நாம் என்ன செய்யப்போகின்றோம்!
எமக்காக மக்களா? மக்களுக்காக நாமா?
உருத்திரகுமார ஈழமோ, லாச்சப்பல் ஈழமோ மக்களுக்கானதல்ல!
இலங்கை அரசியல் எப்போது தனிமனித அரசிலாகியதோ, அன்றிலிருந்து “என்னகாக என் அரசியலுக்காகத்தான் மக்கள்” எனும் நிலை தோற்றுவிக்கப்பட்டது!
இலங்கையில் தனிமனித தேசிய அரசியலின் பிதாமகன் ஜெ.ஆர். ஜெயவர்த்தன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலான இப்பரிணாமத்தில் மைந்தன் மகிந்தாவும் வளர்த்தெடுக்கப்பட்டதில், அவர் அதன் முடிசூடா மன்னராகியுள்ளார்.
இம்மன்னன் தான் இந்நாட்டு அரசனான போது, தமிழ் மக்கள் தன்னாட்டின் “கொத்தடிமை”களாகத்தான் இருந்தார்கள், அவர்களை நாகரிக சமூகமாகவாக்குவதற்கு, இந்நாட்டு தேசிய இன மக்களாக்குவதற்கு, நான் பற்பல முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன் என பற்பல பஞ்தந்திரக் கதைகள் சொல்கின்றார். இதை ஆமென்பதற்கும் அக்கம் பக்கத்திலும் சில நவீன அடிமைகள்.
ஆம் சிங்களப் பேரினவாதம் கொத்தடிமை மனப்பாங்கு கொண்டதாலேயே, தமிழர் தாயகத்தை திறந்த வெளிச் சிறைச்சாலையாக்கி, அதில் தமிழ்த்தேசிய இனத்தினை அடைத்து வைத்துள்ளது. பறிக்கபட்ட, இல்லாதாக்கப்பட்ட உரிமைகளை தர மறுகின்றது.
நீங்கள் கேட்பதையல்ல, நாம் தருவதைப் பெறுங்கள் என்கின்றது. நீங்கள் “பக்குவப்பாடற்ற நாகரிகமற்ற சமூகமாக உள்ளீர்கள்”. நீங்கள் கேட்பதைத் தந்தால் என்னை சிறையில் கூட அடைத்து விடுவீர்களென காரணம் சொல்கின்றது!
கடந்த காலங்களில் காணாமல்போனவர்களின் சொந்த-பந்த உறவுகள், தங்கள் உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டு, அதற்காக முன்னெடுக்கும் சாத்வீக வழியிலான, ஐனநாயகப் போராட்டங்களை கொடிய கரம் கொண்டு அடக்குகின்றது. அதை தலைமை தாங்கி முன்னெடுக்கும் மனிதவுரிமை ஐனநாயகவாதிகள் கடத்தப்படுகின்றார்கள். மொத்தத்தில் எமது நாட்டின் நடப்பு ருஸ்ய ஜார் மன்னனின் ஆட்சியை நினைவுபடுத்துகின்றன.
இந்நிலை கொண்ட எம்நாட்டின் தமிழ் மக்களின் நாட்டு நடப்பு இப்படியிருக்கின்றது. இந்நடப்பு விளங்காது, புலம்பெயர்வின் எம்மவர்களும், “என் தமிழ் ஈழ அரசியலுக்குள் தான், என் தமிழ் ஈழப் பிரகடனத்துக்குள் தான் தமிழ் மக்கள் வர வேண்டும் என “புலன் பெயர்ந்து” புலம்புகின்றார்கள். வராவிட்டால் நடப்பதே வேறு… எனவும் வெருட்டுகின்றார்கள்.
