Language Selection

வெற்றிச்செல்வன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பகுதி 45

நான்16/07/1986 அன்று ஏற்படுத்தப்பட்ட புதிய பின்தள மாநாட்டில் கலந்து கொள்ளும் தோழர்கள் இருந்த முகாமுக்கு சென்றபோது, என்னை மொட்டைமாடி அலுவலகத்தில் பார்த்த ஒரு சில தோழர்கள் இருந்தார்கள். கிட்டத்தட்ட 85 பேர் இருந்த இந்த முகாமில் யாரையும் எனக்கு தெரியாது. அங்கிருந்த யாருக்கும் அனேகமாக டெல்லியில் ஒரு அலுவலகம் இருப்பது கூட தெரியாது. என்னைப் பற்றி விசாரித்த பின்னர் அங்கிருந்த எல்லா தோழர்களுக்கும் மாநாடு நடக்குமா நடக்காதா, மாநாடு நடந்தபின் தங்களை இலங்கை அனுப்புவார்களா இல்லையா என்ற கவலையில் தான் இருந்தார்கள். தற்சமயம் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு பற்றி எல்லோரும் கவலையுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். அவர்களுக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன், தோழர் பரந்தன்ராஜன் மேல் சரியான கோபம் தான் இருந்தது. தங்களை பணயம் வைத்து இவர்கள் விளையாடுவதாக அவர்கள் கருதினார்கள். நானும் சந்தடி சாக்கில் இந்தியா செயலதிபர் உமாமகேஸ்வரனை தான் ஆதரிக்கிறார்கள், இந்த பிளவு ஏற்பட்டு இருக்காவிட்டால் மாநாடு நடந்து கட்டாயம் இந்தியா திரும்பவும் பயிற்சி ஆயுதங்கள் கொடுத்து நீங்கள் எல்லாம் இலங்கைக்கு போயிருக்கலாம் என்று கூறினேன். எந்த தோழர்களும் இதை பெரிய விஷயமாக எடுக்கவில்லை. எல்லா தோழர்களுக்கும் காலித் மாதிரி ஒரு சிறந்த தோழர், செயலதிபர் உமாமகேஸ்வரன் தலைமையை மறுத்துப் போனது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் காலித்தோடு நெருங்கிப் பழகியதில்லை. ஆனால் அங்கிருந்த தோழர்கள் காலித் பற்றி நன்றாக தெரிந்தவர்கள். காலித் போன்ற சிறந்த தளபதிகள் ஒதுங்குவது குறித்து கவலைப்பட்டார்கள். முதன்முறையாக நான் முகாம் வாழ்க்கையை அனுபவித்தேன். உண்மையைக் கூறப்போனால் எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. அந்த தோழர்களுடன் பேசி பழகும் போது அவர்களின் மனக்குமுறல்கள் அறியக்கூடியதாக இருந்தது. இரண்டு மூன்று மாதத்தில் பயிற்சியும் ஆயுதங்களுடனும் இலங்கைக்கு திரும்பலாம், தங்கள் குடும்பத்தவர்களுடன் இருந்து போராட்டத்தில் பங்கு கொள்ளலாம், என்ற நினைவிலும், பல தோழர்கள் தங்கள் படிப்பை தொடரலாம் என்ற கனவில் வந்தவர்கள். இயக்கத்துக்கு போராட வந்த தோழர்களில் யாரும் வீட்டில் சாப்பிட வழியில்லாமல், பொருளாதார கஷ்டத்தால் இங்கு வரவில்லை.

18 வயதுக்கு மேற்பட்ட தோழர்கள் ஓரளவு விஷயம் விளங்கி, சிங்கள அரசுக்கு எதிராக, சிங்கள மக்களுக்கு எதிராக போராட புறப்பட்டு வந்தவர்கள். கொஞ்சம் சிறுவயது தோழர்கள் உணர்ச்சி வேகத்தில் வந்தவர்கள். அதில் அனேகமானோர் வீட்டுக்கு தெரியாமல் வந்தவர்கள். ஒரு மாதம் இல்லையென்றால் இரண்டு மாதத்தில் திரும்ப வந்துவிடலாம் என்ற நினைப்போடு வந்தவர்களே அதிகம். ஆனால் தளத்தில் இலங்கையில் வேலை செய்த எமது அரசியல் பிரிவு தோழர்களின் உணர்ச்சிகரமான பேச்சு, ஏமாற்று வாக்குறுதிகள் போன்றவற்றில் தூண்டப்பட்டு வந்தவர்களே அதிகம். ஆப்பிள் தோட்டத்தில் பயிற்சி, சினிமா நடிகர் நடிகைகளை பார்க்கலாம் என்றுகூட பலர் வந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் தளத்தில் சொல்லப்பட்டு, ஏமாந்து பலர் வந்திருக்கிறார்கள். எமது இயக்கத்தில் மட்டுமல்ல, பொதுவாக எல்லா இயக்கங்களிலும் முகாம்களிலிருந்து பயிற்சி பெற்ற தோழர்களை தவிர மற்ற நிர்வாகப் பொறுப்புகளில் வேலை செய்த தோழர்களின் நிலை பரவாயில்லை. ஓரளவு வசதியான இருப்பிடம், படுக்கை, உணவு வகை பரவாயில்லை. அதோடு வெளிச் செய்திகளை உடனுக்குடன் அறிய கூடியதாகவும் இருந்தது. நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு தலைவர்களின், குட்டி தலைவர்களின் இரட்டை நிலைப்பாடுகள் அவர்களின் துரோக செய்கைகள் எல்லாம் அறியக்கூடியதாக இருந்தது. முகாமில் இருந்த தோழர்களுக்கு எப்ப ஆயுதம் வரும், எப்ப ஊருக்கு போகலாம் இந்த நினைவுதான். அவர்களுக்கு இயக்கத் தலைவர்கள், குட்டித் தலைவர்கள் தங்கள் முகாம்களுக்கு வந்து போவது ஒரு பெரிய சந்தோசமாக இருந்த காலம் உண்டு.

