இழுத்துச்செல்லப்பட்டு, கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கண்களை பிடுங்கி எடுத்து, சுட்டுக்கொல்லப்பட்டார் தோழர் வர்கீஸ். இவர் செய்த குற்றமென்ன? சிபிஎம் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து கேரளத்தின் வயநாடு பகுதியில் தேயிலைத்தோட்ட முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் கொடுரச் சுரண்டல்களையும், கொத்தடைமைத்தனங்களையும் அந்தப்பகுதி மக்களிடம் விளக்கி, அவர்களை எழுச்சியுறச் செய்தார். பழங்குடி மக்களைப் பிடித்து, வள்ளியூர் கோவில் திருவிழாவில் ஆடுமாடுகளைப் போல விற்கும் நிலப்பிரபுக்களின் அடாவடியை எதிர்த்துப் போராடினார். இவைகளைத்தான் குற்றம் என்று கூறி இழுத்துச் சென்றது அதிரடிப்படை போலீஸ்.
இதுபோன்று மக்களுக்காக உழைப்பவர்களை கொன்று குவிப்பதை மக்கள் எதிர்க்கக்கூடாது, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மக்கள் விழிப்புணர்வை அடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், நக்சலைட்டுகள் என்றால் குண்டுவைக்கும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று மக்களிடம் பதியவைத்திருக்கிறது போலீஸ்.
தோழர் வர்கீஸ் மட்டுமல்ல, 1976 ல் தோழர்கள் ராஜன், விஜயன் உட்பட பலரை கொன்று வீசியிருக்கிறது. 1998ல் ஓய்வுபெற்ற போலீஸ்காரரான ராமச்சந்திரன் நாயர் என்பவர், என்னுடைய மேலதிகாரி லட்சுமணாவின் உத்தரவின்பேரிலேயே நான் அவரை சுட்டுக்கொன்றேன், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என வெளிப்படையாக பேட்டியளித்ததை தொடர்ந்து மக்கள் அதிர்ந்துபோயினர். அதுவரை காங்கிரஸ், போலி கம்யூனிச அரசுகள் போலிசுக்கு எதிராக நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக கூறிவந்ததை எதிர்த்து மனித உரிமை ஆணையங்கள் திரண்டன, மக்களும் அவற்றை ஆதரித்தனர். வேறு வழியின்றி அப்போதைய சிபிஎம் அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இப்போது போலீஸ் வெறியன் லட்சுமணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மக்களுக்காக உழைப்பவர்களை, முதலாளிகளை, பெரு நிறுவனங்களை, அவர்களின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்பவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, தீவிரவாதி, குண்டுவைக்க திட்டம்போட்டான் என பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்தால் போதும் என்றுதான் போலீஸ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுபோலவே 1980களின் தொடக்கத்தில் சூரப்புலியாக சித்தரிக்கப்படும் போலிஸ் வெறியன் தேவாரமும் பல நக்சல்பாரி புரட்சியாளர்களை போலி மோதலில் சுட்டுக்கொன்றான். கேரள மக்களைப் போலவே தமிழகத்திலும் மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். திறமையான அதிகாரிகள் என்ற பெயரில் உலாவரும் கயவர்களின் முகத்திரை கிழித்தெறியப்பட்டு, தண்டனை அளிக்கப்படவேண்டும்.
நன்றி: புதிய ஜனநாயகம் டிசம்பர் 2010 இதழ்
நன்றி: நல்லூர் முழக்கம்