கலை இலக்கியம் என்றும் அரசியல் என்னும் பெயரிலும் பொறுக்கிகள், தம்மைத்தாம் முற்போக்காளராக முன்னிறுத்திக் கொள்கின்றனர். பெண்களை பாலியல்ரீதியாக நுகர்கின்ற ஆண்களின் ஆணாதிக்க வேட்டைக்கு, கலையும் இலக்கியமும் அரசியலும் பயன்படுத்தப்படுகின்றது.

2009 புலிக்கு பின்பாக ஆணாதிக்க பாலியல் வக்கிரமானது - புலத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் அரங்கேறி வருகின்றது. இதை நியாயப்படுத்தும் இலக்கிய கூட்டுக் களவாணிகள், தங்கள் தர்க்கவியலுடன் களமாடுகின்றனர். அவர்களின் ஆணாதிக்க தர்க்கத்தையும் - இதன் சிந்தனைமுறையையும் இந்தக் கட்டுரை ஆராயவில்லை. 

சமூகத்தின் பெயரில், தேசத்தின் பெயரில்.. சினிமா தொடங்கி அதிகாரங்கள் வரை, பெண்கள் பாலியல்ரீதியாக பல்வேறு வேசங்களில் வேட்டையாடப்படுகின்றனர். இவை இணங்கியும், இணங்காமலும்… நடந்தேறுகின்ற, பாலியல் வேட்டையாக இருக்கின்றது. இந்தப் பாலியல் வேட்டை கலை இலக்கியம் மற்றும் அரசியலுக்கு விதிவிலக்கா என்ன!? 


கலை இலக்கியம் மற்றும் அரசியலில் பெண்ணை பாலியலுக்கு இணங்கவைக்கும் போலி அறிவியல் கோட்பாடுகளுடன், ஆணாதிக்கம் வேட்டையாடுகின்றது. அறிவால் இணங்க வைக்கும் பாலியல் வேட்டையும், அதை நியாயப்படுத்தும் கேடுகெட்ட பொறுக்கித்தனத்தில் இறங்கிவிடுவது நடந்தேறுகின்றது. 

மக்களைச் சார்ந்திருக்காத, சமூக அறமற்ற கலை, அரசியல் இலக்கிய கோட்பாடுகள், முதலாளித்துவ சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. இங்கு பாலியல் என்பது, மூலதனத்தின் கண்ணோட்டத்தில் நுகர்வாக்கவும் - அதற்கு அவளை இணங்கவைப்பதும் தான்.      

தனியுடமையை எதிர்க்காத கலை, அரசியல் இலக்கியத்தின் நோக்கமென்ன? அதாவது முதலாளித்துவ கலை, அரசியல் இலக்கியக் கண்ணோட்டமானது, தனிமனித இலக்கை அடைவதற்கான ஒரு கருவி. அவ்வளவு தான். தனிமனித புகழ்;, பணம், நுகர்வு தொடங்கி பெண்ணை விதவிதமாக நுகர்வது தான். அதாவது எல்லாவற்றையும் அடைவதற்கும் - அதை நியாயப்படுத்துவதற்காகவே, கலை, அரசியல் இலக்கியம் முதல் முதலாளித்துவ சமூக இயக்கங்கள் வரை முன்னிறுத்தப்படுகின்றது. இதுதான் தனியுடமைவாதத்தை எதிர்க்காத கலை, அரசியல், இலக்கியத்தின் பொதுக் கண்ணோட்டமும் - தனிமனித இலக்குமாகும்.   

