உலகில் ஆணைக்குழுக்களுக்கு பஞ்சமில்லா நாடு நம்நாடுதான்! நாளை மகிந்தாவின் மலசலகூடத்தில் பழுதேற்பட்டாலும் அதற்கான காரணங்களை கண்டறியக்கூட ஆணைக்குழு அமைப்பார். துப்பரவாளி கண்டிப்பாக குற்றவாளியாகி நீதமன்றத்தில் நிறுத்தப்படுவார்! அந்தளவிற்கு கசடற கற்றறிந்த நிபுணர்களையெல்லாம் மகிந்தா தன் ஆணைக்குழுக்களுக்குள் அரவணைத்திருக்கின்றார்!
இப்பேர்ப்பட்ட “ரொயிலற்” நிபுணர்களைக் கொணடதுதான், மகிந்தாவினால் நியமிக்கப்பட்ட “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்… நல்லிணக்க ஆணைக்குழு”
சென்றவாரம் கொழும்பில் உள்ள ஆசிரியரோடு தொலைபேசியல் கதைத்துக் கொண்டிருந்தபோது அவருடைய வீட்டிற்கு வந்து போகும் ஓர் சிங்கள மாணவன் இது பற்றி சொல்கையில், இது “அவருக்காக அவரால் நியமிக்கப்பட்டவர்கள் பொய்யைத்தானே தயாரிப்பார்கள், அதுதானே பாராளுமன்றம் வரவுள்ளது” என கிண்டலாக சொல்லிச் சிரித்தானாம். இதை யார் இப்படி சொன்தென கேட்டபொழுது, வீட்டில் தகப்பன் தொலைக்காட்சி செய்தியைப் பாரத்துக்கொண்டிருந்தபோது மேற்கண்டவாறு சிரித்துக்கொண்டு சொன்னாராம்!
இதொரு வீட்டின் அபிப்பிராயமல்ல தேசிய சர்வதேசத்தின் அபிப்பிராயமும் அப்படித்தான் இருக்கின்றது. அதனால்தான் சர்வதேச மன்னிப்புச்சபைகூட தாம் எதிர்பார்த்ததே நடைபெற்றுள்ளதென இன்று கட்டியம் கூறியுள்ளது!
முள்ளியவாய்க்காலில் 2009-மேயின் நடுப்பகுதியில் நடைபெற்ற போரில், இலங்கையின் வரலாற்றில் நடைபெறாத மாபெரும் மனிதப் படுகொலையே நடைபெற்றது. பல மாதங்களாக மூன்று லட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்திவதைக்குள்ளாக்கப்பட்டார்கள்.
இதை போரில் சிறிய தொகையினரே கொல்லபட்டார்களென இந்தக் கற்றறிந்தவர்கள் சித்தரிக்கின்றார்கள்! இம்மூன்று லட்சம் மக்கள் பற்றி எதுவுமேயில்லை. இதற்கப்பால் வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியோ, பாலியல் வன்முறைகள் பற்றியோ ஓர்வரிதன்னும் எழுதப்படவில்லை.
இவற்றோடு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவோ அல்லது குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தவோ சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை. சிறிலங்காப் படைகளால் புரியப்பட்ட மோசமான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்த பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகள்மீதுநடத்தப்பட்ட ஆட்டிலறித் தாக்குதல்கள் குறித்து எந்தக் குற்ற விசாரணைகளுக்கும் அழைப்பு விட ஆணைக்குழு தவறியுள்ளது.
பாரதப்போரில் கர்னன் தன் பாசுபதாத்திரத்தை அர்ச்சுனன் மேல் மூன்று முறைக்குமேல் விடவில்லை. அதேபோன்று இலங்கை ராணுமவம் பொதுமக்கள் மீதல்ல, புலிகள் மீது ஐந்து தடவைகளுக்கு மேல் செல்ப்பதாத்திரத்தை ஏவவில்லையாம். ஏனெனில் நடைபெற்றது “பாரதத்தின் துணைகொண்ட” பாரத தர்ம யுத்தமல்லவோ?
இதுபோக எல்.ரி.ரி.ஈ. யின் அதிகாரத்தில் இருந்த பிரதேசங்களை மிகவும் அவதானமாக கைப்பற்றுவதற்கு எடுத்த செயற்றிறன் குறித்து ஆணைக்குழு திருப்தி அடைகிறது.!
