பகுதி 42

கடந்த பதிவில் நான் சில தவறான செய்திகளை அதுவும் கேள்விப்பட்ட செய்திகளை போட்டுள்ளதாக நண்பர்கள் அன்புடன் சுட்டிக்காட்டினார்கள். இனிமேல் அப்படி கேள்விப்பட்ட செய்திகளை எழுத வேண்டாம் என்றும் கூறினார்கள். சரியா பிழையா என்று செய்திகளை பார்ப்பதைவிட அன்று எனக்கு டெல்லியில் பிரச்சாரத்துக்காக சொல்லப்பட்ட செய்திகள் தான் அவை. எனக்கு நினைவில் இருக்கும் அன்று சொல்லப்பட்ட செய்திகள் இன்று தவறாக இருந்தாலும் அன்று அவைதான் உண்மை என்று சொல்லப்பட்டது என்பது உண்மை. இன்றுவரை எமது தள ராணுவ தளபதி சின்ன மென்டிஸ் என்ற விஜயபாலன் பிடிக்கப்பட்ட செய்திகள், கொல்லப்பட்ட செய்திகள் உண்மையான முழுமையான செய்திகள் யாரும் அறியவில்லை. பலரும் தங்களுக்கு கேள்விப்பட்டசெய்திகளை தான் உண்மையான செய்திகள் என்ன பதிவு போடுகிறார்கள். அதேபோல் எமது இயக்க மிக மூத்த போராளி நிரஞ்சன் என்கிற சிவனேஸ்வரன், எமது கழக அரசியல் துறைச் செயலாளர் சந்ததியார் போன்றவர்களை எமது செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு ஏற்பட்ட எனக்கு தெரிந்த மட்டிலும் தனிப்பட்ட கோபதாபங்களால் எமது தோழர்களே கடத்திக் கொலை செய்தார்கள். அந்தக் கொலைகளை கூட இன்றுவரை எங்களால் உண்மையை அறிய முடியாமல் இருக்கிறது. இதைப் பற்றிப் போன பதிவில் கூட வந்த கருத்துக்கள் பல மாறுபட்ட கருத்துக்கள்தான்தான் இருக்கின்றன. இதில் ஈடுபட்ட எமது தோழர்களை அறிந்த பலர் இந்த முகநூலிலும் இருக்கிறார்கள். யாரும் உண்மையை பதிவிட ஏன் முயற்சி செய்யவில்லை என்று தெரியவில்லை. இந்தப் பதிவுக்கு கூட சில தோழர்கள் நிரஞ்சன் சந்ததியார் இயக்கத்துக்கு துரோகம் செய்தபடியால் கொலை செய்யப்பட்டார்கள் என, எழுதுவார்கள். போன பதிவுக்கு ஒரு தோழர் தமிழர்களை அழிக்கும் பொறுப்பிலிருந்த இலங்கை மந்திரி அத்துலத்முதலியுடன் 1985 செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு இயக்க மத்தியகுழுவுக்கு தெரியாமல் ரகசியமாக ஏற்பட்ட தொடர்பு ஒரு ராஜதந்திர தொடர்பு என்று, கருத்து பதிவிட்டிருந்தார். தயவுசெய்து அந்த ராஜதந்திர தொடர்பை பற்றி அறிந்தவர்கள் விபரம் கூறினால் மிக நன்றாக இருக்கும்.

