Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனித மரணம் தவிர்க்கமுடியாதது. அதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஆனால் நான் முடிக்க வேண்டிய பல வேலைகளை முடிக்காமல் செல்லப் போகின்றேன்” அதுவே எனக்குள்ள பெரும் கவலை. இது கைலாசபதி அவர்கள், கொழும்பு மருத்துவ மனையில் இரத்தப் புற்றுநோயுடன் மரணப் போர் நடாத்திக் கொண்டிருந்த வேளை, (82-டிசம்பரில் இயற்கை எய்வதற்கு இரு நாட்களுக்கு முன்)  தன்னைப் பார்வையிட வந்த அரசியல்-கலை-இலக்கிய நண்பர்களுக்கு கூறிய வார்த்தைகள்.

1982-ஐனவரியில் பாரதி நூற்றாண்டையொட்டி, தேசிய கலை-இலக்கியப் பேரவை பாரதி ஆய்வுக் கருத்தரங்கை (ஒருவருட) ஒழுங்கு செய்திருந்தது. அதே மாதம் இதன் முதலாவது கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து தன் கட்டுரைக்கான விடயங்களை உள்ளடக்கி தலைமைப் பேருரை ஆற்றினார். ஆனால் அதை பாரதி நூற்றாண்டு மலருக்கு கட்டுரையாக எழுதாமலே இயற்கை எய்தினார். இதுவும் அவரால் முடிக்காமல் விட்ட வேலைகளுள் ஒன்று.

கைலாசபதி அவர்கள் யாழ்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவன். பல்கலைக்கழகப் படிப்பை முடித்து வெளியேறிய அவர் தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஆகின்றார். பின் பிரதம ஆசிரியர் ஆகின்றார். இதற்கூடாக தினகரன் பத்திரிகைக்கு பல எழுத்தாளர்களை எழுத வைக்கின்றார். பல்கலைக்கழக விரிவுரையாளராக ஆனபோதும், தானும் எழுதினார். தன் மாணவர்களையும் எழுதவைத்தார். இவர்களில் செ. யோகநாதன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், சி. கதிர்காமநாதன், எம். சின்னத்தம்பி போன்றவர்களை குறிப்பிடமுடியும்.

தொடர் வாசிப்பு, அதை சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திற்குட்படுத்தி, வரலாற்றுப் பொருள்வாத நோக்கில் எழுதிய பல தொடர் கட்டுரைகளின் முதிர்ச்சி, அவரை ஓர் ஆய்வாளன் என்ற நிலைக்குத் தள்ளியது. இதன் நிமித்தம் பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், அடியும் முடியும், இலக்கியத் திறனாய்வு போன்ற நூல்களை எழுதினார். இக் கால கட்டத்தில தான்  சிவத்தம்பியும், தமிழ்நாட்டில் வாணமாமலையும் முனைப்புப் பெறுகின்றார்கள். இச் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டிற்கு சென்று வந்த ரட்ன தேசப்பிரிய, பிரேம்ஜி ஆகியோர், இலங்கையிலும் முற்போக்காளர் சங்கத்தை நிறுவ முற்படுகின்றனர். காலப் போக்கில் அவர்கள் எண்ணம் நிறைவேற அதில் கைலாசபதி, சுபையர், இளங்கீரன், சிவத்தம்பி, சில்லையூர் போன்றவர்கள் இணைகின்றார்கள்.

முற்போக்காளர் சங்கத்தின் முக்கிய நோக்கு, தேசியம் சார்ந்து—மண்ணின் மக்கள் சார்ந்து, கலை-இலக்கியம் படைப்பதே. இதற்கான வேலைகளை ஏற்கனவே கைலாசபதியும், இக் கோட்பாடுடையோரும் தினகரன் பத்திரிகைக்கு ஊடாகச் செய்தனர். இதைப் பொறுக்க, ஏற்க முடியாத கலை கலைக்கான கூட்டத்தின் மரபுவாதிகள், தேசியவாதிகள் சுதந்திரன் பத்திரிகைக்கு ஊடாகவும் ஏனைய தங்கள் தளங்களிற்கு ஊடாகவும் மரபுசார்ந்த அவதூற்று விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்களில் எஸ்.பொ. மு.தளையசிங்கம், மு. பொன்னம்பலம், சதாசிவம், இளமுருகனார் போன்றோர்கள் முன்னணியில் நின்றனர்.

