Language Selection

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“முள்ளிவாய்க்காலும் முத்துக்குமாரும் முடிவல்ல…” என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வார்த்தைகள் நிஜமாகி வருகிறது!”

“புலம் பெயர்ந்த தமிழர்கள் எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ அங்கெல்லாம் சுதந்திரத் தமிழீழத் தபால் தலைகளை வெளியிடத் தொடங்கி உள்ளார்கள்”.

இத்தகைய செய்திகளின் தாற்பரியங்கள் எதைத்தான் சுட்டி நிற்கின்றன. வெறும் தமிழ்ஈழ சலசலப்புக்களே ஒழிய, அதற்குள் பணியாரங்கள் இல்லை! காசி ஆனந்தன் தன் இளமை அரசியலில் உணர்ச்சிக் கவிஞராகவும், “போராட்டவீரனாகவும்” டப்பாங்கூத்து அடித்தவர். “தமிழ்த் துரோகிகளுக்கு” வரைவிலக்கணம் கொடுத்தவர். அவர்களுக்கு இயற்கை மரணம் இல்லையென இளைஞர்களுக்கு உசுப்பேத்தியவர்.  ஓர் கவிஞன் சொன்னதுபோல,

 “வேலி முருக்கங்கொப்பை முறிச்சவன்
வெளிச் சிவர் மூலையில் ஒண்டுக்கிருந்தவன்
கொடியில தொங்கின சீலை எடுத்தவன்
வீடியோக் கசற்றைக் கொண்டு போனவன்”

 இவர்கலெல்லாம் இவரின் “துரோகிக் கண்டு பிடிப்பால்” பலியானவர்கள்தானே!

கடைசியில் இவரின் தளபதிக்கு கொடுத்த துரோகிப்பட்டமும், தணடனையும், தனக்கும் வருமென்றெண்ணி அவருக்கு முன்பு இந்தியாவிற்கு ஓடியவர் தான் இந்தக் காசியண்ணா. இப்போ அங்காலை சுகவாழ்வுடன் இருந்து கொண்டு, ஒரு முள்ளிவாய்க்கால் போதாதென்று, இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு அலுவல் பார்க்கின்றார்.  இதென்ன…? வை திஸ் கொலைவெறி!

இதை “புலன்(ம்) பெயர்ந்ததுகள் தான் ஏதோ சலசலப்பிற்காக செய்யுதுகள் என்றால், ஜே.வி.பி.யில் இருந்து (மூளை) பிரிந்ததுகளும் அல்லவா பிதற்றுகின்றார்கள்.

புலிகளின் முன்னாள் போராளிகள் எம்முடன் இணைந்துள்ளனர் என்று ஏனிந்த மத்தாப்பு அரசியல்?.  உங்கள் தற்திருப்திப்பிற்காக இதை ஏன் இந்த நேரத்தில் சலசலக்கின்றீர்கள்?  இதுதான் “புரட்சி நடாத்தப் புறப்படுவதற்குரிய மூல-தந்திரோபாயமோ”

 “ஆயுதப் போராட்டத்தை விட மக்கள் எழுச்சியே சிறந்தது”… .

“ஆயுதப் போராட்டத்திற்கூடாக அரசைக் கவிழ்ப்பதற்கு இலங்கையில் வழி இல்லை எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறி சில நாள்களின் பின் ஜே.வி.பி. இவ்வாறு கூறியுள்ளது.”

சிறிய மூளை கொண்டவர்கள் கூட  இத்தருணத்தில் அரசைக் கவிழ்ப்பதற்கும் ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கும் யோசிக்க மாட்டார்கள்.”

சரி நாட்டு நிலைமையையும், உங்கள் நிலைமையையும் கணக்கில் கொண்டு சொல்லும் இந்தக் “கேள்வி ஞானப்புத்தி”யாவது, புலிப்போராளிகள் விடயத்திலாவது வரவேண்டுமே? ஏன் இந்தப் பேதலிப்பு? உங்களின் “சிறிய மூளை” கொண்ட அறிவிப்பிலான மாற்றையும், மறுபக்கத்தையும் பாருங்கள்.

 தம்மை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள்,  முன்னாள் போராளிகள் கவலை!

எம்மை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளின் கூற்றுக்கள் எமது எதிர்கால வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது. நாட்டில் யுத்தம் முடிந்து அமைதியான வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்  முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஜே.வி. அமைப்பில், முன்னாள் போராளிகள் தொடர்பு வைத்துள்ளதாக ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்றவரும், நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான உதுல் பிரேமரட்ண  அண்மையில் தெரிவித்திருந்தார்.

 இக் கருத்துக்களால் தாம் அரச புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு மேலும் உட்படுத்தப்படலாம் என விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் அரச படையினர் மத்தியில் பல நெருக்கடிகளையும் இவ்வாறான கூற்றுக்கள் உருவாக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

 சிறிலங்கா உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஜே.வி.பியினருடன் முன்னாள் போராளிகளும் இணைந்து மீண்டும் புரட்சியில் ஈடுபட முயல்வதாக  தெரிவித்திருந்தார்.

 தற்போதும் அரசாங்கம் நாங்கள் புலம்பெயர் தமிழர்  மற்றும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் முன்னாள் போராளிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான சூழலில் தமது அரசியலை வளர்த்துக் கொள்வதற்காக, தம்மை இவர்கள்  பயன்படுத்திக் கொள்வதாக முன்னாள் போராளிகள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த காலப் போராட்டத்தை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தோம். போர்க் காலகட்டத்தின்போது நாம் அனுபவித்த துன்பங்கள் மிகவும் பெரியது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் நாம் பல இழப்புக்களை சந்தித்தோம். அதன் பின் புனர்வாழ்வு பெற்று புதுவாழ்வு தேடி சமூகத்துடன் இணைந்திருக்கின்றோம்.

எனினும் தற்போது படையினர், அரசாங்கம் ஏன் எமது உறவுகள் கூட எம்மை தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகவே பார்க்கின்றனர்.

நாம் நிம்மதியான வாழ்வை மட்டுமே எதிர்பார்க்கின்றோம். தவிர எந்த விதமான அரசியல் நோக்கமும் எமக்கு கிடையாது. நாம் எமது சமூகத்தில் சுதந்திரமான அரசியல் உரிமையோடு வாழவே விரும்புகின்றோமே தவிர, அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இனிமேலாவது எம்மை வைத்து அரசியல்  நடத்தும் முயற்சியில் ஈடுபடாமல், நாம் நிம்மதியாகவும்  சம உரிமையுடன் வாழவும் வழிவகைகளை ஏற்படுத்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 சரி இதுதான் போகட்டும் உங்களின் “கெட்டித்தன அறிவித்தலுக்கு” கிடைத்த வெற்றியைப் பாருங்களேன்!

 ஏ-9 வீதி மூடப்பட்டது!

 

ஏ-9 வீதி போக்குவரத்துக்கள் நேற்று மாலை  மூடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தை நடாத்த வந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே இப் பாதை மூடப்பட்டதாம்.

கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த குகன், லலித்   ஆகியோரை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் போராட்ட இயக்கம், காணாமல் போனோரை தேடியறியும் குழு உட்பட 10 இக்கும் மேற்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்த  சுமார் 1500 பேர் தென்னிலங்கையில் இருந்து 15 பஸ்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி வருகை தந்தனர். இவர்களின் போராட்டத்தை குழப்பும் நோக்குடன் இராணுவத்தினர் ஏ-09 வீதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் வைத்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இவர்கள் பயணித்த வாகனத்தில் குண்டு இருப்பதாக கூறியே தடுத்து வைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இதனால் ஏ-9 பாதை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஓர் போஸ்ரர் அடித்து யாழ்ப்பாணத்தில் ஒட்டி அதன் விளைவின் பட்டறவின்றிய அரசியல் செயற்பாட்டை என்னவென்பது? “ஆயுதம் எடுத்தவன் எல்லாம், விடுதலைப் போராளியும் அல்ல, அரிவாள்-சம்மட்டி பொறித்த செங்கொடியைத் தூக்கியவன் எல்லாம் மக்கள் விடுதலையாளனும் அல்ல. தேச-கால-வர்த்தமானத்தில் மக்கள்-மனதை, அவர்தம் அபிலாசையை கணக்கில் எடுக்காத அரசியல் மக்களுக்கானதல்ல, இந்நெறியில்”நாம் நிம்மதியான வாழ்வை மட்டுமே எதிர்பார்க்கின்றோம். தவிர எந்த விதமான அரசியல் நோக்கமும் எமக்கு கிடையாது. நாம் எமது சமூகத்தில் சுதந்திரமான அரசியல் உரிமையோடு வாழவே விரும்புகின்றோமே தவிர  அரசியலில் ஈடுபட விரும்பவில்லையெனும் முன்னாள் போராளிகளின் சமகால “தந்திரோபாய அரசியல் அறிவிப்பை” இந்த சலசலப்புக்காரர்கள் புரிந்து கொள்வார்களா?

-அகிலன்

(18/01/2012)