1986 ஆண்டு நமது இயக்கத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும். எமது இயக்கம் இரண்டாம் தடவையாக மிகப்பெரிய அளவில் உடைந்தது. சென்னையிலிருந்து வரும் செய்திகள் மிகக் கவலையளிப்பதாக இருந்தது. நமது இயக்கத்தின் மிக முக்கிய மூத்த போராளி தலைவர்களில் ஒருவரான பரந்தன் ராஜன் செயலதிபர் உமாமகேஸ்வரன் இருவருக்கும் பலத்த கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இயக்க முக்கிய தோழர்களும் இரு பிரிவாக பிரிந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. நிலைமைகள் கவலை அளிப்பதாக இருந்தாலும் இயக்க அலுவலக பொறுப்புகளில் இருந்த நாங்கள் எங்கள் கடமைகளை செவ்வனே செய்து வந்தோம். இதன் பின்பு நடந்த பின்தள மகாநாடு அதில் எனது பங்களிப்பு பற்றியும் விரிவாக எழுத வேண்டியுள்ளதால், எனக்கு நினைவில் உள்ள சில டெல்லி நிகழ்வுகளை மாதங்கள் முன்பின் இருந்தாலும் பதிவு செய்கிறேன். சரியான கால நேரங்களை தெரிந்த தோழர்கள் பதிவு போட்டால் நன்றாக இருக்கும். சென்னையிலிருந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் தொலைபேசி மூலம் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் டெல்லியில் இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதற்குத் தேவையான உதவிகள் செய்யும்படியும் கூறினார். எனக்கு மிக ஆச்சரியம். முன்பு சந்திரகாசன் சிஐஏ ஏஜென்ட் என்று எமது வெளியீடுகள் பிரச்சாரங்களில் கூறி வந்தோம். சுப்ரமணியன் சுவாமி, சந்திரகாசன் நெருங்கிய நண்பர்கள் அதை வைத்தும் இருவரும் சிஐஏ ஏஜென்ட் எனக் கூறினோம். சுப்பிரமணியம் சுவாமி மூலம் டெல்லி ஐஐடி, டெல்லி பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் சந்திரகாசன் கருத்தரங்கங்கள் நடத்தியபோது நாங்கள் எமக்கு ஆதரவான நண்பர்களை கொண்டு சந்திரகாசன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று துண்டுப்பிரசுரங்கள் அடித்து வெளியிட்டோம். அது அவருக்கு பலத்த பின்னடைவை கொடுத்தது என்பது உண்மை. சந்திரஹாசன் டெல்லி வந்து என்னை தொடர்பு கொண்டார். சென்னையிலிருந்து அவருடன் சில பேர் வந்திருந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மகேஸ்வரி வேலாயுதம், மற்றும் சுழிபுரத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படையில் வேலை செய்த ஒருவர். அவர் என்னோடு தான் தங்கினார். அவருடைய படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். டெல்லி போட் கிளப் ஏரியாவில் டென்ட் அடித்து சந்திரஹாசன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். நானும் எனது பங்குக்கு எனது டெல்லி தமிழ் நண்பர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து போய் உண்ணாவிரதத்தை களைகட்ட செய்தோம். என்னோடு இருந்த டெல்லி தமிழ் நண்பர்களுக்கு ஒரே சந்தேகம். சந்திரகாசனை சிஐஏ ஏஜென்ட் என்று பிரச்சாரம் செய்துவிட்டு எப்படி அவருடன் கூட சேர்ந்து உதவி செய்கிறீர்கள் என்று. நான் எனது செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கேட்க வேண்டிய கேள்வியை, அவர்கள் என்னிடம் கேட்டார்கள். சந்திரகாசன் இருக்கும் உண்ணாவிரதம் இலங்கை தமிழர் பிரச்சினையை டெல்லியில் பத்திரிகையில் வாயிலாக பெரிதாக வந்தால் எமக்கு அது நல்லதுதானே. இதை ராஜதந்திர ரீதியில் அணுக வேண்டிய விஷயம் என்று நானும் கூறி சமாளித்தேன்.

