அலம்பல்கள் அரசியல் கருத்துக்களாகிவிடாது! சரியான புரிதலையும் எட்டாது!
இலங்கை அரசியலில் காலத்திற்கு காலம் ஏதாவதொன்று மலிந்த (“சீசன்”) தாகத்தான் இருக்கும். இதில் இன்றைய மலிவரசியல் புலியெதிர்ப்பாகும். இது தேசிய-சர்வதேசியத்தின் பெரிய-சிறிய அரசியல் கடைகள் முதல், நடைபாதை வியாபாரம் வரை வியாபித்துள்ளது. இவ்விற்பனைக்கு இணையதளங்களில்-முகநூல்களிலும் விளம்பரங்கள்!
கடந்த ஓர் பத்தாண்டுகளுக்கு முன் தனிநபர் முதல் இந்த பெரிய-சிறிய-சில்லறை அரசியல் வியாபரிகளுக்கெல்லாம் இச்சொல்லை (புலியெதிர்ப்பை) உச்சாடனம் செய்யவே பயம்!
சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பொழுது, புலிகளுக்கு எதிராக ஓர் துண்டுப்பிரசும் வெளியிட நடுங்கியவர்கள் எல்லாம், ஏன் பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தை மடித்து இரகசியமாக மற்றவர்களுக்கு கொடுக்கப் பயந்தவர்கள் எல்லாம், இன்று புலியெதிர்ப்பில் விண்ணாதி விண்ண வீரர்களாகியுள்ளனர்!
கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்னான- புலம்பெயர்வின் அரசியல்-பொருளாதார-கலை-கலாச்சார நடவடிக்கைகளெல்லாம் புலிகளின் காலடியில்! இதற்கு எதிராக எழுந்து நின்று ஐனநாயகச் சூழலை ஏற்படுத்தவும், மாற்றுக்கருத்தை உருவாக்கப் போராடிய பத்திரிகைகள், சிறு சஞ்சிகைகள், மாற்றுக்கருத்தாளர்கள், அமைப்புக்கள் போன்றவற்றின் பெரும் பங்கெல்லாம், இன்று போட்டி போட்டு மலிவு அரசியல் செய்யும் சில்லறைகளுக்கெல்லாம் தெரியாது! தெரிந்த சிலரும் புலி எதிர்ப்பு என்பது உதுவல்ல இதுதானென முக்கிக் காட்டுகின்றார்கள்! இது பத்துப் பிள்ளை பெற்றறெடுத்தவளுக்கு, சுகப்பிரசவத்தில் (சத்திரசிகிச்சை) ஒரு பிள்ளை பெற்றவள் காட்டும் முக்கல்லவா?
இருவகை புலியெதிர்ப்பு!
சமகால தேசிய-சர்வதேசத்தின் புலியெதிர்ப்பு (“ஸ்ரைல்”) இரு வகைப்பட்டது. ஒன்று புலியை எதிர்த்துக்கொண்டு மகிந்த குடும்ப அரசியலுக்கு கைகட்டி வாய் பொத்தி அடிமை-குடிமைச் சேவகம் (டக்கிளஸ்-கருணா-பிள்ளையான் முதல் எம்.சி.சுப்பிரமணியப்பாணியிலான தலித் அரசியலாளர்கள் வரை) செய்யும் இணைப்பரசியல்! மற்றொன்று புலிகளின் அரசியல் போராட்டம், போராளிகள் பற்றியதில்; சமூக-விஞ்ஞானக் கண்ணோட்டமற்ற நோக்கிலான அலம்பல்களும் வசைபாடல்களும்! இதைச் சிலர் பூனையில்லா வீட்டிலுள்ள எலிகள் போன்று….
புலிகளின் அரசியல் பற்றிப் பேச பெரும் தத்துவங்கள், தத்துவ விளக்கங்கள் தேவையில்லை! அவர்களின் கடந்த காலக் கூட்டாளிகளில் ஒருவரான நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் “பிரபாகரன் ஓர் ராணுவக் கட்டமைப்பாளர், அரசியலின் கற்றுககுட்டியென” இரு வசனங்களில் குறளாக சொல்லியுள்ளார்! இதை தான் சமூக விஞ்ஞானக் கண்ணோட்த்தில் ஏகப்பட்டவர்கள் பற்பலவித கண்ணோட்டங்களினூடாக
விளக்கியுள்ளார்கள். இவ்விளக்கங்களின் பெரும்சாரம் “மக்களை புறந்தள்ளிய, அவர்களின் வெகுஐனப்போராட்ட மார்க்கமற்ற புலிகளின் அரசியல்” நீண்டு நிலைக்காதென்பதே!
இது மாவிலாறின் சரிவுடன் ஆரம்பமாகி முள்ளியவாய்க்காலின் முண்ணூறு மீற்றருக்குள் வெகு விரைவாகவே முடிவுற்றது! இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் மக்களையும் பலிகொடுத்ததே! இதனையடுத்த நிலையில் மக்கள் இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைச்சாலையிலும், போராளிகள் மறுவாழ்வென்ற போர்வையில் சிறைகளிலும் முகாம்களிலும் காட்சிப் பொருள்களாகவும் வாழ்கின்றனர்.
