பகுதி 51


நான் எனக்குத் தெரிந்த உண்மைகளை பதிவுகளாக போடுவதற்கு காரணம், எனது தலைவர் உமாமகேஸ்வரனை அசிங்கப்படுத்துவது என் நோக்கமல்ல. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர் விட்ட தவறுகளை சுட்டிக் காட்டுவது தான். எமது போராட்டம் இன்னும் முடியவில்லை. வருங்காலத்தில் போராடுபவர்கள் எங்கள் தலைமுறை விட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கு. நான் போடும் பதிவுகளுக்கு உமாமகேஸ்வரன் மட்டும்தான் துரோகி போல பல பேர் கருத்துகளை எழுதுகிறார்கள். அது தவறு. மற்ற இயக்கத் தலைவர்கள் இவரைவிட பல துரோகங்கள் செய்துள்ளார்கள். அது பற்றி அந்தந்த இயக்கத் தோழர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.


உமாமகேஸ்வரன் இருக்கும் காலத்தில் நடந்த தவறுகளை விட, சித்தார்த்தன், மாணிக்கதாசன் காலங்களில் நடந்த கொலைகள் கொள்ளைகள் கற்பழிப்புகள் அதிகம். அதுபோல், இலங்கை அரசோடு சேர்ந்து விடுதலைப்புலிகள் உட்பட மற்ற இயக்கங்கள் செய்த கொலைகள், இலங்கை இந்திய படைகளோடு சேர்ந்து மற்ற இயக்கங்கள் செய்த கொலைகள் கொள்ளைகள் மிக அதிகம். இவர்களோடு ஒப்பிட்டால் உமாமகேஸ்வரன் தவறுகள் மிகச் சிறியவை. சரி இனி பதிவுக்கு வருவோம்.

 

நானும் செயலதிபர் உமாமகேஸ்வரனிடம் இந்திய அதிகாரிகள் பயிற்சியும் ஆயுதங்களும் தர தயாராக இருப்பதாகவும், கடந்த காலத்தில் நாங்கள் பல தவறுகள் விட்டு உள்ளதால், சித்தார்த்தன் போன்ற தலைவர்கள் யாரும் பொறுப்பாக இருக்க வேண்டும் என கூறினார்கள் என கூறினேன். செயலதிபரும் அதை ஏற்றுக்கொண்டு தான் சித்தார்த்தனுடன் பேசுவதாகவும், என்னையும் சித்தார்த்தனுடன் பேசச் சொன்னார். நிலைமையை நானும் பவனும் சித்தார்த்தரிடம் தொலைபேசியில் எல்லாம் விளக்கிச் சொன்னோம். தான் வருவதில் பிரச்சனை இல்லை, இந்திய அதிகாரிகள் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்று கேட்டார். இதுதான் எமது இயக்கத்துக்கு கடைசி கட்ட முயற்சி செய்து பார்ப்போம் என்று கூறினோம். சித்தார்த்தன் டெல்லி வந்தார். பவன், நான், சித்தார்த்தன் மூவரும் பல விடயங்களை அலசி ஆராய்ந்தோம். அதன் பின்பு பவனை செயலதிபரிடம் கூறி சென்னைக்கு அனுப்பினேன். சித்தார்த்தன் திரும்பவும் ரா உளவுத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நம்பிக்கையாக சென்னை சென்றார். சென்னையிலும் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. கடைசி கட்ட இந்திய பயிற்சி, சுட்டு பழக பெருந்தொகையான தோட்டாக்கள், பயிற்சி முடிய ஆயுதங்கள் என முகாம் தோழர்களும் எமது இயக்க முன்னணித் தலைவர்களும் பரபரப்பாக இயங்குவதாக சென்னையிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்தன. செயலதிபர் உமாமகேஸ்வரனும் மிகவும் பரபரப்பாக முகாம்களில், கடற்கரையோரம் போன்ற இடங்களில் எல்லாம் போய் இலங்கைக்கு போவதற்குரிய வேலைகளை குறிப்பதாகவும் சென்னையிலிருந்து கூறினார்கள். முதன்முறையாக அப்போதுதான் எமது இயக்கம் சுறுசுறுப்பாக இயங்கியதாக நான் நினைக்கிறேன். இந்திய பயிற்சியாலும் தொடங்கி விட்டதாக அறிந்தேன்.