சில தினங்கள் கழித்து செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வந்தார். இருவரும் உண்ணாவிரதம் இருந்த இடத்தை நோக்கி போய் உண்ணாவிரதம் இருந்த சந்திரஹாசனை சந்தித்தோம். பல நிருபர்கள் வந்திருந்தார்கள் அவர்களிடம் செயலதிபர் உமாமகேஸ்வரணை சந்திரகாசன் அறிமுகப்படுத்தினார். பின்பு என்னை கூடாரத்திலிருந்து வெளியில் அனுப்பி விட்டு, இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். சந்திரகாசன் திரும்ப இரவு எட்டு மணி போல் வரச் சொன்னார். இரவு போனபோது ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் சுப்பிரமணிய சுவாமி வந்தார். எங்கள் இருவரையும் சந்திரகாசன் சுப்பிரமணியசாமிக்கு அறிமுகப்படுத்தினார். பின்பு நான் வெளியில் வந்து இருந்தேன். சுப்ரமணிய சுவாமி, சந்திரகாசன், செயலதிபர் உமாமகேஸ்வரன் மிக நீண்ட நேரம் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள். வெளியில் வந்த சுப்ரமணியசாமி தனது விசிட்டிங் கார்டை கொடுத்து விலாசம் தெரியுமா என்று கேட்டார் ஸ்கூட்டரில் விலாசம் பிடித்து வந்து விடுவேன் என்று கூறினேன்.

அந்த நாள் மாலை சுப்பிரமணியசாமி வீட்டுக்கு போனோம். செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் நீண்ட நேரம் பேசிய சுப்ரமணிய சுவாமி, நானும் கூடவே தான் இருந்தேன். சுப்பிரமணிய சுவாமிக்கு ரஷ்ய ஆதரவு கம்யூனிஸ்ட் பேசுபவர்களை எக்காரணம் கொண்டும் பிடிக்காது என்றும், சீன ஆதரவு கம்யூனிஸ்ட் பேசுபவர்களை தனக்கு பிடிக்கும் என்றும் அவர்களுக்குத்தான் வேண்டிய அளவு தான் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். அதோடு சந்திரகாசன், உமாமகேஸ்வரன் ரஷ்ய ஆதரவு பேசுவதிலிருந்து திருந்தி விட்டதாக தன்னிடம் கூறியதாகவும் கூறினார். என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். எமது செயலதிபரும் ஆயுதங்கள் பயிற்சிகள் கூடுதலாக இந்தியாவிடம் கேட்க இருப்பதாக கூறினார். அவரும் தானும் தனது தொடர்புகள் மூலம் எங்களுக்கு உதவி செய்வதாக கூறினார். ஆனால் கடைசி வரை அவர் மூலம் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

சுப்ரமணிய சுவாமியை நாங்கள் மூன்றுதரம் சந்தித்திருப்போம். ஒரு முறை சந்திக்க போகும் போது -சைமன் என்று தோழர் இல்லாவிட்டால் திருஞானம் என்ற தோழர் இவர்களில் யார் என்று மறந்து விட்டேன்- சுப்ரமணிய சுவாமி பிரபாகரன் படிப்பு சம்பந்தமான கேள்விகளை கேட்டார். பிரபாகரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார், தான் சுபாஷ் சந்திரபோஸ் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விரும்பி படிப்பதாகவும், அதோடு கல்கியில் வெளிவந்த ராசு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் சுதந்திர போராட்ட நாவல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியிருந்தார். இதைப்பற்றி சுப்ரமணிய சுவாமி எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கேட்கும் போது, அதெல்லாம் பொய் பிரபாகரன் தங்களுடன் இருக்கும் போது அம்புலிமாமா புத்தகம் மற்றும் படங்கள் போட்ட சித்திர கதைகள் போன்றவற்றை தான் படிப்பார் என்றும், அதேநேரம் மூர்மர்கெட் போய் ஆயுதம் சம்பந்தப்பட்ட ஆங்கில புத்தகங்களை வாங்கி வந்து பாலசிங்கத்தின் துணையுடன் ஆயுதங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வார் எனக் கூறினார்.