முகாம்களில் தமிழர்களின் சுதந்திர விடுதலைக்காக வந்த இளைஞர்களை அடிமைகள் போல், மூன்று நான்கு வருடங்கள் விடுதலை என்ற பெயரில் ஒரு அனாதை ஆசிரமம் நடத்துவது போல் இந்தத் தலைவர்கள் நடத்திய விதம் ஒரு பெரிய துரோகம். இந்த தலைவர்கள், மற்றும் குட்டித் தலைவர்கள் முகாம்களில் வந்து பெரும் நல்லவர்கள் போல் நடித்து, சோஷலிசம், கம்யூனிசம் எல்லாம் தோழர்களுக்கு எடுத்துரைத்து சர்வதேச போராட்டங்கள் பற்றிய கதைகள் செய்திகள் எல்லாம் கூறி, தோழர்களை ஒருவித தங்களைப் பற்றிய ஒரு கற்பனை நிலையில் வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்தத் தலைவர்கள் முகாம்களில் இருந்த தோழர்களுக்கு கூறிய கருத்துகளுக்கு எதிர்மறையாக இவர்களின் செயல்பாடு இருந்தது. வெளியில் இவர்கள் தங்கள் தலைமையை காப்பாற்றிக்கொள்ள போடும் வேடங்கள் அதிகம்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி பெறுவதாக பெருமையடித்துக் கொள்வார்கள். ஆனால் அந்தத் தோழர்கள் 2, 3 வருடம் முகாமில் அடைபட்டு கிடைப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் இலங்கைக்கு அனுப்பி போராட்டத்தில் கலந்துகொள்ள செய்வதற்கோ, ஆயுதங்கள் எடுப்பதற்கு மிகப்பெரிய எந்த முயற்சியும் செய்வதில்லை. எமது இயக்கத்துக்கு இந்தியா மூலம் கிடைத்த ஆயுதங்கள் கூட முழுவதும் இலங்கைக்குப் போகவில்லை. இந்தியாவுக்கு எதிரான போராடும் நக்சலைட் இயக்கங்களுக்கு ஒரு தொகுதி ஆயுதங்கள் கொடுக்கப்பட்ட விடயங்கள் உண்மை. Telo டெலோ இயக்கம் பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்தன.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் ஒரே நேரத்தில் இந்தியாவில் 300 பேருக்கு மேல் பயிற்சி கொடுத்ததாக தெரியவில்லை. பயிற்சி முடிந்த உடன் அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி விடுவார்கள். அதேநேரம் தனித்தமிழ் நாட்டு விடுதலைக்காக என்று கூறி பல தமிழ்நாட்டு தமிழர்களை இலங்கைக்கு அனுப்பி பயிற்சி கொடுத்து திரும்ப அழைத்து தங்களுக்கு தமிழ்நாட்டில் இந்தியாவில் சாதகமாக வேலை செய்ய பயன்படுத்திக் கொண்டார்கள். அதேநேரம் தங்களுக்கு சாதகமான தொடர்புகளைப் பயன்படுத்தி பெருமளவு ஆயுதங்கள் கொள்வனவு செய்து இலங்கையில் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த செய்திகளை எல்லாம் பிற்காலத்தில் தமிழ்நாட்டு உளவுத்துறையின் உயரதிகாரிகள் எங்களுடன் கலந்துரையாடும் போது எங்களுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் முகாம் வந்து எங்களை சந்தித்தபோது திரும்பவும் மாநாடு நடத்துவது தளத்தில் இருந்து வந்தவர்களும், ராஜன் ஆதரவாளர்களாலும் தடைப்படும் போல் உள்ளது என்று கூறினார்கள். 18/19 /07/1986 இரு திகதிகளிலும் மாநாட்டுக்கு வந்திருந்த முகாம் தோழர்களால் கையொப்பம் இடப்பட்டு மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கும், கழக செயற்குழுவுக்கும் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பின்பு 21/07/1986 முகாம் தோழர்களால் 5 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு முழு அதிகாரமும் கொடுத்து, கழக செயற்குழு, மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, ராஜன் குழுவினரையும் மற்றும் தளத்திலிருந்து வந்தவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இந்த மாநாட்டை முகாமில் இருக்கும் தோழர்களே நடத்தப் போகிறோம், எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இயக்கத்தை திரும்ப நல்லபடி பழைய குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு நல்ல முறையில் இயங்கவும், இங்கு இருக்கு தோழர்களை இலங்கைக்கு அனுப்பவும் உதவி செய்யும்படி கேட்கவும் தோழர்கள் முடிவு எடுத்து எங்களை அனுப்பினார்கள்.