புலம்பெயர் இலக்கியம் முதல் இலங்கையின் தமிழ் இலக்கியம் வரை, தனியுடமையை ஆதரிக்கின்றதும், தமிழ் சமூகத்துக்கேயுரிய வெள்ளாளிய தனியுடமைவாதத்தைத் தளுவியே தன்னை முன்னிறுத்துகின்றது. இந்தத் தமிழ் வெள்ளாளிய கலை, இலக்கியம், சமூக இயக்கங்கள் … தங்கள் முதலாளித்துவ தனியுடமைவாத உள்ளடக்கத்தை மூடிமறைக்கவே, இடதுசாரிய - முற்போக்கு வேசம் போடுவது நடந்தேறுகின்றது. அதேநேரம் வர்க்கப் போராட்ட நடைமுறைக்கு வெளியில் திண்ணைப் பேச்சு இடதுசாரிகளுடன் கூடிக்குலவுகின்றதன் மூலம், தங்கள் தனியுடமைவாத வேசத்தை முற்போக்காக பூசிமெழுகுகின்றனர்;. வலதுசாரிய தனியுடமைவாதத்தைக் கண்டுகொள்ளாத திண்ணைப் பேச்சு இடதுசாரிகள், கூட்டாக வெள்ளாளிய தனியுடமைவாத சமூக அமைப்பை பாதுகாப்பவராக இருக்கின்றனர். கலை, அரசியல் இலக்கியத்தை முன்வைக்கும் முதலாளித்துவ ஆணாதிக்க வேட்டை நாய்கள் இவர்களுடன் கூடிக்கொண்டு பம்மிக்கொண்டு திரிவதுடன், பெண் வேட்டையில் இறங்குகின்றனர். இடதுசாரியத்தின் பெயரிலும் வேட்டையில் ஈடுபடுகின்றனர். 

தனியுடமையை எதிர்க்காத ஒருவனின் பெண்ணியமானது, முதலாளித்துவ ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆணாதிக்கம் என்பது தனியுடமையுடன் உருவான சமூக ஒடுக்குமுறை என்பதே, சமூக விஞ்ஞான உண்மை. தனியுடமையை ஆதரிக்கின்ற பெண்ணியம் என்பது, முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகத்தால் அலங்கரிக்கப்பட்ட செப்படிவித்தை.

தனியுடமையுடன் உருவான சமூக ஒடுக்குமுறையிலான ஆணாதிக்க உண்மைக்கு முரணாக முன்வைக்கும் முதலாளித்துவப் பெண்ணியம், ஆணாதிக்கம் குறித்து பேசுவது ஆணாதிக்கத்தை பாதுகாக்கின்ற அரசியலை அடிப்படையாகக் கொண்டது. இந்த முதலாளித்துவப் பெண்ணியம், அமெரிக்க ஜனநாயகம் போன்றது. 

இலக்கியச் சந்திப்பில் கார்ல் மார்க்ஸ் குறித்து நிர்மலாவின் வக்கிரம், தனியுடமைவாத ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அவதூறு. கோட்பாட்டு ரீதியாக தனியுடமையை ஆதரிக்கின்ற, வர்க்க ஒடுக்குமுறையை முன்னிறுத்தும் முதலாளித்துவப் பெண்ணிய சிந்தனைமுறை. இது அவதூறுகள் மூலம் கட்டமைக்கப்படும் ஒடுக்கும் வர்க்க வெள்ளாளியக் கண்ணோட்டம். அமெரிக்க கிறிஸ்துவ தமிழ் வெள்ளாளியமாகும். புலிப் பாணியில் வர்க்க அரசியலை அணுகும் வக்கிரமாகும்.  

தனியுடமைவாதத்தை ஆதரிக்கின்ற சிந்தனைமுறையில், கலை - இலக்கியமானது, சமூக அறம் சார்ந்து இருப்பதில்லை. தனியுடமைவாதத்தைக் கொண்ட ஆண் சிந்தனைமுறையில், பெண் நுகர்வுக்குரிய பண்டம் தான். இதை எப்படி அடைவதில் என்பதிலேயே முரண்பாடுகள். அதாவது வன்முறையிலா அல்லது இணங்க வைத்தா என்பதில் இருந்து தான், முதலாளித்துவ பெண்ணியல்  தர்க்கவியலை முன்நகர்த்துவர். தனியுடமை அமைப்பின் சிந்தனைமுறை இதுதான். அனைத்தும் சுரண்டுவதற்கான நுகர்வுகளே மற்றும் மனித உறவுகள் தனியுடமைவாதத்துக்குட்பட்டது என்பதே.   

மனிதன் சமூக உயிரி என்பதையும், பெண்ணே அதன் நெம்புகோலாக இருக்கின்றாள் என்பதை, தனியுடமை - ஆணாதிக்கத் தர்க்கவியல் மறுதளிக்கின்றது. 

27.04.2004