செயலதிபர் உமாமகேஸ்வரன் இப்படிக் கூறியது எங்களுடன் வந்த தோழருக்கு பிடிக்கவில்லை. விடுதலை இயக்கத் தலைவரை பற்றி இப்படி குறிப்பிடக் கூடாது, அவர்களும் எங்களை பற்றி இப்படி பல பேரிடம் கூறி தெரிந்தால் எங்களுக்கு அவமானம் தானே என்று கூற, செயலதிபர் ஏற்றுக்கொண்டார். அதோடு செயலதிபர் உமாமகேஸ்வரன் விடுதலைப் புலிகளுக்கும் இஸ்ரேல் மொசாட் பயிற்சி பெற சுப்ரமணிய சுவாமி அவர்கள் தான் உதவியிருக்கிறார் என எங்களிடம் கூறினார். சுப்ரமணிய சுவாமி அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்தான் 1975 ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் கொண்டு வந்த எமர்ஜென்சியின் போது எப்படி தான் பிடிபடாமல் தப்பினார் என்றும் பல சுவாரஸ்யமான கதைகளை எங்களிடம் கூறினார்.

அண்ணா தி.மு.க எம்.பி தாய் பத்திரிகையின் ஆசிரியர் வலம்புரி ஜான் அவர்கள் எங்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். அவர் தான் எழுதிய « நான் கழுதை ஆனால் » என்ற புத்தகத்தை டெல்லியில் செயலதிபர் உமாமகேஸ்வரனை கொண்டு வெளியிட்டவர். டெல்லியில் அடிக்கடி தமிழ் அமைப்புகள் இலங்கை தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் ஏற்பாடு செய்வார்கள். வலம்புரி ஜான் எம்.பியும் கலந்து கொள்வார். அதோடு அவருக்கு வேண்டிய பம்பாய் வருதாபாய் எனப்படும் வரதராஜ முதலியார் அவர்களும் அடிக்கடி வந்து கலந்து கொள்வார். அவர் இலங்கைத் தமிழருக்கு பல விதங்களில் உதவி புரிந்தவர். என்னோடு டெல்லியில் இருந்தபோது பரதன் என்ற சாரங்கனும், வருதா பாய் கலந்துகொண்ட கூட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் வலம்புரி ஜான் தொலைபேசி மூலம் தன்னை வந்து நேரில் சந்திக்கச் சொன்னார். அவரை நேரில் போய் பார்த்தபோது, நீங்களெல்லாம் செய்வது சரி இல்லை என்று கூறினார். நான் பதட்டத்துடன் என்ன அண்ணா சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் என்னிடம் கேப்டன் குமார் யார் என்று கேட்டார். எனக்கு உண்மையில் தெரியாது. தெரியாது என்று கூறிவிட்டேன். அவர் உங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர் தான். முகுந்தன் அவரை பம்பாய் அனுப்பியுள்ளார். அங்கு அவர் வருதா பாய் அவர்களிடம் போய் ஹீரோயின் போதைமருந்து கடனுக்கு வாங்கி தரும்படி அவரிடம் கேட்டதாகவும், அவர் தான் தங்கக்கட்டி கடத்துவேன், ஆயுதங்கள் கடத்துவேன், ஆட்களைக் கூட கடத்துவேன், ஆனால் போதைப்பொருள் சமாச்சாரங்கள் கிட்ட போக மாட்டேன் அது பாவம் என்று கூறியுள்ளார். வருதா பாய் செயலதிபர் உமாமகேஸ்வரனுடன் கூறும்படி வலம்புரி ஜான் எம்.பீ யிடம் கூறியுள்ளார். நானும் முகுந்தனிடம் கூறுவதாக கூறி வந்தேன்.

