சண்டித்தன அரசியல்!
சண்டியனுக்கு எதிராக லண்டனில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தினார்கள்?
மந்திரியொன்று வெட்கமின்றி இதைப் பாராளுமன்றத்திலும் சொல்லுது!
சமகால இலங்கை அரசியலை “சண்டித்தன” அரசியலாக கொள்ளலாம். அதை மகிந்தக் குடும்பம் குதூலமாக செய்கின்றது. இதன் செயற்ப்பாடே லண்டன் சென்று திரும்பிய நவசமசமாஐக் கட்சியின் தலைவரை விமான நிலையத்தில் வைத்து தாக்கியது. தாக்கப்பட்டது ஓர் தனி நபரல்ல. விக்கிரமபாகு கருணாரத்தினாவை வரவேற்க வந்த அவரின் கட்சி ஊழியர்கள்-ஆதரவாளர்களும் தான். விக்கிரமபாகுபாகு தன் லண்டன் விஐயத்தின் போது சொன்னவைகளை அரசு திரித்து, அதை நாடு கடந்த ‘தமிழீழ’ அரசியலாக்கி, புலியாக்கி தாக்கியுள்ளது. அவர் லண்டனில் சொன்னவைகளின் சாரம், “புலிகளோடு நான் பல விடயங்களில் முரண்படுகின்றேன். நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. இதற்கூடாக சிங்கள் மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறியமுற்படுகின்றார்கள். இதன் வளர்சிப் போக்கு சிங்கள-தமிழ் மக்களை ஓரணி சேர்க்கவைக்கும். எதிர்காலத்தில் இவ் ஒற்றுமைப் போராட்டங்கள் மகிந்த அரசை தூக்கியெறியும்” என்பதே.
மகிந்த அரசிற்கு இப்போ ‘புலிப் பைத்தியம்’ அதன் தொழிற்பாட்டின் வெளிப்பாடே இது. அண்மையில் இதே போன்றதொரு கண்மூடித்மனமான தாக்குதல் யாழ்நகரில் ஜே.வி.பி.யினர் மீதும் நடாததப்பட்டது. அதிலும் நடந்தது ஒன்று. அரசு வேறொன்று சொல்லி செய்தது சண்டித்தன அரசியலே.
இலங்கையின் கடந்த 60-ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட பேரினவாத அரசியல், 77-ற்கு பிற்பாடு ஜே.ஆரின் தலைமையில் சண்டித்தன அரசியலாகியது. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்ற ஒன்று தனிநபருக்கு சர்வவல்லமையையும் கொடுக்கின்றது. இதனாலேயே “போர் என்றால் போர். சமதானம் என்றால் சமாதானமென” சொல்லி இவ்வரசியலிலான இனப் படுகொலைகளைச் செய்தார். இதன் பரிணாம வளர்ச்சிப் போக்கில், இன்றைய மகிந்தாவின் குடும்ப ஆட்சியையையும் சண்டித்தன-சர்வாதிகார அரசியலாக கணிக்கலாம்.
இரண்டாவது தடவையாக ஐனாதிபதியாகியது, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் இல்லாப் பாராளுமன்றத்தை தான் நினைத்தளவு அதே பெரும்பான்மையாக்கியது போன்றவை, மகிந்தாவை மகாபாரதத்தின் துரியோதனன் போன்ற துஸ்ட அரசியலாளன் ஆக்கியுள்ளது. திருதராட்டினன்-காந்தாரி, துச்சாதனன், சகுனி போன்றவர்களின் குடும்ப அரசசபையே, மகிந்தாவின் இன்றைய அரசசபை. கோத்தபாயா சகோதரர்கள், விமல்வீரவன்ச, மேர்வின் ரி சில்வா போன்றதுகள் இத் ‘துரியோதன’ மந்திரி சபையை அலங்கரிக்கின்றார்கள் தானே. திரௌபதையின் துகிலுரிந்த துச்சாதனன் போன்ற தம்பியையும் கொண்டுள்ளார் தானே! பாண்டவர்கள் இறுதியாக கேட்டது ஐந்து ஊர்கள்-அல்லது ஐந்து வீடுகள். துஸ்டனான துரியோதனனின் சண்டித்தன அரசியல் சிந்தனை அதைக்கூட கொடுக்க மறுத்தது. பாண்டவர்களுக்கு நடந்ததே தமிழ் மக்களுக்கும் நடந்தேறியுள்ளது.