தோழர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பேர்.

வெற்றிச்செல்வன்
காந்தன்
வசந்த்
சுகுணன்
பாபு

நாங்கள் பிற்பகலில் முதலில் செயலதிபர் உமாமகேஸ்வரனை சந்தித்த போது, அவரும் அவருடன் கூட இருந்தவர்களும் எங்கள் கோரிக்கைக்கு உடன்பட்டார்கள். முகாமில் இருக்கும் தோழர்கள் பாதுகாப்புப் கொடுப்பதாகவும் முகாமில் வைத்து அனைவரும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்பு நாங்கள் தோழர் ராஜனை சந்திக்க அவர் இருந்த வீட்டுக்குப் போனபோது, அங்கிருந்த தளத்தில் இருந்து வந்துள்ள தள அரசியல் செயலாளர் ஈஸ்வரன் எங்களைக் கண்டவுடன் தலைமறைவாகிவிட்டார். தோழர் ராஜனோடு நாங்கள் எங்கள் கோரிக்கையை வைத்து பேசிக்கொண்டிருக்கும்போது, ராஜனை அவருடன் இருந்தவர்கள் அதிகமாக சத்தம் போட்டு எங்களோடு பேச விடாமல் செய்து விட்டார்கள். அப்படியிருந்தும் ராஜன் கழக மத்தியகுழுவைச் சேர்ந்த சீசர் போன்றவர்கள் வந்தால் தானும் வருவதாக கூறினார். நாங்கள் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சீசரை சந்திக்கப் போனபோது ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சீசர், பொன்னுத்துரை, செல்வராஜா, சுந்தரலிங்கம் போன்றவர்கள் ரகசியமாக இயக்கத்துக்கு கடிதம் கொடுத்துவிட்டு இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்பதை அறிந்தோம். தளத்தில் இருந்து வந்தவர்களை சந்திக்கப் போனபோது அவர்கள் எல்லோரும் தலைமறைவாகி விட்டார்கள்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நாங்கள் உடனடியாக முகாம் திரும்பி எல்லா தோழர்களுக்கும் நிலைமைகளை விளக்கினோம். பின்பு உடனடியாக திரும்பி ஐந்து பேரும் ஒரத்தநாடு திரும்பி தோழர் ராஜனை சந்திக்க முயன்றோம் முடியவில்லை. இரவு தோழர் வசந் மட்டும் முகாம் போய் தோழர்களுக்கு நிலைமைகளை விளக்கி, குறிப்பிட்ட முகாம்களில் இருந்து வந்த தோழர்கள் சிலரை மட்டும் அவரவர் முகாம்களில் போய் மாநாட்டில் கலந்து கொள்ளாத மற்ற தோழர்களுக்கும் உண்மை நிலையை விளக்கச் சொல்லி அனுப்பினார்.

21/07/1986 இல் பொறுமை இழந்த மாநாட்டு தோழர்களில் அரைவாசிப் பேர் ஒரத்தநாடு அலுவலகம் வந்து தகராறு செய்ய தொடங்கிவிட்டார்கள். உடனடியாக எஞ்சியிருந்த மத்தியகுழு உறுப்பினர்களும் மாநாட்டு ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்களும் சமாதானம் செய்ய, தோழர்களும் புதிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு அறிவித்து மாநாட்டை நடத்தும் முழு பொறுப்பும் அந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழு வுக்கு கொடுத்து, கழகத்தின் சகல நடவடிக்கைகளும் அந்த குழுவிற்கு பொறுப்பு கொடுத்து நடத்தும்படி கேட்டார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரனும் இதனை ஏற்றுக்கொண்டார்.

21/06/1986 இல் தோழர் ராஜனும் ஈஸ்வரனும் கையொப்பமிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கொடுத்த அறிக்கை 22/06/1986 காலையில் பத்திரிகையில் வந்திருந்தது. அதில் கழக மத்தியகுழு உறுப்பினர்கள் 8 பேர் செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு மேல் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றி வெளியேறி விட்டதாகவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இரண்டாக உடைந்து விட்டதாகவும் பத்திரிகையில் வந்த செய்தி இருந்தது. இந்த செய்தி முகாமில் இருந்த தோழர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது.

பகுதி 46

இயக்க மாநாட்டில் கலந்துகொள்ளும் தோழர்களின் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் பின்தள மாநாட்டுக் குழு அடுத்தநாள் முகாமுக்கு வந்தார்கள். முகாம் தோழர்களின் ஏகமனதான முடிவின்படி மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவில் இருந்து செயலதிபர் உமாமகேஸ்வரனும், அரசியல்துறை பொறுப்பாளர் வாசுதேவா இருவரும் பின்தள மாநாடு ஏற்பாட்டுக் குழுவில் இருந்து பதவி விலக வேண்டும். முகாம் தோழர்களால் புதிய ஏற்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டு, அதோடு பழைய பின்தள ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து செயல்பட வேண்டும்.