உடனடியாக நான் இந்த விடயத்தை செயலதிபர் உமாமகேஸ்வரனிடம் கூறியபோது, அவர் உடனடியாக அவன் பேயன் கிடக்கிறான், அவன் வாங்கி தராவிட்டால் எங்களால் வாங்க முடியாதா என்று கூறி, வாமதேவனை வர்தா பாயிடம் போக வேண்டாம் என்று தான் கூறுவதாகக் கூறினார். அப்போதுதான் கேப்டன் குமாரும் வாமதேவனும் ஒருவர் என எனக்கு தெரிந்தது. வாமதேவன் பம்பாயில் இருப்பதை யாருக்கும் கூற வேண்டாம் எனக் கூறினார். பின்புதான் வாமதேவனைப் பற்றி பல விடயங்கள் கேள்விப்பட்டேன். நிக்கரவெட்டியா வங்கிக் கொள்ளையின் பின்பு வாமதேவன் குழுவினர் இந்தியா வந்தபோது வாமதேவனும், சுழிபுரத்தைச் சேர்ந்த தற்போது லண்டனில் இருக்கும் சபாநாதன் குமாரும் கொள்ளை அடித்த தங்க நகைகளில் கொஞ்சத்தை இவர்கள் அதிலிருந்து கொள்ளையடித்த விடயத்தை, கந்தசாமியின் உளவுப் படையைச் சேர்ந்த ஒருவர் மோப்பம் பிடித்து கந்தசாமியிடம் கூறியுள்ளார். கந்தசாமி, வாமதேவனையும் சபாநாதன் குமாரையும் கைது செய்து துப்பாக்கி முனையில் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்றி விட்டு, அவர்களை சுட்டுக் கொல்ல முயற்சித்த போது, செயலதிபர் உமாமகேஸ்வரன் நேரடியாக தலையிட்டு வாமதேவனை காப்பாற்றியுள்ளார். கந்தசாமி செயலதிபரிடம் எங்கள் தோழர்கள் உயிரை பணையம் வைத்து கொள்ளையடித்த தங்க நகைகளை இவர்கள் அதில் கொஞ்சம் கொள்ளையடித்ததை தன்னால் மன்னிக்க முடியாது, நீங்கள் சொல்வதற்காக விடுகிறேன் என்று கூறியுள்ளார். அதோடு சபாநாதனை பார்த்து சுழிபுர மானத்தை கெடுத்து விட்டாய் எனது முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். பின்பு செயலதிபர் உமாமகேஸ்வரன் வாமதேவனை ரகசியமாக பம்பாய் அனுப்பி தனது போதைமருந்து விற்பனைக்கு பொறுப்பாக நியமித்து உள்ளார். சில விபரங்களை அரசல் புரசலாக கேள்விப்பட்டு இருந்தாலும், 1989 ஆண்டு எங்களுடன் இருந்த சபாநாதன் குமார் எனக்கும் ஆட்சி ராஜனுக்கும் முழு விபரங்களையும் கூறினார். அதனால் தான் அவர் கந்தசாமிக்கு பயந்து 1987 இலங்கைக்கு போகாமல் 1988 என்னோடு சென்னை அலுவலகத்தில் தங்கியிருந்து ஆஸ்பத்திரியில் இருந்த தோழர்களை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி எங்களுடன் இருந்தார்.

1986 மார்ச் மாத கடைசியில் இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி ஓய்வுபெற்றார். பின்பு ரொமேஷ் பண்டாரி டெல்லியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். லண்டனுக்கு திரும்ப போக வந்த சித்தார்த்தன், லண்டன் போகும் முன்பு ரொமேஷ் பண்டாரியை சந்திக்க விரும்பி, கவர்னர் மாளிகைக்கு போனோம். எங்களை உள்ளே விடவில்லை. கவர்னர் அப்போது வெளியில் போகப் போவதாகவும் பின்பு அப்பாயின்மென்ட் பெற்று வரும்படியும் கூறினார்கள். நாங்கள் இருந்த இடத்துக்கும் கவர்னர் மாளிகைக்கும் வெகுதூரம். நாங்கள் தயங்கி தயங்கி வெளியில் நின்றோம். கவர்னரின் கார் பாதுகாப்பு கார்கள் வெளியில் வந்தன. கவர்னரின் காரை பார்த்து கை அசைத்தோம், சித்தார்த்தனையும் என்னையும் பார்த்த கவர்னர் உடனடியாக காரை நிப்பாட்டி, அந்த அவசரத்திலும் எங்களை திரும்ப உள்ளே அழைத்துக்கொண்டு போய் ஒரு பத்து நிமிடம் கதைத்தார். காரணம் திம்பு பேச்சுவார்த்தையில் சித்தார்த்தன் உண்மையைக் கூறி, உண்மைநிலைமையை கூறியதை தான் மறக்க முடியாது என்றார். சித்தார்த்தன் லண்டன் போய் திரும்ப வரும் போது தன்னை கட்டாயம் சந்திக்கும்படி கூறினார்.