கைலாசபதி மேலான அவதூற்று விமர்சனங்கள்

60-ம் ஆண்டுக் கால கட்டங்களில் கைலாசபதியின் ஆக்கங்களுக்கான விமர்சனங்களில் முற்போக்காளர்களின் விமர்சனங்களைத் தவிர, ஏனையவைகள் அவதூறுகளாகவே இருந்தன.  முற்போக்காளர்களின் படைப்புக்களில் (கவிதை-சிறுகதை-நாவல்) தமிழ் மரபு காணப்படவில்லை. இது தமிழ் மரபிற்கு எதிரான இழிசனர் இலக்கியம் படைக்கின்றனர் என்றனர். கைலாசபதி போன்றோர் இழிசனர் வாழ்க்கை  மக்கள் மயப்படுத்துவதாக குற்றம் சாட்டினர். இதுவல்ல பழம்பெரும் புலவர்கள் பண்டிதர்கள், போன்ற ஆன்றோர், சான்றோர்களின் வழக்குகளை பேணி எழுதப்படும் கலைப் படைப்புத் தான் உண்மையான தமிழ் மக்களின் கலை-இலக்கியம் என வாதிட்டனர்.  இது இறுகிய மரபுடைய உயர்-இந்து வேளாளத்தின் குரலாய் ஒலித்தது.

மறு புறத்தில் கைலாசபதியை “வேளாள மார்க்சிச வாதி”  எனவும் அவர் சாதி பார்க்கின்றார், சாதி வெறியன் ஆறுமுகநாவலரை புகழ்ந்து கட்டுரை புனைகின்றார் எனவும. எஸ்.பொ. மு.பொ. போன்றவர்களின் குரல் குறுந்சாதிய வெறியின் குரலாய் ஒலித்தது. இதற்கு என்.கே. ரகுநாதனின் “நிலவினிலே பேசுவோம்”  எனும் சிறுகதை சாட்சியாகவும் அமைந்தது.  என்.கே. ரகுநாதன் பாடசாலை மாணவனாய் இருந்த காலத்தில், அவர் படித்தது சாதி வெறி கொண்ட ஓர் ஆசிரியரிடம்,  ஓர் தடவை அவர் வீட்டிற்கு சென்ற போது, அவர் ரகுநாதனை உள் வீட்டிற்குள் அழைக்காமல், வெளியில் நல்ல நிலவாய் உள்ளது. நிலவினிலே பேசுவோம் என அழைத்து வந்து கதைத்து அனுப்பி விட்டாராம்.

ரகுநாதன் இக் கதையை எழுதியது 60-ம் ஆண்டளவில் என நினைக்கின்றேன்.  அன்றிலிருந்து இன்று வரை அந்த சாதி பார்த்த “நிலவினிலே” ஆசிரியர் கைலாசபதி தான்  என வாதிடுவோரும் உள்ளனர். ரகுநாதனும் அந்த ஆசிரியர் கைலாசபதி அல்ல என்ற முடிச்சை நான்கு வருடங்களுக்கு முன் தான் தினக்குரல் பத்திரிகை பேட்டி ஒன்றின் மூலம் அவிழ்த்தார்.  40-வருடங்களாக அவரும் கைலாசபதி சாதி பார்த்தவர் தான் என உலாவவிட்டவரோ என கேட்கத் தோன்றுகிறது?. இதற்கு டொமினிக் ஜீவாவும் விதிவிலக்கல்ல.  ஜீவா, கைலாசபதி வீட்டிற்கு போய் வந்தது பல தடவை. அவருடனான அரசியலுறவு அதனிலும் கூட.  ஆனால் கைலாசபதி சாதி பார்ப்பவர் தான் என இப்பவும் முணுமுணுப்பார். இது குறுந்சாதிய நோயின் தொடர் குறைபாடுகள் தான்.

டானியலும்-ஜீவாவும் ஒன்றாயிருந்த காலங்களில் கூட்டங்களில் பேசும்போது, டானியல் முன்பாக பேசி, ஜீவா அடுத்ததாகப் பேசினால், ஜீவா இப்படித் தான் பேச்சை ஆரம்பிப்பார்.  எனக்கு முன் பேசிய தோழர் டானியல் சாதி-தீண்டாமைக் கெதிராக “வெளுவெளு” வென வெழுத்து வாங்கிவிட்டாரென.  இது டானியலுக்கு கடுப்பேத்தும். ஆனால் காத்திருப்பார். வேறொரு நிகழ்வில் டானியல் எப்படியாவது ஜீவாவை முதலாவதாக பேச வைத்து விடுவார். அடுத்துப் பேசும் போது எனக்குமுன் பேசிய ஜீவா சாதி வெறியர்களை “வெட்டுவெட்டென்று” வெட்டியெறிந்து விட்டார் என்பார். உண்மையில் இவைகள் நகைச்சுவை கொண்ட சம்பவங்கள் தான். ஆனால் இதில் இழையோடுவது குறுந்சாதியத்தின் தொழிற்பாடல்லவா?.  சாதியம் பார்ப்பது என்பது உயர்ந்ததிற்குள் மாத்திரமல்ல, டானியல் வகுத்த பஞ்சமருக்குள்ளும் உள்ளது. உயர் சாதியினரைத் சேர்க்காத (கட்டாயமாக சேர்க்கமாட்டார்கள்)  தலித் அமைப்புகளும் உண்டு. இதனால் தான் என்னவோ அடுத்த வருடம் நடைபெறவுள்ள நடைபெறவுள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை ஜீவா போன்றவர்களும் இணைந்து நடாத்துகின்றார்களோ?  எனக் கிண்டலாளக் கேட்பவர்களும் உளர்.

