“தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று 70-ம் ஆண்டு பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் (யாழ் கச்சேரியில் இருந்து தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டிருந்த) தமிழரசுக்கட்சித்தலைவர் செல்வநாயகம் கூறிய வாhத்தைகள் இது. தமிழ்ப் பகுதிகளில், இத் தேர்தலில் அமிர்தலிங்கம், நாகநாதன் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதோடு, தென்னிலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்த காலம் இது. இதற்கு முந்திய இரு தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் உதவியுடனேயே மாறி மாறி வந்த ஸ்ரீலங்கா, யூ.என்.பி. அரசுகள் ஆட்சியமைத்திருந்தன. இக்காலங்களில் தாங்களே தென்னிலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்திகள் எனக் கூறிவந்த தமிழரசுக்கட்சிக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் பேரிடியைக் கொடுத்து விட்டது.
தமிழரசுக்கட்சி காங்கிரஸை விட பல விடயங்களில் வித்தியாசமான போக்குகளைக் கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தன்னை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என அழைத்த போதிலும், அது கிழக்கை விடுத்து வட மாகாணத்திலேயே தன் பாராளுமன்ற அரசியலைத் தக்க வைத்திருந்தது. அதையும் “மன்னார் தவிர்ந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்” எனத் தமிழரசுக்கட்சி கிண்டல் அடித்துக் கொண்டிருந்த காலங்களும் இருந்ததுண்டு.
காங்கிரஸில் இருந்து பிரிந்த தமிழரசுக்கட்சி தன் பாராளுமன்ற அரசியலுக்காக வட-கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய போதிலும், மிதவாத அரசியலுக்கு ஊடாக தமிழ் இனத் தேசிய வடிவத்தை பிரதிபலித்ததானது, காங்கிரஸைவிட வித்தியாசமானதோர் போக்கே.
தமிழ் இனத்தேசிய அரசியல் வரலாற்றில், 1961இல் தமிழரசுக்கட்சி நடாத்திய சத்தியாக்கிரகப் போர் (குறைபாடுகள் உண்டெனினும்) மக்களை போராடும் திசை நோக்கிச் செல்ல வைத்தது. ஆனால் அதன் தொடரான பாராளுமன்ற மிதவாத அரசியலானது மக்களின் போராட்ட வல்லமையை மழுங்கடித்தது மட்டுமல்லாமல், ஓர் பத்தாண்டுகளுக்கிடையில் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற இயலா நிலை அரசியலுக்கும் சென்றடைந்தது. இவ்வியலா நிலைக்கான காரணங்கள் தான் என்ன? தமிழ் இனத் தேசியத் தலைமை அன்றிலிருந்து இன்று வரை தமிழ் மக்களை ஓர் சிறுபான்மைத் தேசிய இனமாக கணித்து எதையுமே செய்ததில்லை. ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 50ற்கு 50-ல் இருந்து, இன்றைய நாடு கடந்த ஈழம் வரை இதைக் காணலாம். தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் கூட ஆரம்பமான விதமும், அது முடிவுற்ற விதமும் எதிரும் புதிரும் கொண்டவையே. தமிழ்மக்களின் இழந்த உரிமைகளைப் பெறவென புறப்பட்ட இந்த அகிம்சைப் போர், முத்திரை வெளியீடு, தபால் விநியோகம் போன்றவற்றிற்கு ஊடாக ஓர் மாற்று தமிழ் அரசு என்ற நிலைக்கே இட்டுச் சென்றது. அத்தோடு தமிழரசுக்கட்சி-சமஷ்டி ஆட்சி முறை என்பது- தனித் தமிழ் அரசும், அதன் அரசாட்சி வடிவமாகவுமே சிங்களப் பேரினவாதத்தால் சிங்கள மக்களுக்கு இனம் காட்டப்பட்டது. தமிழரசுக்கட்சி தன் சமஷ்டி அரசியலின் உண்மை நிலைத் தன்மை பற்றி சிங்கள மக்கள் மத்தியில் எடுத்து விளக்கியிருக்க வேண்டும்.