நீதி-நியாதத்திற்காக வீதியில் இறங்கிப் போரடியவன் என்போனின், அடக்கி ஓடுக்கலுக்கு எதிராக, இன்று இலங்கையில் எத்தனை எத்தனை வீதிப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவைகளை எவை எவை கொண்டு அடக்கி-இல்லாதாக்க முடியுமோ அவை யாவும் இவ் அரசியலுக்கூடாகவே நடைபெறுகின்றது. இது அரசியல், பொருளாதார, கல்வி கலாச்சாரம், வேலைவாய்ப்பு முதல், பத்திரிகைச் சுதந்திரம், மனித உரிமை மீறல்கள் வரை தொடர்கின்றது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் அண்மைக்காலப் போராட்டங்களே இதற்கு சான்று. அத்தோடு சிறுபான்மை என்பதை சகலதிலும் இல்லாதாக்கும் வகையில், அதை சகல தளங்களிலும் விரித்துள்ளது. இது அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தல் முதல் கட்சிகள் வரையும் வந்துள்ளது. இதனாலேயே எதிர்க்கட்சிகள் நீதிமன்ற உதவியை நாடி நிற்கின்றன. இந்நிலையின் ஊடாக திமிர்கொண்ட பாஸிச-சர்வாதிகார அரசியலையும், அதன் தொழிற்பாடுகளையுமே நம்நாட்டில் காண்கின்றோம். இதை தேசிய ரீதியில் அல்ல, சர்வதேச அளவிலும் எத்தனிக்க முயல்கின்றது.
இத்திமிர் கொண்ட சண்டிய அரசியலை, ஆசிய மேலாதிக்கத்தின் (இந்திய-சீன) செல்லப்பிள்ளையாகி, அதன் ஆசீர்வாதத்துடன் செய்தும், செய்து கொண்டும் இருக்கின்றது. இத் தொழிற்பாடு அமெரிக்க-ஐரோப்பியத்தை எதிர்க்கும் முனைப்பிலும் உள்ளது. இப் போக்கு நல்லது தான் என வாதிக்கும் மகிந்த சிந்தனையாளர்களும் உள்ளனர். உண்மை இல்லாமல் இல்லை. அமெரிக்க-ஐரோப்பியத்திற்கு எதிரான ஆசியக் கூட்டும் இலங்கையில் இதைத் தானே செய்கின்றது. வேண்டுமானால் குறைவு-கூடுதல், பெரிது-சிறிது பற்றி விவாதிக்கலாமே தவிர சாராமசத்தில் உள்ளடக்கம் ஒன்றுதான். ஏன் வெள்ளைப் பூனை தான் எலி பிடிக்கும் கறுப்பிற்குத் தெரியாதோ?
கறுப்பின் துணை கொண்ட திமிரோடு தான் பல தடுப்புக்களையும் தாண்டி, லண்டன் சென்றார். “லண்டனில் தனக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்பதைத் தெரிந்து கொண்ட நிலையில் அதற்கு முகம் கொடுக்கும் துணிச்சலுடனேயே ஜனாதிபதி லண்டனுக்கான விஜயத்தை மேற்கொண்டதாக” அமைச்சர் பீரீஸ் சொலகின்றார்.
