உதயன் செய்தி ஆசிரியர் மீது காடையர்கள் தாக்குதல்!
செய்தி ஆசிரியர் குகநாதன்
செய்திக்கண்ணோட்டம் 31/07/2011
உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் (வயது59) ஆயுததாரிகள் இருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டதில் பின்னந்தலையில் படுகாயமடைந்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு வரை அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவசர சிகிச்சை விடுதிக்கு மாற்றப்பட்ட அவர் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.
நேற்றுப் பகல் வேலை முடிந்து அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரவு 7.30 மணிக்கு இந்தக் காடைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. நாவலர் வீதியில் கஸ்தூரியார் வீதி சந்திக்கும், மனோகரா தியேட்டர் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற காடையர்கள் இருவர் அவர் மீது இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர்.
இரத்தம் கொட்டிய நிலையில் ஓடினார்.
தாக்குதலுக்கு உள்ளாகி இரத்தம் கொட்டிய நிலையிலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு சமீபமாக இருந்த தனது வீட்டுக்குள் சென்ற குகநாதன் பத்திரிகை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கிருந்து சென்றவர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
“அம்மா! அம்மா!! என்று கத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடிவந்தார். தலையில் இருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. வீதியில் வைத்து யாரோ அடித்தார்கள் என்று சொன்னார். என்ன நடந்தது என்றே புரியவில்லை” என்று பதறியபடியே தெரிவித்தார் குகநாதனின் மனைவி.
கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள இராணுவக் காவல் அரணில் இருந்து 30 மீற்றர் தொலைவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல்
செய்தியாளர்கள் மீதான வன்முறை அலையை மீண்டும் ஆரம்பிக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்துவிட்டதென ஆர்.எஸ்.எஃப் என்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதையே குகநாதன் மீதான இந்தத் தாக்குதல் எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கின்றது.
‘ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இல்லை’- ரம்புக்வெல்ல
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் இராணுவ முகாமில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கு சென்றிருந்தார்.
ஊடக அமைச்சர் ரம்புக்வெல்லவிடம் குகநாதன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்று கூறிவிட முடியாது என்றார்!
மாபெரும் மனிதப் படுகொலைகளைச் செய்துவிட்டு, அப்படி ஒன்றுமே நடைபெறவில்லையென, உலகிற்கு சவால் விடும் உந்த அரசிற்கும், அதன் அமைச்சர்களுக்கும் இது ஒரு சிறு சம்பவம்தான்!
சம்பவம் நடைபெற்றது இராணுவக் காவல் அரணில் இருந்து 30-மீற்றர் தொலைவில். இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டு இரத்தம் சிந்திய நிலையில் அம்மா! அம்மாவெனக் கத்தியது, உந்த காவல் அரண் “காலன்”களுக்கும் கேட்கலையோ? அல்லது உங்களின் உந்துதலோ? மகிந்தா யாழ் வந்து “சொன்னதை (காடையர்கள் கொண்டு) செய்துள்ளீர்களோ”?
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கில் அரசு பெரும் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து வடக்கில் உள்ள அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளின் பதவிகளில் விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. முதல் நடவடிக்கையாக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ஆளுநரால் பணிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் அரசு வெற்றி பெறுவதற்குத் தமிழ் அதிகாரிகள் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதனாலேயே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுப் பழிவாங்கப்படுகிறார்கள் என்ற தகவல் விஷக் காய்ச்சல் போன்று அதிகாரிகள் மத்தியில் நேற்றுத் திடீரெனப் பரவியிருந்தது! இந்நிலை கொண்டே உதயன் பத்திரிகையையும் கணித்து அதன் ஆசிரியரையும் நையப்புடைத்துள்ளார்கள். வடக்கில் ஆளுநர் முதல் அடிமட்டம் வரை ராணுவத்தினரே! இவர்கள் ஆட்சியில் இதுவெல்லாம் சகஐம் தானே. எனவே ‘ஊடக சுதந்திரத்துக்கும், ஐனநாயகத்திற்கும் அச்சுறுத்தல் இல்லை’-யென ரம்புக்வெல்ல சொல்வதை நம்புவோமாக!
அகிலன்
31/07/2011