ஓர் சிறுபான்மைத் தமிழ் தேசிய இனத்தின் பிரதிநிதி என்ற வகையில், அதை செய்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தும், அதைச் செய்யவில்லை. இத் தவறு கால காலத்திற்கு இருபக்க வாக்கு வங்கிகளாகவும் இனவாதமாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் பரிணாம வளர்ச்சியானது 65-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் தமிழ் இனத் தேசியத்தின் உதவியின்றி சிங்களப் பேரினவாதம் ஏகப்பெரும்பான்மையான பலத்துடன் பாராளுமன்ற ஆட்சியில் இருந்து வருகின்றது. வெகுஜனப் போராட்ட மார்க்கமற்ற மிதவாத பாராளுமன்ற அரசியலின் தொழிற்பாடு, எந்த பாராளுமன்றக் கட்சிக்கும் இயலாமைக்கே இட்டுச் செல்லும். இதற்கு தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல. இவ்வரசியல் அடுத்ததோர் ஐந்தாண்டுகளில் இன்னோர் பரிமாணம் பெற்றது. அதுவே கடந்த 30-ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் நடைபெற்ற ஆயுதப் போராட்டமாகும். “நாங்களே நாங்கள் மட்டுமே தான் தமிழ் மக்கள் வரலாறு படைப்பவர்கள்” என 72-ல் வட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, முள்ளியவாய்க்கால் வரை கொண்டு வந்து முடித்து வைத்துள்ளனர். தமிழ்த் தேசியத்தின் மொத்த 60-ஆண்டுகாலப் போராட்டம் என்பது, சுயநிர்ணயப் போரை பூச்சியமாகியுள்ளதுடன், அவர்களை அரசியல் அநாதைகளாக்கி- அரசியல் வெற்றிடத்திலும் விட்டுள்ளது.
எமது நாட்டின் கடந்த 60-ஆண்டுகால பேரினவாத-குறுந்தேசிய இனவாத அரசியல் சாதாரண சிங்கள-தமிழ் மக்களைப் பிளவு படுத்தியுள்ளது. இவற்றிற்கு சிங்கள-தமிழ் மக்களுக்கிடையில் கட்டியெழுப்பப்பட்ட புனைவுகள்-படிமங்களும் ஓர் பிரதான காரணி. இதனால் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர் பற்றிய உண்மை நிலைமைகள் பெரும்பாலான சிங்கள மக்களிடம் சென்றடையவில்லை. சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை-தமிழ் ஈழம் என்றே பேரினவாத-குறுந்தேசியவாத அரசியல் அவர்களை எண்ண வைத்துள்ளது.
இதுபோல் முஸ்லீம் மக்கள் பற்றி குறுந்தேசிய இனவெறியர்களால் கட்டப்பட்ட புனைவுகளால், பாசிஸ-சர்வாதிகார நடவடிக்கைகளால் அவர்களும் எதிரியாக்கப்பட்டுள்ளனர். இதை சிங்களப் பேரினவாதம் தனக்கிசைவாக்கி கிழக்கு மாகாணத்தை துண்டாடும் வேலைகளையும் செய்துள்ளது. கிழக்கு மாகாணம் தேசிய இனப் பிரச்சினையின் (மூவினமக்கள்) குவிமையம். இன்றைய தமிழ்த்தேசியம் கூட இன்றும் இதை சரியான ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. மரபான குறுந் தேசியத்தியத்திற்குள் குறுங்கியே உள்ளார்கள். தமிழ்த் தேசியம் ஓர் மக்கள் சார் விடுதலை இயக்கமாக இருந்து, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை, புரட்சிகர வெகுஜனப் போராக முன்னெடுத்திருந்தால் அரசியல் அநாதைகளாகி-அரசியல் வெற்றிடத்திலும் விடப்படடிருக்கமாட்டார்கள்.
