Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பினரை அறைகூவி அழைத்துக் களைத்துவிட்டதாம் அரசு…”கம்யூனிஸ்ட்”குணசேகர

தெரிவுக்குழுவில் அரசு கூட்டமைப்புடன் கரம்போட் விளையாடப்போகின்றதோ?

நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பது பொதுவானதொரு பேச்சுமேடை. இதில் எந்தவொரு தரப்பினரும் தமது நிலைப்பாட்டைச் சுதந்திரமாகஅறிவிக்கலாம்.! புலம் பெயர் தமிழர்களின் ஆலோசனைக்கமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்கின்றார் குணசேகர.

இந்தப் பாவப்பட்டது எங்குதான் அமைச்சராகவுள்ளது. இலங்கையிலா? ரஸ்சியாவிலா? கூட்டமைப்பு உங்கள் தானைத்தலைவனுடன் கதைத்து, பேச்சுவார்த்தையில்  “உலக சாதனை”யே படைத்து களைத்து விட்டது.

இனித் தெரிவுக்குழுவிற்கு வந்தால் கரம்போட்தான் விளையாடலாம்!

நீங்களோ மாக்சிஸத்தை, துலைத்துவிட்டு “மகிந்தயிஸத்தில்” மாண்டுள்ளீர்கள்! பேரினவாதக்கண்ணாடி அணிந்ததில் உங்களுக்கு சகலதும் “மகிந்தயிஸசமாக” தெரிய, அந்த “யிஸத்தில”  தொங்கி தத்துவங்கள் சொல்கின்றீர்கள்!

1958-ல் தனிச்சிங்களச் சட்டத்தின் போது உங்கள் நிலையென்ன? ஒருமொழி இருநாடு, இருமொழி ஒருநாடு என்பதே. இருந்தும் தேசிய இனப்பிரச்சினையைக் கணக்கில் கொண்டு கம்யூனிஸட்கட்சி பிரதேச சுயாட்சியை முறையை தன் பிரதான கொள்கையாக கொண்டிற்று.

அப்போ தாங்களும் பிரதான சிகப்புசட்டை “செவ்வீரனாக” வீற்றிருந்திருப்பீர்கள் தானே! மாநில சுயாட்சிக் கோட்பாட்டின் முக்கிய அம்சங்களில் “வடகிழக்கு தமிழர் தாயகம், அதற்கமைய வடகிழக்கின் நிர்வாகங்களை அதுவே கவனிக்கும்” குறிப்பாக காவல்துறை காணிப்பங்கீடு அதன் அதிகாரத்திற்குட்பட்டதே!

இதுவே கடந்த அரை நூற்றாண்டின் தமிழ்-முஸ்லிம் தேசிய இனங்களின் அபிலாசையாகும்!

இதைத்தானே கூட்டமைப்பும் தன் பேச்சுக்களுக்கூடாக கேட்டுக்கொண்டிருக்கின்றது. இதைக் கேட்டால் இதுபுலிகளின் கோரிக்கை, கூட்டமைப்பு புலிகளைவிட மோசமென அவர்களைக்கூட பப்பா மரத்தில் ஏற்றுகின்றீர்கள். தங்களுக்கு “மாக்சிஸ மறதிதான்” என்றால் வரலாற்று மறதியும், அதை திரிக்கும் “திரிபும்” கூட வந்துள்ளது. எனெனில் உங்களின் திரிபுக்கூட்டம், பேரிவாதக் கூடாரத்தின் நிழலில் அல்லவா அரசியல் பிழைப்பு நடாத்துகின்றது!

தங்களின் கடந்த அரை நூற்றாண்டின் மக்கள் விரோத–இனவாத அரசியல் நிலைப்பாட்டால், இலங்கையில் உண்மையான கம்யூனிஸ்ட்டுக்களைக் கூட, மக்கள் இனம் கண்டுகொள்ளத்  தவறுகின்றனர்!.

அவர்கள் சொல்லும் சரியானவைகளைக்கூட கிரகிக்க (இவர்களும் நாளை அப்படித்தான்) தயாராற்ற நிலைக்குள்ளாகின்றார்கள். இந்நிலையில்தான் மகிந்தாவும் கம்யூனிஸட் கட்சியின்  கோரிக்கையை புலிகளின் கோரிக்கைகள் என்று உளறுகின்றார்! அதற்கு அவர் சொல்லும் காரணங்களுக்கும் நீங்களும் ஆமாம் சாமி போடுகின்றீர்கள்! உங்கள் அரசியலின் துணை கொண்டுதான், பிள்ளையான், கருணா போன்றவர்கள் கூட தேசிய இனம், தேசிய இனப்பிரச்சினை, சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, தமிழர்தாயகம் பற்றியெல்லாம் “வலு சிம்பிளாக” விளக்கங்கள் கொடுக்கின்றார்கள்.