புதிய வெளியுறவுச் செயலர் ஏ.பி.வெங்கடேஸ்வரன் என்ற தமிழர் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பகுதி 43

18/10/1980 ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தனது முதல் தள மாநாட்டை 1986 பெப்ரவரி மாதம் 19 திகதி முதல் 24 வரை இலங்கையில் நடைபெற்றது. இதனடிப்படையில் பின்தளத்தில் ஒரு மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாடு சம்பந்தப்பட்ட விபரங்கள் டெல்லி கிளைக்கும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எமது தள மாநாட்டுக்கு முன்பு தமிழகத்தின் குரல் கலையகத்தில் இருந்து வெளியேறிய தோழர்கள் எழுதிக் கொள்வது என்ற ஒரு கடிதம் டெல்லிக்கு எனக்கு வந்தது. அதில் அவர்கள் எமது வெளியேற்றம் அராஜகத்துக்கு எதிரானதே தவிர விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதில் எமது கழகத்தில் நடக்கும் அடக்குமுறைகளை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். ஸ்ரீதரன், வினோத் சிவா, அன்டன், எரிக், ரமணி, ஜோசப், கோபிநாத் ஆகிய எட்டு பேர் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். இயக்க பிரச்சினைகள் வெளியில் வரத் தொடங்கிவிட்டன. இயக்கத்தின் உண்மையான நிலை இப்பொழுது எனக்கும் அறியக்கூடியதாக இருந்தது.

பின்தள மாநாட்டு குழுவாக மார்ச் மாதம் 25,26,27 கழக மத்தியகுழு பின்வருபவர்களை தெரிவு செய்தது. தோழர் வாசுதேவா மாநாட்டு பொறுப்பாளர், தோழர் முகுந்தன், தோழர் சீசர், தோழர் மாதவன், தோழர் திவாகரன், தோழர் சுபாஷ், தோழர் ஆனந்தி, தோழர் ராதா, தொடர் காலித், தோழர் பொன்னுத்துரை
மாநாட்டில் கலந்துகொள்ள தகுதியுள்ளவர்கள்

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும்
1983 ஆண்டு இனக் கலவரத்திற்கு முன்பு இயக்கத்தில் இணைந்தவர்கள்
தமிழக சமூக விஞ்ஞான கல்லூரி 15
தமிழீழ மாணவர் பேரவை அஞ்சு பேர்
கலையகம் vote3
கலையகம் vote ஒலிபரப்பு 3
தொலைத்தொடர்பு 3
பிரச்சார பிரிவு 6
கரை பொறுப்பு 6
அலுவலகம் 1,2,3,4,5 பேர்
முகாம் பொறுப்பாளர்கள் 20 பேர்
முகாம் நிர்வாகம் 18 பேர்
பயிற்சி தோழர்கள் 75 பேர் வரை
டெல்லி கிளை இரண்டு பேர்
தேனி கண்டி பயிற்சி பெற்ற அனைவரும். 10% நியமனங்கள்
உதவி முகாம் புதுக்கோட்டை 3,
ஒரத்தநாடு ஆறு,
பாதுகாப்பு 3

15/4/1986 நடைபெறவிருந்த மாநாடு தளத்திலிருந்து வரவிருந்த தோழர்கள் வரத் தாமதமானதால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு ஆதவன், செந்தில், பாபுஜி இயக்க மத்தியகுழுவில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்கள். அழியாத கோலம், கோம்ஸ் பின்தளத்தில் உளவுப் படையால் கொலை செய்யப்பட்டனர் என்ற வதந்தி தளத்தில் பரப்பப்பட்டு தளத்திலிருந்து ஈஸ்வரன் பின்தள மாநாட்டை ஒத்தி வைக்கும்படி தகவல் அனுப்பினார்.

