Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சில சினிமாப் படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டவுடன், ஓரிரு வாரங்கள் அமளி—துமளியாகத் தான் ஓடும். இது போன்று ஜெயலலிதாவின் “பொருளாதாரத்தடை”—“கச்சதீவை மீட்பேன்” அரசியல் சினிமா படங்கள் தமிழக சட்டசபையில் விசிலடிப்புடன் அமளி—துமளியாகத்தான் ஓடுகிறது.

“யாருக்கும் பணியாத இலங்கை அரசை பணியவைக்க பொருளாதாரத் தடை தான் ஓரே வழி!. இதை இந்தியா உலக நாடுகளுக்கு வலியுறுத்தி சொல்லி இத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும்.” செல்வி தற்போதைய 2-வது பான்கிமூன். இவ சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசிற்கு சொல்ல, மத்திய அரசு உடனே உலகிற்கு உத்தரவிட, மகிந்தா மசிந்திடுவார் நசிந்திடுவார் என விசிலடித்து ஆரவாரம் செய்கின்றார்கள் தமிழ்த் தேசியவாதிகளும், தமிழ் உணர்வாளர்களும்.

நெடுமாறன்-வை.கோ.-சீமான் போன்றதுகள் ஜெயலிலதா ரசிகர்கள் ஆட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென கொண்டாட, தமிழ்த் தேசியத்தின் நாடு கடந்த—கடக்காத சிலதுகள் அது சரி தான் என ஆமாப்போடுதுகள். விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன் இச்சட்டசபைத் தீர்மானத்தை தீர்மானமாக இல்லாமல் தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு ஊடாக சாத்தியப்படக்கூடியதாக நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்கின்றார். அவர் மறைமுகமாகக் கேட்பது உங்களால் இது முடியுமாவென? ரசிகர்களையும் திருமாவளவனையும் விடுவம். இச் சினிமா ஓட்டத்திற்குள் உள்ள அரசியல் யதார்த்தம் தான் என்ன?

தேர்தலில் வென்றுள்ள ஜெயலலிதாவிற்கு மத்திய அரவணைப்புத் தேவை. இப்படியொரு “கிண்டக்க முண்டகத்திற் கூடாக” நாடி பிடித்துப் பார்த்தார். அதற்கு கைமேல் பலனும் கிடைத்து விட்டது. இலங்கைக்கு போக முன்னரே சிவசங்கர் மேனன் செல்விக்கு நேரில் வந்து தரிசனம் கொடுத்தார். “உங்களின் ஈழத் தமிழ் மக்கள் பக்தியை, இந்திய தேச பக்தியை மெச்சுகிறேன்” தங்களுக்கென்ன வரம் வேண்டுமென கேட்க, என் சட்டசபைத் தீர்மானங்கள் நிறைவேறிட வேண்டும். தமிழ் மக்கள் சமவுரிமை பெற்று வாழ வேண்டும் என்றார். ஐய்யயோ இவ்வளவு தானா? அதற்குத் தானே ஓர் குழுவாகப் பறந்து போய் பேசப் போகின்றோம். நீங்கள் கேட்டதத்தனையும் கேட்ட படியாகும்!. முதலில் அடுத்த வாரம் டில்லிக்கு தேநீர் விருந்திற்கு வாருங்கள்!. சோனியாவோடு கதையுங்கள். எல்லாம் உங்கள் மனம்போலாகும், என சொல்லி விட்டு சென்றுள்ளார். இதற்கு மேல் ஜெயலலிதாவிற்கு வேறென்ன வேண்டும்.

பொருளாதாரத் தடையென்பது இவவின் சட்டசபைத் தீர்மானம் போன்றதாகுமா? ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வல்லமை நாடாக, வல்லமையற்று உலக நாடுகளிடம் மன்றாட்டம் போடும் இந்தியாவிற்கு, இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை போடுங்கள் எனக் கேட்க வக்குண்டா? இலங்கை விவகாரத்தில் தமிழினப் படுகொலையில் இந்தியா என்ன செய்தது, என்ன செய்கின்றது என இவ்வுலகிற்கு புரியாதா?

சரி இந்தியாவை விடுவம் இவ் விவகாரத்தில் ஜெயலலிதாதான் கொள்கை-கோட்பாடு தான் என்ன? கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக நடைபெற்ற போரில் புலிகளின் அரசியலுக்கும், தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கும் வித்தியாசம் புரியாமல், மொத்த்தில் இது பயங்கரவாதப் போர் என புறந்தள்ளி தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க அதை மௌனமாகப் பார்த்து ரசித்து தனக்களவாக சினிமா அரசியல் செய்தவர் தான் இச் செல்வி. நான் “ஈழம்” என்ற சொல்லைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை, வெறுக்கிறேன், அது புலிகளின் தமிழ் ஈழச் சொற்றொடர்! எனவே ஈழம் என்பதை இலங்கை என அழைப்பதே சாலச் சிறந்தது என சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவாக அகராதி விளக்கம் கொடுத்த வரும் இந் நடிகை தான்.