இந்நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் தான் என்ன? மகிந்த சிந்தனையையும் அதன் பேரினவாத நடவடிக்கைகளையும் ஏற்று அதனோடு சமதான சகஜீவனம் செய்வதா? தத்துவங்கள் சோறு போடாது “நம்புங்கள் மகிந்தன் நல்லவன்” அவர் தருவதை பெறுவது இன்னும் பெற வேண்டியவற்றிற்காக காத்திருப்பது என்ற டக்கிளஸ் – கருணா போன்ற ஜனநாயக நீச்சலடிப்பாளர்களின் பின்னால் செல்வதா? தமிழ்தேசியம் கண்டெடுத்த மரபான குறுந்தேசியத்திற்குள் குறுங்குவதா? ஐக்கியப்படும் சக்திகளிடம் இருந்து அந்நியப்படுவதா? இவற்றிற் கூடாக தமிழ் மக்கள் இழந்துள்ள அரசியல் வெற்றிடம் நிரப்பப்படுமா? தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப்போர் முற்றுப் பெறவில்லை.
கடந்த அரைநூற்றாண்டிற்கு மேற்பட்ட காலமாக தமிழ்த் தேசிய அரசியலாளர்களால் அது சரியான திசை நோக்கிச் செல்லாது தற்காலிகப் பின்னடைவில் தரித்துள்ளது! இது தற்காலிகமானதே! இது சரியான பாதையின் ஊடாக புதுப் பரிமாணங்களோடு முன்னேறிச் செல்லும்! மனிதகுல வரலாறு என்பது எப்போதும் சமாந்திர நேர்கோட்டில் வந்ததுமல்ல. போவதுமல்ல! எமதுநாடு அந்நிய சக்திகளின் “அரசியல் விபச்சார விடுதியாகியுள்ளது” அவர்களின் இசைவிற்கேற்ப அரசியல் பொருளாதார இராணுவக் கட்டமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் எமது நாடு வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கின்றது. இதன் பிரதிபலிப்பை நம்நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிங்கள மக்களும் இவற்றுடன் தாம் இழந்த ஜனநாயக உரிமைகள் உட்பட்ட, அனைத்துச் சுதந்திரங்களுக்கும் போராட வேண்டியுள்ளது. தாம் நினைக்கும் ஓர் சுதந்திரமான ஜனநாயகப் பண்புடைய நிர்வாக அரசை, அரசியலை, நிலைநிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையையே மாற்றத் திராணியற்றவர்களாகவே உள்ளனர். காரணம் மகிந்தா இன்னொரு புலியாக செயற்படுகின்றார். இதை தக்க வைக்கவும், இதிலிருந்து சிங்கள மக்களை திசை திருப்பவுமே யாழ்ப்பாணத்தில் மீண்டும் புலி, தமிழகத்தில் மீண்டும் புலிமுகாம் என கூப்பாடு போடுகிறது அரசு. இத் திசை திருப்பு அரசியல் தற்காலிகமானதே. நீணடகால நோக்கில் வெகுஜனப் போராட்டமாகவே மாறும்! இவற்றோடு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமும் இணைய வேண்டும்! இணையமுடியும்! தமிழ்த் தேசியத்தின் கடந்கால தவறுகளில் இருந்து விடுபட்டு, இவ் வெகுஜனப் போரை சாதாரண சிங்கள-தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் முன்னெடுக்க, வெகுஜன ஐக்கிய முன்னணியும் அதற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலும் தேவை. இந்நிகழ்ச்சி நிரலின் ஊடாக எம்நாட்டு மக்களின் எதிரிகளை, நாம் அவர்களுக்கு எளிதாக இனங்காட்ட முடியும். இவர்கள் சமகால நிலையில் பயங்கரவாதிகள்! நீண்டகால நோக்கில் கடதாசிப் புலிகளே. என வலியுறுத்தி, அப் பாதைக்கான நிகழ்ச்சி நிரலை, “மக்களே! மக்கள் மட்டுமே உலகின் உந்துசக்தி”யென முன்னிறுத்துவோம்.
அகிலன் முன்னணி (இதழ் -1)