தள உறுப்பினர்களுக்கு உண்மையை கூற பின்தள ஏற்பாட்டு குழு உறுப்பினர் பொன்னுத்துரை, பின்தள பாதுகாப்பு பொறுப்பாளர் பாபுவும் தளம் இலங்கை சென்று வந்தார்கள். தளத்தில் இருந்து வந்த செய்திகளை எடுத்து பின்தள மாநாடு சம்பந்தமான ஏற்பாடுகள் திரும்பத் தொடங்கின.
30/03/1986 இல் சுபாஷ் எடுத்த கணக்கின்படி முகாம்களில் மொத்தம் 1675 தோழர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட தோழர்கள் விபரம்.

மருத முகாம் தோழர்கள் எண்ணிக்கை 76
பதுளை தோழர்கள் எண்ணிக்கை 64
கல்லாறு தோழர்கள் எண்ணிக்கை 136
புளியங்குளம் தோழர்கள் எண்ணிக்கை 151
மாங்குளம் தோழர்கள் எண்ணிக்கை 141
கல்முனை தோழர்கள் எண்ணிக்கை 151
குஞ்சுக்குளம் தோழர்கள் எண்ணிக்கை 64
முல்லை தோழர்கள் எண்ணிக்கை 115
ஜமாலியா தோழர்கள் எண்ணிக்கை 134
பண்டிவிரிச்சான் தோழர்கள் எண்ணிக்கை 44
பாலமோட்டை தோழர்கள் எண்ணிக்கை 125
கல்வி தோழர்கள் எண்ணிக்கை 72
குருவி மேடு தோழர்கள் எண்ணிக்கை 236
துலாவில் தோழர்கள் எண்ணிக்கை 106
கற்றன் தோழர்கள் எண்ணிக்கை 24
வடமுனை தோழர்கள் எண்ணிக்கை 13
மூதூர் (சுனில்)R D தோழர்கள் எண்ணிக்கை 23
மொத்தம் 1675

தள செயக்குழு, மகாநாட்டு ஒத்துழைப்பு குழு தோழர்கள் பின்தளம் வந்தார்கள். பின்னர் தள, பின்தள மத்தியகுழு உறுப்பினர்கள் சென்னையில் 6/6/86 மூன்று நாட்கள் கூடி பின்தள மாநாடு சம்பந்தமான பல முடிவுகளை எடுத்தார்கள். தளத்தில் இருந்து வந்த முக்கியமானவர்கள் சுந்தரலிங்கம், ஈஸ்வரன், ரகு, விசாகன், குமரன், கண்ணன் போன்றவர்கள்
7/6/1986 முதல் புதிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு வாசுதேவவா, முகுந்தன், சீசர், திவாகரன், ஆதவன், ராதா, சுபாஷ், பொன்னுத்துரை, காலித், ஆனந்தி, ஆனந்தன், செல்வராசா, எல்லாளன். 13/06/1986 முதல் ஏற்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு முதல் காலித் 11/06/1986 வெளியேறிவிட்டார்.

தளகுழுவில் இருந்து வந்த தோழர்கள் 7/06/86 to 13/06/86 இடைப்பட்ட காலத்தில் முகாம்களில் போய் குழப்பம் செய்துவருவதாக T3S தோழர்களால் குற்றம் சாட்டப்பட்டனர்.

புதிதாக பின்தள மாநாடு 19/07/1986 எல்லோரும் சேர்ந்து முடிவு செய்திருந்தார்கள்.

தளத்தில் இருந்து வந்திருந்த அனைத்து தோழர்களும் ஒத்துழைப்பு கொடுத்த மாதிரி நடித்து, 06/07/1986 நடந்த மாநாடு சம்பந்தமான கூட்டத்தில் ஈஸ்வரனும் தளத்தில் இருந்த தோழர்களும் வெளியேறி விட்டார்கள்.

