Language Selection

இதழ் 2
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச மனிதவுரிமைகள் தினத்தில் லலித் குமார, குகன் முருகன் ஆகிய இருவரும் அரச கூலிப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கோருகின்றது. அவர்கள் இருவரின் விடுதலைக்காக நடாத்தப்படும் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும், தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 

யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரான லலித்குமார வீரராஜூ மற்றும் அவருடன் சென்ற குகன் முருகன் ஆகிய இருவரும் காணாமல் போனது, அரச பாசிசத்தின் அப்பட்டமான மற்றொரு வெளிப்பாடாகும். இதுவரை காலமும் அரச படைகளும் அவர்களின் எடுபிடிகளான தமிழ் துரோகக் குழுக்களும் வடக்கு மற்றும் கிழக்கில் தமது பாசிசக்கரங்கள் மூலம் தமிழ் மக்களின் கழுத்தை நெரித்தே வந்தனர். இதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தையும், அரச இயந்திரத்துக்கு எதிரான எழுச்சியையும் தடுத்து வந்தனர்.

2009 இல் மாபெரும் இனவழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்த பின், ஆயுதம் எதுவுமின்றி மக்கள் நலம் சார்ந்து தமது பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமையை முன்னிறுத்தி, ஒடுக்குமுறைக்கெதிராகப் போராட முயன்ற பல நூறு ஊடகவியலாளர்கள், சமூகநல போராளிகள், இடதுசாரிகள், அரசியல் விமர்சகர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர் அல்லது பாசிச அரசினால் கொலை செய்யப்ப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தமிழர்களாகவே இருந்தனர்.

சிங்கள மக்களை ஒடுக்கும் காட்சிகள், யுத்தத்தின் பின்னான வெற்றிக் கொண்டாட்டங்கள் ஊடாக இலங்கையில் மீண்டும் அரங்கேறுகின்றது. தமிழ் குறுந்தேசியம் இராணுவம் பற்றியும், அரசு பற்றியும் கூறிவந்த இனவாத கூற்றுகள் அனைத்தும் இன்று பொய்யாகின்றது.

இலங்கையில் இன்றைய எதார்த்தம் இதுதான். இதை மறுப்பதும், கண்டுகொள்ளாது இருப்பதும் பொய்மையான அரசியல் மட்டுமின்றி, இதற்கு துணை போவதாகவே அமையும். காணாமல் போனவர்களுக்காக போராடியவர்கள் கூட இன்று காணாமல் போகின்றனர். இந்த எதார்த்தத்தைத் தாண்டிய “ஜனநாயகம்”, “சுதந்திரம்” என்பது எல்லாம், இந்தச் சூழலை மூடிமறைப்பதற்கான வெற்று வார்த்தைகளே.

இலங்கையில் அனைத்துச் சட்டபூர்வமான செயல்பாடுகளையும் முடக்கிவரும் இன்றைய நிலையில், சாதாரண மனிதவுரிமை செயல்பாடுகளை முன்னெடுப்பது கூட, மரணத்துக்குள்ளான வாழ்வாக மாறியிருக்கின்றது.

இனவழிப்பின் போது காணாமல் போன தமிழர்களுக்காக போராடும் சிங்களவர்களும் இன்று காணாமல் போகத் தொடங்கியுள்ளனர். இப்படி மீண்டும் காணாமல் போதல் மற்றொரு புதிய பரிணாமம் தான். தமிழன், சிங்களவன் என்ற இன வேறுபாட்டுடன் மக்களைப் பிரித்து மோதவிடுவதையே விரும்புகின்ற தமிழ்-சிங்கள் இனவாதிகள் மத்தியில், இன ஐக்கியத்துடன் முன்னின்று போராடுவர்களை குறிவைத்து அவர்களை அழித்தொழிப்பது தொடங்கியுள்ளது.

