வெகுஐனப்போராட்டங்களை பயங்கரவாதம் என்கின்றது அரசு!
சமகால உலகில் இனவாத அடக்குமுறைகள் நவீனமயப்படுத்தப்பட்டநிகழ்ச்சி நிரலாக உள்ள காலகட்டத்தில், மகிந்தப் பேரினவாதம் மூடநம்பிக்கையின்பாற்பட்ட (பூதம்) இனவாத நடவடிக்கைகளை தமிழர்தாயகத்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது!
முள்ளியவாய்க்காலின் மே 29-வரை தமிழ்மக்களை நவீனகருவிகள் கொணடே படுகொலைகள் செய்தது. இதனால் சர்வதேச போர்க்குற்றவாளியாகிய மகிந்த அரசு, தற்போது மூடத்தின் பார்ப்பட்ட மர்மமனித பூதத் தாக்குதல்களுக்கூடாக தன்கருமங்களையாற்ற முற்பட்டது. ஆனாலும் அதுவும் தோல்வியாகி தேசிய-சர்வதேசத்தின் பால் பேய்-பிசாசாக அம்பலப்பட்டு நிற்கினறது.
கடந்த மூன்று தசாப்தமாக சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத அரசியலை தொடர புலிகளுக்கு எதிரான போர் உதவிற்று!… இப்போ அதுவற்ற நிலையில் தமிழர் தாயகத்தில் பேய்-பிசாசாக-பூதமாக கோரத்தாணடவம் ஆடுகின்றது. ஆனால் தமிழ்மக்கள் இப்பூதங்களைக் கண்டு மசியவில்லை. கையில் அகப்பட்டதைக் கொண்டு தாக்குகின்றார்கள். தாக்கப்பட்வர்களை பாதுகாக்க பொலிஸ் ராணுவம் முற்படும் வேளையில் அவர்களையும் காவலரண்களையும் தாக்குகின்றார்கள். அப்படித் தாக்கும் மக்களை பயங்கரவாதிகளாக்கி சிறைகளில் அடைக்கின்றனர்.
இராணுவக் காவலரண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள்!- நாம் மக்களை தாக்கியது சரியானதே! யாழ்.தளபதி ஹத்துருசிங்க
நாவாந்துறையில் இராணுவக் காவலரண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகள் என விளக்கமளித்துள்ள யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க திட்டமிட்ட வகையில் பொதுமக்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் இராணுவ முகாம் அழிக்கப்படுவதை தான் கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் கூறியுள்ளார்.
ஏவ்வித தூண்டுதலும் இல்லாமல் மக்களிடம் எவ்வாறு பெற்றோல் போத்தல்களும், கற்களும் கிடைத்தன எனவும் கேட்டுள்ளார். மேலும் பொலிஸார் சரியாக அந்த இடத்திற்கு வந்து தமது கடமையை செய்தனர்.
கிறிஸ் பூதம் என்பது கட்டுக்கதை நாடு முழுவதும் இந்த வதந்தி பரப்பப்பட்டிருக்கின்றது. இதனை நாங்கள் நம்ப மாட்டோம். பொதுமக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் எம்மோடு பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
கத்திகளுடனும் வாளுடனும் வந்தனர். இது ஜனநாயக நாடு இங்கே இவ்வாறான செயற்பாடுகளை நாம் அனுமதிக்க மாட்டோம் என நாங்கள் மக்களைத் தாக்கியது சரியானது என்றார்.
யாழ். நாவந்துறையில் கைதான 95 பேருக்கும் விளக்கமறியல்.
கிறீஸ் பூதம் தொடர்பான பிரச்சினையில் நாவாந்துறையில் படைத்தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. இதனால் கைது செய்யப்பட்ட 95 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர! இதேவேளை சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அந்த அறிக்கையையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை இழுத்து வந்து வீதியில் போட்டு அடித்து இழுத்துச் சென்றார்கள்!- நாவாந்துறையில் தாக்குலுக்குள்ளான மக்கள் குமுறல்:
வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்த ஆண்களை இழுத்து வந்து வீதியில் போட்டு அடித்து அடித்து இழுத்துச் சென்றார்கள். தடுப்பதற்க்காகச் சென்ற குற்றத்திற்க்காக எங்கள் பிள்ளைகளையும்இ எங்களையும் கூட கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். இவ்வாறு யாழ். நாவாந்துறையில் இராணுவத்தினரின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரதேசத்தில் அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலையை பிரகடனப்படுத்தப்படுத்தி பெருமளவு இராணுவத்தினரைக் குவித்து அடிமைகள் போல எங்களை நடத்துகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்
யாழ் .பொலிஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட தாயொருவரை பெண் பொலிஸார் ஒருவர் தனது சப்பாத்தைக் கழற்றி அதனால் அடித்துள்ளார். இந்த விடயம் நீதிமன்றில் தெரிவிக்கப்படாத நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டியவர்களையும் கூட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்
முள்ளியவாய்க்காலின் பின் தமிழர் தாயகத்தை பழிவாங்கும் நோக்கில் அரசு பற்பலவற்றை செய்கின்றது. அதெல்லாவற்றிற்கும் எதிராக தமிழ் மக்கள் அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் போராடுகின்றார்கள். கடந்த உள்ளுராட்சித்தேர்தல் அரசிற்கோர் பேரடி! இதன் வெளிப்பாடே இப்பூதப்–பூதாகாரம்.
மே 29-ற்குப் பிற்பாடு தமிழ்மக்கள் பலவற்றை இழந்துவிட்டார்கள், நொந்துவட்டார்கள், அரச அடக்குமுறைக்கு எதிராக போராட மாட்டார்கள் என்ற எண்ண ஓட்டம் ஒன்றிருந்தது உண்மையே! ஆனால் அது பொய்த்துள்ளது.
எதை இழப்பினும், “அடக்கலை எதிர்ப்போம், அடங்க மறுப்போம்” எனும் வெகுஐனப் போராட்ட மார்க்கம் இழந்தவற்றை பெறவைக்கும் எனும் நம்பிக்கையைத் தருகின்றது!
இது இன்றைய பல ஆசியநாடுகளின் பொதுஓட்டமுமாகும். எங்கு அடக்குமுறை உண்டோ அங்கு போராட்டம் இருந்தேதீரும்!
இது இன்றைக்கு லிபியாவின் கடாபிக்கு! எதிர்காலத்தில் ஏன் மகிந்தாவிற்கு ஆகாது?
அப்படியில்லையாயின் சமூக-விஞ்ஞான இயங்கியலில், முரண்பாட்டின் சர்வவியாபக்கில் தவறுண்டு?……
அகிலன் 23/08/11