செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 29/03/2011
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தியது – மகிந்த மசியவில்லை!
ஆக்கிரமிப்பாளர்கள்–அடக்கு முறையாளர்கள் மக்கள் நலன் பற்றி சிந்திப்பார்களா? தங்கள் நலனே இவர்களின் மக்கள் நலன்!
“விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் போர் நிறுத்தமொன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததாக விக்கிலீக்ஸ் செய்திகளை வெளியிட்டுள்ளது.”
“அன்றைய காலகட்டத்தில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தில் பிரதான அதிகாரியாக கடமையாற்றிய பீட்டர் பர்லே தனது தகவல் குறிப்பின் மூலம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு மேற்குறித்த விடயத்தை அறிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் உக்கிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்வைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்கள்.”
அதன் போதே அவர்கள் இருவருமாக இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு இணங்க உடனடிப் போர் நிறுத்தமொன்றுக்கு இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின் அவர்கள் அமெரிக்கத் தூதரைச் சந்தித்து அது குறித்து விளக்கியுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அடுத்து வரும் இரண்டொரு நாட்களுக்குள் வெளியிடுவார் என்று அவர்கள் உறுதியான எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர். ஆயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதனை மேற்கொள்ளாது தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் தலைமையை குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்க வைத்து யுத்தத்தை முன் கொண்டு செல்வதிலேயே ஆர்வம் காட்டினார். அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டதாகவும் விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்ததாகவும், அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்துள்ளனர். அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறித்து அரசாங்கமோ, பாதுகாப்புப் படைகளோ கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை . ஆயினும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு யுத்த களத்தின் உண்மையான நிலவரம் பற்றி சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை என்பதுடன், அவர்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கிக் கொள்ளவில்லை என்றும் விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
எமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை சிக்கலாக்கியதில், இன-மத-மொழி-பிரதேச ரீதியிலான முரண்பாடுகளை கூர்மடைய வைத்ததில், இந்திய மேலாதிக்கத்தின் செயற்பாடு குறைந்ததல்ல. அன்றைய தேச-கால வாத்தமானத்தில் போர் நிறுத்தம் ஒன்று ஏற்பட்டு, பிரபாகர அரசியல் தொடர்ந்தால்; அது இந்தியாவிற்கு மேலாதிக்க இலாபம் தானே?. பிரபாகரன் பிடிபட்டு அதை வைத்து சிங்கள மக்கள் மத்தியில அரசியல் வியாபாரமாக்கியிருந்தால்; அது மகிந்தாவிற்கு பேரினவாத இலாபம்தானே?. இதற்கு என்ன விலை கொடுக்க மேலாதிக்கமும் பேரினவாதமும் தயங்காதே!. மகிந்தாவிற்கு தேவை தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்காமல் தன் குடும்ப அரசியலை தொடராய்த் தொடர்வது, இதில் இந்தியாவிற்கு தேவை இலங்கை இன்னொரு அந்நியத்திற்குள் அமுக்காமல், அதை தனக்குள் முடக்குவதே. இது முரண்பாடுகளின் சர்வவியாபகத்தன்மை. இவ்வுண்மை மக்களிடம், (பிரதான எதிரியை நிரல்படுத்தி, எதிரி-நண்பர்களை வகைப்படுத்தி) பற்றிப் படர்ந்தால், எம்நாடு எந்த அந்நியத்திற்குள்ளும் முடங்காது. தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு கண்டுகொள்ளும்.
முன்னாள் போராளிகளும் தீண்டத்தகாதவர்களோ?
“வடபகுதியில் இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பலர் தாம் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதாக கூறியிருக்கிறார்கள். தேசிய மட்டத்திலான நல்லிணக்க நடவடிக்கைகளில் அவர்களை உட்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பலரும் பேசி வருகின்ற சூழ்நிலையில் தொழில் பாதுகாப்பு, திருமணம் வீட்டு வசதி போன்ற பல வகைகளிலும் தாம் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதாக அவர்களில் பலர் கூறியுள்ளனர். பல முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்ய தமது குழந்தைகளை அனுமதிக்க பல பெற்றோர் தயக்கம் காட்டுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அதே போன்று தமது சொந்த ஊரிலேயே தமக்கு இருக்க வாடகைக்குக் கூட இடம் தர மறுக்கப்படுவதாக, ஒரு முன்னாள் பெண் போராளி கூறுகிறார். இவ்வாறு பல வகைகளிலும் புறக்கணிக்கப்படும் முன்னாள் போராளிகள் ஒரு உத்தரிப்பு நிலையில் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள். விடுதலைப் புலிகளின் ஆட்சியின் போது கலப்புத்திருமணம் செய்த போராளி தம்பதிகளில், ஆண் காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்தால் சாதியை காரணம் காட்டி அவரது மனைவி புறக்கணிக்கப்படுவதான நிலைமையும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது.”
“ஊக்கமும் உள்வலியும்
உண்மையில் பற்றுமிலா
மக்களுக்கோர் கணமும் — கிளியே
வாழத் தகுதியுண்டோ?”
