Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்நகர் அரச–கொலைஞர்களின் கூடாரமாகியுள்ளது!

தேசியகீதத்தை பலாத்காரமாக பாடவைத்ததை விரும்பாத கல்விப்பணிப்பாளர் படுகொலை!

கருணாவிற்கு வந்த “ஞானோதயம்” கூட டக்கிளஸிற்கு வரவில்லை.

யாழ்நகர் அரச-கொலைகாரர்களின் கூடாரமாகியுள்ளது. இதை அரசும்-அரச படைகளும் வலுகர்ச்சிதமாக செய்கின்றனர். இதற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் பலியாகியவர் துணைக்  கல்விப்பணிப்பாளர்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வலய துணைக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம்  கடந்த டிசெம்பர் 26 ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை)  உரும்பிராயில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகள் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.

துணைக் கல்விப் பணிப்பாளரின் மகள் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்ற கொள்ளையர்கள் அவருடன் தவறாக நடக்க முயன்றதாகவும் கொல்லப்பட்டவர் மகளின் அருகில் வந்து அதனைத் தடுக்க முயன்ற போது அவரைச் சுட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர்.கல்விப்பணிப்பாளரை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் அவரது 13 வயது மகளின் தோடுகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளனர்.

இதேமாதிரியான நிகழ்வு கடந்த டிசெம்பர் 12 ஆம் நாள் வலிகாமம் சங்கானையில் இடம்பெற்றது.  அதன் போது வீடு புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முருகமூர்த்தி ஆலய முதன்மைக் குருவான நித்தியானந்த சர்மா மற்றும் அவரது பிள்ளைகள் படுகாயமடைந்தார்கள். அவர்களில் நித்தியானந்த சர்மா வைத்தியம் பயனளிக்காமல் நான்கு நாட்களில் இறந்துபோனார்.

இந்தப் படுகொலை யாழ்ப்பாணக் குடாநாட்டை வல்வளைப்புச் செய்துள்ள  இராணுவத் துணையுடனேயே செய்யப்பட்டது.

சுட்டுக் கொல்லப்பட்ட துணைக் கல்வி இயக்குநர் சிவலிங்கம் அதே நாளில் யாழ்ப்பாணத்தில் நடந்த பாதுகாப்பு நிகழ்வில் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி சிங்கள தேசிய கீதத்தைப் பாட வைத்ததை அவர் விரும்பவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த அரசு இராணுவத் துணைகொண்டு கொள்ளை என்ற போர்வையில் இந்தப் படுகொலையைச் செய்திருக்கிறது எனக் குற்றம்சாட்டும் துண்டுப் பிரசுரங்கள்  யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

1985 காலப்பகுதியில் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் 16 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அந்த சிப்பாய் மனநோயாளி என்றொரு காரணம். சங்கானையில் இந்து மதகுரு கொல்லப்பட்டபோது கஞ்சாவிற்காக இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கி கொடுத்ததாக இதற்கொரு கண்டுபிடிப்பு. இப்படி தொடர் கொலைகளுக்கு தொடர்காரணங்கள். அதற்கு ஆமாம் போடும் பேரினவாத “டக்கிளஸ் டப்பாங் கூத்துக்காரர்”கள்  இருக்கும்வரை யாழ்-மணணில் தொடர் இரத்தக் களரி தான்.

யாழ்ப்பாணத்தில் 50,000 இராணுவத்தினரும் 5,000 பொலிஸாரும் மகிந்த குடும்பத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கணக்கின் படி பத்துப் பேருக்கு ஒரு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் யாழ்ப்பாணத்தில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம், பாலியல் வன்முறை போன்ற அராஜகங்கள் இவர்களால் இடம் பெறுகிறது.

தொடரும் தொடர் கொலைகள்

கடந்த நவம்பர் 29 ஆம் நாள் வீட்டிலிருந்து வெளியே சென்ற வேளை காணாமல் போன 19 அகவையுடைய அரியநாயகம் துளசி என்ற பெண் ஒருவரின் சடலம் அருகிலுள்ள கிணறொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்படு முன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து தந்திரமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். மீசாலை புத்தூர் சந்தியைச் சேர்ந்த மகேந்திரசெல்வம் திருவருட்செல்வன் (செல்வன்) (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

படுகொலை செய்யப்பட்ட செல்வன் நீண்டகாலமாக வன்னிப்பகுதியிலும் வசித்து வந்தவர். ஒரு வருடத்துக்கு முன்னரே நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேறியவர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக நடந்து வரும் சம்பவங்கள் அரச பயங்கரவாதத்தின் கொலைக் களத்தை மேலும் உண்மையாக்குமாற் போன்று நேற்றுக் காலை வெள்ளை வானில் வந்த குழுவொன்றினால் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் உரும்பிராய் மூன்று கோவிலடிச் சந்தியில் இச்சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

மிதிவண்டியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரே அவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.  வெள்ளை வானில் வந்தவர்கள் சைக்கிளில் இருந்து அவ்வாலிபரை தள்ளி விழுத்தி விட்டு, தரதரவென வானுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு கடத்திச் சென்றுள்ளனர்.

பிரஸ்தாப இளைஞரின் பாதணி மற்றும் சைக்கிள் என்பன அவ்விடத்தில்  வீசியெறியப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

“வடக்கில் கடந்த சில தினங்களில்  இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இது மீண்டும் பயங்கர வாதம் தலை தூக்குவதற்கான ஆரம்பமாகவிருக்கலாம்.” என்கின்றார் கருணா -அம்மான்.  இந்த “ஜீவகாருண்யவாதிக்கு” ஏற்பட்ட ‘கருணை அரசியல் ஞானோதயம்’ கூட, ‘மக்கள் காப்பாளன்: டக்கிளஸ் தோழருக்கு’ கூட வரவில்லையே. சரி உதுகளை விடுவம் மகிந்தாவை பாருங்கள்.

“வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்லும் வரை மனிதாபிமான நடவடிக் கைகள் தொடருமாம்” என எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொல்கின்றார் .

“வடக்கு கிழக்கு மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளும் மனிதாபிமான நடவடிக்கைகளே  பயங்கரவாதத்தின் துயர நினைவுகள் நீங்கி பிரிவினைவாத எண்ணம் இல்லாதொழியும் வரை மனிதாபிமான நடவடிக்கைகள்தான் தொடரும்”


எப்பிடியருக்கு இவரின் வென்றெடுப்பு. இவர் தமிழ் மக்களுக்கு செய்வதெல்லாம் (கொலை-கொள்ளைகள்) “மனிதாபிமான நடவடிக்கைகளே” அதைத் தவிர வேறொன்றும் இல்லை. கேட்கிறவன் கேணையனாயிருந்தால்……? இல்லவேயில்லை. தமிழ்மக்கள் கேணையர்களுமல்ல. குட்ட குட்டக் குனிபவர்களுமல்ல. அவர்கள் இப்பயங்கரவாத காலத்தை ஐக்கியப்படுபவர்களோடு ஐக்கியப்பட்டு வெல்வார்கள்!