மகிந்தாவின் லண்டன் விஐயம், பிரித்தானிய அரசின் அழைப்பின் பாற்பட்டதல்ல. அப்படியிருந்தும் ஏற்பாடாகியிருந்நத நிகழ்விற்கு சென்றவர், அதை முழுமையாக்கி வந்திருந்தால் அதன் பிரதிபலிப்பு எப்படியிருந்திருக்கும். நான் அவர்கள் அழைப்பில்லாமலே போனேன். அவர்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கே பயங்கரவாதத்தை எப்படி ஒழிப்பதென்பது பற்றி வகுப்பெடுத்துள்ளேன். விரிவுரையாற்றியுள்ளேன் என்றிருப்பார். பயங்கரவாதத்தை ஒழித்தவனுக்கு யாதும் ஊரே யாவரும் என் சொல் கேளீர்!. இதுவே என் மகிந்த சிந்ததைத் தத்துவம் என்றிருப்பார்.
ஆனால் நடந்ததோ எதிர்மாறான நிகழ்வுகளே! அதைத்தான் அழாக்குறையாக, வெட்கமின்றி பாராளுமன்றத்தில் சொல்கின்றார்@அமைச்சர் பீரீஸ்
“ஜனாதிபதிக்கெதிராக லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது தமிழர்களுடன் சோ்ந்து சிங்களவர்களும் புலிக்கொடிகளை ஏந்தியவண்ணம் கலந்து கொண்டதாக”
“நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றிலும் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 600 போ் மட்டில் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மத்தியிலும் சிங்களம் பேசுபவர்கள் இருந்தார்கள். நான் அதனை என் கண்களாலேயே கண்டிருந்தேன் என குறிப்பிட்டார்”.
நடந்தது இது தான். நீங்கள் வட பகுதியில் எதையெதைல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்து, அம்மக்களைக் கொண்டு மகிந்தப் படத்தையும் சிங்கக் கொடியையும் ஏந்த வைத்தீர்களோ!. இவைகள் எதற்கும் ஆட்படாமல்தான் லண்டனில் உங்களுக்கு எதிராக கலந்துகொண்ட சிங்களவர்கள் புலிக்கொடியை ஏந்தினார்கள். இதில் புலிக் கொடியை விட மேவி நிற்பது தங்களின் பாசிச-சர்வாதிகார-சண்டித்தன அரசியலுக்கு எதிரான எதிர்ப்புணர்வே. இப் புலிக் கொடியை ஏந்தியவர்களுக்கு அச்சமயம் அரச எதிர்ப்பில் வேறேதும் கிடைத்திருந்தாலும் அதையும் ஏந்தியிருப்பார்கள். எனவே லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கொடியைவிட உணர்வே விஞ்சி நின்றது.
நடக்கப் போவதும் இது தான். கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலான பேரின-குறுகிய இனவாத அரசியல் சிங்கள-தமிழ்மக்களை பிரித்தே வைத்தது. இதில் தான் இவ்விரு சக்திகளும் உயிர் வாழ்ந்தன. தற்போதைய நிலையில் அதைத் தாண்டியதொரு இன்னொரு போக்கில் (பயங்கரவாதப் பூச்சாண்டி இல்லா நிலை) இலங்கை மக்கள் உள்ளார்கள். இப்போக்கு தமிழ்-சிங்கள மக்களை அரசிற்கெதிரான ஓர் நேர்கோட்டில் சந்திக்க வைத்துள்ளது. இதற்கூடாக சிங்கள-தமிழ ம்க்கள் தஙகளின் பிரதான் பிரச்சினைகளை அறியமுற்படுகின்றார்கள். இதன் வளர்சிப் போக்கு சிங்கள-தமிழ் மக்களை ஓரணி சேர்க்கவைக்கும். எதிர்காலத்தில் இவ் ஒற்றுமை பிரதான எதிரிக்கெதிரான் போராட்டங்களாக மாறும். மகிந்த அரசை தூக்கியெறியும்!.