யூதர்களை அழித்த ஹிட்லரின் நாசிகளின் வழியில், யூத சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை அழித்து வருகின்றனர். 1948 இல் பாலஸ்தீனம் என்ற நாட்டை கூறுபோட்டு சுடுகாடாக்கத் தொடங்கிய மேற்கு ஏகாதிபத்தியமே, இன்று அடுத்த காலடியை எடுத்து வைத்திருக்கின்றது. 

யுத்தமே தீர்வு என்று ஜ.நாவில் வாக்களித்துக் கொண்டு, இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொடுத்து - புதிய ஆக்கிரமிப்பை தொடங்கியுள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு தடை ஏற்படுவதைத் தடுக்க, ஆயுதக் கப்பல்களை சியோனிஸ்டுகளுக்கு ஆதரவாக கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது அமெரிக்கா.

சர்வதேச நீதிமன்றமோ கண்ணை மூடிக்கொண்டு மேற்கத்தைய ஏகாதிபத்திய கொள்கைக்கு ஏற்ப, நித்திரை கொள்கின்றது. மேற்கத்தைய ஏகாதிபத்திய நலனுக்கும், அதன் தீரப்புக்கும் ஏற்ப, உலக நாடுகளை அடக்கியாளவே சர்வதேச நீதிமன்றம் எப்போதும் விழித்திருந்ததை வரலாறு மறுபடியும் நிறுவி இருக்கின்றது.      

பாலஸ்தீனம் என்ற நாட்டையும் - மக்களையும், வரலாற்றிலிருந்தும் - பூமியிலிருந்தும் துடைத்தழிக்கும் ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றையே, மேற்கத்தைய நாடுகள் வழிநடத்தி வருகின்றது. இந்த யுத்தமானது ஒட்டுமொத்த உலக மக்களையும், மனிதர்களாகவே கண்டுகொள்ளவில்லை.

ஹாசாவை தரைமட்டமாக்கி வருவதுடன், மக்கள் கூடியிருந்த மருத்துவமனைகள், அகதி முகாம்கள் தொடங்கி வழிபாட்டு இடங்கள் எதையும் மேற்கு ஏகாதிபத்தியம் விட்டுவைக்கவில்லை. எல்லாம் தவிடு பொடியாகின்றது. அன்று யூதக் குழந்தைகளை நாசிகள் எரித்தது போல், பாலஸ்தீன குழந்தைகளை சியோனிஸ்டுகள் பலியிடுகின்றனர்.  

யுத்தங்களை எப்படி நடத்தவேண்டுமென்று உலகுக்கு சட்டதிட்டங்களை போட்டவர்கள், அதைத் தங்கள் கால்களின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு, உலகுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இந்த உலகவொழுங்குக்கு ஏற்ப, ஊடகங்களும் - அரசியல் கட்சிகளும் வாந்தி எடுக்கின்றன.      

இந்த ஆக்கிரமிப்பு யுத்தமானது இஸ்ரேல் என்ற நாட்டின் எல்லைகளை விரிவாக்குகின்றதும் - புதிய குடியேற்றங்களை உருவாக்குவதற்குமான யுத்தம் மட்டுமின்றி, உலக ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நிறுவுகின்ற, உலகப் பயங்கரவாதமாக மாறி உலகை அச்சுறுத்தி நிற்கின்றது.

மேற்கத்தைய ஏகாதிபத்திய நாடு பிடிக்கும் இராணுவக் கொள்கையானது, மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி பயணிக்கின்றது. உலக மக்களுக்கு எதிரானதும், உலகப் பயங்கரவாதமாகவும் மாறியிருக்கின்றது. 