செயலதிபர் உமாமகேஸ்வரன் சித்தார்த்தனை திரும்ப டெல்லி அனுப்பி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் டெல்லி பிரதிநிதிகளுடன், லண்டன் ஆயுத வியாபாரி எங்களை ஏமாற்றிவிட்ட நிகழ்வைக் கூறி திரும்ப அந்த பணம் கிடைக்குமா என அறிய சொன்னார். நானும் சித்தார்த்தனும் எங்களுக்கு முன்பே நண்பராக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்க பிரதிநிதியை சந்தித்து நாங்கள் ஏமாற்றப்பட்ட முழு விபரங்களையும் கூறினோம். அவர் ஆயுத வியாபாரிகள் ஏமாற்றுவது குறைவு. தாங்கள் பல ஆயுதவியாபாரிகளிடம் தொடர்ந்து வியாபாரம் செய்வதால், தங்களுக்கு எல்லா ஆயுத வியாபாரிகளையும் தெரியும் என்றும், இல்லாவிட்டால் தங்கள் பெயரைச் சொல்லி வேறு யாரோ ஏமாற்றி இருப்பார்கள் என்றும் கூறினார். சித்தார்த்தன் ஆயுத வியாபாரியின் பெயர் மற்றும் விபரங்களை அவரிடம் கொடுத்தார். அவரும் இரண்டொரு நாட்களில் தான் தலைமை கழகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை அறிவதாக கூறினார். நாங்கள் எப்போது அவரை சந்தித்தாலும் அவர் எங்களுக்கு அரபு ஸ்பெஷல் காபி என்று ஒரு கடும் கருப்பு கலர் காப்பி ஒன்றை போட்டுக் கொடுப்பார். அவர் ரசித்து ருசித்து குடிப்பார். நானும் சித்தார்த்தரும் கஷ்டப்பட்டு ஒரு புன்னகையோடு குடித்து முடிப்போம்.

இரண்டொரு நாள் முடிய பாலஸ்தீன இயக்கப் பிரதிநிதி எங்களை தனது அலுவலகம் அழைத்தார். அந்த ஆயுத வியாபாரி தங்களுக்கும் ஆயுதம் விற்பனை செய்பவர் என்றும் ஏமாற்றுக்காரர்கள் இல்லை என்றும் கூறினார். அதோடு லண்டன் கிருஷ்ணன் அவரை சந்தித்து விற்பனை வாங்குவது சம்பந்தமாக பேசியது உண்மை என்றும், உண்மையில் லண்டன் கிருஷ்ணன் தான் அவரையும் செயலதிபர் உமாமகேஸ்வரனையும் ஏமாற்றி உள்ளதாக தெரிகிறது என்றார். என்ன நடந்தது என்றால் உதாரணத்துக்கு ஒரு லட்சம் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் வாங்குவது என்றால் முதன்முறையாக குறைந்தது 75000 டாலர்கள் முன்பணமாக கொடுக்க வேண்டும். இதுதான் ஒப்பந்தத்தின் முதல்படி, ஆனால் கிருஷ்ணன் 1000 ஆயிரம் டொலர்கள் மட்டும் கொடுத்து, மீதி முன்பணத்தை ஒரு வாரத்தில் தருவதாகக் கூறி சில மாதங்களாக தன்னுடன் தொடர்பில் கூட இல்லை என்று கூறியுள்ளார். இப்ப கூட தனக்கு தரவேண்டிய அட்வான்ஸ் பணத்தை தந்தால் ஆயுதம் கப்பலில் ஏற்றி விட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.. இல்லாவிட்டால் லண்டன் கிருஷ்ணன் கொடுத்த ஆயிரம் டாலரை திருப்ப கொடுக்கவும் தயார் என்று கூறியுள்ளார். இதுதான் உண்மையில் நடந்தது. கிருஷ்ணன் தனது தில்லுமுல்லுகளை மறைக்க ஈரோஸ் ராஜி சங்கரை பெயரை பயன்படுத்தியுள்ளார்.