இப்போராளிகளை இறுகிய மூடப்பிரமைகள் கொண்ட எம் சமுதாயத்தின் பிரகிருதிகள்தான். எள்ளி நகையாட்டத்துடன் நிராகரிக்கின்றதென்றால், சமுதாயப் பொறுப்புள்ளதுகள் கூட, சமூக விரோதம் கொண்டு நிராகரிக்குதுகள்.
“சரணடைந்து மாண்டுபோன புலித்தலைவரையும், அவர் பின்னாலும் முன்னாலும் செத்தவர்களையும் நினைந்துருகுவதால் ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமா?! என “அலம்பல் கொண்ட அங்கலாய்ப்புடன் கேள்வி கேட்குதுகள். இந்தக் கொச்சைப்படுத்தல் அரசியலை, எந்த தத்துவக் போட்பாட்டுக்குள் இட்டுக் கட்டுவது!
கொச்சைப்படுத்ப்படும் போராளிகளின் தியாகம்!
சென்ற வாரம் மறுவாழ்விற்கு உட்பட்டோர் என அரசு சொல்லும் பெண் போராளிகளை சீருடையுடன் பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள். இதற்கு அரசு சொல்லும் காரணம் இவர்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை பயங்கரவாத நீரோட்டத்தில் கழித்தவர்கள். இப்போ இவர்களுக்கு ஐனநாயக நீரோட்ட “றெயினிங்”, ஆகவே எங்களின் “பாராளுமன்ற ஐனநாயகத்தை” பிரதிபலிக்கும் சபையையும் காட்டுவதால் பயங்கரவாதப் பாவதோசமும் நீங்குமென.
இதைக் கண்ணுற்ற ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஐயகலா மகேஸ்வரன் “முன்னாள் போராளிகளை சீருடையுடன் அழைத்து வந்து காட்டிக்கொடுத்து விட்டீர்கள்!” பாராளுமன்றுக்கு அழைத்து வரப்பட்டிருப்பவர்கள் முன்னாள் போராளிகள் அல்ல. அவர்கள் எமது உறவுகள். எனது சகோதரிகள். அவர்களுக்கு சீருடை அணிவித்து அழைத்து வந்து காட்டிக் கொடுத்து விட்டீர்கள் என சபையில் ஆவேசப்பட்டார்.
அமைச்சர்களே! உங்களுடைய சகோதரிகளாக இருந்தால் இப்படி செய்வீர்களா? சீருடை அணிவித்து முன்னாள் புலி போராளிகள் என ஏன் பகிரங்கப்படுத்த வேண்டும்? என்றும் அவர்கள் என்ன காட்சிப்பொருட்களா? என கேள்வியெழுப்பினார்”. இதற்கூடாக சொல்லப்படுவதையாவது நவீன புலியெதிர்ப்பாளர்கள் கண்டு கொள்வார்களா?..
விடுதலைப்போர் பற்றிய புரிதலின்றி, தாம் நம்பிய தம்மின விடுதலைக்காக போராட்டக்களம் சென்று போராடி மடிந்த இப்போராளிகளை “யாருக்காகவோ செத்தார்கள்” என அவர்களின் போராட்ட வாழ்வை, தியாகத்தை “புலி அரசியலென” புறந்தள்ளுவது சமூக விஞ்ஞான அரசியலின் பாற்பட்டதொன்றல்ல. அத்தோடு அவர்களின் போராட்ட வாழ்வியலின் அவலங்களை அரசியல் கலை இலக்கிய வடிவங்களுக் கூடாக சொல்பவர்கள், எழுதுபவர்கள், அதையொட்டிய நிகழ்வுகளை நடாத்துபவர்கள் எல்லாம் “அசல் புலிகளென” முத்திரை குத்துவது அரசியல் பாமரத்தனத்தின் உச்சமே!
இப்போராளிகள், இந்நிலைக்கு ஆளானதில் எம் சமூகத்திற்கும், எமக்கும் எவ்வித பொறுப்போ-பங்கோ இல்லையா? “பிரபாகரனும் புலி அரசியலும்” வானத்தில் இருந்து விழவில்லை. அது எம் சமூகத்தின் விளை பொருள். எமது சமூக கட்டமைப்பு, அதன் கடந்தகால அரசியல் சிந்தனைச்-செயற்பாட்டுத்தளத்தின் பெருவோட்டம் எப்படி தமிழ்த் தேசியத்தின் அரசியலாகியது! இதை வரலாற்றுப் பரிணாமத்திற் கூடாக பார்த்தால் விடையாக வருவது மேற்சொன்னதிற்கான காரணிகளே!
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர் இன்னும் முற்றுப்பெறவில்லை. இப்போரை
அடுத்தகட்ட விடுதலைப்போராக மாற-அல்லது மாற்ற வேண்டுமானால், கடந்த முப்பது வருடகால புலிகளின் அரசியல், அதற்கூடான ஆயதப்போராட்டம் பற்றியதோர், சரியான மதிப்பீடுகள் தேவை! இவை சரியான புரிதல்களுக்கூடாக எட்டப்படவேண்டும்.
இவைகொண்டே தமிழ் மக்களுக்கு இன்று சரியான அரசியல் தலைமையற்றதோர் வெற்றிடத்தின் வெளியை நிரப்பமுடியும். சிந்திக்க வைக்கமுடியும்.
அகிலன்
17/12/2011