09222023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm
அதிகம் வாசிக்கப்பட்டவை

இலங்கை வடக்கில் வாழும் வறிய மீனவர்கள் கடல் அட்டைப் பண்ணைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி பேசுகின்றனர்.

இன்று வடக்கின் கடல்வளம் பற்றி தனிமனிதர்களாக பேசுவது உயிராபத்தான, தனிமனித பாதுகாப்பு இல்லா நிலையை ஏற்படுத்தும் நிலையுள்ளது. அதேவேளை, யாராவது இதைப் பேசியே ஆகவேண்டியும் உள்ளது. அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து, சுயதேவைக்காக “சுயநலனுக்காக மேலோட்டமாக அரசியல் செய்வதை விடுத்து, எல்லோரும் கடலின் அவலநிலையைப் பேசவேண்டும்” என்பதனையும் கூறி கொண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலக இணையத்தில் 01.11.2021 இல் வெளியான இக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி நன்றியுடன் பிரசுரிக்கின்றோம்.

வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தனியார் மற்றும் சீன முதலீடுகள் மூலம் அமைக்கப்பட்டு வரும் கடல் அட்டைப் பண்ணைகளால் இந்தப் பிரதேசங்களில் சிறு கடற்தொழில்களில் ஈடுபடும் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தேடுவதில் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

 இதுவரை இந்தப் பண்ணைகள், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை, அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியில் கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா மற்றும் இரணதீவு பிரதேசங்களிலும் உள்ள பல மீனவர் கிராமங்களை ஆக்கிரமித்துள்ளன.

உலக சோசலிச வலைத்தள நிருபர்கள் அண்மையில் பூநகரியின் தூரப் பிரதேசமான கௌதாரிமுனை மற்றும் அதை அண்டிய மண்ணித்தலை, கல்முனை, வினாசி ஓடை, வெட்டுக்காடு, ஆகிய கிராமங்களுக்கும் சென்றிருந்தனர். கௌதாரிமுனையானது கிளிநொச்சி நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணைகளில் ஒன்று (Photo: WSWS media)

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு அரசாங்கங்கள் கடந்த 30 வருடகாலமாக முன்னெடுத்துவந்த இனவாத யுத்தத்தினால் இந்தக் கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பூநகரி இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் விஸ்தரிப்புக் காரணமாக கிராமம் இராணுவ ஆக்கிரமிக்குள்ளேயே அகப்பட்டிருந்த காரணத்தால் கிராம மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்தார்கள்.

போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்தும் வடக்கு மற்றும் கிழக்கை இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. இந்தக் கிராமத்தவர்கள் போரின் முடிவில் வவுனியாவில் இராணுவம் நடத்திய அகதிமுகாமில் பல இலட்சம் மக்களுடன் அடைக்கப்பட்டிருந்தார்கள். இராணுவத் தாக்குதலில் சொத்துக்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த கிராமங்களுக்கு கொண்டுவரப்பட்டு தற்காலிக குடில்களில் கொட்டப்பட்டார்கள்.

இந்த கிராமங்களுக்கான பிரதான பாதை இன்னமும் மண் பாதையாகவே உள்ளதுடன் ஒரேயொரு பஸ் சேவை மட்டுமே உள்ளது. மாற்றீடாக மக்கள் முச்சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது மோட்டார் சயிக்கிளில் செல்ல வேண்டும். பூநகரி வரை செல்வதற்கு முச்சக்கர வண்டி கட்டணம் 1,500 ரூபா ஆகும்.

அரசாங்கத்தின் வீட்டுத்திட்ட உதவியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள கல் வீடுகள், பூர்த்தி செய்யப்படாத நிலையில், அவற்றில் மக்கள் வாழ்கின்றனர். இன்னும் பலர் ஓலை வீடுகளில் வாழ்கின்றனர். இங்கு குழாய்நீர் வசதி கிடையாது. தனியார் காணிகளில் இருக்கும் கிணறுகளுக்கு மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும். அந்தத் தண்ணீரும் சுத்தமானதா என்பது சந்தேகத்துக்குரியதாகும். இந்தக் கிராமங்களுக்கு ஆஸ்பத்திரி வசதிகள் கிடையாது. நோயாளிகள் பூநகரியில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கே கொண்டுவரப்பட வேண்டும்.

கௌதாரிமுனை பிரதேசத்தில் கிராமத்தவர்களின் பிரதான ஜீவனோபாயம் இறால் மற்றும் நண்டு பிடித்தலாகும். அட்டைப் பண்ணை முதலீடு தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பது பற்றி அங்குள்ள மீனவர்கள் எமது நிருபர்களுடன் பேசினர்.