இலங்கை முழுவதும் தமிழன் வாழலாம், ஏன் வடகிழக்கில் சிங்களவர்கள் குடியேறக்கூடாது என்கின்றார் கருணா அம்மான் என்கின்ற தத்துவவியலாளன். வடக்கிலிருந்து கிழக்கு பிரியலாம், ஆனால் கிழக்கில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு பிரதேச சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு “உள்ளக அலகு” கொடுக்ப்பட்டால் அது கிழக்கை துண்டாடும் என்கின்றார் பிள்ளையான் என்கின்ற நவீன சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டாளன்! பாருங்கள புலிப்பத்தியையும், முஸ்லிம், விரோதம், கொண்ட  தத்துவ வித்தகத்யும்!

உதுகளுக்கெல்லாம் பாராளுமன்றக் கூட்டங்களில், மந்திரிசபைக் கூட்டங்களில் பக்கத்தில் இருக்கும் போது தேசிய இனப் பிரச்சினையின் யதார்த்தம் பற்றி கொஞ்சமாவது சொல்லிக் கொடுக்கத் தெரியாதோ? அது சரி நானும் ஓர் மடையன், நீங்களே உந்தக் கோட்பாடுகளுக்கு மகிந்த “மாக்சிஸரி”டம் தானே கடன் வாங்குகின்றீர்கள், உங்களிடம் போய், அவர்களுக்கு “யதார்த்த விளக்கம்” கொடுக்கச் சொல்கின்றேன். என் புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும்! தவிர…

“காவல்துறை அதிகாரம் கொடுத்தால்தான் வட-கிழக்கிற்கு போகேலாதாம்! மாகாண முதல்வர்களிடம் அனுமதி கேட்கவேண்டுமாம் என்கின்றார், இவ்வளவு சர்வவல்லமை படைத்தவர்”. இந்தியாவிலும் இதுதான் நிலைமையாம். ஏதோ அம்பேத்காருக்கு பிறகு இவர்தான் இந்திய அரசியல் சாசனம் வரைந்து கொடுத்தவர்போல்!

நாளை இந்தியப் பிரதமர் தமிழகம் வரவுள்ளார். இதில் மத்தியும், மாநிலமும் எதிரும் புதிருமாகவுள்ளன. இரண்டிற்கும் இடையில் பனிப்போர் நடக்கின்றது முல்லைப்பெரியாற்று விவகாரத்தில், இன்னும் பற்பல விடயங்களில்… இப்பேர்ப்பட்ட முரண்பாடுகள் முறுகல்கள் கொண்ட இந்நிலையிலும் மக்மோன் சிங், ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்டா தமிழகம் வருகின்றார்?..அல்லது வரவேண்டும்! இவையெல்லாம் இனப்பிரச்சினை தீர்வை விரும்பா நோக்கிலான்…. “காதில் பூ வைக்கும்” காரணங்களே.

சரி இருக்கட்டும் தெரிவுக்குழு என்பது இனப்பிரச்சினை தீர்வுகான அதியுயர் பீடமோ? காலம் கனிந்துவிட்டது! அதுக்குள் என்னமோ என்னமோ எல்லாம் இருக்கு, தவறவிடாதீர்கள், போனால் கிடையாது, பொழுதுபட்டால் கிடையாது என்கின்ற வியாபாரியின் கூவல் போல் உள்ளது டக்ளஸின் அழைப்பு. அரசோடு கதைக்க முடியாததை அங்கு கதைக்கலாம் என்பது கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவனை, வைகுந்தம் போக வானத்தில் ஏறென ஆகாயத்தைக் காட்டியவனைப்போல் அடம்பிடிக்கின்றார்கள், டக்ளசும்-குணசேகரவும். தெரிவுக்குழு வைகுந்தமல்ல! ஏறுவது ஏறாமல் விடுவது உங்களைப் பொறுத்தது! ஏனெனில் நீங்கள் என்றென்றும் மக்களுக்கானவர்கள் அல்லவே!  ஆலையில்லா ஊரின் இலுப்பைப் பூக்கள் அல்லவா!

அகிலன்

25/12/2011