இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான மூலதனங்களுக்கு இடையிலான மறைமுகமான ஏகாதிபத்திய யுத்தங்கள், இன்று நேரடி யுத்தமாக மாறுகின்ற புதிய கட்டத்துக்குள் உலகம் சுருங்கி வருகின்றது.

யுக்ரேனில் தொடங்கி இருக்கும் யுத்தம் விரைவில் சீனக் கடலிலும் எதிர்பார்க்கலாம். தாய்வான் மீதான சீனா யுத்தத்தை தூண்டும் வண்ணம், அமெரிக்க தலைமையிலான நேட்டோ, யுத்தத்தைத் தூண்டி, பொது அமைதியைக் குலைத்து வருகின்றது.

இதுவரை நிலவிய அமைதியான நவகாலனிய மூலதனச் சுரண்டலுக்குப் பதில், கெடுபிடியான யுத்தங்கள் மூலம் - காலனிகளை உருவாக்கும் யுத்தத்தை நோக்கி ஏகாதிபத்தியங்கள் பயணிக்கின்றது.

யுக்ரேன் யுத்தத்தை தவிர்த்திருக்க முடியாதா!?

 

இன்றைய உலக ஒழுங்கில் யுத்தத்தை தவிர்க்க வழி இருந்ததாவெனின் ஆம். அவை மிகத் தெளிவாக இருந்தன. அவை

1. யுக்ரையின் தன்னை ஒரு சுதந்திரமான இறைமையுள்ள நாடாக - தன்னைத்தான் முன்னிறுத்தி இருக்க வேண்டும். அதாவது அமெரிக்க - ருசிய ஏகாதிபத்தியங்களுக்கு சார்பில்லாத சுயாதீனமான நாடாக தன்னை பிரகடனப்படுத்தி, அதை நடைமுறைப்படுத்தி இருக்கவேணடும்.

அதை அவர்கள் செய்யவில்லை. மாறாக நேட்டோவுடன் சேர்ந்து, தம் மீதான ஒரு வலிந்த யுத்தத்தை வரவழைத்ததுடன் - பதிலுக்கு இனவெறி நாசிகளுடன் சேர்ந்து யுத்தத்தைப் பிரகடனம் செய்தனர்.

2. அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ, யுக்ரைனின் தன்னாதிக்கத்தை - சுதந்திரத்தை பாதுகாக்கும் வண்ணம், தன்னைத் தானே விலக்கி இருக்கவேண்டும்.

இதற்கு மாறாக யுத்தத்தைத் தூண்டி விட்டனர். அதேநேரம் ருசிய எல்லை எங்கும் - புதிது புதிதாக இராணுவத் தளங்களை அமைத்து வந்தனர். ருசியாவுடன் யுத்தத்தை நடத்தும் வண்ணம் யுக்ரைனில் கனரக இராணுவ தளவாடங்களைக் குவித்ததுடன், ஆயுத உற்பத்திகளை முடுக்கிவிட்டதுடன் - திட்டமிட்ட யுத்தத்தைத் தயாரித்து வந்தனர்.

3. ஜரோப்பா தன் இறைமையையும் - மக்களின் பொருளாதார நிலைத்தன்மையையும் பேணும் வண்ணம், அமெரிக்காவின் போர் வெறி நோக்கத்திலிருந்து தன்னைத்தான் விடுவித்து இருக்கவேண்டும். எதற்காக, யாருக்கு எதிராக நேட்டோவும், யுத்தமும்?

நேட்டோ மூலம் ருசியாவுக்கு எதிரான ஒரு யுத்தத்துக்காக, ருசியா எல்லைகளில் - நீண்ட காலமாகவே நேட்டோ படைகளை நகர்த்தி வந்திருக்கின்றது

இப்படி போரை தடுக்கக்கூடிய பல சாத்தியமான வழிகள் இருந்தது. அவை அனைத்தும் நேட்டோவால் நிராகரிக்கப்பட்டு, யுத்தம் உருவாக்கப்பட்டது. நீண்டகாலமாக அமைதியை பேணிய - எல்லைச் சமநிலையை, நேட்டோ தானே வலிந்து குலைத்ததன் மூலம் - யுத்தம் என்பது முன்கூட்டியே நேட்டோவால் திட்டமிட்டு தீர்மானிக்கப்பட்டது.

நேட்டோவானது வார்சா ஒப்பந்த நாடுகளையும், முன்னாள் சோவியத் நாடுகளையும், நேட்டோ ஒப்பந்தங்கள் மூலம் தனது படைகளை குவித்து - ருசியாவுக்கு எதிரான யுத்தத்தை உருவாக்கி வந்திருக்கின்றது. இது ருசியாவின் இறைமை மற்றும் மூலதன சந்தை குறித்த, முரண்பாடுகளாக மாறி - இன்று யுத்தமாக வெடித்திருக்கின்றது.

சோவியத் சிதைவின் பின் அதாவது 1991 க்கு பின், பின் நேட்டோவானது விரிவாகி வந்திருக்கின்றது. ருசியாவுக்கு எதிராக பல புதிய முனைகளில் படைகள் குவிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

1949 நேட்டோ ஒப்பந்தம் - 1955 இல் வார்சா ஒப்பந்தம்

இரண்டாம் உலக யுத்த முடிவில் 12 நாடுகள் சேர்ந்து 1949 இல் நேட்டோ என்ற ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதை ஏன் உருவாக்கினார்கள்? யாருக்கு எதிராக உருவாக்கினர்? யார் எதிரி?

