இலவசங்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றது!
“நான் அடித்தால் தாங்கமாட்டாய் நாலுமாசம் தூங்கமாட்டாய்”
“தண்ணிக்கு மேல் கப்பல் ஓட்டுபவனே காப்டன்!. தண்ணிக்குள் முழ்குபவன் காப்டன் அல்ல.”
“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல’
“அக்கால காங்கிரஸ் தலைவர்கள் தூய மனமும், தூய சிந்தனையுடன் இருந்தனர். ஆனால் இன்றைய தலைவர்கள் கட்டிய மனைவியையே ஏமாற்றும் நிலையில் உள்ளனர்”
“அரசியல் எதிரிகளை பழிவாங்கியது தான் ஜெயலலிதாவின் சாதனை”
“பகுத்தறிவாளர்களின்” பாசறையாம் திராவிட முன்னேற்றக் கழகங்கள். இவற்றிற்கு கால்-அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இக்கழகங்கள் பகுத்தறிவுக்கு ஊடாக எவ்வளவு காத-தூர-பாகை வளர்ந்து முன்னேறியுள்ளன என்பதை மேற்கண்ட “மேற்கோள்கள்” விதந்துரைக்கின்றன. கடந்த காலங்களில் கருணாநிதி கூட்டங்களில் பேசினால், தமிழக மக்கள் விழித்திருந்து கேட்பார்கள். இப்போ வடிவேலுவும், சிங்கமுத்துவும் பேச கருணாநிதியும் ஜெயலலிதாவும் விழித்திருந்து கேட்கின்றார்கள். கை தட்டி ரசிக்கின்றார்கள். இந்தளவிற்கு அரசியல் வறுமை.
தி.மு.கவுக்காக பாடுபட்ட பி.டி.ஆர்., தென்னரசு, தமிழ்குடிமகன் உள்ளிட்ட பலர் எம்மிடையே இல்லை. ஆனால் அவர்கள் தந்து விட்டு சென்ற உணர்வு என் உருவத்திலும், என்மகன் அஞசா நெஞ்சன்அழகிரி, பொன் முத்துராமலிங்கம் உருவிலும் உள்ளார் என்கின்றார் கருணாநிதி.
தி.மு.க.விற்காக பாடுபட்ட இவர்கள் இவரிடம் கொடுத்து விட்டுசென்ற உணர்வுகள்-எண்ணங்கள் தான் என்ன?. கலைஞரே! மூன்றுக்கு மேற்பட்ட தலைமுறைக்கு சொத்துக்கள் சேருங்கள். அழகிரி என்ற “ரவுடி”யை அண்ணாவின் தம்பியாக காட்டு என்றா சொல்லி சென்றார்கள்?.
உலகில் ஊழலில் இந்தியா 4-ம் இடமென்றால், கருணாநிதி இதில் முதலிடம்! உலகில் குடும்ப ஆட்சி இல்லையென்றில்லை. ஆனால் கருணாநிதியின் குடும்பாட்சி போன்றதொன்று உலகில் இல்லை. அதற்கோர் எடுத்துக் காட்டு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. இவ்வழக்கில் அமைச்சர் ராஜா மற்றும் சிலர் மீது 80 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக சி.பி.ஐ. சொல்கின்றது. ஆனால் அது ஊழல் இல்லையென்கின்றார் கருணாநிதி.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல -முதல்வர் கருணாநிதி
இது ஊழலே அல்ல. இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் “டிவி’ என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில் என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டுத் தான் கூறுகிறேன். கலைஞர் “டிவி’ கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அது பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கை தந்துள்ளார். அது எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. ஒரு கடனை அடைக்க ஒருவரிடம் கடன் பெற்றனர். பிறகு பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டனர். அதற்கு வட்டி அதற்காக வருமான வரித் துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, அதற்கு வருமான வரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு, அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.
எந்தச் சினிமாப் பாணயிலோ தெரியவில்லை, தயாளு அம்மாள் தனது அன்பு மனைவி என்றும் ,கனிமொழி தனது அன்பு மகள் என்பதையும் ஒத்துக் கொள்கிறார். தனது சொத்துக் கணக்கில் மகளின் சொத்துகளையும், துணைவியின் சொத்துகளையும் பட்டியலிட்டுச் சமர்ப்பிக்கிறார். அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகத்தைக் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இயங்க அனுமதிக்கிறார். அந்தத் தொலைக்காட்சிக்குத் தனது பெயரைச் சூட்டி, “மானாட மயிலா” பார்த்து மகிழ்கின்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்னின்ன என்பது வரை தனது ஆலோசனைப் பங்களிப்பையும் தந்து உதவுகிறார். ஆனால் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களாகத் தனது மனைவியும் மகளும் இருப்பதைத் தவிரத் தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்று அண்ணாமேல் சத்தியமும் செய்கிறார். இது என்ன “நவீன பராசக்திக்கான” திரைக்கதை வசனமோ?