கடைசியில் உமாமகேஸ்வரன், லண்டன் கிருஷ்ணனின் நம்பிக்கைத் துரோகத்தால் இயக்கப் போராளிகளிடம் கெட்ட பெயர் வாங்கியது தான் மிச்சம். உமாமகேஸ்வரன் பற்றிய நெருங்கிய விஷயங்களை அறிந்திருந்ததால் லண்டன் கிருஷ்ணன் அவரை ஏமாற்ற சுலபமாக இருந்திருக்கிறது.

சித்தார்த்தனும் சென்னை போய் தேவையான வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார். இதேநேரம் டெல்லியில் டெல்லி அரசியலில் நிலைமைகள் பரபரப்பாக இருந்தன. ராஜீவ்காந்தி அரசு வாங்கிய போஃபர்ஸ் பீரங்கி பலவித ஊழல் இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடவில்லை ஒரே ஆர்ப்பாட்டம். எந்த பத்திரிகையைத் திருப்பினாலும் போஃபர்ஸ் பீரங்கி பற்றிய செய்திகள்தான். பாராளுமன்ற சபாநாயகர் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த கூட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். அந்தப் பாராளுமன்றக் கூட்டுக் குழுவில் ஏ.டி.எம்.கே கட்சியை சேர்ந்த நாங்கள் இருந்த வீட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆலடி அருணா எம்பியும் ஒரு உறுப்பினர். பாராளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைகள் முடிந்து, கூட்டுக்குழு ஏகமனதாக தயார் செய்த அறிக்கையை ஆலடி அருணா எம்பி ஏற்றுக்கொள்ளவில்லை. தனியாக ஒரு அறிக்கை தயாரித்து ஊழல் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக அறிக்கை கொடுத்தார். ஆலடி அருணா எம்பி அறிக்கைகள் தயார் செய்யும் போது எழுதிய பக்கங்களை தினசரி என்னிடம் கொடுத்து, டைப்பிங் செய்து வரச் சொல்லுவார். எனக்கு உண்மையில் அதன் விபரம் தெரியாது. அவர் டைப்பிங் க்கு போகும் முதல் முன்பு ஒரே ஒரு வார்த்தை தான் கூறுவர். தம்பி டைப் செய்யும்போது 3 பிரதிகளுக்கு மேல் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் தினசரி பல நாட்கள் போய் டைப் செய்து எடுத்து வந்து கொடுத்திருக்கிறேன். ஆலடி அருணா எம்பியின் தனி அறிக்கை பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க செய்தது. ஒரே நாளில் டெல்லிப் பத்திரிகைகள் எல்லாம் ஆலடி அருணா எம்பியின் புகைப்படமும் செய்திகளும், பேட்டிகளும்தான். நான் எனது டெல்லி அலுவலகத்தை விட்டு சென்னைக்கு நிரந்தரமாக வரும்போது ஆலடி அருணா நன்றி சொல்லும் போது அப்போதுதான் அவர் நான் டைப் செய்தது தான் தான் எழுதிய அறிக்கை என்று கூறி எனக்கு அவர் நன்றி கூறினார் அப்போதுதான் எனக்கு அந்த விஷயமே தெரிந்தது.

டெல்லியில் போபர்ஸ் பீரங்கி ஊழல் பெரும் பரபரப்பாக இருக்க, இலங்கையில் இலங்கை ராணுவத்தின் முன்னேற்றம், தாக்கும் சக்தி அதிகரித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் தடையாக இருந்தது. இதே நேரம் எங்களது தமிழீழ மக்கள் விடுதலைப் படையின் போராளிகளும் மன்னாரில் இறங்க தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன்.

