Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நம்புங்கள் “லாச்சப்பல் தமிழீழம்” நாளை கிடைக்கும்!

இவ்வாரப் “பொங்கல்” மலிவு விற்பனைக்கான விளம்பரம்!

நாடுகடந்த தமிழ் ஈழத்தின் “தலைநகராக” இப்போ பாரீஸின் லாச்சப்பல் பரிமாணம் பெற்றுள்ளது. இதற்கூடாக “தமிழ்ஈழம்” இப்போ  “இம்போர்ட்-எக்ஸ்போர்ட்” பொருளாகியுள்ளது. அதற்கான துறைமுகமாக லாச்சப்பலை பிரான்ஸ அரசு அங்கீகரித்துள்ளது! பாருங்கள் இதற்கூடாக என்னமோ-என்னமோ எல்லாத்தையும் ஏத்தி-இறக்கி—பினாத்தி நடாத்துகின்ற தமிழ்ஈழ வியாபாரக்கூத்தையும், அதற்கான விளம்பரங்களையும்:

“பாரியதொரு தமிழினப்படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைத் தேர் தற்போது முன்நகர ஆரம்பித்துள்ளது. ‘தமிழீழம் இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினமே இல்லை’ என்ற சிங்கள தேசத்தின் கற்றுக்கொடுக்கும் தொடர் பாடம் இந்த விடுதலைத் தேரின் முன்நகர்வை வேகப்படுத்தியுள்ளது. தேசிய கூட்டமைப்பின் இலக்குத் தவறிய பயணத்திற்கு எதிராக தமிழீழத்தின் மனச்சாட்சிகள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து புலம்பெயர் தேசங்களில் தமிழீழ இலட்சியத்தின் மீது போர் தொடுத்தவர்களும் தற்போது மௌனித்துப் போயுள்ளனர்”………..

“போர்க் களத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் களத்திலும் விடுதலைப் புலிகளே பலத்தோடு உள்ளார்கள் என்பதை சிங்கள  தேசமும் ஒப்புக்கொள்கின்றது. விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்கின்றார்கள் என்றஅவலக் குரல்கள் சிங்களத் தலைநகரில் உரத்துக் கேட்கின்றது. தொடர்ந்தும் மிதிபடும் மண்புழுவுக்கும் கொடுக்கு முளைக்கும் என்ற கூர்ப்பியல் நியதியை சிங்கள தேசம் புரிந்து கொள்ள மறுப்பதால்விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியை தனது பருத்த இராணுவத்தால் தடுத்து நிறுத்தும் மனப்பாலுடன் ஆறுதல் கொள்கின்றது”. என இப்படியொரு “பாலைவன அரசியல் ஆய்வுடன்” அநாமதேயக் கண்டுபிடிப்பு.

 

பிரான்சில் தமிழ்த்தேசிய விடுதலைத் தளத்தினால் வெளியிடப்பட்ட முத்திரை அந்த இடைவெளி சூத்திரத்தின் வெளிப்பாடே. அந்தமுத்திரைகளுக்கு பிரான்ஸ்வாழ் தமிழர்கள் வழங்கிய ஆதரவும் ஆர்ப்பரிப்பும் தமிழீழ விடுதலையை அவர்கள் வென்றெடுத்தே ஆவார்கள் என்பதையே உணர்த்தியது. தேசியத் தலைவரின் படத்துடன் கூடிய முத்திரை ஒன்றுக்காக 100 ஈரோக்கள் கொடுக்கவும் தயாராக பாரிஸ் லாசப்பல் கடைத்தெருவெங்கும் அலைந்து திரியும் பல தமிழ் உணர்வாளர்களைப் பார்க்க முடிகின்றது.”

“தமிழீழம் கனவல்ல என்ற யதார்த்தத்துடன் யாரும் மோத முடியாது என்பதை சிங்கள தேசம் மட்டுமல்ல சிங்கள தேசத்தின் தமிழ்ப் புலனாய்வாளாகளும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்!முள்ளிவாய்க்காலில் இருந்து முன்நகர ஆரம்பித்திருக்கும் தமிழீழ விடுதலைத் தேரை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.”

“தேசியத் தலைவரின் படத்துடன் கூடிய முத்திரை ஒன்றுக்காக 100 ஈரோக்கள் கொடுக்கவும் தயாராக பாரிஸ்  லா சப்பல் கடைத்தெருவெங்கும் அலைந்து திரியும் பல தமிழ் உணர்வாளர்களைப் பார்க்கமுடிகின்றது!”

விரல் விட்டு எண்ணக் கூடிய இந்த அலைந்து திரியும் தமிழீழ (ரசிகர்கள்) உணர்வாளர்கள் உங்கள் முத்திரைக்கல்ல, செக்ஸ் படம் கொண்ட பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு மாத்திரமல்ல, அதனுடான காமலீலைக் காட்சிகள் கொண்ட வீடியோக்களுக்கும் அல்லவா அலைகின்றார்கள்! இதற்கு நூறல்ல, முண்ணூறும் விசுக்குவார்கள்!  இவர்களுக்கெல்லாம் உங்களின் “முத்திரைச் சூட்சுமம்” விளங்காது.  இவர்கள் தான் எதிர்கால தமிழீழ விடுதலைத் தேரை லாச்சப்பலில் இழுக்கப்போகும் கொம்பர்களோ? உங்கள் முத்திரை விற்பனைக்கு ஏன் அவர்களுக்கு உசுப்போத்துகின்றீர்கள்!