தற்போது தமிழகத்தில்அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும் தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதோ? என தெரியவில்லையென இன்னொரு புலுடா விடுகின்றார். இதை வடிவேலு அல்லது அழகிரி கூடப் பேசியிருந்தால பரவாயில்லை. பேசுவது பல முறை முதல்வராக இருந்தவர். நிர்வாகம் தெரிந்தவர். அரசியல் சட்டம் தெரிந்தவர். ஒரு மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துவிடும் என்பதும் தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்பது அதிகாரம் இல்லாத வெறும் காபந்து அரசு தான் என்பதும்கூட ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் போனது சித்தப்பிரமையின் சிறப்பியல் தான். கலைஞரின் தற்போதைய பிரதான எதிரி எதிர்க்கட்சிகளை விட தேர்தல் ஆணையமே.
கடந்த நான்கு நாட்களில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக காவல்துறை, அன்புலன்ஸ், தனியார் பஸ்களில் பல கோடிக்கணக்கில் பணக் கடத்தல்கள் நடைபெற்று பிடிபட்டுள்ளது. இதையெல்லாம் ஆணையம் தட்டிக் கேட்டால் நெருக்கடி நிலைமையென முதல்வர் எரிச்சலடைகிறார். வாக்குகள் விலை பேசப்படாமல், வாக்காளர்கள் இலவசங்களால் ஏமாற்றப்படாமல், முறையாகத் தேர்தல் நடத்தப்படுவதில் அக்கறை காட்ட வேண்டிய முதல்வர், தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படுவதை நெருக்கடி நிலைமை என்கின்றார். ஆனால் அதேவேளை தேர்தல் ஆணையம் சரியாகவே செயற்படுகின்றது என்கின்றார் தமிழக காங்கிரஸின் தலைவர் தங்கபாலு. இத்தனைக்கும் இருவரும் கூட்டாளிகள், கூட்டணிப் பங்காளர்கள். சரி இந்தக் கோமாளிக்கூத்தை விடுவோம்.
அடுத்தது தமிழகத்தில் பொற்கால ஆட்சியாம்.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தருவோம்!. இதைச் சொல்பவர் “செல்வி” என்கின்ற ஜெயலலிதா அவர்கள். இவவின் இலவசங்கள் கருணாநிதியினுடையதை விட மிக வலுவாகவே விஞ்சி நிற்கின்றது. ஆடு-மாடு, கோழி முதற்கொண்டு, நடப்பன-பறப்பன-ஊர்வன-நீந்துவன எல்லாமே இவரது இலவசங்களாகியுள்ளன. காரணம் மக்களைக் காக்கும் “கருணைத் தாயல்லவோ”?
கருணாநிதியின் ஆட்சியால் ஒரு லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறதென்கின்றார் ஜெயலலிதா . இவர் கருணாநிதியை விட இன்னும் இன்னோரன்ன இலவசங்கள் கொடுக்கவுள்ளார். இக் கொடுப்பனவுகளுடன் கூடிய இவவின் அடுத்த ஐந்தாண்டுகளின் “பொற்கால ஆட்சி” எப்படியிருக்கும்?. இந்த ஓரு லட்சம் கோடி கடன் எவ்வளவாக மாறும். இது “செல்விக்கும் காப்டனுக்கும்” விளங்காது சரி போகட்டும் விடுவம். பொருளாதாரம் பற்றித் தெரிந்த இந்த இடதுசாரிகளுக்குமா இது விளங்காது. இப் போலித் “திரிபுகள்” தங்கள் வெற்றியை விட செல்வியின் வெற்றியில் தான் அதிக அக்கறை கொள்கின்றார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும்:
“தமிழ் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு ஊழல் காரணமாக மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதன் காரணமாக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். இதனாலேயே இத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் நாம் உள்ளோம். இப்படிச் சொல்பவர் வேறு யாருமல்ல. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ்கரத் .
மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றார்கள். இது முற்றிலும் உண்மையே. சாதாரண மக்களின் இவ் அபிலாசையை கணக்கிலெடுத்து, 3-வது அணியை உருவாக்கி அதை ஓர் வல்லமை சார் மக்கள் இயக்கமாக மாற்ற முடியும். இதை சட்டசபையிலும் பிரதிபலிக்க முடியும். இதைச் செய்ய வக்கற்ற இப் “பண்ணாடை இடதுசாரிகள்” ஜெயலலிதாவின் காலில் வீழ்ந்து சாஸ்டாங்க நமஸ்கார அரசியல் செய்கின்றார்கள். நக்கிற “டோக்கிற்கு” செக்கென்ன சிவலிங்கமென்பார்கள். அதற்கு வலுச் சேர்ப்பவர்கள் போல், இம் மக்கள் விரோதிகள் யாரென்றாலும் பரவாயில்லையென அவர்களுடன் கூட்டு வைப்பார்கள். ஏனெனில் இவர்களின் மக்கள் விரோத அரசியல சித்தாந்தப் பரிமாணம் அப்பேற்பட்டது. இடதுசாரிகளே கோமாளிகளாகி விட்ட தமிழக அரசியலில், நடிகர்கள் கோமாளிகளைக் கொண்ட கழகங்களின் அரசியலும், தேர்தலும் சினிமாவாகத் தானே இருக்கும்
-அகிலன்
08/04/2011