புதிய ஏற்பாட்டு குழு

தோழர் காந்தன்
தோழர் சிவபாலன்
தோழர் வரதன்
தோழர் சுகுனன்
தோழர் வெற்றிச்செல்வன்
தோழர் நிலாந்தன்
தோழர் ஏவி முகுந்தன்.

இவர்களுடன் தோழர் மாதவன், தோழர் திவாகரன், தோழர் ஆனந்தி, தோழர் சுபாஷ் நாங்கள் பதினோரு பேரும் பின்தள மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, கழக கட்டுப்பாட்டு குழுவின் சார்பாக செயலதிபர் உமாமகேஸ்வரன் புதிய கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுமதி கடிதம் கொடுத்து இருந்தார். புதிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு 23/07/1986 மாநாடு நடத்த முடிவு எடுத்தது.

மாநாடு நடக்கவிருந்த திருவாரூரிலிருந்து ஒரு பாடசாலைக்கு மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து தோழர்களையும் அழைத்துச் சென்றார்கள். அதேநேரம் எமது மற்ற முகாம்களின் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தார்கள். பின்தள மாநாடு நடக்கவிருந்த இடத்தின் பாதுகாப்பை மாநாட்டில் கலந்து கொண்ட தோழர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர். மாநாடு நடக்கவிருந்த தனியார் பள்ளியின் உரிமையாளருக்கு தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் சில தொல்லைகள் கொடுத்து மாநாடு நடக்க இடைஞ்சலாக இருந்தார்கள். அந்தப் பள்ளியின் உரிமையாளர் தி.மு.க. வை.கோபாலசாமியின் நெருங்கிய நண்பர். செயலதிபர் உமாமகேஸ்வரன் என்னை அழைத்துக்கொண்டு போய் அவரிடம் நான் வைகோவின் நெருங்கிய நண்பர் என்றும் டெல்லியில் வைகோவை அடிக்கடி சந்திப்பார் என்றும் கூற, அவர் வைகோவுக்கு தொலைபேசி மூலம் பேசி என்னிடமும் பேச கொடுத்தார். அவருக்கும் மிக சந்தோசம். மாநாடு முடிந்த பின்பு தினமும் என்னோடு வந்து பேசிக் கொண்டிருப்பார்.

பின்தள மாநாடு ஒரு நாள் தள்ளி 24/07/1986 தொடங்கியது. முதல் நாளில், முதலாக சீசர் பொன்னுத்துரை செல்வராஜா சார்பாக எழுதப்பட்ட கடிதம் முதன்முறையாக மாநாட்டில் வாசித்துக் காட்டப்பட்டது.

24/07/1986 முதல் 01/08/1986 வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முதல் பின்தள மாநாடு நடைபெற்றது. உண்மையில் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட முகாம் தோழர்கள் ஒரு கடமைக்காகவே மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார்கள். காரணம் மாநாடு ஒழுங்காக முடிந்தால்தான் நிர்வாகம் புதிதாக செயல்பட்டு ஆயுதம் வாங்கவும், எல்லோரையும் இலங்கைக்கு தளத்துக்கு அனுப்பவும் முடியும் என்று நம்பினார்கள். மாநாட்டில் கிட்டத்தட்ட 25 பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் நானும் ஒருவன். பின்பு மாநாடு முடிந்த பின்பு பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியகுழுவை தெரிவு செய்வார்கள். மத்தியகுழு செயற்குழுவை தெரிவு செய்வார்கள். இதுதான் நடைமுறை.

செயலதிபர் உமாமகேஸ்வரன், கண்ணன், வாசுதேவா, மாணிக்கம்தாசன் போன்ற முன்னணி தோழர்கள் தளத்தில் இருந்து வந்தவர்கள் செய்த துரோகங்கள் என்றும், பரந்தன் ராஜன் கூட இருந்தவர்கள் செய்த துரோகங்கள் என்றும், பலவித வார்த்தை ஜாலங்களை செய்து, கழக செயலதிபர் உமாமகேஸ்வரன் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விவாதிக்கபடாமல், கழக ரகசியம் என்ற பெயரில் மழுப்பலான பதில்கள் சொல்லப்பட்டன. முகாம்களில் இருந்த தீவிரமான நல்ல தோழர்களும் செயலதிபர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி பயத்தின் காரணமாக கதைக்கவில்லை என்பதே உண்மை. தோழர் பரந்தன் ராஜன் அவர்களும் அவர் தம் தோழர்களும் உண்மையில் சேர்ந்து மாநாட்டை நடத்தி இருந்தால் உமாமகேஸ்வரனின் தலைமை கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். காரணம் செயலதிபர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வலிமையானவை. எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருந்தது. நல்ல ஒரு சந்தர்ப்பத்தை அன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தவறவிட்டது. கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட கந்தசாமி, மூர்த்தி மற்றும் அவர்களது தோழர்கள் சுதந்திரமாக அங்கு நடமாடினார்கள். எந்த தோழர்களும் அவர்கள் மேல் கோபப்படவில்லை. கந்தசாமியின் பதவி முன்பே பறிக்கப்பட்டாலும், மாநாடு அதை உறுதி செய்தது