இப்போர்ப்பட்ட “விசிறல்”களின் கதைகள் பலவுண்டு.  கேளீர்! இங்கு இரு பாரிய நண்பர்கள். அதிலும் தமிழ் ஈழம்மென்றால்,  அதற்கின்னலென்றால், (“தலைவரே கடைசியில் கையிலெடுக்க மறந்த-மறுத்த சயனற்றைக”க் கூட குடிப்போம்) உயிருடன்
இரோம் என்றிருந்தவர்கள். இப்பவும் உயிரோடு தான் இருக்கின்றார்கள். கேட்டால் “அண்ணைக்கே முள்ளிவாய்க்காலுக்குள் வர புத்தி பேதலித்ததென்றால் எங்களுக்குமா?” என்கின்றார்கள்….

இதுபோன்ற இவர்களில் ஒருவரின் சகோதரி, அங்கு பெண் போராளி, ஒருவாறாக இந்தியா வந்து சேர்ந்துள்ளாள். இவளின் தமயன் தன் நண்பனிடம் கேட்டான் என் தங்கயை நீ திருமணம் செய்துகொள் என்று. திருமணம் செய் என்று கேட்ட நாளிலிருந்து, றூமிலிருந்து வெளியேறியதுடன், இப்போ இருவரும் கதைப்பதேயில்லை! இதற்கு இவ்வுத்தம–உற்ற நண்பன் சொல்லும் காரணங்கள், “நடத்தை கெட்ட-சாதி குறைந்த ஒருத்தியை எனக்கு கட்டியடிக்கப்பட்ட பார்க்கின்றான். இவளின் அண்ணன். இவன் எனக்கு நண்பனோ”? இப்படிச் சொல்கின்றாராம்.

இரு நாட்களுக்கு முன் லாச்சப்பலில் முன்னணி சஞ்சிகையை கடையொன்றிற்கு போட்டுவிட்டு வெளியே வந்த பொழுது, ஓர் இளைஞன் இரு புத்தகங்களை வாங்கி விட்டு, சிறிது நேரம் சமகால அரசியல பற்றி கதைத்துக் கொண்டிருக்கும் போது வாருங்கள் தேநீர் குடிப்போமென கடையொன்றிற்கு அழைத்துச் சென்று சொன்ன (தனதும் தன் உற்ற புலி நண்பனதும்) கதையிது! இப்போ “மாற்றுக் கருத்தாளாளனான” ஓர் நண்பனே தன் தங்கையை திருமணம் செய்ய முன்வந்துள்ளதாக மிகச் சந்தோசத்துடன் சொல்லி, தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்து,  என் தொலைபேசி இலக்கத்தையும் வாங்கிச் சென்றார்.

 

 

“தமிழ் ஈழம்  இல்லையேல் தமிம் மக்களுக்கு விடிவில்லையென”  சொல்லி முப்பதாண்டுகளுக்கு மேலாக, தமிழ் மக்களை பப்பா மரத்திலேற்றிய உணர்வரசியல், அழிவரசியலாகி முள்ளிவாய்க்காலுக்குள் மூச்சுத் திணறியே மூழ்கிற்று. இனிமேல் இவ் உணர்வரசியலுக்குள் உள் நுழைய தாயகத்தின் தமிழ் மக்கள் தயாரில்லை. காரணம் அவர்கள் பட்டறிவிற் கூடாக படித்தது ஏராளம்!

அத்துடன் முன்னனாள் போராளிகள் சிறைக்குள்ளும் வெளியிலும் வெறும் நடைப்பிணங்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் சமூக அங்கீகாரமற்றவர்களாக்கி, அந்நியப்படுத்தபபட்டுள்ளார்கள். ஓர் பெண் போராளி தன்னை சமூகத்தடன் இசைவாக்கி, இசைந்தோட முற்பட்டால், புலமும் புலம்பெயர்வும் அவளை வாளாவெட்டியாக்கின்றது. நீ உயர்சாதியா? கண்ணகியா? கற்பில் சிறந்தவளா? தீக்குளித்து காட்டுவாயா? என இடுப்பிற்கு கீழான “உணர்விற்கு உன்னத யதார்த்தம” காண முற்படும், தமிழ் உணர்வாளர்களுக்கு, தன்மான “இன உணர்வும்”  உண்டோ? இவ்வளவிற்கும் இவர்கள் முன்னாள் போராளிகள், தமிழ் வீர வேங்கைகள். இப்போ இந்நாள் நடத்தை கெட்டவர்கள் இன்னும் என்னென்னவோ…….இந்த லட்சணத்தில் உங்கள் ஈழத்திற்கு முன்னாள் போராளிகள் மீள் எழுச்சி கொள்கின்றார்கள்? இது அரசியல் வனாந்திர பஞ்சதந்திரக் கதைகள் அல்லவா?

கடந்த கால் நூற்றாண்டிற்கு மேலாகவும், இறுதியில் முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்களையும், போராளிகளிகளையும்  கறைபடிந்த கொடிய கரம் கொண்டு அழித்தவர்களுக்கு துணை போனதுதான் புலிகளின் தமிழீழ அரசியல். இந்த அழிப்பை “தம்பியின் பாசையில் சிம்பிளாக இதுவோர் துன்பியல் நிகழ்வு” என்றிடலாமோ?

இம் மாபெரும், அழிவை உயிர்ப்பித்து, கோவில் கட்டி, கும்பாபிசேகம் செய்து, கொடியேற்றி, தேரோட்டம்  எனச்சொல்வது, லாச்சப்பல் (தமிழீழ) வியாபாரத்திற்கு லாயக்கே தவிர, தமிழ் மக்களின் விடுதலைக்கானதல்ல. ஏனெனில் உங்களுக்கும் மக்களுக்கமான இடைவெளி மலைக்கும்-மடுவுக்கும் ஆனதாக உள்ளது.

அகிலன்

08/01/2012