சகல தகவல்களையும் சந்தர்ப்பங்களையும் நன்கு அவதானித்த பின்னர் ஆணைக்குழு யுத்த சூன்ய பிரதேசங்களில் பொது மக்கள் துப்பாக்கி பிரயோகங்களின் போது காயமடைந்து அல்லது உயிரிழப்பை எதிர்நோக்கியிருந்தாலும் ஆயுதப் படையினர் பொது மக்களை இலக்கு வைத்து செயற்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது.
ஆயினும் எல்.ரி.ரி.ஈ யினர் பொது மக்களை இலக்கு வைத்து அவர்கள் யுத்தம் நடக்கும் பிரதேசங்களிலிருந்து தப்பிச் செல்வதற்கு எத்தனித்த போது சுட்டுக் கொன்றமையும் மற்றும் தரைக் கண்ணிவெடிகளினால் பொது மக்கள் மரணத்தைத் தழுவியதுடன் காயமடைந்தமையும் நந்திக் கடல் ஏரியைக் கடந்து தப்பிச்செல்லும் பதற்ற நிலையில் பொது மக்கள் பாதிப்பிற்குள்ளானமையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமாகும்.
போரில் சிறிய தொகையினர் கொல்லப்பட்டதில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிதேசங்களை நிதானமாக கைப்பற்றியதில் ஆணைக்குழவிற்கு பரம திருப்தீ.
சூன்யப் பிரதேசங்களில் ஆயதப்படையினரால் பொதுமக்களுக்கு எவ்வித இழப்பும் இல்லையென்ற தானெழுந்தவாரியான தீர்மானம்! எல்லாவற்றிற்கும் புலிகளே பொறுப்பெனக் கண்டுபிடித்ததெல்லாம் பேரினவாதக் கற்றறிவல்லவோ? நாணூறு பக்கங்களில் சொன்ன பொய்களைவிட மேலதிகங்கள் எல்லாம் கற்பனை கொண்ட அண்டப்புழுகுகள் அல்லவா!
இதனால்தான் சுதந்திரமான அனைத்துலக விசாரணக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக நியுயோர்க்கை தளமாக கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அப்படியொன்று நடந்தால் முதலில் குற்றவாளிகளாவது மகிந்த-கோத்தபாயாவை விட, இப்பொய்களை அறிக்கையாக வடித்த ஆணைக்குழுவினர் தான்!
சரி பொய்களை விட்டு இவர்கள் சொல்லும் சிற்சில உண்மைகளையாவது பார்ப்போம்
பாரதி-கருணாகுற்றவவாளிகள் எனின் பிள்ளையான்!?
பாரதி, கருணா, ஈபிடிபி சீலன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை வேண்டும்: நல்லிணக்க ஆணைக்குழு
சட்டவிரோத ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆணைக்குழு விஜயம் செய்தபோது வழங்கப்பட்ட பல சாட்சியங்களின்படி, இத்தகைய சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது எனவும் இடம்பெற்றததாக கூறப்படும் பல கடத்தல்கள், தவறான சிறைவைப்புகள், கப்பம் வசூலித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் வாழ்வதற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டன எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதி என்பவர் கிழக்கு மாணத்தில் பல கடத்தல், கப்பம் வசூலித்தல் முதலான பல குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 பொலிஸார் சகிதம் கடத்தப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், அச்சம்பவத்தில் கருணாவினதும் ஏனைய எல்.ரி.ரி.ஈ. தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பு குறித்து கூறினார்கள்.
ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய உத்தரவிடப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கொலை குறித்து அவர்கள் தெரிவித்தனர்.
கருணா எனும் முரளிதரனிடம் ஆணைக்குழு இது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அவர் இக்கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். எனினும் மேற்படி 600 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கொலை குறித்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
இக்கொலைகளின் தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் அது கொண்டுள்ள தன்மை காரணமாக இவ்விடயம் முழுமையான விசாரணைக்குரியது அத்தோடு ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கப்பம் வசூலித்தல் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. ஈபிடிபிக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேஜர் சீலன் என்பவர் தொடர்பாக கடத்தல், கப்பம் வசூலித்தல், பாதுகாப்புப் படைகளின் சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளைடித்தமை போன்ற பல குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் கவனத்துக் கொண்டுவரப்பட்டன.
இதை தொடர்பாக அப்பகுதி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு ஆணைக்குழு கொண்டு வந்தபின் மேஜர் சீலனின் சகா ஒருவர் கைதானார். எனினும் குறித்த பிரதான குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார்.
இவர்களெல்லாம் குற்றவாளிகள் எனின் பிள்ளை பிடிக்கும் பிள்ளையான்…பிள்ளையான்கள் எல்லாம்!?…
.-அகிலன்
18/12/2011