PJ_2008_03 .jpg"ரெட்டை டம்ளர் முறைங்கிறது, காலங்காலமாக இருக்குறதுதான். அதையெல்லாம் மாத்த முடியாது. சம்பிரதாயங்களை மாத்த விடமாட்டோம்''

 

— இப்படியொரு சாதி ஆதிக்கத் திமிர் பிடித்த பேச்சு, சமூக நீதியின் தாயகமாகச் சித்தரிக்கப்படும் தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள சாலரப்பட்டி கிராமத்தில், கூலி விவசாயிகளாக எண்பதுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இக்கிராமத்தில் படையாச்சி கவுண்டர்கள் என்றழைக்கப்படும் வன்னிய ஆதிக்க சாதியினர் நீண்டகாலமாக இத்தாழ்த்தப்பட்டோர் மீது தீண்டாமையைக் கடைபிடித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், ""ஆதித் தமிழர் பேரவை'' எனும் அமைப்பின் கிளையைத் தொடங்கி, சாதிவெறியர்களால் திணிக்கப்பட்ட இரட்டைக் குவளை முறை, தேநீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றவர்களுடன் சரிசமமாக உட்கார அனுமதி மறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுப்பு முதலான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். இம்மனுக்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து விட்டு வழக்கம்போலவே ஆதிக்க சாதிவெறியர்களுடன் அதிகார வர்க்கம் கூடிக் குலாவியது. குமுறிக் கொண்டிருந்த ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த இளைஞர்கள், மக்களைத் திரட்டி கடந்த ஜனவரி 7ஆம் நாளன்று உடுமலை நகரில் தொடரும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

 

அதைத் தொடர்ந்து வட்டாட்சியர் சந்திரபோஸ் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நாடகமாடினார். இரட்டைக் குவளை முறைக்குப் பதிலாகப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் ""யூஸ் அண்டு த்ரோ'' பிளாஸ்டிக் டம்ளர்களைப் பயன்படுத்துமாறும், இதர விவகாரங்களைப் பின்னர் பேசித் தீர்க்கலாம் என்றும் சாதிவெறியர்களுக்கு இசைவாகக் கட்டப் பஞ்சாயத்து செய்தார். இத்தனை காலமும் இரட்டைக் குவளை முறையைத் திணித்து வந்த சாதிவெறியர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்வதைத் திட்டமிட்டே தடுத்து விட்டார்.

 

வட்டாட்சியரின் "பஞ்சாயத்துக்கு'க் கட்டுப்படுவதாகப் பாசாங்கு செய்து, அவரை வழியனுப்பி வைத்த சாதிவெறியர்கள், மறுநிமிடமே ஊரிலுள்ள அனைத்து டீக்கடைகளையும் நிரந்தரமாக மூடிவிடுமாறு உத்தரவிட்டனர். தாழ்த்தப்பட்டோரை சாலரப்பட்டியிலும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் எவரும் வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து, சமூகப் புறக்கணிப்பு செய்தனர். இதனால் தாழ்த்தப்பட்டோர் வேலையின்றிக் குடும்பத்தோடு பட்டினி கிடக்க வேண்டிய கொடுமைக்குத் தள்ளப்பட்டனர். தாழ்த்தப்பட்டோரை நாக்கூசும் வசவு வார்த்தைகளால் சாதிவெறியர்கள் இழிவுபடுத்திய போதிலும், ஜனவரி 7ஆம் தேதியிலிருந்து சாலரப்பட்டியில் குவிக்கப்பட்டிருந்த போலீசுப்படை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

இச்சாதிய தீண்டாமைக் கொடுமைகளை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று குமுறிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதித்தமிழர் பேரவையின் தலைமையில் திரண்டு 18.2.08 அன்று உடுமலை பேருந்து நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே ஓடோடி வந்த வட்டாட்சியர், அன்று மாலையே சமரசப் பேச்சு வார்த்தை நடத்துவதாக அறிவித்து, போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினார். அவரது வாக்குறுதியை ஏற்றுத் தாழ்த்தப்பட்டோர் சாலரப்பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வரும் வழியிலே அவர்களை மறித்து வன்னிய சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டனர்.

 

தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டிப் போராடிய ஆதித்தமிழர் பேரவையின் முன்னணியாளர்களை அரிவாளால் வெட்டியும், பலரை உருட்டுக் கட்டையால் அடித்து மண்டையை உடைத்தும் பெண்கள் சிறுவர்களைக் கூடக் கல்லெறிந்து தாக்கிப் படுகாயப்படுத்தியும், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசிடமிருந்தே தடிகளைப் பிடுங்கித் தாழ்த்தப்பட்டோரை அடித்து நொறுக்கியும் அருந்ததியர் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைத்துக் கொண்டு வன்னிய சாதிவெறிக் கும்பல் இத்தாக்குதலை நடத்தியது.

 

இச்சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் புகுந்து உடமைகளைச் சூறையாடி, கதவு சன்னல்களைப் பெயர்த்தெடுத்து, இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்து அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி வெறியாட்டம் போட்டது. சாலரப்பட்டியிலுள்ள பள்ளிக்குள் புகுந்து அருந்ததியர் குழந்தைகளையும் தாக்க இக்கும்பல் கிளம்பிவிட்டதை அறிந்து, பள்ளி ஆசிரியர்கள் இக்குழந்தைகளை பின்புற வழியாகத் தப்பியோட வைத்துள்ளனர்.

 

வீடு வாசலையும் அற்ப உடைமைகளையும் இழந்து, சொந்த மண்ணிலே அகதிகளாகி நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த நிவாரண உதவியையும் அரசு செய்யவில்லை. கலவரத்தில் ஈடுபட்டதாக வன்னிய சாதிவெறியர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேசமயம், ஆதித்தமிழர் பேரவையின் முன்னணியாளர்கள் பலர் மீதும் பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டுள்ளனர். இச்சாதிவெறி வன்கொடுமைத் தாக்குதலுக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் அணிதிரண்டு அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க 144வது பிரிவின் கீழ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. "சமூக நீதி' பேசும் "தமிழ்க் குடிதாங்கி' "அய்யா' மருத்துவர் இராமதாசு வன்கொடுமைத் தாக்குதல் நடத்திய வன்னிய சாதிவெறியர்களுக்கு எதிராக வாய்திறக்க மறுக்கிறார்.

 

சட்டம்நீதி, போலீசு, அதிகார வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள் அனைத்துமே சாதிவெறியர்களுடன் கைகோர்த்து நிற்கும்போது, தாழ்த்தப்பட்டோர் தமது சமூக உரிமைகளுக்காக அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து ஆதிக்க சாதிவெறிக் கும்பலைத் தனிமைப்படுத்தி அக்கும்பலின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து சிவில் உரிமைகளையும் ரத்து செய்யுமாறு, சட்டவரம்புகளை மீறி தெருப் போராட்டங்களில் இறங்குவதைத் தவிர, இனி வேறென்ன வழி இருக்கிறது?

 

பு.ஜ. செய்தியாளர், கோவை