மாநாடு முடிந்து தோழர்கள் எல்லாம் அவரவர் முகாம்களுக்கு போனார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் மொட்டை மாடியில் கூடி செயற்குழு தெரிவு செய்தோம். இது மாதிரியே 1989 இல் வில்பத்து காட்டில் நடந்த இரண்டாவது தளமாநாடு பற்றியும் எழுதுகிறேன். அதில் நானும் கே.எல் ராஜனும் முக்கிய பங்கு வகித்து இருந்தோம்.

கீழே உள்ள குற்றச்சாட்டுகள்.

பின்தள மாநாட்டுக்கு முன்பு பெரும்பான்மையான கழகத் தோழர்களால், மத்தியகுழு உறுப்பினர்களால் தோழர் ராஜனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.

1) செயல்குழுவிற்கு தெரியாமல் அச்சகம் ஒன்றுக்கு பங்கு பணம் போட்டது.

2) செயல்குழுவிற்கு தெரியாமல் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவரை கழக பணத்தில் பிறநாட்டு அனுப்பியது.

3) செயல்குழுவுக்கு தெரியாமல் தனிநபர் பெயரில் சுவிஸ் வங்கியில் பணம் போட்டது.

4) செயல்குழுவுக்கு தெரியாமல் பஸ் கம்பெனி ஒன்றுக்கு முதலீடு செய்தது.

5) செயல்குழுவுக்கு தெரியாமல் தனது தம்பியின் பெயரில் பிரான்ஸ் வங்கியில் கணக்கு வைத்தது.

6) செயல்குழுவுக்கு தெரியாமல் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்த பெண்களையும் இந்தியப் பெண்களையும் போதைவஸ்து கடத்துவதற்கு பயன்படுத்தியது.

7) செயல்குழுவுக்கு தெரியாமல் கழக பணத்தில் எம்.எல்.ஏ ஊடாக எஸ்டேட் வாங்கியது.

8) LTTE பாலசிங்கத்தின் வீட்டில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தோழர் அற்புதமும் தோழர் ஜெயபாலனும் தான் செய்தனர் என்று இந்திய போலீசாருக்கு பிழையான தகவல் கொடுத்தமையும் அவர்களை கைது செய்யும்படி போலீசாரை தூண்டியது.

9) தோழர் நிரஞ்சனை விசாரணை செய்த விசாரணை கமிஷன் அவரை நிரபராதி என 1984.06. 01 அன்று விடுதலை செய்த பின்னர் சொந்த காரணங்களுக்காக அவரை கொலை செய்தமை.

10) செயல்குழுவுக்கு தெரியாமல் நிரஞ்சனை கொலை செய்துவிட்டு அவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று சொல்லி மொத்த கழகத்தையும் ஏமாற்றியது.

11) செயல்குழுவுக்கு தெரியாமல் தோழர் சந்ததியாரை கொலை செய்துவிட்டு, அவர் சீன சார்பு என்றும், JR உடன் இந்திய அரசு ஏற்படுத்திய திம்புப் பேச்சுவார்த்தையை குழப்புகிறார் என்றும் ரமேஷ் பண்டாரிக்கு தகவல் கொடுத்தது.

12) தோழர் சந்ததியாரை கொலை செய்துவிட்டு அவர் எமது ஆயுதங்களை காட்டிக் கொடுத்தார் என்றும் பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அதில் ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டார் என்று பத்திரிகைக்கு செய்தி கொடுத்தது.

13) பின்தளத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் இருக்கக் கூடியதாக கப்பலில் வந்த கருவிகள் ஏற்பாட்டுக்கு தனது மைத்துனரை நியமித்து கையாள தெரியாமல் கருவிகளை அரசிடம் பறிகொடுத்தது.

14) தென்னிலங்கை இடதுசாரி தோழர்களை ஜெயவர்தனா வுக்குகாட்டிக்கொடுத்தது.

15) செயல்குழுவுக்கு தெரியாமல் ஜெயவர்த்தனாவின் தூதுவர் ஜெய கொடியை தாஜ் ஓட்டலில் சந்தித்தது.

16) செயல்குழுவுக்கு தெரியாமல் இயக்கத் தோழர்களை பயன்படுத்தி நாம் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்த மண்ணில் கொள்ளையடிக்க உத்தரவு கொடுத்து கொள்ளை முயற்சி பிடிபட்டாலும் அவர்கள் இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று அரசுக்கு காட்டிக்கொடுத்தது.