சரணடைந்தவர்களையும், விசாரணையின் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள், இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டவர்கள் என்று பல ஆயிரம் தமிழர்கள் கடந்தகாலத்தில் காணாமல் போயிருக்கின்றனர். இவர்களை தேடும் உறவினர்களின் போராட்டத்தை ஒடுக்குவதும், மீறிப் போராடுபவர்களை அழித்தொழிப்பதையும் அரச பயங்கரவாதம் முடுக்கிவிட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி இராணுவத்தை நிறுத்தியுள்ள அரசு, சாதாரண பொது நிகழ்வுகளில் கூட தலையிடும் நிலையில் தான், போராடுபவர்கள் காணாமல் போனார்கள். இப்படி காணாமல் போனவர்கள் இராணுவ முகாம்களில் உள்ள சட்டவிரோதமான சித்திரவதைக் கூடங்களில் வைத்து அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுகின்றது.

அரச பயங்கரவாதச் சூழலில், மக்கள் நடைப்பிணமாக வாழ்கின்றனர். தொடரும் தங்கள் மனிதவுரிமைக் குற்றங்களை மூடிமறைப்பதற்காக தேர்ந்தெடுத்துள்ள பாதை, போராடுபவர்களை இல்லாதொழிப்பதாகும். இன, மத, வேறுபாடின்றி அரசுக்கெதிரான விமர்சனங்களை முன்வைப்போரை, இலங்கையின் அரசியல் அரங்கத்தில் இருந்து நீக்க அனைத்து வழிகளையும் கையாளுகிறது இலங்கை அரச பாசிசம்.

அரச பாசிசத்தின் கொடுமைகளை பல தடவைகளை அனுபவித்த எமது சகோதர இனம், மறுபடியும் இலங்கை அரசின் கொடுங்கோன்மையை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக, இந்த வருடம் ஆனி மாதம் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் உரிமைக்காக போராடிய தொழிலாளி றொசேன் சானுக்கவின் படுகொலை, பெரும்பான்மையின உழைக்கும் வர்க்க சகோதரர்களுக்கு எதிரான அபாய அறிவிப்பாக அமைந்தது. றொசேன் சானுக்கவின் கொலைக்கு பின்னான போராட்டம், சிங்கள மக்களை மட்டுமல்ல இலங்கை வாழ் மக்கள் மத்தியில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காலமும் இராணுவம் என்றால் அது புலியை ஒடுக்கும் சிங்கள தேசபக்தர்கள் என்று நம்பவைத்தது போலல்ல என்பதை சிங்கள மக்கள் தங்கள் சொந்த நடைமுறை மூலம் உணருகின்றனர். இதை அவர்கள் தங்கள் சொந்த அனுபவம் மூலம் தான் உணர்ந்தனரே ஒழிய, குறுந்தமிழ் தேசியம் இதை அவர்களுக்கு விளக்கியிருக்கவில்லை. மறுபக்கத்தில் தமிழ் குறுந்தேசியம் சார்ந்து தமிழ் மக்கள் நம்பியது போல், இது சிங்கள இராணுவமல்ல என்பதை அந்த மக்கள் போராடித்தான் தமிழ் மக்களுக்கு நிறுவிக் காட்டுகின்றனர்.

குறுந் தமிழ்தேசியம் அந்தளவுக்கு தமிழ் மக்களை மந்தையாக்கி வைத்துள்ளது. தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்குகின்ற இராணுவம், அனைத்து மாயையையும் களைந்திருக்கின்றது.

லலித் குமார், குகன் முருகன் இருவரையும் உடனடியாக விடுதலை செய்!

மக்களின் சட்டபூர்வமான ஜனநாயக உரிமைகளை அங்கீகரி!

அரச பாசிச பயங்கரவாதத்தை நீக்கு!

இராணுவ ஆட்சியை நீக்கு! சட்டத்தின் ஆட்சியைக் கொண்டு வா!

சிவில் சமூகக்  கட்டமைபைக் கொண்டு வா!

காணாமல் போனவர்கள் பற்றிய சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடு!

கைதிகளாக உள்ளவர்களின் பெயர்களை வெளியிடு!

சட்டவிரோத கைதிகளை சட்டத்தின் முன் கொண்டு வா!

சட்டவிரோதச் சிறைகளை மூடு!

சித்திரவதைக் கூடங்களை மூடு!

சகல கொலைகார கூலிக் குழுக்களையும் கைது செய்!

அரசு சார்பு கூலி அரசியல் கட்சிகளை தடைசெய்!

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
13.12.2011
துண்டுப்பிரசுர இலக்கம் 010

(துண்டுப்பிரசுரத்தை தரவிறக்க இங்கே அழுத்தவும்)