இதெல்லலாம் புரிந்தும்,  (புரியாததுகள்போல) ஜெயலலிதா திருந்தி விட்டாரென, ராசா வீட்டு பூனைக் குட்டியின் கதை போல் கதை சொல்லி, அம்மணியின் சினிமா நடிப்பரசியலை பார்த்து விசிலடிக்குதுகள் “புதுமையான அரசியல் விசிலடிச்சான் குஞ்சுகள்”.  இப்போ எடுத்ததற்கெல்லாம் சகலதிற்கும் கருணாநிதிதான் காரணமென (முள்ளியவாய்க்காலின் படுகொலைகளுக்கு கச்சதீவின் ஒப்படைப்பிற்கு) ஓர் கண்டு பிடிப்பு. இதை முதல்வர் சட்டசபையில் சொல்ல, “காப்டன்” கூட  தஞசாவூர்ப் பொம்மைகள் ஆட்டம் தலையாட்டுகிறார். இந் நிகழ்வுகள் நிகழ்ந்தேறிய காலையில் செல்வி முதலமைச்சராக இருந்தாலும் கருணாநிதி செய்தததை தான் இவவும் செய்திருப்பார். சிலவேளை  “போராட்ட நடிப்பரசியல்” வித்தியாசமாக் இருந்திருக்கும்.

இந்திய மேலாதிக்க விஸ்தரிப்புவாதம் தன் இரும்புக்கரம் கொண்டு காஸ்மீர்-அசாம் மாநிலங்களை தனதாக்கி அடக்குவதும், தனக்கிசைவற்ற ஏனைய மாநிலங்களின் சுயநிர்ணயத்தை பறித்ததும், பறிப்பதும் கச்சதீவை கழட்டிவிட்டதற்குமான காரண-காரியங்களின் அரசியல் சூட்சுமத்தை இந்த “புதுமைப் பித்தர்கள்” அறியாதவர்கள் அல்ல. இருந்தும் தொடர் கோமாளித்தனக் கோரிக்கைகள் தான்.

இலங்கைப் பொருட்களை இந்தியாவில் நிராகரிப்பது.  இலங்கை கிரிக்கட் அணியை—விமானங்களை  இந்தியாவில் வரவிடாமல் தடுப்பது போன்றவைகள். “யாருக்கும் பணியாதவர்” இதைக் காதில் போட்டு, இலங்கையிலுள்ள இந்திய முதலீடுகளை திருப்பியெடுங்கள். தமிழ் சினிமாவை தடுத்து நிறுத்துவேன் என முடிவெடுத்தால், சீமான் போன்றவர்களின் சீறும் அரசியல் சீவியம் என்னவாகும். கொடும் யுத்தத்தில் மக்களுக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனங்களை—மனிதவுரிமை நிறுவனங்களை துரத்தியடித்தவருக்கு நீங்களும் உங்கள் கோரிக்கைகளும் எம்மாத்திரம்.

தமிழக அரசியல் சினிமாவின் துணை கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. இடைக்கிடை பெரியாரின் அரசியல் உச்சரிக்கப்படும்.  பெரியாருக்கும் அவர் அரசியலுக்கும் கழகங்களிற்கும் எச்சம்பந்தமும் கிடையாது. சம்பிரதாயத்திற்காக அவரின் அரசியல் உச்சாடன்துடன் கழகங்கள் கடந்த அரை நூற்றாண்டுகால பிற்போக்கு அரசியலை அரங்கேற்றியுள்ளன. ஜெயலலிதா பிராமணத்துவத்தின் மொத்த வடிவம். துக்ளக்கின் சோ போன்ற பிராமணங்களதும், “முற்போக்கு இடதுகள்” என்கின்ற “வைதீகப் பிரமணங்களதும்” துணையுடன் ஆட்சிக் கட்டிலில் உள்ளார்.

வந்தவுடனேயே சமசீர் கல்வித்திட்டத்தை (குறைபாடுகள் இருந்த போதிலும்) மாற்ற முற்பட்டு மூக்குடைபட்டுள்ளார். இவர் இதை இப்படி செய்ய முற்பட்டதை பாசிச ஜெயாவின் சமூக அநீதியென, ஐனநாயக-முற்போக்கு-இடதுசாரிச் சக்திகள் கண்டிக்கின்றன. இப்பேர்ப்பட்ட இந்த சமூக விரோதப் பாசிஸமா எமக்கு உதவப் போகுது? “உப்புக்கல்லை வைரமென்று சொல்லும்… உதுகளின் ரசிக அரசியலை” விடுத்து கொஞசம் யதார்த்தமாக சிந்திப்போம்!

-அகிலன்

11/06/2011