என்ற பாரதியின் இக்கேள்வியை, இன்றைய எம் தமிழ் சமுகம் நோக்கி கேட்க வேண்டியுள்ளது. முன்னாள் போராளிகளை எம் சமுகம் தீண்டத்தகாதவர்கள் போல் புறக்கணிப்பது ஏன்?. இவர்கள் தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காக போராடித்–தோல்வியடைந்ததற்காகவா?. வட்டுக்கோட்டையில் இருந்து சமுக விஞ்ஞானப் புரிதலின்றி, புறப்பட்டவர்களின் “இனத்தை இனம் ஆள்வதால்” எம்மினப் பிரச்சினை தீரும் என்றவர்களின் கோட்பாடு முள்ளியவாய்க்கால் சென்றும் முடிவடையவில்லை. புலம்பெயர்விலும் புரிதலின்றி தொடர்கின்றது. இதை இப்பவும் சொல்லவும், கேட்கவும், நம்பவும் ஓர் குழாம் இருக்கின்றது. பட்டறிவிலிருந்தாவது பாடம் படிக்காத இவ்வேளையில், பட்டறிவற்ற, தமிழ் தேசியப் போராட்டம் பற்றிய புரிதலற்ற 30-ஆண்டு காலத்திற்கு முந்தைய முன்னைய போராளிகளின் சிந்தனை உருவாக்கம் எதுவாயிருந்திருக்கும்? இதுவோர் சமுதாயம் சார் அணுகல் பிரச்சினையே அன்றி அவர்களின் தனிப்பட்ட நடைமுறை சார் பிரச்சினைகள் அல்ல. “ஓஹோ என்றோடிய காலத்தில்” ஏற்றிப் போற்றல், எதுவுமற்ற வெறுமையில் இவர்களை வெறுத்தொதுக்குதல் என்பது, இறுகிய பழமையின் பாமரத்தனமே!
எமது இனத்தின் முன்னாள் போராளிகள் தம் இளமை, அதனூடான இன்பவாழ்வு, மட்டுமல்ல, தம் எதிர்காலம் பற்றியே சிந்திக்காமல், களம் நோக்கி புறப்பட்டவர்கள். தாம் நம்பிய இலட்சியத்திற்காக எப்போதும் எமக்கு மரணமே, என்பதை தம் ஆத்மீகத்திலும், ஆயுதங்களை தம் கையிலும் ஏந்திய அவர்களின் தியாக மனப்பான்மையை நாம் மதிக்கவேண்டும். ஓர் கவிஞன் சொன்னதுபோல்
“இல்லாத ஊருக்கு
நாளை புறப்பட்டு
நேற்றிரவு போய்ச்சேர
இந்த இரவின்
இருளால் வழிகாட்டு” என போக முற்பட்டது எம் இளைஞர்களின் தவறல்ல. எம் தமிழ் சமுதாயத்தின் தவறும் கூட, இதை உணரத்தவறின் நாமும் எம் இளம் சந்ததியிடம் இருந்து அந்நியப்படுவோம். புறக்கணிக்கப்படுவோம்!
தமிழ்மக்கள் சுயமிழந்து வாழாமல் இருப்பதற்கு டக்கிளஸே காரணம் -கம்பவாரிதி
தமிழ்மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவராக இருப்பதுடன் சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே.
கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழகக் கேட்போர் நுடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் நேற்றுக் கலந்துரையாடிய போதே கம்பவாரிதி ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான சுயகௌரவம் பண்பாடு வாழ்வியல் உள்ளிட்ட சகல உரிமைகளையும் அரசுடன் பேசிப் பெற்றுக் கொடுக்கும் முக்கிய பொறுப்பும் தமிழ் மக்கள் சுயமிழந்து வாழாமல் இருப்பதற்கு மட்டுமல்லாமல், கௌரவமான வாழ்வை வாழக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவும் 2004 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை ஜனநாயக நீரோட்டத்திற்கு கொண்டு வந்தவர் அமைச்சர் என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார். கூட்ட நிறைவில் கொழும்பில் அமையப்பெறவுள்ள ஐஸ்வர்யலக்ஸ்மி கோயில் புதிய கட்டடத் திருப்பணிக்காக ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான காசோலையை கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் கையளித்தார்.
ஓர் ஐந்து லட்சத்திற்காக டக்கிளஸை “புட்பக விமானத்தில்” பறக்கவிட்டுள்ளார் கம்பவாரிதி. கம்பன் கம்பவாரிதியிடம் பிச்சை வாங்க வேண்டும். அந்தளவிற்கு அதீத “டக்கிளஸ் புனைவு”. ஊமைக்கு தேன் மொழியாள் என பெயர் வைத்தது போலுள்ளது. சங்ககாலத்தில் புலவர்கள் அரசனை–மந்திரி–பிரதானிகளை புகழ்ந்து பாடி பரிசில்கள் பெற்றதுண்டு. இதை கம்பவாருதி கேட்போர் கூடத்தில் கேட்டு(பாடி) பெற்றுள்ளார். தமிழ் மக்கள் சுயமிழந்து வாழவில்லை. ஆனால் டக்கிளஸ் தான் சுயமிழந்து “மகிந்தமாயணம்” பாடுகின்றார். இது “காசோலைக்கு” பாடும் கம்பவாரிதிக்கு எப்படி புரியும்?