இந்தியாவின் ராஜீவ் காந்தியின் அரசாங்கத்துக்கு கெட்டபெயர் ஏற்பட்ட நேரம். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருமா என்ற கேள்வி குறியே இருந்தது. தடுமாறிய டெல்லி காங்கிரஸ் ஆட்சியை தூக்கி நிறுத்தி, ராஜீவ் காந்திக்கு ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அவர்கள். இது பற்றி எத்தனை பேருக்கு தெரியும். அடுத்த பதிவில் விபரங்களை தருகிறேன்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் 1987 நடுப்பகுதியில் கடும் சண்டை என நினைக்கிறேன். அப்பொழுதும் வடமராட்சியை கைப்பற்றி தமிழீழவிடுதலை புலிகள் அமைப்பை முற்றாக அழிக்கும் முயற்சியில் இலங்கை ராணுவம் கடைசி கட்ட போராட்டத்தை நெருங்கி இருப்பதாக இங்கு பத்திரிகைகள் எல்லாம் செய்திகள் பிரசுரித்தன. அப்பொழுது பிரபாகரன் யாழ்ப்பாணத்தில். புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் நோய்வாய்ப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரிடம் போய், மத்திய அரசை தொடர்புகொண்டு உடனடியாக இலங்கை ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் வைத்த காரணம் யாழ்ப்பாண தீபகற்பத்தை இலங்கை அரசு கைப்பற்றிக் கொண்டால், இந்தியா எக்காரணம் கொண்டும் இலங்கையில் தலையிட முடியாது. இந்தியா தனது தேவைக்காக வேண்டி சரி யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இலங்கை அரசின் முடிவை தடுக்க வேண்டும்.

பாலசிங்கம் பலமுறை சென்னைக்கும் டெல்லிக்கும் பறந்தார். இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து இந்தியா யாழ்ப்பாண மக்களை காப்பாற்ற படை எடுக்க வேண்டும் என்று கூட கூறினார். இந்த விடயங்கள் டெல்லியில் எல்லா பத்திரிகைகாரர்களுக்கும் தெரியும். எங்களோடு தொடர்புள்ள டில்லி பத்திரிகையாளர்கள் பாலசிங்கம் வந்துபோகும் போதெல்லாம் அதைப்பற்றி எங்களுடன் விவாதித்தார்கள். இந்த செய்திகளை நான் உடனுக்குடன் சென்னைக்கும் அறிவிப்பேன்.

கடைசியில் எம்ஜிஆர் முன்னிலையில் ரா உளவுதுறை உயரதிகாரிகள், பாலசிங்கம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பெரிய இலங்கை வரைபடத்தை வைத்து பாலசிங்கம் பேசியது பற்றி, தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் பிற்காலத்தில் கூறும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவை வா வா என அழைத்து கடைசியில் போ போ என்று துரத்தி விட்டார்கள் என்று கேலியாக பேசுவார்கள்.

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தை ராஜீவ்காந்தி அரசு தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ள, அல்லது போபோஸ் பீரங்கி ஊழல் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை திசைதிருப்ப இலங்கை பிரச்சனையை கையில் எடுத்தார்கள் முதலில் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு கொடுப்பது போல, இலங்கை அரசாங்கம் விடாது என்று தெரிந்து கொண்டே, பல படகுகளில் உணவுப் பொருட்களை அனுப்பினார்கள். இலங்கை அரசு தனது கப்பற்படையை வைத்து தடுத்து இந்திய படகுகளை திருப்பி அனுப்பியது.

இப்பொழுது இந்தியா முழுக்க இந்தியா, இலங்கை பற்றிய செய்திகள் தான் வந்து கொண்டுள்ளன. இது நடந்து இரண்டாம் நாள் 04/06/1987 அன்று இந்தியாவின் பூமாலை ஆப்ரேஷன் என்ற விமானப்படை அதிரடி நடந்தது. பெங்களூர் விமானப்படை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மேலாகப் பறந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் பொதிகள் ஆக போட்டார்கள். இது இலங்கை அரசை பயம் காட்ட நடந்த ஏற்பாடு.

பாலசிங்கம் நினைத்த மாதிரி வடமராட்சி தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. இந்தியா எதிர்பார்த்தமாதிரி J.R ஜெயவர்தனா இந்தியாவோடு பேசுவதற்கு தயாராகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த ராஜீவ்காந்தி அரசு உடனடியாக களத்தில் இறங்கியது. இதன் மூலம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இமேஜ் வளரும் என கணக்குப் போட்டார்கள்.

இந்திரா காந்தியின் காலத்தில் இலங்கைப் பிரச்சினை பற்றி கையாளும் முறைகள் எல்லாம் தகர்க்கப்பட்டன. அதாவது விடுதலை இயக்கங்களுக்கு ரா உளவுத்துறை மூலம் ரகசியபயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொடுத்து படிப்படியாக இலங்கை ராணுவத்தை பலவீனப்படுத்தி அதன்மூலம் இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுத்து, இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை அமிர்தலிங்கம் மூலம் நடைமுறைப்படுத்துவதே இந்திரா காந்தியின் திட்டம். இங்கு இப்பவும் பலபேர் இந்தியா இலங்கை மீது படையெடுக்க முயற்சி செய்ததாக எழுதுகிறார்கள். அது தவறு.இந்திரா காந்திக்கு ஜே ஆர் ஜெயவர்தனா தான் எதிரியாக இருந்தார் ஒழிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா மிக நல்ல நண்பர். அதோடு இந்திரா காந்தி தனது நட்பு நாடுகளை குறிப்பாக சோவியத் ரஷ்யா, ஆலோசனைகளை நடத்தி தான் இலங்கைப் பிரச்சினையில் காய் நகர்த்தியது உண்மை. அதோடு இந்திய உளவுத்துறை ஒவ்வொரு இயக்கத்துக்கும் சண்டைகளை ஏற்படுத்தி அழித்தார்கள் என்று முழங்குகிறார்கள். இது தவறான செய்தி. ஒவ்வொரு இயக்கமும் தான் மட்டுமே செயல்பட வேண்டும் எல்லாம் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற பேராசையில் செயல்பட்டதன் விளைவு தான் இயக்கங்களின் அழிவுக்கு காரணம். இந்தியா தனது தேவைக்காக இயக்கங்களை பயன்படுத்தியது. அது எல்லாம் இயக்கத் தலைவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் இந்தியாவை நாங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். நாங்கள் அதை செய்யாமல் தமிழ்நாடு தான் எங்கள் போராட்ட களம் போல நினைத்து இங்கேயே எங்கள் செயல்பாடுகளை கூடுதலாக நடத்தத் தொடங்கினோம். அதோடு எங்கள் செயலதிபர் உமாமகேஸ்வரன் தான் ஒரு அரசியல் தலைவர் போல தமிழ்நாட்டிலும் பம்பாய் பெங்களூர் போன்ற இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு பேசி, ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி போலவே நடந்து கொண்டார். எனக்கு தெரியக் கூடியதாக எந்த ஒரு விடுதலை இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்களில் பேசவில்லை. உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டின் பொதுக்கூட்டங்களில் வீர முழக்கம் செய்வது எமது இயக்கத் தோழர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்பது உண்மை. ஆனால் உண்மையில் உமாமகேஸ்வரன் இலங்கையில்தான் பொதுக்கூட்டங்களில் பேசி இருக்க வேண்டும். இந்திய உளவுத்துறை IB இதை பலமுறை செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு சுட்டிக்காட்டியது. நீங்கள் இங்கு பொதுக்கூட்டங்களில் தீவிரமாக இலங்கை அரசுக்கு எதிராகப் பேசுவது, பத்திரிகைகளில் வரும் போது இந்திய அரசுக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. காரணம் ஜெயவர்தனா இதை பயன்படுத்தி தீவிரவாதிகளை பகிரங்கமாக இலங்கை அரசுக்கு எதிராக தூண்டிவிடுகிறது என்று உலக நாடுகளிடம் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டங்களில் பேசுவது பற்றி எமது இயக்கத்துக்குள் கூட கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் உண்மையில் செயலதிபர் உமாமகேஸ்வரன் இந்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தவே இந்தியாவில் பகிரங்கமாக மேடை ஏறி பேசியது என்று பின்னால் அறியக்கூடியதாக இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தின் முயற்சியால், ராஜீவ் காந்திக்கு தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

ராஜீவ்காந்தி உடனடியாக ரா உளவுத்துறையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி, இலங்கைப் பிரச்சனை முழுவதையும் கையாளுவதற்கு இந்திய வெளியுறவுத் துறைக்கு முழு பொறுப்பும் கொடுத்தார். அதற்கு மேல் இலங்கையில் இந்திய தூதுவராக இருந்த டிக்சிட் ஜெயவர்தனா வை பயமுறுத்தி ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொள்ள வைத்தார். ராஜீவ் காந்தி நினைத்தார் தனது ராஜ தந்திரத்தால் ஜெயவர்த்தனாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக, ஆனால் ஜெயவர்த்தனாவின் மிக நீண்டகால அனுபவம் தன்னால் இந்தியாவை எதிர்க்க முடியாது எந்த உலக நாடுகளும் இலங்கையின் உதவிக்கு வரவில்லை. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவை சிக்கவைத்து இலங்கைத் தமிழரை, தமிழ் போராளிகளை இந்தியாவுக்கு எதிரியாக மாற்ற நினைத்தார். நீண்டகாலத் திட்டத்தில் உண்மையில் வெற்றியும் பெற்றார்
இக்காலகட்டத்தில் எனது தொடர்புகள் முழுவதும் பத்திரிகை நண்பர்கள் சந்திப்பிலேயே இருந்தன. குறிப்பாக டெல்லி இந்து பத்திரிகை ஆசிரியர் ஜிகே ரெட்டி அவர்கள் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களின் ஒருவராய் இருந்தவர். அவரிடம் பேசும்போது மேலே குறிப்பிடும் பல உண்மைகளை அறிய முடிந்தது. ஜிகே ரெட்டி அவர்களின் சிறந்த ஆளுமையைப் பற்றி சித்தார்த்தன், மற்றும் டெல்லியில் என்னோடு இருந்த காலங்களில் பரதன் சந்தித்துள்ளார் அவருக்கும் அவரைப் பற்றி தெரியும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட போகும் தகவலறிந்து இயக்கங்கள் தமிழ்நாட்டிலிருந்து முகாம்களை மூடி நாடு திரும்புவதற்குரிய ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள். எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் கடைசியாக இந்தியாவுடன் கிடைத்த பயிற்சியையும் முடித்துக்கொண்டு அவர்கள் கொடுத்த ஆயுதங்களுடன் இலங்கைக்கு அனுப்பி மன்னாரில் தரையிறக்க செயலதிபர் உமாமகேஸ்வரன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து பல தோழர்களையும் மன்னாரில் இறக்கி விட்டதாக செய்திகள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பின்பு கேள்விப்பட்ட ஒரு செய்தியும் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா கொடுத்த ஆயுதங்களின் ஒரு சிறு பகுதியை செயலதிபர் உமாமகேஸ்வரன் இந்தியாவுக்கு எதிரான கேரளா நக்சலைட் இயக்கங்களுக்கு கொடுத்துள்ளதாக அறிந்து இந்திய IB உளவுத்துறை கடும் கோபத்தில் இருந்தார்கள்.

அவசரகதியில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை தயாரித்தவர்கள் ஒருவர் அரசியல் சட்ட அறிஞரான ஒரு தமிழரும் அடங்குவார். அவரின் பெயரை மறந்துவிட்டேன். கிட்டத்தட்ட அவரின் பெயர் தாமோதரம்பிள்ளை என நினைவில் உள்ளது. சரியோ தெரியவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்த காலக்கட்டங்களில் எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தார்கள், யார் யார் எப்போது இலங்கையில் கரை இறங்கினார்கள், எங்கு இலங்கையில் முதல் முகாம் அமைத்தார்கள். செயலதிபர் எப்போது எங்கு இலங்கையில் கரை இறங்கினார் எப்போது கொழும்பு சென்றார் எப்படி சென்றார் என்ற விபரங்களை அமைப்பில் இருந்து கரை இறங்கியவர்கள் தனி பதிவுகளாக போட வேண்டும் இல்லாவிட்டால் பதிவுகளாக தந்தால் நான் போடுகிறேன். பல தோழர்கள் கொழும்பிலும் இங்கும் எப்படி என்றெல்லாம் எனக்கு சொல்லியிருக்கிறார்கள். அதை நான் கோர்வையாக எழுத முடியாது. எனக்குத் தெரியாது அந்த விடயங்களை பதிவுகளாக நானும் அறிய ஆசைப்படுகிறேன்.