17) கழகத்தின் பணம் இல்லை என்று கடற்கொள்ளையில் ஈடுபடும்படியும் கொள்ளையின் பின்பு பொருட்களின் சொந்தக்காரரை உயிருடன் விட வேண்டாம் என்று கரையில் பணிபுரிந்த தோழர்களுக்கு உத்தரவு கொடுத்ததும், இதனால் இலங்கைத் தமிழர், முஸ்லிம்களும், இந்திய மீனவர்களும் கொலை செய்யப்பட்டதினால் விடுதலை இயக்கங்கள் மீது இந்திய மக்கள் வெறுப்படையச் செய்தது மட்டுமல்லாமல் சர்வதேசரீதியிலும் இயக்கங்களுக்கு களங்கம் உண்டாக்கியது.

18) இலங்கை உளவாளி என இந்திய அரசினால் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கும் இலங்கை ரகசிய போலீஸ் அதிகாரி கந்தசாமி என்பவரை முன்பு இயக்கப் பணத்தில் இயக்க வேலை என்று சொல்லி லண்டனுக்கு அனுப்பியது.

19) அழியாத கோலத்தை காணவில்லை என்றதும் அவரை ராஜன் தான் கொலை செய்து இருக்கலாம் என்று பொய்யான தகவல்களை கழகத்துக்கு கொடுத்தது.

20) தமிழீழத்தை வென்றெடுக்கும் ஆவலுடன் எமது இயக்கத் தோழர்களின் பிரச்சாரத்தை நம்பி எமது மண்ணைவிட்டு வந்த சக போராளிகளில் 60 பேர் வரை அநாகரீக சித்திரவதைகள் மூலம் கொலை செய்து எரித்த கொடூர செயலை நீண்டகாலமாக இயக்கத்துக்கு மறைத்தது. இவைகள் தெரியவரும் பட்சத்தில் முப்பத்தி எட்டு பேர்களின் பெயர்களை மட்டும் வெளியிட்டது.

21) தளத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்காக மணமேல்குடியில் நாம் அமைத்த முகாமிற்கு தோழர்களை கைது செய்து காவலில் வைக்குமாறு எமக்குத் தெரியாமல் ஆயுதங்களுடன் ஆட்களே முகாமுக்கு அனுப்பியது.

22) செயல்குழு உறுப்பினர்களை வெடி வைக்கவேண்டும் என்று சொன்னதோடு அல்லாமல் கை நீட்டி அடித்து விட்டு கந்தசாமி இடம் கைது செய்யுமாறு உத்தரவிட்டதும் தகாத வார்த்தைகளினால் ஏசியதும்.

23) செயல்குழுவுக்கு தெரியாமல் வங்கிகளில் கைப்பற்றிய பணமும், மக்களிடம் இருந்து திரட்டிய பணமும், வெளிநாட்டில் கழக கிளைகளில் இருந்து சேகரித்த பணமும் எப்படி எங்கே செலவிடப்பட்டது என்றும் தெரியாத நிலையிலும் கூட சரியான முறையில் மாநாட்டினை நடத்தி ஜனநாயக பண்புகளை பேணக்கூடிய விடுதலை இயக்கமாக கட்டி எழுப்பலாம் என நம்புகிறோம்.

பகுதி 47

01/08/1986 மாநாடு முடிந்து அடுத்த நாள் காலை நானும், மாதவன் அண்ணாவும் ஒரத்தநாடு மொட்டை மாடி அலுவலகம் வந்தோம். அடுத்தடுத்த நாட்களில் என நினைக்கிறேன். பொதுக்குழு உறுப்பினர்கள் 25 பேருக்கு மேல் கூடியிருந்து செயற்குழு தெரிவு செய்தோம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புதிய மத்திய குழு.

(1) தோழர் ஆனந்தி
(2) தோழர் திவாகரன்
(3) தோழர் காந்தன்
(4) தோழர் நிலாந்தன்
(5) சுபாஷ்
(6) தோழர் ஷெர்லி கந்தப்பா
(7) தோழர் பார்த்திபன்

இவர்கள் 7 பேருடன் கழகத்தின் அதிஉயர் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் மூவரும் உமாமகேஸ்வரன், கண்ணன், வாசுதேவா மொத்தம் பத்து பேர் பின்தள செயல்குழுவாக செயல்படுவார்கள்.

எங்கள் மாநாடு சம்பந்தமான வேலைகளை முடித்துக்கொண்டு எல்லோரும் தங்கள் தங்கள் இருப்பிடம் திரும்பி வந்தோம். நான் டெல்லி வருவதற்கு முன்பு எனது சென்னை அலுவலகத்தில் கேகே நகரில் தங்கியிருந்தேன். அலுவலகம் அமைதியாக இருந்தது. அலுவலகத் தோழர்கள் மிக சோகமாக இருந்தார்கள். அதோடு அலுவலகத்தை எதிர் குழுவினர் கைப்பற்றக் கூடும் என்ற வதந்தியும் பேச்சும் இருந்தது. இரவு நான் நடேசன், PLO சங்கர் (பாலுமகேந்திராவின் மனைவியின் தம்பி) மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். நடேசன் தனக்கு ஆயுதம் எல்லாம் தேவையில்லை. தன்னை ஊருக்கு போக அனுமதி கொடுத்தால் போதும், தன்னால் அங்கு கிடைக்கும் ஆயுதங்கள் பொருட்களை வைத்து தங்களை தாக்க வரும் சிங்களவர்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் தாக்க முடியும் என்று கூறினார். அதோடு அவர் ஆரம்பத்திலிருந்து தங்கள் கிராமத்தை சிங்கள கிராம மக்கள்தான் தாக்குகிறார்கள் என்றும், திருப்பி தாக்கினால் தான் சிங்கள மக்கள் பயப்படுவார்கள், ஆனால் எமது இயக்கமோ சிங்களவர் எமது சகோதரர்கள் அவர்களை தாக்கக் கூடாது என்று தனக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் பாடம் நடத்துவது தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறுவார்.