கைலாசபதி ஆறுமுகநாவலரின் சைவத் தமிழ் பற்றையும், அந்நிய ஆதிபத்தியம் அதை அழித்தொழிக்க முற்பட்ட போது, அதற்கெதிராகப் போராடியதையும், அதற்கூடாக செய்தவைகளையும் ஆய்வுக்குட்படுத்துகின்றார். அதே வேளை வெறி கொண்ட சைவத் தமிழ்ப் பற்றிக்கூடான–இன மத வெறியையும், வர்ணாச்சிரம முறைகளையும், சாதி-தீண்டாமைக்கான உள்கிடக்கைகளையும் வெளிக்கொணர்ந்து அம்பலப்படுத்துகின்றார். இதில் முழுமையை விட்டு, பகுதியைப் பார்ப்பவர்களுக்கு சாதி பார்ப்பதாகத் தான் தெரியும். அத்தோடு தான் எழுதிய அடியும் முடியும் நூலில்,  சாதியம் பற்றிய பார்வையில் —முருகையனது குறைபாடுகளைக் கூட விமர்சிக்கின்றார். இதை முருகையனின் “கோபுரவாசல்” நாடக விமர்சனத்திற் கூடாக முன் வைக்கின்றார்.

யாழ் பல்கலைக்கழகச் சமாச்சாரம்.

“கைலாசபதி, இந்திரபாலா போன்றவர்கள் யாழ் வளாகத்துக்குள் வந்தது அரச ஆதரவுடனான முறை தவறிய வழிகளில்”

1970-ம் ஆண்டுத் தேர்தலில் தாம் ஆட்சிக்கு வந்தால், யாழ்பாணத்தில் ஓர் பல்கலைக்கழகம் அமைப்போம். இது இடதுசாரி ஐக்கியமுன்னணியின் யாழ்ப்பாணப் பிரச்சாரம்.  இதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட, பீட்டர் கெனமன் தலைமையிலான கட்சியினரே பெரும் பிரச்சாரப்படுத்த்தினர்.  70-ல் இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தவுடன், கல்வி அமைச்சராக வந்த பதியுதீன் முகம்மதுவை விட  பீட்டர் கெனமன் தலைமையிலான கட்சி யாழ-பல்கலைக்கழகம்  அமைய பெருமுயற்சி எடுத்தது. இவர்களுடன் குமாரசூரியரும்  பல்கலைக்கழகம் அமையப் போவது உறுதியென அறிந்த தமிழரசுக்கட்சி தமிழத்தேசியம், திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவைகளில் அமையுங்கள் என ஓடர் போட்டது.

யாழ் பல்லைகழகம் அமைக்க ஒரு குழுநிறுவப்பட்டு அதில் குமாரசூரியர், பமேஸ்வராக் கல்லூரி அதிபராக இருந்த சிவபாதசுந்திரம்,  முற்போக்காளர் சங்கத்தின் பிரேம்ஜி என்போரும் இடம்பெற்றனர். இதை விடத் தனியாக ஒரு தமிழ் ஆலோசகர் சபையும் நிறுவப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு கோபாலபிள்ளை மகாதேவா, இந்திரபாலா, வித்தியானந்தன், கைலாசபதி உட்பட பல பெயர்கள் தெரிவில் இருந்தன. இதில் கோபாலபிள்ளை மகாதேவா  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர். வித்தியானந்தன் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர். கைலாசபதி கம்யூனிஸ்கட்சியின் (சீனப்பிரிவு) பகிரங்க ஆதரவாளன். இந்திரபாலா கட்சி அரசியலற்றவர்.  இத்தனைக்கும் மத்தியில் கைலாசபதி அரசியல் தத்துவார்த்த முணைபாடு கொண்ட, நேரெதிரான மொஸ்கோ சார்புக் கட்சியினரால் பல்கலைக்கழக உபவேந்தராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். வித்தியானந்தன் உபவேந்தராக வராததன் விளைவு, தமிழ்த் தேசியத்தை பெரும் ஆத்திரத்திற்கு ஆட்படுத்தியது. கைலாசபதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வித்தியானந்தனுக்கே உபவேந்தர் பதவி இல்லையா எனக் குமுறினர்? இதனால் புத்தி மத்திமமான ஆத்திரக்காரர்கள் அவரின் வீட்டிற்கு கைக்குண்டு வீசினார்கள்.

(தொடரும்)