Language Selection

பி.இரயாகரன் -2022
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மேற்கு ஏகாதிபத்தியங்களின் சட்டவிரோதமானதும், மாபியாத்தனமானதுமான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்கும் சின்னச் சிறிய நாடுகளான கியூபா, வடகொரியா, வெனிசுலா, ஈரான், சிரியா .. போன்ற நாடுகள், இன்னமும் உலகில் நீடித்து நிலைத்து இருக்க முடிகின்றது. இன்னும் இது போன்று பல நாடுகளும், பல உதாரணங்களும் உண்டு. இந்த வரிசையில் முள்ளாள் கம்யூனிச சோவியத்தும், சீனாவும் அடங்கும்.

மக்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் அரச இயந்திரங்கள் எப்படி செயற்படுகின்றதோ, அப்படி உலக மேலாதிக்க ஏகாதிபத்தியங்கள் நாடுகளையும் அதன் பொருளாதார அமைப்பையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த வகையில் பொருளாதார அடங்கும். இம்முறை ஏகாதிபத்தியங்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தடை.

ருசியா ஆக்கிரமிப்புக்கு எதிரான நேட்டோவின் தடையானது, தங்கள் ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவு செய்வதே. அதாவது ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்கிரேனின் சுயாதீனத்தை ஒழித்துக் கட்டவே, பொருளாதாரத் தடை.

இதன் மூலம் ருசியாவின் ஆக்கிரமிப்பையும், அதன் நோக்கத்தையும் தடுக்க முடியாது. மேற்கு சந்தையை ருசிய பெரும் முதலாளிகள் சுரண்டவும், ருசிய மேல்தட்டு வர்க்கத்தின் ஆடம்பர நுகர்வையும் தடுக்கலாம். அதேநேரம் இதைச் சார்ந்த மேற்கின் மூலதனம் தனது சந்தையையும், மூலதனத்தையும் ருசியாவில் இழக்கும்;.

சுரண்டப்படும் மக்களுக்கு எதிரான இரு தரப்பு ஆளும் வர்க்க முரண்பாடுகளையே, இந்த தடை நேரடியாக – உடனடியாக பாதிக்கும்;. இவை அனைத்தும் அந்தந்த நாடுகளின் சுரண்டப்படும் மக்கள் மேல் சுமத்தப்படும்.

நுகர்வாக்கம் என்பது ஏகாதிபத்திய நாடுகளின் மக்களுக்கான மலிவுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட உலக ஒழுங்கு என்பது, மேற்கில் உழைக்கும் மக்களின் அமைதியான வர்க்கங்களின் இருப்புக்கான அடித்தளமாகும்.

இந்த வகையில் உலகளவில் மிகவும் மலிவான மூலப்பொருட்களை மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக ருசியா இருந்தது. இதன் மூலம் அதிகம் இலாபம் பார்த்தவர்கள் மேற்கு மூலதனமே. இதற்காக பல்வேறு பன்நாட்டு மூலதனங்களை, ருசியாவில் குவித்து வைத்திருந்தவர்கள் மேற்கு தான்.

பொருளாதாரத் தடை என்பது ஒரு பக்கத்துக்கானதல்ல. இரு பக்கங்கள் கொண்டது. இந்த வகையில் மேற்கு முதல் ருசியா வரை தங்கள் தங்கள் மூலதனங்களை இழக்கின்ற, அதாவது பதிலுக்கு மாறி மாறி கைப்பற்றுகின்ற சூழல் உருவாகி இருக்கின்றது. ருசியாவில் குவித்துள்ள அன்னிய மூலதனங்களையும், உற்பத்தி மையங்களையும் மேற்கு கைவிட வேண்டியே இருக்கும்;. இதன் மூலம் ருசியா அதை தனது உற்பத்திகளுக்கு பயன்படுத்தும்;.

இப்படி உற்பத்தி மூலதனங்கள், அது சந்தையை அணுகும் வழிமுறை மீதான பொருளாதாரத் தடையில் கைவைத்தவர்கள், நிதி மூலதனம் மீதான தங்கள் தடையை கையாள்வதில்லை. நிதி மூலதனம் தான் மேற்கத்தைய நவகாலனிய சுரண்டலின் மய்யப்புள்ளியாகும்.

நிதி மூலதனக் கடன் மற்றும் வட்டி மூலமே நாடுகளின் தேசிய வருவாயில் பெரும் பகுதியை கொள்ளையிடும் மேற்கு ஏகாதிபத்தியக் கொள்கை, கடந்த காலத்தில் ருசியாவில் வெற்றி பெறவில்லை.

அண்ணளவாக ருசியா தேசிய வருமானத்தில் 15 சதவீதக் கடனைக் கொண்ட நாடாக இருக்கின்றது. அதாவது மேற்கை சார்ந்து அது இல்லை. உதாரணமாக அண்மைக் காலமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம், இலங்கை தனது வருடாந்த தேசிய வருமானத்தில் அண்ணளவாக 50 சதவீதத்தை கடனையடைக்கவும் - வட்டியைக் கொடுக்கவும் ஒதுக்குகின்றது. அதை வருடா வருடம் டொலரின் கொடுக்கவேண்டும்;.

இதற்காவே ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, மனித உழைப்பு ஏற்றுமதி .. என்று கடனை கொடுப்பதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்ட நெருக்கடியே - இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய நெருக்கடியாகும். இந்தளவுக்கும் இலங்கையின் கடன், வருடாந்த தேசிய வருமானத்தை விடவும் அதிகமாகும்;.

