Language Selection

செம்பதாகை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நவகொலனியத்தின் கீழ்த் தேசியமும் தேசமாதலும்:
வரைவிலக்கணப் பிரச்சனைகள்

தேச அரசு என்பது முதலாளியத்தின் துணை விளைவு. ஓரு சமூகப் பொருளாதார அமைப்பாக உள்ள மக்கள்திரள்கட்குச் சுயாதீனமான இருப்பு தேவைப்பட்ட போதே தேசம் என்பதற்கான வரைவிலக்கணம் தேவைப்பட்டது. ஐரோப்பாவில் முதலாளியம் ஏகாதிபத்தியமாக விருத்திபெற்ற போது, தம்மினும் வலியதான ஒரு நாட்டின் ஆளும் வர்க்கத்தால், தேச நலனின் பேரில், ஒடுக்குமுறை ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளும் மக்களும் தமக்கெனச் சுதந்திரமான அரசுகளைக் கோரினர்.


இனமும் பிரதேசமும் சார்ந்த அடையாளங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஆயினும், முதலாளியத்தின் தோற்றம் வரை, அவ் அடையாளங்கள் தேசங்களாக அமையப் பெறவில்லை. தேசம் என்ற கருத்தும் அதை அரசொன்றுடன் அடையாளப்படுத்தும் நடைமுறையும் உருவாகி வளர்ந்துவந்த முதலாளி வர்க்கம் ஒன்றின் தேவைகட்கமையவே எழுந்தன. தேசியம், முதலாளிய அரசுக்குத் தேச அரசு என்ற மதிப்பான அடையாளத்தை வழங்கியதன் மூலம், அந்த அரசில் தமக்கும் ஒரு பங்குண்டு என ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் நம்பி ஏமாற உதவியது. இவ்வாறு, தேசியம் முதலாளிய நலன்கட்கு ―குறிப்பாக ஏகாதிபத்திய நலன்கட்கு― நன்கு உதவியது.

தேசம் என்ற பதத்துக்கு ஸ்ற்றாலின் முன்வைத்த நேர்த்தியானதும் முழுமையானதுமான வரைவிலக்கணம், இன்றுங்கூடச், சமகாலத் தேசம் என்பதற்குச் செல்லுபடியானதும் பொருத்தமானதுமான ஒரு விவரணமாகவே உள்ளது: “தேசம் என்பது, பெதுவான மொழி, பிரதேசம், பொருளியல் வாழ்வு, பொதுவான பண்பாடொன்றாகப் பரிணமிக்கும் உளவியற் தன்மை என்பனவற்றின் அடிப்படையில், வரலாற்றின் வடிவுபெற்ற ஒரு உறுதிப்பாடான மக்கள் சமூகமாகும்.   [J.V. Stalin, Marxism and the National Question, 1913].

ரஷ்யப் பேரரசை மாற்றியமைப்பதற்கான புரட்சிகரப் போராட்டம் ஒன்றின் போக்கில், தேசிய ஓடுக்குதலையும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையையும் கையாளுவது தொடர்பாக, இவ் வரைவிலக்கணம் முன்வைக்கப்பட்டது. ஓரு தேசத்தைச் நடைமுறைச் சாத்தியமாக்குவது எது என்ற கூர்ந்த கவனிப்பினதும் ஆழ்ந்த விளக்கத்தினதும் அடிப்படையில் அது அமைந்திருந்தது. ஸ்ற்றாலின் வரைவிலக்கணம் தேசத்திற்கான அத்தியாவசியமான பண்புகள் எனக் கூறுவன, ஓரு தேசத்தை நடைமுறைச் சாத்தியமாக்கத் தேவையானவையாக இன்னமும் பரவலாக ஏற்கப்படுகின்றன. மதம் —தென்னாசியாவிற் சாதி— போன்ற காரணிகள் சமூகக் குழுமங்களின் அடையாளங்களை வரையறுத்துள்ளதுடன் தேசிய இயக்கங்களிலும் தேசிய அடையா ளத்தின் உருவாக்கத்திலும் பெரும் பங்காற்றியுள்ள போதும், அவை தேசத்தை வரையறுக்குங் காரணிகளல்ல. இனத்துவத்தின் வரைவிலக்கணங்கள் இனத்துவத்தைத் தேசியத்திற்கு வெளியே —சில சமயம் தேசியத்திற்குச் சமமாக— வைக்கின்றன. எனினும், அரசியலில், தேசம் என்ற கருத்தாக்கம் பிற அடையாளங்களை விட வலிமையுடையதாகவே இருந்து வந்துள்ளது.