வினாசி ஓடையை சேர்ந்த பாலகுமார் கௌசலாதேவியின் கணவரும் அவரது இரண்டு நண்பர்களும் 1983 இல் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயுள்ளனர். அதற்குப் பின்னர், தனது நான்கு பிள்ளைகளையும் வளர்ப்பதற்காக பனையோலையில் பாய் தயாரித்து விற்கும் வேலையை செய்து வந்ததாகவும், அதன் மூலம் கிடைத்த அற்ப வருமானத்தைக் கொண்டே தனது பிள்ளைகளை வளர்த்ததாகவும் அவர் தெரிவித்தார். தனது பிள்ளைகள் வளர்ந்து தற்போது மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கௌசலாதேவி அவரது முழுமையடையாத வீட்டுக்கு முன்னால் (Photo: WSWS media)

“எனது பிள்ளைகள் கூடு வைத்து இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆகக் குறைந்தது 2 கிலோ அல்லது மூன்று கிலோ இறாலைப் பிடித்து விற்பனை செய்து, எமது வாழ்க்கையை ஓட்டி வந்தோம். ஆனால், நாங்கள் இறால் பிடிக்கும் கடல்பரப்பினை அட்டைப் பண்ணைக் கம்பனி பிடித்துவிட்டதால், எனது பிள்ளைகளால் தொழில் செய்ய முடியாது போய்விட்டது. இந்தப் பண்ணை ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டது. இதை சீனாக்காரன் செய்தாலும் சரி, கிளிநொச்சியான் செய்தாலும் சரி, அது ஏழைகளான எங்களின் வயிற்றில் அடிக்கும் வேலையாகும். இது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்”, என கௌசலாதேவி தெரிவித்தார்.

அங்கு 67 வயது, சின்னராசா, யுத்தத்தின் போதான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவரது ஏழு பிள்ளைகளில் இரண்டு பேர் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார்கள். அவர் முள்ளிவாய்க்காலில் இருந்து ஏனைய மக்களுடன் வவுனியா அகதிமுகாமில் அடைக்கப்பட்டிருந்த பின்னர், 2011 இல் மீளக் குடியேறியுள்ளார்.

“மீளக் குடியேறிய எங்களுக்கு தொழிலை அபிவிருத்தி செய்ய எந்த உதவியும் செய்யாத அரசாங்கம், விட்டுத் திட்டத்துக்காக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தந்தது. அந்தப் பணம் போதுமானதாக இல்லாத நிலையில் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. கதவு. யன்னல்கள் கூட போடவில்லை,” என அவர் கூறினார். அவரது குடும்பம் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டும்.

தொழில் நிலமைகளை தெளிவுபடுத்திய அவர், “நான் கடலில் இறால் பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றேன். இந்த அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்ட பின்னர், தொழில் செய்வது கஸ்டமாக உள்ளது,” என்றார். “நாங்கள் இறால் வலைகள் கட்டும் இடங்களையெல்லாம் அட்டைப் பண்ணையாட்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். இதனால் எமது சீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடலில் தொழில் செய்யும் நாங்கள் உட்பட யாழ்ப்பாணத் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன,” என அவர் மேலும் கூறினார்.

மண்ணித்தலை கிராமத்தில் வாழும் செல்லப்பா லிங்கநாதன், சீன முதலீட்டாளர்களால் அமைக்கப்பட்டு வரும் இது போன்ற அட்டைப் பண்ணைகளால் சிறு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறினார். “இந்தக் கரையோரப் பகுதி நண்டு, இறால் மற்றும் மீன் வகைகள் இனப் பெருக்கம் செய்யும் இடமாகும். இந்தப் பண்ணைத் திட்டத்தினால் இந்த இனப்பெருக்கம் பாதிக்கப்படுகின்றது. அத்தோடு சாதாரண மீனவர்களாகிய எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே நாங்கள் சகல அட்டைப் பண்ணைகளையும் எதிர்க்கின்றோம்,” என அவர் தெரிவித்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த செ.வெற்றிவேல், சீன முதலாளிகளால் அமைக்கப்பட்டிருக்கும் குயின் லான்ட் அட்டைப் பண்ணை, தாங்கள் படகுகளை கொண்டு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருப்பதால் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் உள்ளதாக கூறினார். கிராமத்தில் பாடசாலை வசதியின்மை பற்றிப் பேசிய அவர், பிள்ளைகள் இங்கிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் பூநகரி மகா வித்தியாலயத்துக்கே செல்ல வேண்டும் என்றார். ”எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளார்கள். உயர்தரம் படிக்கும் ஒருவர் தனியார் வகுப்புகளுக்குகாக யாழ்ப்பாணம் வரை சென்று வந்தார். தற்போது கொரோனா தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து ஒன்லைன் மூலம் கற்பதற்கு முயற்சிக்கின்றார். ஆனாலும் இங்கு இணைய சமிக்ஞைகள் போதுமானதாக இல்லை. அதைத் தொடர்வதற்கு பெரும்பாடு படவேண்டியிருக்கின்றது. எங்கள் கிராமம் தொலைவில் உள்ளதால், அமைச்சர்களும் சரி அரசாங்கமும் சரி யாரும் கவனிப்பதில்லை.”

வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த பசுபதி லோகநாதன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்தில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக, மூன்று மாதங்களாக எதுவித வருமானமும் இன்றி சிரமப்படுகின்றார். அவரது மனைவி நவலோஜினி, இறுதி யுத்தக் காலப்பகுதியில் ஒரு காலை இழந்துவிட்டார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. சுகயீனம் காரணமாக கரையோரமாக இறால் கூடு வைத்து சீவியத்தை நடத்திய அவர், அட்டைப் பண்ணைகளால் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீட்டில் வாழ்கின்றது.

அரைவாசி மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ள லோகநாதனின் வீடு (Photo: WSWS media)

அவரது மனைவி நவலோஜினி, மீளக் குடியேறி 9 வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் எதுவிதமான அரச உதவியும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். “நாங்கள் இரவல் காணியிலேயே ஒரு குடிசை அமைத்து வாழ்கின்றோம். தண்ணீர் கூட அருகில் கிடையாது 1 கிலோ மீட்டர் தூரம் சென்றே தண்ணீர் எடுக்க வேண்டும். கடைக்குச் செல்ல வேண்டுமானால், நாங்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இயலாதவர்களான நாங்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றோம்” என அவர் மேலும் விளக்கினார்.

கிராஞ்சிக் கிராமத்தினைச் சேர்ந்த குமார், சகல அட்டைப் பண்ணைகளும் சாதாரண தொழிலாளர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது என்றார். “எங்களது படகுகளை நாங்கள் சுதந்திரமாக ஓட்ட முடியாதுள்ளது. எமது வழிகளைக் கூட அவர்கள் மறித்துள்ளார்கள். தவறுதலாக அவர்களது வேலிக்கு அண்மையாக நாங்கள் போனால் கூட, எங்களைத் திருடர்கள் போல நடத்துகின்றார்கள், எங்களை விசாரிக்கின்றார்கள். அவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக, கடலில் உள்ள சிறிய குஞ்சு அட்டைகளை பொறுக்கி எடுக்கின்றார்கள். இதனால், கடலட்டையின் இனப்பெருக்கும் இல்லாமல் செய்யப்படுகின்றது. ஒரு சில முதலாளிகளின் இலாபத்துக்காக நடத்தப்படும் இந்தப் பண்ணைத் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். எங்கள் பாரம்பரிய முறைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்,” என அவர் கோரினார்.

“எமது கிராமத்தில் வாழும் மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. அதற்கான வசதிகள் எம்மிடம் இல்லை. நாங்கள் நடந்து சென்றும் அல்லது சிறு தெப்பங்களில் சென்றும், கூடு வைத்து இறால் பிடிக்கின்றோம். இந்த தொழிலை மேற்கொள்வதற்கு கூட, அங்கு இடப் பிரச்சினை உள்ளது. இந்த நிலைமைக்குள், அட்டைப் பண்ணை உருவாக்குவதற்காக ஏக்கர் கணக்கில் கடலை அளந்து தனியாருக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் பண்ணை அமைத்தால், நாங்கள் தொழிலில் இருந்து வெளியேற்றப்படுவோம். எமது குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்துவிடும். இந்தக் கடல் எம் எல்லோருக்கும் பொதுச் சொத்தாகும். அதை தனியாருக்கு தாரைவார்ப்பதை நாங்கள் எதிர்க்கின்றோம்,” என அவர் மேலும் கூறினார்.

இக் கட்டுரை, நான்காம் அகிலத்தின் அனைத்துல இணையத்தில் 1.11.2021 இல் வெளியாகியது. காலத்தில் தேவை கருதி நன்றியுடன் இதை பிரசுரிக்கின்றோம்.

இலங்கை; வடக்கில் வாழும் வறிய மீனவர்கள் கடல் அட்டை பண்ணைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி பேசுகின்றனர்


கட்டுரையாளர்களின் அண்மைய இடுகைகள்

உரைகள் -பாடல்கள் -நாட்டுப்பாடல்கள்

Categories Accordion
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
...
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
சொற்பொழிவுகள்-இலங்கை(ஒலி)
  • «
  • 1
  • 2
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
நாட்டுப்பாடல்கள் (ஒலி)
Hits: 5275
17 September 2008
Hits: 5539
17 September 2008
Hits: 6269
17 September 2008
Hits: 5590
17 September 2008
Hits: 5698
17 September 2008
Hits: 5379
17 September 2008
Hits: 6992
17 September 2008
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
பாடல்கள்(ஒலி)
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • »