவனத்தில் கொள்ளவேண்டும்!. இதுபோக இம்மாநாட்டுக்காக, மாநாட்டு ஏற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட் 12-அம்சத் திட்டங்கள்:

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்காக முன்வைக்கப்பட்ட 12 அம்ச திட்டங்கள் வருமாறு:

1. தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாக கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப்படைப்புகளில் செம்மைப்படுத்தும் (செவ்விதாக்கம்) கலையை வளர்த்தெடுப்பது.

2. தமிழ் இலக்கிய படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளை பேணிவளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளை சர்வதேச ரீதியாக அறிமுகப்படுத்தல்.

3. தமிழ் இலக்கிய படைப்புகளை (நூல்கள் – இதழ்கள்) ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது.

4. இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை ((Trust Fund) உருவாக்குவது.

5. தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை இலக்கிய சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது.

6. தமிழ் மக்களிடம் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை பெறுதல்.

7. நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் விழாவில் கலை. இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்தல்.

8. தமிழ் எழுத்தாளர்கள் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் பத்திரிகை இதழாளர்கள் ஊடகவியலாளர்கள் கலைஞர்கள் ஓவியர்கள் மத்தியில் கருத்துப்பரிவர்த்தனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப்பாலத்தை ஆரோக்கியமாக உருவாக்குதல்.

9. நாடகம் நடனம் கூத்து இசைநாடகம் வீதிநாடகம் மற்றும் பாரம்பரிய கிராமியக்கலைகளைப் பற்றிய கருத்தரங்குகள் பயிற்சிப்பட்டறைகள் ஒழுங்குசெய்தல்.

10. இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறை படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல்.

11. குறும்படம் தொடர்பான பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த சினிமா ரஸனையை வளர்த்தல்.

12. ஓவியக்கலை ஒளிப்படக்கலை கணனிக்கலை. புசயிhiஉள முதலான துறைகளில் ஈடுபடும் இளம்தலைமுறையினருக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் மத்தியில் உறவுகளை ஏற்படுத்தும்வகையில் காட்சிப்படுத்தும் னுநஅழளெவசயவழை கருத்தரங்கு அமர்வுகளை நடத்தல்

பிற்குறிப்பு: படைப்பிலக்கியவாதிகள் கலைஞர்களிடம் நீடிக்கும் இறுக்கத்தை தளர்த்தி நெருக்கத்தை பேணுவதற்காகவும் ஆரோக்கியமான கலந்துரையாடல்களின் ஊடாக அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்குமான ஒன்றுகூடலே இந்த சர்வதேச அரங்கு. எனவே பயனுள்ள கருத்துக்களை வாசகர்களும் தெரிவிக்க வேண்டும்!

“உரிமை வேட்கைப் போராளியின் மிகப்பெரும் குற்றச்சாட்டு ‘‘தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துகிறது ராஜபக்ஸ அரசு, இதனால் அரசை திருப்திப்படுத்தவே இம்மாநாடு என்கின்றார்! இது வரையில் தங்களின் துப்புத் துலக்கலில் உண்மைக்ள் உள்ளதாக அனுமானங்கள் இல்லை! ஆனால் எதிர்காலத்தில்……

இன்றைய மகிந்த அரசு எதையும் எவரையும் விலைக்கு வாங்கும் நிலையிலேயே உள்ளது. ஆனால் இதற்கு எதிராக எதிர் நீச்சல் போடவேண்டும்!  இன்றைய இலங்கையில் தமிழ் மக்கள் சுயம் சார்ந்து—நலன் சார்ந்து அரசியலில்–கலை இலக்கியத்தில் ஏதாவது செய்ய முற்பட்டால், அது அரசிற்கு சாதகமாகவும் இருக்கவேண்டும், அத்துடன் தமிழ் ஈழத்திற்கு—நாடு கடந்த தமிழ் ஈழக்காரர்களுக்கு–தமிழக தமிழ் உணர்வாளர்களுக்கும் சாதகமாகலும் வேண்டும்! இதில் இம்மாநாடு இரண்டாம் பகுதியினருக்கு சாதகமின்மையினாலேயே என்.பொ. காசி ஆனந்தன் தலைமையிலானவர்களின் இப் பிரச்சாரங்களும், தாங்கள் தான் தமிழ் மக்கள் ஏகப்பிரதிநிதிகள் என்ற நினைப்பும!.  இந்நிலையும் இவர்களும் உள்ளவரை தமிழ்மக்கள் அபிலாசைகள்–சுயம் சார்ந்தவைகளை முன்னெடுப்பதற்கு இருமுனைப் போராட்டங்கள் தேவை!  எனவே இவற்றிற்கு முகம் கொடுத்து இம்மாநாடு முன்னேறினால், எதிர்காலத்தில் தமிழ்மக்கள் நலன் சார்ந்த—சுயம் சார்ந்த பலவற்றைச் செய்யலாம்!