PLO சங்கர் மட்டக்களப்பில் ஆயுதங்கள் தனது பொறுப்பில் இருப்பதாகவும், இனி தனது பொறுப்பு எமது இயக்கத்தை நல்ல முறையில் வளர்த்து, பிரிந்துபோன ராஜன் குரூப்புக்கு எங்கள் திறமையை காட்ட வேண்டும் என சபதமே செய்தார். முடிந்தளவு இந்தியாவிடம் ஆயுதங்கள் வாங்க வேண்டும். ஆயுதங்கள் இருந்தால் தோழர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு போகலாம். எல்லோரும் கடுமையாக வேலை செய்து , எமது பலத்தை காட்டுவோம் என்று பேசி பிரிந்தோம்.

நான் டெல்லி போய் ஒரு வாரத்தின் பின்பு சென்னையில் மாதவன் அண்ணாவுடன் பேசும்போது PLO சங்கர் இயக்கத்தைவிட்டு ஓடிப் போய் விட்டதாகச் சொன்னார். லண்டனில் இருந்து லண்டன் கிருஷ்ணன் தொலைபேசி மூலம் ஒரு செய்தி சொன்னார். PLO சங்கர் லண்டன் வந்தபோது போதைப் பொருளுடன் ஏர்போர்ட்டில் வைத்து பிடிபட்டதாகவும், லண்டனில் தனக்கு தெரிந்தவர் என்று கிருஷ்ணனின் பெயரையும் போன் நம்பரையும் கொடுத்து உள்ளார் என்றும், தனக்கு இது பிரச்சினையாகி தனக்கு அவரை தெரியாது என்று கூறி தப்பித்து விட்டதாகவும் கூறினார். சங்கர் 2, 3 வருடம் லண்டன் சிறையிலிருந்ததாக தகவல்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுக்கும் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பரந்தன் ராஜன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன், லண்டன் விசிட்டிங் முக்கியஸ்தர் திரு. சித்தார்த்தன் இருவருக்குமிடையில் சமாதான முயற்சிகள் எடுத்ததாக கேள்வி. அது தோல்வியில் முடிந்ததால் டெல்லி வழியாக லண்டன் போனார். போகும்போது மிகவும் கவலைப்பட்டு போனார். பரந்தன்ராஜன் வெளியேறியது எமது இயக்கத்தினை மிகவும் பலவீனப்படுத்தி விட்டது, தான் அறிந்த வரையில் இயக்கத்தை கட்டி எழுப்புவது சரியான கஸ்டம், தான் திரும்ப இங்கே வருவது சந்தேகம்தான் என்று கூறினார்.

நான் டெல்லி போய் தற்போதைய இயக்க நிலைமைகள் பற்றி ரா உயர் அதிகாரிகளுடன் விளக்கிக் கூறினேன். ராஜனின் விலகலால் எமது இயக்கத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இந்தியா பயிற்சிகளும் ஆயுதங்களும் தந்தால், முகாம் தோழர்களை உடனடியாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட நாங்கள் முடிவு செய்துள்ளோம், என்று பலவித பொய்களைக் கூறி நடித்து ஆயுத உதவிகள் கேட்ட போதும், ஒன்றும் பேசாமல் இருந்த அவர்கள். முகாமில் இருக்கும் தோழர்களுக்கு உணவு பிரச்சனை, எமது இயக்கத்துக்கு அச்சமயம் பணப் பிரச்சினைகளும் இருப்பதை எடுத்துக் கூறி, இந்தியா உதவி செய்தால்தான் தோழர்களை காப்பாற்ற முடியும் என்று கூறினேன். அவர்களும் தாங்கள் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பதாக கூறினார்கள். நான் டெல்லி வரும்முன் செயலதிபர் உமாமகேஸ்வரன், அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு தூதரகங்களில் எந்த மாதிரியான கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று முன்பே எனக்கு கூறி விட்டார்.