தேசிய இனம் என்ற பதம், பொதுவாக, ஓரு தேசத்துக்குரிய அத்தியாவசியமான பண்புகளைப் பெருமளவும் உடையனவாயும் —ஏற்கெனவே ஒரு தேசமாக இல்லாதவிடத்து— அவ்வாறு அமைவதற் கான ஆற்றலைக் கொண்டும் உள்ள சமூகங்களைக் குறிக்கப் பயன் படும். பல்லின அல்லது பல் தேசிய இனத் தேச-அரசுக் கட்டமைப்பு ஒன்றினுள் பிற தேசிய இனங்களுடன் ஒரு தேசிய இனத்தின் உடன்வாழ்வு பிரச்சனைக்குட்படும் போது, அத் தேசிய இனம் தன்னை ஒரு தேசமாக அறிவித்துத் தன்னை ஒரு தேச அரசாக நிறுவ முனையும் தேவை ஏற்படுகிறது.

தேச-அரசு என்ற கருத்தாக்கத்தின் விருத்தி, முதலாளியத்தின் விருத்தியுடன் நெருங்கிப் பிணைந்துள்ளது. எனவே, முதலாளியம் ஏகாதிபத்தியமாக மாற்றமடைவதை அடுத்துப், பன்னாட்டு முலதனம் தேச எல்லைகளைத் தாண்டிய நிலையில், ஏகாதிபத்தியம் தனது உலகமயமாதற் செய்நிரலூடு உலக ஆதிக்கத்தை வேண்டுகையில், முதலாளியததுக்குத் தன் தாயகத்திற் தேசியத்தக்கான தேவை இல்லாது போகிறது. முன்னேறிய முதலாளிய நாடுகளில் தேசியம் முதலாளிய நல்ன்கட்கு மாறாகச் செயற்படலாம். இவ்வாறு, மூலதனம் சர்வதேசப் பண்பைப் பெற்றதையடுத்துத், தேச-அரசு என்பது முலதனத்துக்குப் பயன் குறைந்ததாகிவிட்டது. நவதாராளவாதிகளும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் ஆதரவாளர்களும் தேசியத்தை நிராகரிப்பதற்கு இது முக்கியமான ஒரு காரணமாக இருக்கலாம்.

முற்போக்கான வரலாற்றாசிரியரான ஹொப்ஸ்பாம், வேறு காரணங்கட்காகத் தேசியம் பற்றிப் பாதகமான நோக்குடையவராக உள்ளளார். தேசம் என்பதற்கு சர்வவியாபகமான தேவை என ஒன்றுமே தேவையில்லை எனவும் “தம்மைத் தேசமாகக் கருதுகிற, போதியளவு பெரிய எந்த மக்கள்திரளும் அவ்வாறே நடத்தப்படும்”. [E.J. Hobsbawm, Nations and Nationalism since 1780: Programme, Myth, Reality, 1990].

அன்டர்ஸன் அதற்கும் அப்பாற் சென்று, ஆளையாள் நேரிற் காணக்கூடிய ஆதிநிலைக் கிராமச் சமூகங்களினும் பெரிதான எச் சமூகமும், —உள்ளார வரையறுக்கப்பட்டதாகவும் இறைமை உடைய தாகவும்— கற்பனை செய்யப்பட்ட சமூகமே என்கிறார். எனினும் அவர் தேசங்களதும் தேசியத்தினதும் அரசியல் முக்கியத்துவத்தையோ அவற்றின் இருப்பிற்கான உரிமையையோ மறுக்கவில்லை. [B. Anderson, Imagined Communities: Reflection on the Origin and Spread of Nationalism, 1983].

