1970 களில் தேர்தல் அரசியலில் எதிர்த்துப் போட்டியிட்டவர்களைச் சுட்டு கொன்றவர்களே, குண்டு வீசி கர்த்தால்களையும் நடத்தினர். இந்த தனிநபர் பயங்கரவாதத்துக்கு அஞ்சி ஒடுங்கிய மக்களை முன்னிறுத்தி ஹர்த்தால்களே, புலிக்கு பின்பாக தொடருகின்றது. தொடரும் அச்சமே, இன்றைய  ஹர்த்தால்கள். ஹர்த்தாலை அறிவிப்பவர்கள், முந்தைய பயங்கரவாதத்தை சார்ந்து முன்னிறுத்துகின்றனர்.

புலியை துதிபாடும் இந்த அரசியல் லும்பன்களின் கோமாளித்தனங்களுக்கு, மக்கள் உணர்ச்சியற்ற ஜடங்களாகி அடங்கிப் போகின்றனார். ஏன் எதற்கு சோலி என்று, ஒடுங்கி ஒதுங்கி விடுகின்றனர். பகுத்தறியும் சமூக நோக்கோ - அரசியல் உணர்வோ இன்றி, ஹர்த்தால்கள் வெற்றுச்சடங்காக, சம்பிரதாயமாகிவிடுகின்றது.

இதுதான் தமிழ்மக்களின் இன்றைய அவலநிலை. அரசியல் ஒரு பிழைப்பாக, மக்களை ஏமாற்றி விடுவதே, அரசியல் வியாபாரமாகி விடுகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெற்று சொகுசாக வாழ, நிகழ்ச்சிநிரல் தேவைப்படுகின்றது. 

கடவுள் நம்பிக்கையை எப்படி "சாமிமார்கள்" ஏமாற்றி பிழைக்கின்றனரோ, அப்படி தமிழ்மக்களின் பெயரில் பிழைப்பதே தொடர்ந்து நடந்தேறுகின்றது.                   
 
இந்தவகையில் இலங்கையில் இனவாதத்தை, மதவாதத்தை.. முன்வைத்து, தேர்தல் அரசியலை குறிக்கோளாகக் கொண்ட, சிங்கள - தமிழ் - முஸ்லிம் அரசியல் தரப்புகளால், மக்களின் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து பந்தாடப்படுகின்றது. இந்த மக்கள்விரோத நடத்தைகளை வாந்தியாக எடுத்து தலைப்புச் செய்தியாக்கி விடுகின்ற பத்திரிகைகள் தொடக்கம் யூ-ரியூப் சனல்கள் வரை, உணர்ச்சியூட்டி ஊதிப்பெருக்கி பணம்பண்ணுவதே ஊடகவியலாகி இருக்கின்றது. 

மறுபக்கம் அரசு ஆதரவு பெற்ற அதிகாரம் கொண்ட இன - மத ஒடுக்குமுறையானது, பிற மதங்கள் இனங்கள் மீதான அத்துமீறலாக - வன்முறையாக நடந்தேறுகின்றது. பல்வேறு வடிவங்களில், பல்வேறு முகமூடிகள் தரித்த இந்தச் செயலை மக்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, போராடும் மக்கள் திரள் அரசியல் அறவே இன்று கிடையாது.

பொறுக்கித் தின்னும் லும்பன் அரசியலும், விளம்பர அரசியலும், வாக்குச் சீட்டை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றது. எம்.பி. பதவி என்பது கொழுத்த வருமானமும், சொகுசு வாழ்வுக்கான கனவுகளுடன் பின்னிப்பிணைந்த, அரசியல் பிழைப்பாக நடந்தேறுகின்றது. சீமான் என்ற அரசியல் கழிசடை முதல் விக்கினேஸ்வரன் போன்ற இந்துத்துவ வெள்ளாளிய சாதியப் பன்னாடைகள் வரை, அட்டைகள் போல் சமூகத்தை உறிஞ்சி வாழ்கின்றனர்.       

புலிகள் இருந்த வரை மக்கள் திரள் போராட்டத்தையும், மக்களை அணிதிரட்டக் கூடிய சிந்தனை முறைகளையும் வேட்டையாடினர். அறிவுஜீவிகளை, புத்திஜீவிகளைக் கொன்று குவித்தனர். விசிலடிக்கும், தூசண அரசியல் பேசும் ஆணாதிக்க லும்பன் கூட்டத்தை உருவாக்கினர். புலிகளின் அதிகாரத்தில் மனிதன் சமூகமாகவோ, பகுத்தறிவு கொண்ட மனிதனாகவோ, அறம் சார்ந்த வாழ்வோ வாழ முடியாது. இவை உயிர்வாழ தகுதியற்ற துரோக நடத்தையாகியது. புலிகளின் அகராதி இதைத்தான் வரலாறாக்கியது.    

இந்த பின்னணியில் அரசு ஆதரவு பெற்ற இனவாதம், மதவாதம் .. மட்டும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அழிக்கவில்லை. தமிழ்தேசியம் பேசும் தமிழினவாதமும், மதவாதமும் இன்று தமிழ் தேசத்தின் அனைத்து சமூகக் கூறுகளையம் கூறுபோட்டு அழிப்பதுடன், அதை வியாபாரமாக்கி வருகின்றது. 

பகுத்தறிவற்ற, கூட்டு சமூக மனப்பாங்கற்ற கும்பல், வீதி விபத்து முதல் காதல் வரை கும்பல் வன்முறையில் ஈடுபடுகின்றது. இந்த எல்லைக்குள் தமிழ் தேசிய அரசியல், தமிழ் மக்களை லும்பன்களாக மாற்றியிருக்கின்றது.

பகுத்தறிவையும், நாணயத்தையும், அறத்தையும் இழந்துவிட்ட தமிழ் சமூகமாக, உழைத்துவாழும் கூட்டு சமூக மனப்பாங்கு இழந்துவிட்ட சமூகமாக, எந்த வழியிலும் எப்படியும் வாழலாம் என்ற நிலைக்குள், தமிழ் சமூகம் சிதைக்கப்பட்டு வருகின்றது. இதுதான் இன்று தமிழ் தேசியமாகி இருக்கின்றது. 

இன்று அரச ஆதரவு பெற்ற இனவாதம், மதவாதம்.. தமிழ் மக்களின் அடையாளத்தையும் இருப்பையும்  சிதைப்பதைவிட, மிக வேகமாக தமிழினவாதமும், மதவாதமும் சொந்த மக்களையும் சமூக பண்பாட்டையம் அழித்து வருகின்றது. புதிது புதிதாய் திடீர் கடவுள்கள் தொடங்கி சடங்குகள் சமூகத்தை ஆக்கிரமிப்பதுடன் தமிழ் தேசியம் என்பது வியாபாரப் பொருளாகிவிட்டது. இதையண்டி பொறுக்கித் தின்பதே அரசியல் செயற்பாடாகிவிட்டது. இதை நக்கிப் பிழைப்பது ஊடகவியலாகிவிட்டது.   

இப்படி பொறுக்கித் தின்னும் லும்பகள் துணையுடன் தமிழ்தேசிய வியாபாரிகள், ஹர்த்தாலை நடத்துகின்றனர்.      

19.10.2023