பகுதி 48

முன் பதிவுகளில் போட வேண்டிய சில சம்பவங்களும் உண்டு. நான் பின்தள மாநாட்டுக்கு வரும்போது என்னிடமிருந்த இலங்கை பாஸ்போர்ட்களை தலைமைகழகத்தில் ஒப்படைக்க கொண்டுவந்து வைத்திருந்தேன். மாநாட்டு நேரமும், முன்பும் பின்பும் பல தோழர்கள் வந்து ரகசியமாக தங்களது பெயர்களை கூறி என்னிடம் தங்களது ஒரிஜினல் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்டார்கள். நானும் எனக்குத் தெரியாது செக் பண்ணி பார்த்து தான் சொல்ல வேண்டும் என்று கூறினேன். மாநாடு முடிந்து சென்னை வந்தபோது கிட்டத்தட்ட 10 தோழர்களுக்கு மேல் ரகசியமாக வந்து இருந்த அவர்களின் பாஸ்போர்ட் பெற்றுச் சென்றார்கள். பாஸ்போர்ட் இல்லாதவர்கள் சில கள்ள பாஸ்போர்ட்டுகளை வாங்கிச் சென்றார்கள். அவர்கள் இயக்கத்தை விட்டு போகப் போகிறார்கள் என்று தெரியும். அன்றிருந்த மனநிலையில், உண்மைகள் தெரிந்த நிலையில் இவர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்காமல் விடுவதோ, இல்லை இவர்களை காட்டிக் கொடுப்பது போன்ற மனநிலைகளில் நான் இருக்கவில்லை. நான் பாஸ்போர்ட் கொடுத்தவர்களில் ஒருவர் கனடாவில் இருக்கும் பரதனும் ஒருவர்.

நான் டெல்லியில் இருந்த போது, பல இயக்கத் தோழர்கள் தயங்கி தயங்கி தாங்கள் வெளிநாடு போகப் போவதாகவும், ஏர்போர்ட்டில் பயமாக இருக்கிறது என்றும் கூறியபோது பலரை எனக்கிருந்த தொடர்புகள் மூலம் அனுப்பி வைத்திருந்தேன். அதுபோலவே 88, 89 ஆண்டுகளில் சென்னையில் பொறுப்பில் இருந்தபோது சென்னை விமான நிலையம் மூலம், பல தோழர்கள் வெளிநாடு போக உதவி செய்துள்ளேன். போகும் முன் என்னை அவர்கள் புகழும் வார்த்தைகளுக்கு அளவே இருக்காது. தாங்கள் வெளிநாட்டுக்குப் போய் எனக்கு உதவி செய்வதாகவும் என்னை இயக்கத்தை விட்டு வந்து விட வேண்டும் என்று அன்பு கட்டளையும் போடுவார்கள். அதோடு புளொட் இயக்கம் தவறானது, உமாமகேஸ்வரன் கேடுகெட்ட தலைவர் என்று வெளிநாட்டுக்குப் போகும் முன்கூறியவர்கள் எல்லாம், வெளிநாட்டுக்கு போய் உழைத்து வசதியான வாழ்க்கை வந்த பிறகு, உமாமகேஸ்வரனை புகழ்ந்தும் எனக்கு எச்சரிக்கையும் கொடுத்த தோழர்களும் உண்டு. எனது தயவில் வெளிநாட்டுக்கு போன தோழர்கள் வசதியான வாழ்வு வந்த பின்பு இந்தியா வரும் போது என்னை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டவர்கள் பலர். என்னை சந்தித்தால் எனக்கு பண உதவிகள் செய்ய வேண்டிவரும் என்று நண்பர்களுடன் கூறிச்சென்ற பலரும் இருக்கிறார்கள்.

சென்னையில் எமது ராணுவத் செயலர் கண்ணனை விடுதலைப்புலிகள் கடத்திச் சென்றபோது, கந்தசாமி , கந்தசாமி உளவுப் படையினர், உளவு அறிந்து, கண்ணன் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதை செயலதிபர் இடம் கூற, செயலதிபர் உமாமகேஸ்வரனும், சித்தார்த்தனும் அப்போது உளவுத்துறை டி.ஐ.ஜி அலெக்சாண்டர் இடம் கூறி கண்ணனை மீட்டுத் தரும்படி கேட்ட போது, அலெக்சாண்டர் உமாமகேஸ்வரன் மேல் கடுமையான வார்த்தை பிரயோகங்களை செய்துள்ளார். அலெக்ஸாண்டரின் குரு மோகனதாஸ். அதோடு அலெக்சாண்டர் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் உமாமகேஸ்வரன் இடம் எந்த இடத்திலும் விடுதலைப்புலிகள் கடத்தியதாக கூறக் கூடாது, பிரபாகரன் ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் நீங்களெல்லாம் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து அவமரியாதை செய்தீர்கள் என்று தெரியும் என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளார்.

செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வரும்போது எல்லா இந்திய அதிகாரிகளிடமும் உளவுத்துறை தலைவர்களிடமும் டி.ஐ.ஜி அலெக்சாண்டர் பற்றி நடந்த விபரங்களைக் கூறி, அலெக்சாண்டர் இந்திய அரசுக்கு எதிரான ஆள் என்று குறிப்பிடும்போது, எல்லோரும் பொதுவாக ஒரு இந்திய நாட்டின் அதிகாரியை நீங்கள் இப்படி குறை கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசு எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் முதலில் இந்திய அரசுக்கு எதிராக செயல்படும் வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்று புத்திமதி கூறினார்கள்.

புதிய வெளியுறவுச் செயலாளர் தமிழர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் தனது பதவிக்காலத்தில் இரண்டு முறை இயக்கங்களை கூப்பிட்டு சந்தித்தார். அந்த சந்திப்புகளில் வெங்கடேஸ்வரன் சரி இயக்கங்களும் சரி பெரிதாக இலங்கை பிரச்சினை பற்றி தீவிரமாக பேசவில்லை. அமிர்தலிங்கம் குழுவினர் அழைக்கப்படவில்லை. எல்லா இயக்கங்களும் விடுதலைப்புலிகள் உட்பட எங்களுக்கு இந்த முறை கொடுத்த ஹோட்டல் சரியில்லை, அங்கு சாப்பாடு சரியில்லை, மழை பெய்யும் போது நடக்கும் நடைபாதை எல்லாம் மழைத்தண்ணீர் என்ற ரீதியில்தான் புகார் இருக்கும். ஏ.பி.வெங்கடேஸ்வரன் இலங்கை பிரச்சினை பேசுவதை விட்டு தான் வேலை செய்த வெளிநாடுகளில் ஏற்பட்ட கஷ்டங்கள் பிரச்சினைகளை சுவைபடக் கூறுவார். அதை நாங்கள் பிஸ்கட், டீ குடித்துக்கொண்டே சுவராசியமாக கதை கேட்போம். வெங்கடேஸ்வரன் முதலில் எங்களோடு நல்ல ஒரு நட்பை முதலில் வைக்க வேண்டும், அதன் பிறகு இலங்கை அரசியல் பேசலாம் என்று நினைத்தார். அதற்குள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கியபின் ராஜீவ் காந்தி இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்துவிட்டார் என பல அறிக்கைகள் விட்டவர். ஆனால் இவர் பதவியில் இருக்கும்போது இயக்கங்களுடன் இலங்கை பிரச்சினை பற்றி எந்த ஒரு கருத்தும் தீவிரமாக பேசவில்லை என்பதே உண்மை. இயக்கங்களும் இந்திய பேச்சுவார்த்தைகளில் உண்மையில் தீவிரம் காட்டவில்லை காரணம். இந்திய அரசு அமிர்தலிங்கத்தை முன்வைத்தே அரசியல் செய்வதால், அதை முறியடித்து இந்திய அரசை பழி வாங்க வேண்டும் என நினைத்தார்கள். இது டெல்லியில் எனது நேரடி அவதானிப்பில் நடந்த செய்திகள். எமது இயக்கத்தின் சார்பில் வாசுதேவா, கனகராஜா கலந்து கொண்டார்கள், அவர்களோடு நானும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் கலந்து கொண்டோம். பகலில் ஹோட்டலிலிருந்து இந்திய அரசு கொடுக்கும் சகல வசதிகளையும் அனுபவித்து விடுவோம்.

எமக்கு டெல்லியில வீடு கொடுத்து, டெல்லியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வளர்ச்சி பெற, பல தொடர்புகள் பெற உதவியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழக ராஜ்யசபா எம்.பி அண்ணன் எல். கணேசனின் பதவிக்காலம் 06/1986 ஆண்டு முடிந்தது. பதவி முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அந்த வீட்டையும் நாங்கள் பாவித்தோம். பின்பு எனது வீடு அலுவலகம் எல்லாம் ஆலடி அருணாவின் வீட்டில்தான். அது பின்தள மாநாட்டுக்குப் பின் தோழர் சைமன் ஒரு குறுகிய காலம் டெல்லி வந்து என்னோடு வேலை செய்தார்.

1986 நவம்பர் மாதம் 17, 18 தேதிகளில் பெங்களூரில் தெற்காசிய நாடுகளின் அதாவது சார்க் மாநாடு நடைபெற்றது. அதற்கு வரும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா இடம் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற தீவிர சிந்தனையில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இருந்தார். அதற்காக எம்.ஜி.ஆர் மூலம் பிரபாகரனை அணுகி எம்.ஜி.ஆர் ஆதரவுடன் பெங்களூர் வரச்செய்து, அதுவும் எல்லா இயக்கங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒதுக்கிவைத்துவிட்டு, பிரபாகரனுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து பெங்களூர் அழைத்துச் சென்றார்கள். பிரபாகரன் அங்குபோய் ஜெயவர்த்தனா உடன் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா எதிர்பார்த்தது குறைந்தபட்சம் தனது தமிழ் மக்களுக்குரிய தேவையை சரி பிரபாகரன் கூறுவார் என்று, எதுவும் நடக்கவில்லை. பிரபாகரன் திரும்ப சென்னை வந்து விட்டார்.

சார்க் மாநாடு முடிந்து இரண்டு, 3 நாட்களின்பின் என நினைக்கிறேன். செயலதிபர் உமாமகேஸ்வரனும் டெல்லி வந்து தங்கியிருந்தார். அப்போது எம்.ஜி.யாரும், அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் டெல்லி வந்து தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அதேநேரம் சென்னையில் எல்லா இயக்க அலுவலகங்கள் வீடுகள் தமிழ்நாடு போலீசாரால் சோதனை செய்யப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு, எல்லா இயக்கங்களிலும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் சென்னையில் இருக்க கூடாது என்பதற்காகவே எம்.ஜி.ஆர் டெல்லி வந்து விட்டார். பிரபாகரன் வீட்டுக்காவலில் இருந்தபோது தமிழ்நாடு அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

சென்னையில் நடந்த சம்பவங்களை டெல்லியில் இருந்த செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு விபரங்கள் அறிவிக்கப்பட்டது. உடனடியாக செயலதிபர் உமாமகேஸ்வரன் என்னையும் அழைத்துக் கொண்டு, தோழர் சைமனை ரூமில் இருக்க சொல்லிவிட்டு, நாங்கள் இருவரும் ஸ்கூட்டரில் எம்.ஜி.ஆரை பார்க்க மாலை நாலு மணி போல் தமிழ்நாடு இல்லம் சென்றோம். எம்.ஜி.ஆரை பார்க்க உடனே அனுமதி கிடைத்தது. எம்.ஜி.ஆரை பார்த்தோம். செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்னையில் நடக்கும் கைது சம்பவங்களை கூறியபோது, அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பார்க்கும்படி கூறினார். பண்ருட்டி ராமச்சந்திரனும் எங்களை வரவேற்று தேநீர் எல்லாம் கொடுத்து உபசரித்து, தாங்கள் சென்னையில் இல்லாதபோது மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் தங்களுக்குத் தெரியாதது போலவும் தாங்கள் உடனே மத்திய அரசாங்கத்துடன் கதைத்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார். அதேநேரம் பேச்சோடு பேச்சாக நாங்கள் தங்கியிருக்கும் ஆலடி அருணா எம்.பியின் வீட்டு விபரத்தையும் கேட்டுக்கொண்டார். காரணம் எங்களுக்கு தகவல் சொல்ல என்றும் கூறினார்.

நாங்கள் குழப்பத்துடன் எமது அறைக்கு வந்து மூவரும் அடுத்து இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற யோசனையுடன் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.ஜி.ஆரின் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் என்பவர் யூனிஃபார்ம் உடன் வந்து வீட்டை சோதனை போட வேண்டும் என்றார். நாங்கள் விடவில்லை. ஒரு எம்.பியின் வீட்டில் சபாநாயகரின் அனுமதி இல்லாமல் போலீசார் உட்புகுந்து சோதனை செய்ய முடியாது என்ற காரணம் எமக்கு சாதகமாக இருந்தது. உமாமகேஸ்வரன் அந்த அதிகாரியை இனி இல்லை என்றவாறு திட்டி, போய் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இடம் நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட போவதில்லை என்று கூறுமாறு கூறினார். நான் முதல் முறையாக அங்குதான் உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டு அதிகாரியை திட்டுவதை நேரடியாகப் பார்த்தேன்.

உமாமகேஸ்வரனுக்கு மந்திரிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையில் பெருந்தொகை பணம் எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் கொள்ளையடித்த விபரங்கள் தெரியும். அதனால் அவர் அவர்களிடமே நேரடியாக எதிர்த்து கதைக்க கூடியவர். செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கதைப்பது என்றால் பயம். (பிற்காலத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் நான் சந்தித்தபோது, உமாமகேஸ்வரன் என்னை பற்றி பல தவறான கருத்துக்களை பலருடன் கூறியுள்ளதாக கூறி வருத்தப்பட்டார்).

அன்றிரவு எட்டு மணி போல் நாங்கள் இருந்த ஆலடி அருணா எம்.பியின் வீட்டைச் சுற்றி, எமது ஏரியா நார்த் அவென்யூ போலீஸ் அதிகாரி தலைமையில் பெரும் போலீஸ் படை வீட்டின் மேல் எல்லாம் ஏறி காவல் இருந்தார்கள். எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. அங்கு வாடகைக்கு தங்கி இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தநேரம் ஆலடி அருணா எம்.பி பாராளுமன்றத்தில் இருந்து வரவில்லை. திடீரென டெல்லி சீப் இமிக்ரேஷன் அதிகாரி வந்து உமாமகேஸ்வரன் பெயரில் ஹவுஸ் அரெஸ்ட் நோட்டீஸ் தந்து விட்டு போனார். அந்த ஹவுஸ் அட்ரஸ் நோட்டீஸ் செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு மட்டும்தான். நானும் சைமனும் சுதந்திரப் பறவைகள்.

நான் உடனடியாக போய் எங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தேன். அதேநேரம் பாராளுமன்றத்தில் இருந்து வந்த ஆலடி அருணா எம்.பி நிலைமையை ஊகித்து, அவரது ரூமுக்கும், எமது ரூமுக்கும் இருந்த கதவைத் திறந்து ரகசியமாக வந்து எங்களுடன் பேசினார். இமிக்ரேஷன் அதிகாரி கொடுத்த ஹவுஸ் அரெஸ்ட் நோட்டீசை அடுத்தநாள் எப்படியும் வை.கோபால்சாமி இடம் கொடுத்து பாராளுமன்றத்தில் பேச சொல்லச் சொன்னார். எம்.ஜி.ஆர் இங்கு இருப்பதால் அவரது கட்சியை சேர்ந்த தான் பேசுவது சரியாக இருக்காது என்றும் கூறினார்.

எமது காவலுக்கு தலைமை தாங்கிய நோர்த் அவென்யூ இன்ஸ்பெக்டர் என்னை கூப்பிட்டு பேசினார். அவருக்கு என்னை தெரியும். நார்த் அவென்யூ பொலீஸ் ஸ்டேஷன் நாங்கள் இருந்த எல்.கணேசன் எம்.பியின் வீட்டுக்கு அருகில் தான் இருந்தது. அவருக்கு நாங்கள் யார், ஏன் ஹவுஸ் அரெஸ்ட் என்ற முழு விபரமும் தெரியாது. நானும் சைமணும், அவரிடம் எங்கள் போராட்டம் பற்றியும் எங்கள் தலைவர் பற்றியும் பெருமையாக எடுத்துக் கூறினோம். அவர் எங்கள் தலைவரை ரகசியமாக எட்டிப் பெருமையாக பார்த்தார்.

காலையில் ஆறுமணி குளிர் நடுங்க நடுங்க ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வை.கோபால்சாமி எம்.பி அண்ணாவின் வீட்டுக்குப்போய் விபரத்தைக் கூறி டெல்லியில் ஹவுஸ் அரெஸ்ட் கடிதத்தையும் கொடுத்தேன். எனக்கு கவலை, அந்த நேரத்தில் அக்கடிதத்தை பிரதி எடுக்க முடியாமல் போய்விட்டது. வை.கோ அவர்கள் கோபமடைந்து, இது எம்.ஜி.ஆரும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து செய்யும் கூட்டு சதி, இதைப் போட்டு பாராளுமன்றத்தில் உடைக்கிறேன் என்று கூறினார்.

நான் திரும்ப வந்தபோது பின் வீட்டில் இருக்கும் டீக்கடைக்காரர் ராஜன் எங்களுக்கு சுடச்சுட டீ தந்தார். தானே காலை உணவையும் கொண்டு வந்து தருவதாக கூறி சென்றார். செயலதிபர் உமாமகேஸ்வரன் வெயிலுக்காக வெளியில் வந்து நடக்கத் தொடங்கினார். காவலுக்கு இருந்த இன்ஸ்பெக்டர் பதற்றமடைந்து ரூமுக்குள் போகும்படி கெஞ்சினார். அவரிடமும் உமாமகேஸ்வரன் கடுமையாக பேசத் தொடங்க, நானும் தோழர் சைமனும் சமாதானப்படுத்தி ரூமுக்குள் அனுப்பி விட்டு, இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்பு கேட்டோம். அந்த இன்ஸ்பெக்டர் பெருந்தன்மையாக ஒரு பெரும் விடுதலை இயக்கத் தலைவர் கோபப்பட்டு பேசியதை தான் பெரிது படுத்தவில்லை என்றும், ஒரு பெரிய சுதந்திர போராட்ட தலைவரை பார்த்தது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார். அதோடு தான் ஒரு அரசு அதிகாரி, அரசாங்கம் சொல்வது தான் செய்ய வேண்டும் தனக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இல்லை என்று கூறி ஒரு சம்பவத்தைக் கூறினார். இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து அகற்றி அவரை கைது செய்ய சென்ற போது, அவர் நிலத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியதாகவும், கைது செய்ய சென்ற போலீஸ்காரர்கள் அவர் ஒரு முன்னாள் பிரதம மந்திரி திரும்பவும் பிரதம மந்திரி பதவிக்கு வரலாம் என்று தெரிந்தும் கூட அவரை தரதரவென்று இழுத்துக் கொண்டு போகும் போது இந்திராகாந்தியின் சாரி கழன்று விழுந்தபோது கூட போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆளும் அரசியல்வாதிகளை பகைத்துக்கொண்டு அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். எங்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.

பகல் கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு, நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். பகல் ஒரு மணி இருக்கும், திடீரென காவலுக்கு இருந்த போலீஸ்காரர்கள் மாயமானார்கள். டெல்லி சீப் இமிக்ரேஷன் அதிகாரி வந்து மன்னிப்பு கேட்டு, தாங்கள் உடனடியாக ஹவுஸ் அரெஸ்ட் நோட்டீசை வாபஸ் பெறுவதாக கூறி சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ரா உளவுத்துறையின் உயரதிகாரிகள் வந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு, ஏன் தங்களுக்கு உடனடியாக தொலைபேசி செய்யவில்லை நாங்கள் உடனே நடவடிக்கை எடுத்து இருப்போம் என்று கூறினார். நாங்கள் கூறினோம், உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று. தில்லியில் உமாமகேஸ்வரனுக்கு நடந்த விடயம் தங்களுக்கு தெரியாது என்றார்கள். எங்கள் மூவருக்கும் மூன்று மணி சென்னை போகும் விமானத்துக்கு விமான டிக்கெட் கொண்டு வந்திருந்தார்கள். உமாமகேஸ்வரன் தான் மட்டும்தான் சென்னை போவதாகக் கூறினார். இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது IB உளவுத்துறையின் உயரதிகாரிகள் செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்னை போக விமான டிக்கெட் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் ரா உளவுத்துறை அதிகாரிகள் இருப்பதை அறிந்து தூரவே நின்றுகொண்டு செயலதிபர் உமாமகேஸ்வரனை வரவழைத்து பேசிவிட்டு போனார்கள். உமாமகேஸ்வரன் தான் ரா அதிகாரிகளுடன் போவதாகக் கூறி விட்டார்.

இந்த திடீர் மாற்றம் எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

இரவு கோபாலசாமி எம்.பியின் வீட்டுக்கு போனபோது தான் முழு விபரமும் தெரிந்தது. ராஜ்யசபா பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வை.கோ எம்.பி சென்னையில் நடந்த ஹவுஸ் அரெஸ்ட் கைதுகள் பற்றி கேள்வி கேட்டுள்ளார். உள்துறை இணை அமைச்சர் சிதம்பரம், அது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் முடிவு இதற்கும் மத்திய அரசாங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அடித்துக் கூறியுள்ளார். வை.கோ எம்.பி கேலியாக டெல்லி இமிக்ரேஷன் அலுவலகமும் தமிழ்நாட்டு அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தவறு என்று கூறியுள்ளார் . உடனே சிதம்பரம் டெல்லி இமிகிரேஷன் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கூறியுள்ளார். உடனடியாக வை.கோ செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு கொடுத்த நோட்டீசை காட்டியுள்ளார். சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார். வை.கோபால்சாமி காரசாரமாக மத்திய அரசை பாராளுமன்றத்தில் வெளுத்து வாங்கியுள்ளார். அதுதான் எமக்கு நடந்த ராஜ உபசாரம். உண்மையில் பண்ருட்டி ராமச்சந்திரனும் எம்.ஜி.ஆரும் தங்களுக்கு வேண்டிய மத்திய அரசு அதிகாரிகளை பயன்படுத்தி, தவறான தகவல்களை கொடுத்து இமிக்ரேஷன் மூலம் ஹவுஸ் அரஸ்ட் கொடுத்தது தெரியவந்தது. கப்பல் கதை நாளை சொல்கிறேன்.

பகுதி 49

சிங்கப்பூரைச் சேர்ந்த லலிதா என்ற பெண்மணி எமது செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு மிக நெருங்கியவர். அவர் சிங்கப்பூரில் தன்னால் குறைந்த விலையில் நல்ல கப்பல்கள் வாங்கித் தரமுடியும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். எமது செயலதிபர் கப்பல் வாங்க முடிவு செய்து, சிங்கப்பூர் லலிதாவை தொடர்பு கொள்ள, அவர் சிங்கப்பூரில் பெரும் தொழிலதிபர் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த சிங்கப்பூர் தொழிலதிபருக்கு சென்னை ராயப்பேட்டையில் மிகப்பெரிய துணிக்கடை ஒன்று உள்ளது. இயக்கத்திலுள்ள தோழர்களுக்கு கப்பல் ஒன்று சொந்தமாகப் போகிறது . அதில்ஆயுதங்கள் வரப்போகிறது. என்று வதந்திகள் பரவி தோழர்களுக்கு பெரிய சந்தோசம்.

பெருமளவு பணத்தை வாங்கிய சிங்கப்பூர் லலிதாவும் தொழிலதிபரும் கப்பலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்திகள் அனுப்பினார். அவர்களும் உடனடியாக கப்பல் வாங்கி தருவதாக கூறி, உபயோகக் காலம் முடிந்து, உடைப்பதற்காக சென்னைக்கு வரும் ஒரு சிறு கப்பலை ஏமாற்றி செயலதிபர் தலையில் கட்டிவிட்டார்கள். சென்னை வந்த கப்பல், யார் கஷ்ட காலமோ சென்னை மெரினா பீச் கடலில் தரை தட்டி விட்டது. கப்பலின் படம் பத்திரிகையில் எல்லாம் வந்தது. உமாமகேஸ்வரன் கோபப்பட, சிங்கப்பூர் பணம் வாங்கியவர்கள் இதுதான் கப்பல், இனி உங்கள் பொறுப்பு என்று கைவிரித்து விட்டார்கள்.

இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பும் செயலதிபர் உமாமகேஸ்வரன் பல வழிகளில் பணத்தை பெற முயற்சி செய்தபோது, சிங்கப்பூர் ஏமாற்று பேர்வழிகள் அதுதான் ஒப்பந்தம் கையெழுத்தாகி சமாதானமாகி முடிஞ்சது, சமாதானம் ஏற்பட்டுவிட்டது, இனி என்னத்துக்கு பணமும், கப்பலும் எனக் கூறிவிட்டார்கள். பொறுத்துப் பார்த்த செயலதிபர் உமா, தமிழ்நாட்டில் இருந்த தனது ரகசிய வேலைகளைச் செய்யும், வசந்த் தலைமையிலான சில தோழர்களுக்கு கட்டளைகளை அனுப்பினார்.

1988 ஆம் ஆண்டு நான் சென்னை அலுவலகத்தை பொறுப்பு எடுத்த பின்பு, தீபாவளிக்கு முதல் நாள் இரவு சிங்கப்பூர்காரரின் சென்னை துணிக்கடை பரபரப்பாக தீபாவளி விற்பனையில் ஈடுபட்டிருந்த நேரம் இரவு 9 மணி போல் வசந்துடன், இன்னொருவரும் போய் கடை மேனேஜரை சுட்டுக் கொன்றார்கள்.
சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரும், லலிதாவும் பயந்து போய்விட்டார்கள். அவர்களை தொடர்பு கொண்ட செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களிடம் பணத்தைக் கேட்க, அவர்களும் தருவதாக கூறிவிட்டார்கள். அந்தப் பணத்தை பின்பு சித்தார்த்தன் போய் வாங்கி நமது இயக்கத்திற்கு மூன்று பெரிய சூட்கேஸ்களில் அடங்கக்கூடிய அளவு கம்யூனிகேஷன் சாமான்கள் வாங்கி அங்கு வைத்து விட்டார். இதுதான் கப்பல் வாங்கிய கதை.

மாதங்கள் வருடம் மறந்துவிட்டேன். புதுக்கோட்டையில் உள்ள எமது முகாமில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எனக்கு அழைப்பு வந்தது. நானும் சென்னை வந்தேன். செயலதிபர் உமாமகேஸ்வரன், வாசுதேவா காரில் பயணமானார்கள். காரை ரோபோட் என்ற தோழர் ஓட்டிச் சென்றார். மாணிக்கம்தாசன் நாங்கள் போவதற்கு ஒரு வேனை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். வேகக் கட்டுப்பாடு பொருத்தப்பட்டிருந்த அந்த வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. அந்த வாகனத்தில் நான், மாதவன் அண்ணா, ஆனந்தி அண்ணா, திவாகரன் என நினைக்கிறேன், மற்றும் நடேசன் சென்றோம். மற்றும் கூட யார் வந்தவர்கள் என்றும் மறந்து விட்டேன். மாணிக்கம்தாசன், அவருக்கு வானில் காலை மடக்கிக்கொண்டு இருந்து வருவது கஷ்டம் என்று அவர் பஸ்ஸில் போய் விட்டார். நாங்கள் திருச்சிக்கு அருகில் சமயபுரம் என்ற ஊரை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு அம்பாசிடர் கார் விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்து இருந்தது. சுற்றி மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த காரை கடக்கும்போது, நடேசன் இது பெரியவர் வந்த கார் என கத்த தொடங்கினார். எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. உடனடியாக இறங்கி காரை பார்த்தபோது டிரைவர் சீட்டில் எல்லாம் ஒரே ரத்தம். காரில் யாரும் இல்லை. முன் சீட்டில் கைத்துப்பாக்கி கீழே விழுந்து கிடந்தது. அப்போது போலீசார் யாரும் வரவில்லை. அங்கிருந்த மக்கள் இப்பதான் பஸ்ஸில் காயம்பட்டு இருந்தவர்களை போட்டுக் கொண்டு போகிறார்கள் என்று கூறினார்கள். நாங்கள் உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போனோம். அங்கு அப்பதான் செயலதிபர் உமாமகேஸ்வரன், மாணிக்கம்தாசன் இருவரும் ஸ்ட்ரெச்சரில் வாசுதேவா மற்றும் இருவரை தள்ளிக்கொண்டு போனார்கள். எங்களைப் பார்த்தவுடன் அவர்களுக்கும், அவர்களைப் பார்த்தவுடன் எங்களுக்கும் மனம் அமைதியாக இருந்தது. காரின் நிலைமையை பார்த்த எங்களுக்கு செயலதிபர் மிக பாரதூரமாக காயம் பட்டு இருப்பார் என நினைத்தோம். ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போகும் போதே ரோபோட் பெருமளவு இரத்தம் இழந்து மரணம் அடைந்து விட்டார்.

எப்படி மாணிக்கதாசன் அந்த நேரம் அங்கு வந்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுது செயலதிபர் கூறினார். விபத்து ஏற்பட்டவுடன் லேசாகத் தான் அடிபட்டதாகவும், வாசுதேவா மயங்கி விட்டதாகவும், காரை ஓட்டிய டேவிட், மற்றும் தனது பாதுகாவலர் படுகாயத்துடன் இருந்ததாகவும், எதில் மோதி விபத்து என்று மறந்துவிட்டேன். அரசாங்க பஸ்சுடன் என்றுதான் நினைக்கிறேன். தான் உடனடியாக நடு ரோட்டுக்கு வந்து, சென்னை பக்கம் இருந்து திருச்சி போகும் வாகனங்களை பதட்டத்துடன் நிறுத்த, அவர்கள் நிறுத்தாமல் போக, வந்த அரசாங்க பஸ் ஒன்று நிறுத்தி என்னவென்று கேட்க நடந்த விபரத்தை கூறி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக உதவும்படி கேட்டுள்ளார். முதலில் வாசுவை தூக்கிக்கொண்டு வந்து பஸ்ஸில் ஏற்ற வாசலுக்கு நேராக இருந்த சீட்டில் இருந்தவரை தட்டி தட்டி எழுப்பி, விஷயத்தைக் கூறி அவருக்கு சீட் கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். அந்த சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் மாணிக்கம்தாசன். அவர் வாசுதேவாவை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி பாய்ந்து இறங்கி ஓடி இருக்கிறார். அங்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் பார்த்தவுடன், பரபரப்பாக சென்று இருவரும் காயம்பட்டு இருப்பவர்களையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு திருச்சி பெரியாஸ்பத்திரியில் இறக்கியிருக்கிறார்கள். அந்த நேரம் தான் நாங்கள் போனது. செயலதிபர் உமாமகேஸ்வரன் கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருந்தார். மாணிக்கம்தாசன் பரபரப்பாக சில வேலைகள் எங்களிடம் பிரித்துக் கொடுத்துவிட்டு, மாதவன் அண்ணாவிடம் உடனடியாக புதுக்கோட்டை முகாமில் உள்ளவர்களுக்கு தகவல் சொல்லும்படி கூறிவிட்டு, நடேசன் என்று நினைக்கிறேன், அழைத்துக்கொண்டு விபத்து நடந்த இடத்துக்கு போய் கைத்துப்பாக்கி, காரில் மறைத்து வைத்திருந்த மற்ற துப்பாக்கிகளையும் எடுத்துக்கொண்டு, நடேசனை பாதுகாப்பாக அனுப்பி விட்டு திரும்ப திருச்சி பெரியாஸ்பத்திரி வந்தார். ஒரு இரண்டு மணி நேரத்தில் கந்தசாமி, கண்ணன் எல்லோரும் வந்துவிட்டார்கள். மாணிக்கம்தாசன் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து விபத்து பற்றி விசாரிக்க வந்த போலீசாரிடமும் பேசி ஒழுங்கு செய்துவிட்டு, எல்லோருக்கும் காலை உணவு வாங்கித் தந்து எங்களை புதுக்கோட்டை முகாமுக்குஅனுப்பி வைத்தார்.

ரோபோட் மரணம் அடைந்தது எல்லோருக்கும் சரியான கவலை. மற்றவரும் மரணமடைந்து இருக்கவேண்டும் என நினைக்கிறேன். மறந்துவிட்டேன். தயவு செய்து இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருக்கும் தோழர்கள் பின் குறிப்பில் பதிவு போடும்படி அன்புடன் கேட்கிறேன். புதுக்கோட்டை முகாமில் இறுதி சடங்குகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரன் வந்துவிட்டார். மரணமடைந்தவர்கள் சடலம் வரவில்லை. ஷெர்லி கந்தப்பா சென்னையில் இருந்து நேரடியாக அரசு பஸ்சில் வந்தார். செயலதிபர் உடனடியாக என்னையும் ஷெர்லி கந்தப்பாவையும் திரும்ப உடனடியாக சென்னைக்கு போய் சில வேலைகளை செய்யச் சொல்லிவிட்டு, என்னை வேலைகளை முடித்துவிட்டு புதுடில்லிக்கு போகச் சொன்னார். எமது கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.

நானும் கந்தப்பாவும் மௌனமாக கனத்த இதயத்தோடு சென்னை திரும்பி செயலதிபர் உமாமகேஸ்வரன் சொன்ன வேலைகளை செய்துவிட்டு நான் டெல்லி புறப்பட்டேன்.

பகுதி 50

எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழக வரலாற்றில் இன்றுவரை தோழர்களால் குறிப்பிடப்படுவது எமது இயக்கத்துக்கு வந்த ஆயுதக் கப்பலை இந்திய அரசாங்கம் தடுத்து கைப்பற்றி விட்டது என்று. இந்த செய்தி முகாம்களில் இருந்த அப்பாவி தோழர்களை ஏமாற்ற பரப்பப்பட்ட கதை. செயலதிபர் உமாமகேஸ்வரனை ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரலாம் என்று லண்டன் கிருஷ்ணன் ஏமாற்றிய கதை.

பின்தள மாநாடு முடிந்த பின்பும், எமது கழகம் எமது விடுதலைப் போராட்டத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. ஆனால் பெரும் பின்னடைவுகளை சந்தித்தது. தளத்தில் நமது ராணுவ தளபதி மென்டிஸ், விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தளத்தில் இயக்கம் தடை செய்யப்பட்டது. முகாம்களிலுள்ள தோழர்களுக்கு உணவுப்பொருள், மற்ற வசதிகள் செய்து கொடுக்க, தலைமை கழகத்தில் பணமில்லை. அதேநேரத்தில் இயக்கத்தின் நிர்வாக வேலைகளைக் கூட செய்ய பணம் இல்லாமல் முடக்கம் ஏற்பட்டது.

லண்டனை சேர்ந்த எமது கழக சர்வதேச அமைப்பாளர் கிருஷ்ணன், செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் தான் வெளிநாட்டில் சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு பெருந்தொகையான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு தோழர்களை ஏற்படுத்தவும், நம்பிக்கையான தோழரை தான் குறிப்பிடும் நாளில் குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படியும் கூறியுள்ளார். செயலதிபர் உற்சாகமாக வேலைகளைத் தொடங்கி, வெளிநாட்டுக்கு அனுப்ப நம்பிக்கையான தோழராக PLO பவனை டெல்லிக்கு அனுப்பி பக்காவான ஒரு பாஸ்போர்ட்டையும் செய்து வைக்கச் சொல்லி, லண்டன் கிருஷ்ணன் குறிப்பிடும் நாளில் சவுத் யேமன் நாட்டின் தலைநகர் எடன் அனுப்பச் சொன்னார். பி.எல்.ஓ பவனை நடேசன் அவர்கள் உற்சாகமாக வழி அனுப்பி வைத்துள்ளார். PLO பவன் பற்றி சில குறிப்புகள்.

பி.எல்.ஓ பவன், பரந்தன் ராஜன் லெபனான் போகும் குழுவோடு 1984ஆம் ஆண்டு கடைசியில் டெல்லி வந்தபோது முதன் முறையாக அவரை பார்த்தேன். மிகவும் அமைதியானவர். யாரோடையும் அதிகம் பேச மாட்டார். பயிற்சி முடிந்து திரும்பி வரும் போது நானும், பரதனும் விமான நிலையம் போய் அவரை அழைத்து வந்தோம். பவனை சென்னைக்கு அனுப்பும்போது, சென்னையில் ராஜனுக்கும் கழகத்துக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றி எதுவும் சொல்லி அனுப்பவில்லை. பவன் முதலில் சென்னை எமது அலுவலகத்துக்கு போய் பார்த்திருக்கிறார். முக்கிய தோழர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை, அங்கிருந்த தோழர் காளிதாஸ் PLO பவனை அழைத்துக் கொண்டு பரந்தன் ராஜன் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள். அங்கு போய் வரும்போது பவனை தேடி வந்த மாணிக்கம்தாசன், கந்தசாமியும் ராஜன் வீட்டுக்கு போய் வரும் பவனை சந்தேகப்பட்டு, தாங்கள் சந்தேகப்பட்டது பவனுக்கு தெரியாமல், அவரை அழைத்துக்கொண்டு ஒரத்தநாடு போய் முகாம் ஒன்றில் பெரும் கட்டுப்பாடுகளுடன் தடுத்து வைத்திருக்கிறார்கள். தற்செயலாக எமது ராணுவச் செயலர் கண்ணன் பவன் தடுத்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி கோபப்பட்டு, அவரை அழைத்துக்கொண்டு போய் வேறு முகாமில் விட்டுள்ளார். பின்பு பவன் தான் tela முகாமுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

தளமாநாட்டுக்கு ராணுவ செயலர் கண்ணன் போயிருந்தபோது, கண்ணனை அங்கு வைத்து கொலை செய்வதற்கு ஏற்பாடு நடப்பதாக அறிந்த, தனது உளவுத்துறை மூலம் அறிந்த கந்தசாமி, பவனை தனிப் படகு மூலம் உடனடியாக கண்ணனின் பாதுகாப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். கண்ணன் திரும்ப இந்தியா வரும்போது விடுதலை புலிகள் telo இயக்க மோதலின் பின் தப்பிய பொபி, சுபாஷ் இன்னும் ஒருவர் பெயரை மறந்துவிட்டேன் மூவரையும் எமது கழக முக்கிய ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் ராணுவச் செயலர் மென்டிஸ் இடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இவர்களை கண்ணன் இயக்க தள குழுவினரோடு இந்தியா வரும்போது, இவர்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு, கொழும்புத்துறையில் இருந்து படகு மூலம் மன்னார் வந்து தமிழ்நாடு வந்துள்ளார்கள். கண்ணன், தள குழுவினரை கரையில் எதிர்பார்த்திருந்த பெரிய மெண்டீஸ் telo மூவரையும் சுட போயிருக்கிறார். கண்ணனும் பவனும் அதைத் தடுத்து, அவர்களே உச்சிப்புளியில் இருந்த telo இயக்கத்திடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் உச்சிப்புளியில் இருந்து telo உறுப்பினர்கள் இவர்களை அடிக்க பாய்ந்து இருக்கிறார்கள். பின்பு பவன் இவர்களை அழைத்துக்கொண்டு வந்து சென்னை சாலிகிராமத்தில் இருந்த telo அலுவலகத்தில் செல்வத்திடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த நட்பை வைத்துதான் பின்தள மாநாட்டின் போது telo விடம் பவன் ஆயுதங்கள் கடனாக வாங்கி எமது தோழர்களை ஆயுதங்கள் வந்துவிட்டது என்று கூறி சமாளிக்க முடிந்தது.

லண்டன் கிருஷ்ணன், பாலஸ்தீன யஸர் அரபாத் இயக்கத்திற்கு ஆயுதம் விக்கும் ஒரு ஆயுத வியாபாரியிடம் பேசி, பெருந்தொகையான பணம் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆயுதம் விரைவில் கப்பலில் ஏற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.

நாங்களும் கிருஷ்ணனின் தொலைபேசி வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஒரு மாதம் ஆகிவிட்டது. சென்னையிலிருந்து அடிக்கடி மாதவன் அண்ணா எடுத்து நிர்வாக வேலைகளை சொல்லும்போது, ரகசியமாக பவன் எப்ப வருகிறார் என விசாரிப்பார். நானும் பவன் டில்லியில் இருப்பதை சொல்லாமல் எனக்கு இன்னும் தகவல் வரவில்லை என கூறுவேன். திடீரென ஒரு நாள் செயலதிபர் உமாமகேஸ்வரன் தொலைபேசி எடுத்து பவன் டெல்லியில் இருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம் பவனை வெளியில் விட வேண்டாம். லண்டன் கிருஷ்ணன் ஏதோ குழப்பம் செய்து விட்டார் போல் தெரிகிறது, ஆயுதம் வராது போல் தெரிகிறது. பி.எல்.ஓ இயக்க தலைவர் யசீர் அரபாத்துக்கு நெருக்கமான ஈரோஸ் தலைவரான சங்கர் ராஜி ஏதோ போட்டு கொடுத்து ஆயுத வியாபாரி பணத்துடன் ஏமாற்றி விட்டான் என்று கூறியுள்ளார். இந்த விடயம் இயக்கத் தோழர்களுக்கு தெரிந்தால் பெரிய குழப்பமாகி பெரிய பிரச்சினைகள் நடக்கும், யாரும் கேட்டால் எல்லோருக்கும் பவன் கப்பலில் ஆயுதத்துடன் வந்து கொண்டிருக்கிறார், காலநிலை சரியில்லாததால் கப்பல் வருவது தாமதமாகிறது என்று சொல்லச் சொன்னார்.

இந்த விடயம் நான் பவனுக்கும் சொல்லவில்லை. பவனுக்கும் சலித்துப் போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் உண்மையைச் சொன்னேன். அதிர்ச்சியாகி விட்டார். நடேசன் அவர்களாலும் மற்ற தோழர்களும் இந்த செய்தியை அறிந்தால் தாங்கவே மாட்டார்கள். இந்த ஆயுதக் கப்பலை தான் தங்கள் போராட்ட வாழ்வுக்காக கடைசியாக நம்பியிருந்த தோழர்கள் பெரிய அதிர்ச்சி ஆகி விடுவார்கள் என்று கூறி அழுதார். தான் சென்னை போய் உண்மையை கூறி விடுவதாக கூறினார். நான் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஏதாவது மாற்று திட்டம் வைத்திருப்பார், கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என கூறினேன். ஓரளவு சமாதானமாகி இருந்தார்.

அங்கு என்னிடம் இருந்த பழைய நாட்டுத் துப்பாக்கி ஒன்றை காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு, நானும், பவனும் கடையில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது, அங்கு நமது இயக்கத் தோழர்கள் சிவராஜ் உம், மண்டபம் தோழர் அத்தான் இருவரும் எம்மை எதிர்பாராத விதமாக சந்தித்து ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு எமது ரூமுக்கு வந்தோம். அவர்கள் இருவரும் சில்லறையாக ஆயுதம் வாங்க ஒவ்வொரு ஊராக போய் வருவதாக கூறினார்கள். இவர்களை அனுப்பிய தலைவர்களுக்கு எந்த அளவு புத்தி இருந்திருக்கும் என்று எனக்கு தெரியவில்லை.

அவர்களும் எங்களிடம் எல்லா விசயங்களையும் தெரிந்துகொண்டு எங்களை விட கவலைப்பட்டு போனார்கள். அவர்கள் இரண்டு நாள் எங்களோடு தங்கியிருந்துவிட்டு தங்கள் வேலைகளை கவனிக்க புறப்பட்டுப் போனார்கள். இந்தியாவிடம் தான் கடைசி தஞ்சம் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்த மாதிரியே சென்னையிலிருந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் ரா உளவுத்துறையின் உயர் அதிகாரிகளுடன் பேசி கொஞ்சம் சரி ஆயுதங்கள் வாங்க முயற்சிக்க சொன்னார்.

நானும் இலங்கை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் ரா உளவுத்துறையின் இணைச் செயலாளரைக் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். தான் நாளை ஒரு வேலையாக எமது அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வருவதாகவும், அப்படியே எமது அலுவலகத்திற்கு வருவதாகவும் கூறினார். அடுத்தநாள் அவர் எமது அலுவலகத்துக்கு வந்தபோது பவனை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். நான் அவரிடம் மிகவும் தாழ்மையாக, இல்லை கெஞ்சி எமக்கு ஆயுதம் தரும்படி கேட்டேன். பவணும் மிகவும் உருக்கமாக முகாம் தோழர்களின் நிலையை, அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப ஆசைப்படுவது பற்றி எல்லாம் கூறி, அவர்கள் இப்போது முகாம்களில் தோழர்களின் சாப்பாட்டுப் பிரச்சனை கஷ்டங்கள் எல்லாம் கூறி உதவி செய்யும்படி கேட்டார். ஆயுதங்கள் இல்லாமல் போனால் தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் இலகுவாக எங்கள் தோழர்களை கொலை செய்து விடுவார்கள் என்று பவன் அடுக்கடுக்காக காரணங்களை எல்லாம் கூறினார்.

நான் கடந்த நான்கு வருடங்களாக நமது இயக்க சார்பாக இவர்களுடன் தொடர்பில் உள்ளதால் நான் அவரிடம் கேட்டேன், எனக்குத் தெரியக் கூடியதாக இன்றுவரை மற்ற இயக்கங்களுக்கு பயிற்சிகளும் பெருந்தொகையான ஆயுதங்களும் கொடுத்திருக்கிறீர்கள், ஆனால் எங்களுக்கு ஆரம்பத்தில் மட்டும் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் கொஞ்சமாக கொடுத்துள்ளீர்கள் என்ன காரணம், நாங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக தானே இருக்கிறோம் என்று கேட்டேன். அவரும் சிரித்துவிட்டு உண்மையான காரணத்தை கூறினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கூறினார். எதுவாக இருந்தாலும் கூறும்படி கேட்டோம்.

அவர் கூறிய விடயங்கள் பவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இந்த விடயங்கள் நாம் முன்பே கேள்விப்பட்டது தான். செயலதிபர் உமாமகேஸ்வரன் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி உதவி செய்வது, இந்திய விடுதலை இயக்கங்களுக்கு செய்யும் உதவிகள் பயிற்சிகள் போன்றவற்றை உடனுக்குடன் லலித் அத்துலத்முதலியுடன் பகிர்ந்து கொள்வதையும், அதற்கு ஷெர்லி கந்தப்பா உதவியாக இருப்பதாகவும், தாங்கள் ஆரம்பத்தில் கொடுத்த ஆயுதங்களின் ஒரு பகுதி இந்தியாவின் அரசாங்கங்களுக்கு எதிராக போராடும் நக்சலைட் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ரகசியமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறினார். அதோடு பயிற்சி பெற்ற போராளிகளே இலங்கைக்கு அனுப்பி போராட எந்த முயற்சியும் மேற்கொள்ளாது இருந்தார். அதோடு லெபனானில் பயிற்சி பெற்ற தோழர்களை கூட இலங்கைக்கு அனுப்பாமல் இந்தியாவில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அதோடு பல உங்கள் இயக்கத் தோழர்களே பம்பாயில் போதைப்பொருள் கடத்துவதற்கு உங்கள் தலைவர் பயன்படுத்துகிறார். உங்கள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம் போல் நடத்தவில்லை என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்திருக்கவேண்டும். நாங்கள் ஆயுதம் கொடுக்க அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக நீங்கள் பயன்படுத்திக்கொண்டு எங்களை குறை சொல்லக்கூடாது என்று கூறினார். அவர் ஒரு விடயம் எனக்கு நினைவு ஊட்டினார். ஆறு மாதத்துக்கு முன்பு உமாமகேஸ்வரனும் நானும் டெல்லியில் அவரை சந்தித்தபோது இப்போது நாங்கள் கேட்பது மாதிரியே அன்றும் உமாமகேஸ்வரன் ஆயுதங்கள் கேட்ட போது, தான் நீங்கள்தான் இலங்கையில் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை உங்கள் செயற்பாடுகள் அங்கு எதுவும் இல்லை போல் தெரிகிறது என்று கூற, உமாமகேஸ்வரன் மறுத்து தாங்கள் பல தாக்குதல்கள் நடத்தி உள்ளதாகவும் அது எதுவும் பத்திரிகைகளில் வெளிவரவில்லை என்று கூறினார். இனி பெரிய தாக்குதல் நடத்தப் போவதாகவும் அதற்கு பின்பு சரி ஆயுதங்கள் தரவேண்டும் என்றும் கேட்டார்.
சரி என்று கூறியதாகவும், ஒரு வாரத்தின் பின்பு நான் அதாவது வெற்றி செல்வன் புளொட் இயக்கம் போலீஸ் நிலையங்கள் சில ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டதாக ஐலண்ட் பேப்பர் கட்டிங் கொடுத்ததையும் நினைவுபடுத்தினார். நான் ஒத்துக்கொண்டேன்.

உண்மையில் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை என்றும் நாங்கள் நடத்தியதாக அத்துலத்முதலி தனது ஏற்பாட்டில் தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு ரேடியோ செய்திகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும், தங்கள் உளவு அமைப்புக்கும் இலங்கையில் அரசாங்கத்திலும் ராணுவத்திலும் தொடர்புகள் இருப்பதாகவும் கூறி, செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கும் லலித் அத்துலத்முதலிக்கும் உள்ள தொடர்பின் நெருக்கத்தை எங்களுக்கு சுட்டிக்காட்டினார். இதனால்தான் இந்திய அரசு உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஆயுதங்கள் பயிற்சியில் கொடுக்கவில்லை என்ற உண்மையை போட்டு உடைத்தார்.

நாங்களும் அவரிடம் மன்னிப்பு கேட்டு முகாமிலுள்ள தோழர்களின் எதிர்காலத்தை நினைத்து உதவி செய்யும்படி கெஞ்சிக் கேட்டோம். அவரும் தாங்கள் திரும்ப உதவி செய்தால், அந்த உதவிகள் சரியானபடி போராளிகளுக்கு போய் சேர்ந்து போராளிகள் இலங்கை திரும்ப உங்களில் ஒரு தலைவர் பொறுப்பு ஏற்க வேண்டும். வாசுதேவா, கண்ணன் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர்கள் இல்லை என்று கூறினார். நாங்கள் சித்தார்த்தர் இன் பொறுப்பில் கொடுக்கும்படி கூறினோம்.. சித்தாத்தர் லண்டனில் இருந்து வந்து உமாமகேஸ்வரனோடு கதைத்து பொறுப்பு எடுத்தால் இந்திய அரசாங்கத்தால் திரும்ப உங்களுக்கு உதவி செய்ய முடியும் என்று கூறினார்.


தொடரும்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 10

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 11

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 12

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 13

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 14