சில சந்தர்ப்பங்களில் அரசின் உருவாக்கம் தேசத்தின் உருவாக்கத் திற்கு முந்தியதென ஹொப்ஸ்பாம் தனது ஆய்வில் விளக்கியுள்ளார். உதாரணமாக, பிரான்ஸ் தேசத்தின் உருவாக்கத்தின் போக்கிற் பல தேசங்கள் தம் அடையாளத்தை இழந்து பிரான்ஸ் தேசத்தினுள் தம்மைக் கரைத்துக் கொண்டன. அவ்வாறே, தேசம் ஒன்றின் உருவாக்கம், அது தேச அரசாக அமைய முன்னர் நிகழ்ந்துமுள்ளது.
ஏவ்வாறாயினும், தேசமோ தேசியமோ இயல்பானவையோ மாறாத வையோ அல்ல என்பதைப் பற்றியும் தேசமென்பது வரலாற்றின் விளைபொருளேயன்றி மனித உயிரியல் சார்ந்த ஒன்றல்ல என்பதில்  அரசியல் வரலாற்றாளர்கள் ஓரு மனதுடையோராக உள்ளனர் எனத் தெரிகிறது. “பொதுவான ஒரு ஊழ்” என்பது போன்ற சூட்சுமமான கருத்துக்களை (உதாரணமாக, ஒட்டோ பாவர், Otto Bauer) தேசம் என்பதற்கு மறைமுகமாகப் பொருத்தும் முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. தேசங்களின் உருவாக்கத்துக்கும் தேச அரசுகளாக அவற்றின் நிலைபேற்றுக்கும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் காரணிகளே அடிப்படையானவையாக ஏற்கப்பட்டுள்ளன. தேச அரசின் விருத்தியில் முதலாளியத்தின் பங்கு ஐயத்துக்கிடமின்றி நிறுவப் பட்டுள்ளது.

கொலனியத்தின் கீழ் —சில வேளைகளில் கொலனியத்துக்குப் பிந்திய நிலைமைகளில்¬— தேசங்களதும் தேச அரசுகளதும் உருவாக்கம் சம்பந்தப்பட்ட சமூகத்தின் தேவைகளை விட மேலாக நாட்டைக் கைப்பற்றிய அல்லது ஆதிக்கஞ்செய்த கொலனிய அல்லது நவகொலனிய வல்லரசின் நலன்களுடன் சம்பந்தப்பட்டதாக இருந்துள்ளது. கொலனியத்தின் கீழ்த் தேச அரசுகளின் உருவாக்கம், —பிராந்திய மேலாதிக்கத்திற்கும் உலக மேலாதிக்கத்திற்குமாகக் கொலனிகளிடையிலான போட்டி உட்பட— அவையவைக்குரிய கொலனியச் சூழல்களில் வைத்தே விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.

யப்பான் தவிர்ந்த ஆசியாவின் முதலாளிய முறை, நாட்டைக் கைப்பற்றியிருந்த கொலனிய வல்லரசொன்றின் அல்லது ஆதிக்கஞ் செய்த ஏகாதிபத்திய வல்லரசொன்றினால் விதிக்கப்பட்ட முறையிலேயே விருத்தி பெற்றது. ஆபிரிக்காவிலும் லத்தின் அமெரிக்காவிலும் இருந்து வந்துள்ள நிலைமையும் இவ்வாறானதே. அயற் குறுக்கீடு நடந்த நிலைமைகளும் விதமும் பிரதேசத்துக்கும் கொலனியஃஏகாதிபத்திய வல்லரசுக்கும் ஏற்ப வேறுபட்டன. கொலனிகளிலும் அரைக் கொலனிகளிலும் தேசியமும் தேசிய இயக்கங்களும் உருவான விதமும் அவ்வாறே நிலவுடைமைச் சமூகம் அல்லது நிலவுடைமைக்கு முந்திய சமூகம் ஒன்று முதலாளியச் சமூக அமைப்பிற்கு மாறிய விதமும் அளவும் அக் காலத்தில் அங்கிருந்த சமூக அமைப்புடன் கொலனியஃஏகாதிபத்திய நலன்கள் எவ்வாறு உறவாடின என்பதன் மீது தங்கியிருந்தன.