இந்திய பிரதமர் இலங்கை இந்திய ஒப்பந்தம் வெற்றிபெற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மட்டும் கருத்தில் கொண்டே ஏற்பாடுகள் நடந்து வந்தன. இது இந்தியா விட்ட மிகப்பெரிய தவறு. அமிர்தலிங்கத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் மற்ற இயக்கங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இலங்கையில் இருந்து இந்திய தூதுவர் தீக்ஷித் அவர்களின் நேரடி மேற்பார்வையில் பூரி என்ற அதிகாரி யாழ்ப்பாணம் சுதுமலை போய் பிரபாகரனை நேரடியாக சந்தித்து இந்தியா ஒப்பந்தம் பற்றி விரிவாக பேசி, பிரபாகரனின் முழு சம்மதம் பெற்று, அதை புதுடில்லிக்கு உடனடியாக அறிவித்துள்ளார். பிரபாகரன் இந்திய அதிகாரிகளிடம் வைத்த ஒரே கோரிக்கை, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை தமிழர்களின் சார்பாக கையெழுத்து போடும் அதிகாரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பாக தனக்கு மட்டுமே அதாவது பிரபாகரனுக்கு உரியது என்றும், இலங்கைத் தமிழர் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் உட்பட வேறு எந்த ஓர் இயக்கத்திற்கும் உரிமை இல்லை என்றும் கூறியுள்ளார். அதோடு வேறு எந்த இயக்கத்தையும் அழைத்து ஒப்பந்தம் பற்றி பேசக்கூடாது என்றும் வாக்குறுதி வாங்கியுள்ளார். இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்ட இந்திய அதிகாரிகள், பிரபாகரன் சென்னை வழியாக புதுடில்லி செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளனர். முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு வற்புறுத்தலும் இன்றி, ராணுவ பலத்காரம் இன்றி பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு புதுடில்லி வந்தார். ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மாற்றம் செய்யும்படியும் கேட்டிருக்கலாம். புதுடெல்லி வராமல் விட்டிருக்கலாம்.

இதேநேரம் புதுடில்லியில் ராஜீவ் காந்திக்கு அரசியல் ஆலோசகர்களால் ஓர் கேள்வி முன்வைக்கப்பட்டது. பிரபாகரன் மட்டும் இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மற்ற இலங்கை விடுதலை இயக்கங்கள், தாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று இலங்கையில் போராட்டங்கள் நடத்தலாம். அல்லது இலங்கை அரசு மறைமுகமாக இந்த இயக்கங்களை தூண்டி விடலாம். இந்த இயக்கங்களை விடுதலைப் புலிகள் இயக்கம் போராட்டக் களத்தில் இருந்து பல உயிர் சேதங்களோடு அகற்றியதால் மற்ற விடுதலை இயக்கங்களுக்கு விடுதலைப்புலிகளின் மேலிருக்கும் கோபம் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கட்டாயம் செயல்படுவார்கள் என்று ராஜீவ் காந்திக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

29/07/1987 ஒப்பந்தம் இலங்கையில் கையெழுத்தாகும் முன்பு, பிரபாகரன் டெல்லிக்கு வரும் முன்பு மற்ற இயக்க தலைவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். புளொட் சார்பாக சித்தார்த்தனும் வாசுதேவா வந்திருந்தார்கள். உமாமகேஸ்வரன் புத்திசாலித்தனமாக ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு போய்விட்டதாக தகவல் சொன்னோம். விடுதலை இயக்கங்களில் புதிய விடுதலை இயக்கமாக முதல்முறையாக இ.என்.டி.எல்.எஃப் சார்பாக அதன் தலைவர் பரந்தன் ராஜன் அவர்களும் கலந்து கொண்டார். இந்த இயக்கத் தலைவர்கள் எல்லாம் தங்கியிருந்த ஹோட்டல் பெயர் சாம்ராட் ஹோட்டல்.
தொடரும்..

 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 10

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 11

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 12

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 13

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 14

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 15