நவகாலனித்துவ நாடுகளை தங்கள் இராணுவ கட்டமைப்புக்குள் கொண்டுவரும் மேற்கு ஏகாதிபத்தியங்களின் நாடு பிடிக்கும் இன்றைய கொள்கையானது, நிலவும் தேர்தல் ஜனநாயகத்தை விட்டுவைக்கவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதைத் முன்கூட்டியே தீர்மானிக்கும் சக்தியாக ஏகாதிபத்தியங்கள் இருக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் தமக்கு ஆதரவு வழங்காத உலக நாடுகளில், தேர்தல் மூலம் பொம்மை ஆட்சிகளை நிறுவுவது நடந்தேறுகின்றது. இந்தப் பின்னணியில், தேர்தலில் வெளிப்படையாக ஒருவன் வெற்றி பெற்றால், எந்த ஏகாதிபத்தியத்தை சார்ந்து இருப்பேன் என்பதையும் அவன் கூறுமளவுக்கு, தேர்தல் ஜனநாயகத்தை ஏகாதிபத்தியங்கள் விலைபேசி வாங்கி விடுகின்றது.          

இந்தக் கைக்கூலித்தனமான தேர்தல் அரசியல் கேள்விக்குள்ளாகும் போது அல்லது தாம் விரும்பும் ஆட்சி அமையாவிட்டால், யுத்தங்களையும் - ஆயுதங்களையும் திணித்து விடுகின்றது. 

இந்தச் சூழலில் தான் யுத்தநிறுத்தம் என்பது உலகெங்குமான கோசமானது, மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் நாடுபிடிக்கும் உலகக் கொள்கைக்கு எதிரான, மையமான அரசியல் கோசமாக இது மாறி இருக்கின்றது. இந்தக் கோசமே மக்களின் ஜனநாயக கோசமாகிவிட்டது. யுத்தநிறுத்தத்தைக் கண்டு அஞ்சுகின்ற அளவுக்கு, ஏகாதிபத்தியங்கள் உலக மக்களிலிருந்து தனிமைப்பட்டு விட்டனர். இதை மூடிமறைக்க முரண்பட்ட அறிக்கைகளை விடுத்து, உலகை ஏமாற்ற முனைகின்றனர். ஆனால் நடத்தையாலும், அழித்தொழிப்பு யுத்தமும் மற்றும் ஆயுதபாணியாதலாலும் விரிவாக்கம் பெற்று வருகின்றது. உலகெங்கும் யுத்தத்துக்குள் தள்ளிவிடுவதும் - மறுபக்கம் ஆயுதமயமாதலுக்கான நிதி ஒதுக்கீடும் வேகமாக அதிகரித்து வருகின்றது. உலக பொருளாதாரமானது படிப்படியாக யுத்தப் பொருளாதாரமாகி வருகின்றது.      

மேற்கத்தைய ஏகாதிபத்தியம் நடத்துகின்ற இன்றைய யுத்தங்களும் - அழித்தொழிப்புகளுமே, ஜனநாயகத்தையும் - அமைதியையும் கொண்டு வரும் என்ற மேற்கு ஏகாதிபத்திய யுத்த கொள்கையானது, மேற்கத்தைய போலி ஜனநாயகத்தையும் - அமைதி குறித்த நாடகங்களையும்  அம்பலமாக்கி நிற்கின்றது.

தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டு பிற நாடுகளின் ஜனநாயகம் குறித்து பிரச்சாரம் செய்யும் மேற்கத்தைய போலி ஜனநாயகமே, இன்று யுத்தவெறி கொண்டு இஸ்ரேல், உக்கிரேன், தாய்வான் என எங்கும் யுத்தத்தை ஊக்குவித்து - திணித்து வருவதுடன், யுத்தத்தை செய்யுமாறு ஆயுதங்களை வாரி வழங்குகின்றது. 

மேற்கத்தைய ஏகாதிபத்தியம் ஆயுதங்களை வழங்குவது நிறுத்தப்படின், இன்றைய யுத்தங்கள் முடிவுக்கு வருவதுடன், அமைதிக்கான பொதுச்சூழலும் உருவாகும். யுத்தம் மூலம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களிடையே, நாளை எஞ்சியோர்  உயிருடன் வாழ்வதற்கு உத்தரவாதத்தை தரும்.

யுத்தத்தை நிறுத்து என்பது, ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தக் கோருவதே. இதுவே இன்று ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உலகமக்களின் போராட்டத்திற்கான அரசியல் கோசமாக மாறி இருக்கின்றது.   

03.11.2023