இன்றைய புலம்பெயர் “தமிழ் ஈழங்கள்” பலவிதம். நெடியவன், கொடியவனாக, நாடு கடந்தாக, பாரிஸ் லாச்சப்பல் தமிழ் ஈழமாக, அதன் பிரகடனங்கள், முத்திரைப் பதிப்புக்கள் ஒருபுறம்; மறுபுறத்தில் ஓவ்வொரு நாட்டிலும் ஒவ்வோர் தமிழ்ஈழக் குறுநில மன்னர்கள். இவர்களுக்குள்ளும் ஒவ்வோர் குறுநிலக் (பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? இன்னும் பற்பல) கொள்கைகள். அதற்காகவும் அடிபிடி சண்டைகள். இவற்றிற்கு மத்தியிலும் விடுதலையின் பெயரால் மக்களிடம் சேர்த்த பணத்துடனும் அரசோச்சுகின்றனர்.
உண்மையில் இவையெல்லாவற்றையும் கிண்டலாக அல்ல, மனவேதனையுடன் நோக்க வேண்டியுள்ளது. உண்டி கூழுக்கு அழுகின்றது, கொண்டை பூவிற்கு அழுகின்றது எனும் நிலையில் புலமும், புலம் பெயர்வும் உள்ளது. தாயக மக்களின் அவல வாழ்வுடன் கூடிய அபிலாசைகளோடு, புலம்பெயர் அரசியலாளர்களின் அரசியல் வாழ்வு பின்னிப் பிணைந்திருந்தால் இந்த கூத்து, கும்மாளங்கள் இடம்பெற்றிருக்காது.
இங்கிருந்து தான் எமக்காக மக்களா? மக்களுக்காக நாமா? என்கின்ற கேள்வி எழுகின்றது. சமகால தேச-கால-வர்த்தமானத்தில், நம்நாட்டின் இருந்த கொஞ்ச நஞ்ச ஐனநாயகமே பறிக்கப்பட்டு இருக்கின்றது. இப்படி பறிக்கப்பட்டவற்றை, இழந்தவற்றைப் பெறுவதற்கான ஐனநாயகப் போராட்டம் முதன்மை பெறுகின்றது.
நம் நாட்டில் எழுத்து, கருத்து, பேச்சு, ஊடக சுதந்திரம் பற்றி வாய் திறக்கவே முடியாது. இறந்த ஓருவருக்கு கூட ஓர் அஞ்சலிக் கூட்டமே நடத்த முடியாத நிலை. இந்நிலையில் அமுங்கியுள்ள எம்சமூகத்திற்கு, மேலே சொன்னவைக்காக போராடப் புறப்படு என்றால், அவ்வரசியல் மக்களுக்கானதானல்ல. என் அரசியலை ஏற்றுக்கொள் எனும் திணிப்பரசியலாகும். இது கடந்த முப்பதாண்டின் பழக்கதோச பலாத்கார அரசியலாகும். இதைவிடுத்து யதார்த்தம் கொண்டு சிந்திக்க வேண்டும்.
மனிதகுல வரலாறு எப்போதும் சமாந்தர நேர் கோட்டில் சென்றதும் – செல்வதும் இல்லை. இது மேடு, பள்ளம, இடறல்களுக்குள்ளானது. எம்மினம் இடறல்களுக்குள்ளிருந்து, பேரினவாத அடக்குமுறை அமுக்கிலிருந்து விடுபடவில்லை. நின்மதிப் பெருமூச்சு என்பதைக் கூட விடமுடியா நிலை. இந்நிலையிலிருந்து விடுபட அங்கு நடைபெறும் ஐனநாயக வெகுஐனப் போராட்ட சக்திகளின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
இதற்கூடாகவே, எம்மக்களை போராடும் சக்திகளாக்க முடியும். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியே அடக்கலால் அடக்க முடியாதெனும் நிலையில், அடங்கலின் போராட்ட வீச்சு பெரும் போராட்ட சக்தியாக பர்ணமிக்கும். இந்நிலை நோக்கியதான வேலைகளே சமகாலத்தின் பிரதான வேலைகளாகும். இது சிந்தனைப் பரப்பு. செயலாற்றல்களுக்கூடாக சென்றடைய வேண்டும். இதுவே இன்று மக்களுக்காக நாம் செய்யும் அர்த்தபுஸ்டியுக்க அரசியலாகும்.
அகிலன்
01/01/2012