இந்த நிலை ருசியாவுக்கு கிடையாது. இது தனது தேசியவருமானத்தில் 15 சதவீதக் கடனைக் கொண்டு இருக்கின்றது. பொருளாதாரத் தடை மூலம், மேற்கத்தைய கடனையும் வட்டியையும் கட்ட மறுக்கும்.

இப்படிப்பட்ட சூழல் ருசியா ஏகாதிபத்தியத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அண்ணளவாக 30 சதவீதம் சீனா மற்றும் பெல் ருசியாவை சார்ந்திருக்கின்றது. மேற்கைச் சார்ந்த பொருளாதாரமானது பரஸ்பரம் சிறியளவிலானது. அதிகம் பாதிக்கப்படுவது மேற்கு தான்;.

மேற்கின் எரிபொருள் சார்ந்து பொருளாதாரத்தில் ஏற்படும் தாறுமாறான விலையேற்றமானது, மேற்கு ஜரோப்பாவின் சுரண்டலை பெருமளவில் பாதிக்கும்;. விலையேற்றம் என்பது போராட்டங்களுக்கும், ஜரோப்பிய மூலதனத்தின் சுரண்டல் கெடுபிடிக்கும் இடையில் சிக்கும்;. அமெரிக்க மூலதனம் அந்த இடத்தைக் கைப்பற்ற முனைகின்ற புதிய நெருக்கடி, மேற்கு ஜரோப்பா - அமெரிக்க மூலதனத்தின் முரண்பாட்டுக்கு புதிய அடித்தளமாக மாறும். இவை அனைத்தும் மக்களை சுரண்டுவதன் மூலம் ஈடுகட்ட முனையும். இந்த கெடுபிடியான சுரண்டல் முறை வர்க்க போராட்டத்திற்கான திறவுகோல்.

இந்த காலத்தில் சீனா மூலதனம் கட்டுப்படுத்த முடியாத வளரச்சிக்கு இட்டுச் செல்லும்;. இது சீன ஏகாதிபத்தியத்துடனான மேற்கின் முரண்பாட்டை ஆழமாக்கும்.

அதாவது இந்தத் தடை ருசியாவின் மலிவான மூலவளங்களை சீனா பயன்படுத்தம் எல்லை விரிவடையும்;. உலகளாவில் சீன மூலதனத்துக்கு எதிரான மேற்கத்தைய கெடுபிடியான அண்மைய போக்கால், சீன மூலதனம் சந்திக்கும் நெருக்கடியில் இருந்து மீள, மேற்கு ருசியாவில் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை சீனா நிரப்பும். அது சீனாவில் ருசிய பாதையைத் திறக்கும்.

இதன் மூலம் இருநாடுகளும் இராணுவ – பொருளாதார ரீதியான பாய்ச்சலைப் பெறும்;. என்ன தான் மேற்கு பொருளாதாரத் தடையை உலகெங்கும் திணித்தாலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கிடையிலான சுதந்திரமான ருசிய சந்தையை தடுக்க முடியாது. இதைவிட இடை நிலை நாடுகள் பலவற்றை ருசியச் சந்தை சென்று அடைவதை மேற்கால் தடுக்க முடியாது.

இதை இராணுவ ரீதியாக மேற்கு தடுக்க முற்பட்டால், உலக யுத்தமாக மாறும். பொருளாதார ரீதியாக நாடுகளை மிரட்டினால், அவை மேற்குக்கு எதிரான ஒரு அணியில் சேரும். முன்பு போல் மேற்கின் நிதி மூலதனப் பொருளாதார மூலம் நாடுகளை மிரட்டினால், இதில் இருந்து தப்பிக்க புதிய முகாம் உருவாகியிருக்கின்றது.

முன்பைவிட எதிர் முகாம் என்பது, நாடுகளின் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் - தேர்தல் ஜனநாயகத்திற்கும் எதிரான, ஏகாதிபத்தியம் சார்ந்ததாக ஜனநாயகம் குறுகி வருகின்றது. ருசியா ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தம், மேற்கு ஏகாதிபத்தியத்தின் யுத்தமாக மாறி இருக்கின்றது. யுத்தத்துக்கு எதிரான கோசங்களை, இரண்டுக்கும் எதிரானதாக முன்வைக்காத வரை, மேற்கு ஆதரிக்கும் - யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை கொடுக்கும் மேற்கின் யுத்தத்துக்கே ஆதரவானது. மேற்கு எப்போதும், எங்கும் மக்கள் யுத்தத்தை ஆதரித்ததில்லை. ருசியாவுக்கு எதிரான மேற்கின் யுத்த ஆதரவு என்பது, மக்களுக்கு எதிரானது. இதை ஆதரிக்க முடியாது.

இன்று இந்த யுத்தமானது இராணுவ பொருளாதாரத்தை நோக்கி, ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரமாக மாறுகின்ற புதிய சூழலானது, இராணுவ உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்;. உடனடி பொருளாதார நெருக்கடியை தளர்த்தினாலும், யுத்த மற்ற இராணுவ பொருளாதாரம் ஒரு கட்டத்தில் தேங்கும் போது, மூன்றாம் உலக யுத்தத்துக்கு தவிர்க்க முடியாது இட்டுச் செல்லும் அல்லது வர்க்கப் போராட்டத்துக்கு இட்டுச்செல்லும்.