மேலைநாட்டு அறிஞர்கள் தேசியப் பிரச்சனையைப் பற்றி அலசுவதில் பாரிய விடுபாடாகத் தோன்றுவது ஏதெனின், தேசங்களே இல்லாத நிலைமைகளில் தேசங்களும் தேச-அரசுகளும் உருவானதில் கொலனியமும் நவ-கொலனியமும் ஆற்றிய பங்கைத் தவற விட்டமை ஆகும். கொலனியத்துக்குப் பிந்திய காலத்தில் மூன்றாமுலகாக அமைந்த பிரதேசங்களில் முதலாளியம் விருத்திபெற்ற விதங் காரணமாக, தேசிய உணர்வும் தேசியமும் ஐரோப்பாவில் விருத்தி பெற்ற விதத்தினின்று வேறுபட்ட முறையிலேயே அங்கு விருத்தி பெற்றன. தேசியம் பற்றிய கோட்பாடுகள், ஐரோப்பாவில் தேசிய உணர்வும் தேசியமும் பற்றிக் கணிசமானளவு ஆழ்ந்த ஆய்வையுடையன. கொலனியத்தின் கீழ்த் தேசியத்தின் விருத்தி கொலனி நாட்டில் முதலாளியத்தின் விருத்தியுடன் அதிக உறவுடையதல்ல. கொலனி நாடும் மக்களும் கொலனிய/ ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு உட்பட்டதன் விளைவுகட்குத் தேசியத்தின் விருத்தியுடன் உறவு இருந்தது. நவ-கொலனியத்தின் கீழும், தேசியம் தன் பலவாறான வடிவங்களில் (ஒரு இனக்குழுவினது அல்லது ஒரு தேசிய இனத்தினது பேரால்) உள்ளுர் மேட்டுக்குடி வர்க்கத்தினது ஓடுக்குமுறைக்கோ ஏகாதிபத்திய ஓடுக்குமுறைக்கோ உள்ளுர் மேட்டுக்குடிகளதும் ஏகாதிபத்தியத்தினதும் இணைந்த ஓடுக்குமுறைக்கோ எதிர்வினையாக விருத்தி பெற்றுள்ளது. இவ்வாறு நிலப்பிரபுச் சமூகங்களும் அரை- நிலப்பிரபுச் சமூகங்களும் ஏதோ ஒரு வகையான “தேசியத்தினுள்” உந்திவிடப்படுகின்றன.

பிரதேசங்களைக் கொலனிய வல்லரசுகள் தம்மிடையே கூறு போட்டதன் மூலமும் கொலனியஃஏகாதிபத்திய நலன்களின் அடிப்படை யில் பிதேசங்கட்கு எல்லை குறித்ததன் மூலமும் ‘தேசிய அடையாளங்கள் மக்கள் மீது திணிக்கப்பட்டன. உதாரணமாக, அரபு மக்கள், கொலனியக் குறுக்கீடில்லாத சூழ்நிலையில் அவர்கள் ஒரே தேசமாக அமைந்திருக்கக் கூடும். குர்திய மக்கள் நான்கு நாடுகளிடையே பிரிக்கப்பட்டு வேண்டுமென்றே தேசிய அடையாளம் மறுக்கப்படவும் கொலனியக் குறுக்கீடு காரணமாகியுள்ளது.

கொலனியமும் ஏகாதிபத்தியமும் மக்களை ஓடுக்கியதற்கும் சுரண்டியதற்கும் வளங்களைச் சூறையாடியதற்கும் அப்பால், கொலனிய ஏகாதிபத்தியக் குறுக்கீட்டின் விளைவான பல வகையான அடிமை முறைகளும் உருவாயின. அவை, தேசிய அடையாளத்தின் மீதும் தேசியத்தின் மீதும் பாதிப்புக்களைக் கொண்டிருந்தன. கட்டாயமாகவும் கட்டாயமின்றியும் கொலனி ஆட்சியின் கீழ்த் தொழிலாளரின் குடிப்பெயர்வால் ஏற்கெனவே சிக்கலாக்கப்பட்ட தேசிய அடையாளமானது, நவ-கொலனியத்தின் கீழ், ஏகாதிபத்திய-உலகமயமாக்கற் செயற்பாட்டல் ஊக்குவிக்கப்பட்ட உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடி ஆகிய நிலைமைகளின் கீழ் நிகழ்ந்த பெருந் தொகையிலான இடப்பெயர்வுகளால் மேலுஞ் சிக்கலாக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு, தேசியத்தாற் பயனடையப் போவது முதலாளி வர்க்கமே என்பதற்கும் தேசியம் பிற்போக்கான இயல்பினது என்பதற்கும் அப்பால், தேசியத்தைக் கற்பனையானது எனவும் வரலாற்று முக்கிய மற்றது எனவும் நிராகரிப்பது தவறானது. கற்பனையானதோ இல்லையோ, தேசியம் இருக்கிறது. ஓடுக்குவோருக்கும் ஒடுக்கப்படு வோருக்கும் ஆது ஆற்றுதற்குரிய வகிபாகமும் உள்ளது. இந்தப் புறநிலை யதார்த்தத்தின் அடிப்படையிலேயே மாக்ஸிய லெனினியர்கள் தேசியத்தை நோக்குகின்றனர். சுட்சுமமானதும் கொச்சையான சர்வவியாபகமானதுமான முறையிலன்றி, உள்ளடக்கத்தினையும் புறநிலை யதார்த்தத்தினையும் சார்ந்து, மேற்கூறியவாறான அடிப்படையிலேயே அவர்கள் தேசங்களதும் தேசிய இனங்களதும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றனர்.

 

இமயவரம்பன்

நன்றி: செம்பதாகை