டெல்லியில் உயர் IB உளவுத்துறை தமிழ் அதிகாரிகளை சந்தித்தபோது எனது கருத்துக்கள் எடுபடவில்லை. எங்கள் இயக்க தவறுகளை பட்டியலிட்டு கூறினார்கள். எங்கள் இயக்கம் மட்டுமல்ல மற்ற எல்லா தவறுகளும் அவர்கள் நேரடியாக தலைவர்களிடம் எடுத்துக்கூறி, பல தவறுகளை திருத்தி உள்ளார்கள். உதாரணத்துக்கு ஒன்று, ஆரம்ப காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் சேர்ந்த சில தோழர்கள் திருப்பதி கோயிலில் பாதுகாப்பு பற்றி அறியாமல் அங்கு கொள்ளையடிக்க போய் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து போய் தடுத்த சென்னை IB உளவுத்துறை அதிகாரிகள் உடனடியாக பத்மநாபாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். மத்திய உளவுத்துறை அதிகாரிகளால் telo ஸ்ரீ சபாரத்தினம் தவறுகளை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்வார், ஆனால் அவரது இயக்க இரண்டாம் கட்ட தலைவர்களை சிறி சபாரத்தினம் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மை. விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட தவறுகள் வெளியில் வரவில்லை. காரணம் தமிழ்நாடு போலீசார் விடுதலைப்புலிகளின் மேல் பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதை மறைத்து மற்ற இயக்கங்களின் மேல் அதை பதிவு செய்து விடுவதாக தகவல். காரணம் உளவுத்துறை டி.ஐ.ஜி அலெக்சாண்டர். ஆனால் எங்கள் தலைவர் செயலதிபர் உமாமகேஸ்வரன் IB உளவு அதிகாரிகள் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்வார். சில தவறுகளை ஏற்றுக் கொள்வார். தனக்கு தெரியாமல் இயக்கத் தோழர்கள் செய்துவிட்டதாக. பல தவறுகளை செய்திகளை மறுத்து அது பொய் வதந்தி என்றும், இல்லை வேறு இயக்கங்கள் செய்துவிட்டு எங்கள் பேரை பயன்படுத்துவதாகவும் கூறிவிடுவார். ஆனால் நாங்கள் எங்கள் தவறை எக்காலத்திலும் திருத்திக் கொண்டதில்லை. செயலதிபர் பின்பு இவர்களுக்கு எல்லா விஷயமும் தெரிந்து இருக்கிறது, வசதி கிடைக்கும் போது அவர்களுக்கு அதாவது இந்தியாவுக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று கூறுவார். இதை அவர் சில தோழர்களுக்கு முன்னால் கூறும்போது, தோழர்கள் செயலதிபர் உமாமகேஸ்வரனின் இந்தியாவுக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற துணிவை பாராட்டிப் பேசுவார்கள். எனக்குத்தான் தெரியும் செயலதிபர் உமாமகேஸ்வரன் இந்திய அதிகாரிகளிடம் பேசும்போது காட்டும் பணிவும், சொல்லும் பொய்களும். ஆனால் ஒன்று நான் தயங்கி தயங்கி சில தவறுகளை சுட்டிக் காட்டும்போது அதை ஏற்றுக் கொள்வார். நீர் சொல்வது சரிதான், அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதுவே சித்தார்த்தனும் தயங்காமல் நேரடியாகவே கூறுவர். அப்போது செயலதிபர் இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி விவாதித்து குறைகளை ஏற்றுக்கொண்டு, தனது தவறுகளை தயங்காமல் ஏற்றுக் கொள்வார். அவரின் இந்த குணம் தான் அவருடன் ஏற்பட்ட அனுபவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் மறுபக்கம் எங்களிடம் ஏற்றுக்கொண்ட தவறுகளை விட அதிகமாகவே செய்ததாக எங்களுக்கு தெரிய வரும்.

சென்னை அலுவலகத்தில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவே இருக்கும். முகாம் தோழர்கள் ஆயுதங்களை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும், மாநாடு முடிந்த பின்பும் ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் தோழர்கள் கவலைப்படுவதாக தகவல்கள் வந்தன. முகாமிலுள்ள தோழர்களுக்கு உணவு பிரச்சினையும் உள்ளது என்று கூறினார்கள். சில முகாம்களில் உணவு பற்றாக்குறை காரணமாக, பல தோழர்கள் இயக்கத் தலைமை அனுமதியோடு வெளியூர்களில் கொள்ளை, இலங்கை தமிழர்களின் வீடுகளில் கொள்ளை, அந்தப் பணத்தைக் கொண்டு முகாம் தோழர்களின் பசியை தீர்த்ததாக செய்திகள் வந்தன. அதோடு மிகவும் கஸ்டமான நிலையில் முகாம் தோழர்களின் பசியைப் போக்க குறிப்பாக ஆட்சி ராஜன் போன்ற தோழர்கள் வேறு வேறு தூர உள்ள கிராமங்களில் போய் ஆடு மாடுகளை களவெடுத்து வந்து தோழர்களின் பசியைப் போக்கியதாக அறிந்தேன். இப்படியான செய்திகள் வந்தபோது நான் நம்பவில்லை. அவ்வளவு கஷ்டமா என்று, ஆனால் சென்னையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த தோழர்கள் குறிப்பாக மாதவன் அண்ணா வந்த செய்திகள் உண்மைதான் என்றும் சரியான பணக்கஷ்டம் என்றும் கூறினார். அடுத்து நாங்கள் கப்பல் வாங்கிய கதை.

தொடரும்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 10

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 11

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 12

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 13