கம்யூனிசத்தை ஒழித்துக்கட்ட உருவாக்கப்பட்ட நேட்டோ, இன்று 30 நாடுகளைக் கொண்டதாக தன்னை மாற்றி இருக்கின்றது. இப்படி புதிதாக இணைக்கப்பட்ட நாடுகள் பல முன்னாள் சோவியத் நாடுகள். இதில் பல நாடுகள் 1954 இகஎபடி ல் உருவான வார்சா ஒப்பந்த நாடுகள்.

சோவியத் யூனியனுடன் வார்சா ஒப்பந்தத்தில் இருந்த நாடுகளை நேட்டோவில் இணைத்து, அவர்களை ருசியாவுக்கு எதிராக நிறுத்தி இருக்கின்றனர். இந்த வரிசையில் யுக்ரனையும் ருசியாவுக்கு எதிராக ஆயுதபாணியாக்கும் நேட்டோவின் முயற்சியின் விளைவு தான் இன்றைய யுத்தம்.

நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990 இல் சோவியத் உடைந்த போது அளித்த உத்தரவாதத்தை மீறியே, இவை அனைத்தையும் அமெரிக்கா அரங்கேற்றி இருக்கின்றது.

நடப்பது ஏகாத்திபத்திய யுத்தமே ஒழிய மக்கள் யுத்தமல்ல

யுக்ரனை ருசியா ஆக்கிரமிப்பது என்பது நேட்டோவுக்கு எதிரான ஜனநாயக யுத்தமோ – மக்கள் யுத்தமோ அல்ல. யுக்ரேனிய வலதுசாரிய – நாசிகளுக்கு எதிரான ஒரு யுத்தமும் அல்ல. யுக்ரேனின் தேசிய சுதந்திரத்துக்கான, தன்னாட்சிக்கான யுத்தமுமல்ல. மாறாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நாடுபிடிக்கும் நவகாலனிய யுத்தமே.

ரசிய ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற ருசிய ஏகாதிபத்தியவாதிகளின் காலனிய யுத்தம். இது யுக்ரேன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் - ருசிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான யுத்தம். உலகளவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரான யுத்தமும் கூட.

இனி இது விரிவடையும். பல்வேறு நாடுகளில் இது வெடிக்கும்; ஜ.நா. செயல் இழந்து போவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. போலித் தேர்தல் ஜனநாயகமானது, ஏகாதிபத்தியம் சார்ந்ததாக வெளிப்படையாக குறுகி அரசியல் கவிழ்ப்பாக மாறிவிடும். போலி தேர்தல் ஜனநாயகம் கூட, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான தேர்தல் முறையாக குறுகி வருகின்றது.

யுக்ரேன் ஆட்சியாளர்கள் போலி ஜனநாயகவாதிகளே.

தேர்தல் முறை மூலம் ஆட்சிக்கு வந்த யுக்ரேன் ஆட்சியாளர்கள், வெளிப்படையாகவே அமெரிக்காவின் கைப்பொம்மையாக அறிவித்துக் கொண்டவர்கள். ருசிய இன மக்களுக்கு எதிராக இனவெறி நாசிகளுடன் சேர்ந்து, இன்றைய யுத்தத்தை தேர்ந்தெடுத்தனர்.

யுக்ரெனில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கியபடி, தேசத்தின் தன்னாட்சியை அமெரிக்காவிடம் தாரைவார்க்கவும், சொந்த மக்களை ஆக்கிரமிப்பு யுத்தத்துக்குள் தள்ளி பலியிட்டுள்ளனர். இவர்கள் ருசிய ஆக்கிரமிப்புக்கு எதிரானவர்கள் அல்ல, அமெரிக்கா கைக்கூலிகளே.

ஜனநாயகம் குறித்து நரிகளின் கூச்சல்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவகாலனியான யுக்ரேயின், ருசிய ஏகாதிபத்தியத்தால் காலனியாக்கும் ஆக்கிரமிப்பு அரங்கேறுகின்றது. அமெரிக்க ஏகாதிபத்திய ஊடகங்களும், அதை மென்று விழுங்கிய கூட்டமும், ஜனநாயகம் குறித்து ஓலமிடுகின்றனர்.

கடந்த வரலாறு குறித்தும், அமெரிக்காவின் கடந்தகால - சமகால ஆக்கிரமிப்பு யுத்தங்கள் குறித்தும், ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல வேடமிட்டு புலம்புகின்றனர். குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக மக்களை கொன்று குவித்த அமெரிக்க ஏகாதிபத்திய பிணம்; தின்னிகளை பாதுகாத்தவர்களே- இன்றைய முதலாளித்துவ ஜனநாயகக் கூத்தாடிகள்;.

மறுபக்கம் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பின் பெயரில் ருசிய ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்ற லும்பன் கூட்டம், ருசியாவை "சோசலிச நாடாக" தங்கள் கற்பனையில் முன்வைத்து பிதற்றுகின்றனர். அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு யுத்தமாக கற்பனை பண்ணி, அதை ஆதரிப்பதன் மூலம், ஏகாதிபத்திய மூலதன யுத்தங்களுக்கு முற்போக்கு வேசம் போட்டு ஆடுகின்றனர்.

இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரு வெவ்வேறு பக்கங்களே.

என்ன செய்ய வேண்டும்?

ஏகாதிபத்திய மூலதன யுத்தங்களுக்கு எதிராக, ஆயுதப்படை குவிப்புகளுக்கு எதிராக, குரல் கொடுத்துப் போராட வேண்டும். யுக்ரேனிய, ருசியா ஆட்சியாளர்களுக்கு எதிரான யுக்ரேனிய, ருசியா ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை ஆதரித்து, ஒன்றுபட்ட யுத்த எதிர்ப்பை முன்வைத்து – அனைத்துவித காலனியமயமாக்கலுக்கும் எதிராக போராட வேண்டும். இது தான் உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களினதும் பொதுக்கடமையாகும்.