பின்தள மாநாடு சம்பந்தமான முழு விபரங்களும் இப்போது வவுனியாவில் இருக்கும் அன்புமணி தோழருக்கு மிக நன்றாக தெரியும். அவர் இது பற்றிய பதிவு போட்டால் மிக நல்லது. அவர்தான் தளத்தில் இருந்து வந்த தோழர்களை வரவேற்று பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார் என நினைக்கிறேன்.
பின்தள மாநாடு சம்பந்தமான அனைத்து அறிக்கைகள், குறிப்புகள் போன்ற அனைத்துவிதமான எழுத்து வேலைகள் போன்றவற்றை மற்ற தோழர்களின் உதவியுடன் சிறப்பாக செய்து வந்தவர் நிர்வாக பொறுப்பாளர் தோழர் மாதவன் அண்ணா.

பகுதி 44

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

43 பதிவிலிருந்து எமது பின் தள மாநாட்டைப் பற்றி எழுதத் தொடங்கியுள்ளேன். என்னிடம் பின்தள மாநாட்டு அறிக்கை முழுமையாக உள்ளதால் அதைப் பார்த்து சில புள்ளிவிபரங்களை எழுதினேன். அதை வைத்து நான் எழுதினால் எனக்கும் விளங்காது, இயக்கத்தில் இல்லாத நண்பர்களுக்கும் விளங்காது. முகாம்களிலும், முகாம் பொறுப்புகளிலும இருந்த தோழர்களுக்கு அந்த விபரங்கள் தோழர்களின் பெயர்கள் முழுமையாக விளங்கும். நான் எமது இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தாலும் முகாம் பற்றிய அறிவு, முகாம் பற்றிய வாழ்க்கை, முகாம் பொறுப்பாளர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. நான் பதிவு போடும் போது தோழர்களின் பொறுப்புகள் பதவிகள் நாம் பற்றிய விபரங்கள் யாரும் கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. அதனால் என்னை மன்னிக்கவும். அதுமட்டுமல்ல இலங்கையில் தளத்தில் அமைப்பு பற்றிய விபரங்கள், பொறுப்பாளர்கள் பற்றிய விபரங்கள் இதுவும் எனக்கு தெரியாது. டெல்லியில் எனக்குத் தேவையான பிரச்சாரங்களுக்கு உதவும் செய்திகள் மட்டுமே தலைமை கழகத்தில் இருந்து வரும். அதைவிட எமது இயக்கத்தின் நல்லது கெட்டது பற்றிய ரகசிய செய்திகள் கழக சென்னை நிர்வாகிகள் மட்டத்தில் நாங்கள் பேசிக் கொள்வோம்.

யாரும் பின்தள மாநாடு பற்றிய விபரங்கள் தீர்மானங்கள் அறிய விரும்பினால் நான் அதை போட்டோ வடிவில் போட்டு விடுகிறேன்.

இனி நான் மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி எனது நேரடி அனுபவத்தை எழுதுகிறேன்.

19/07/1986 நடக்கவிருந்த பின்தள மாநாட்டுக்கு டெல்லி கிளையின் சார்பாக நான் முதன்முறையாக பயிற்சி முகாம் இருந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தேன். டெல்லி கிளையின் சார்பாக சென்னையில் இருந்த பரதனும் அழைக்கப்பட்டிருந்தார். ஒரத்தநாட்டில் மொட்டைமாடி என்றழைக்கப்படும் எமது அலுவலகத்தில் வந்திருந்தேன். அங்கு எழுத்து வேலைகளில் பரபரப்பாக இருந்த மாதவன் அண்ணா, ஆனந்தி அண்ணா போன்றவர்களுக்கு மிகவும் சந்தோஷம். குளித்துவிட்டு வந்த பின்பு மாதவன் அண்ணா சாப்பிட அழைத்து போனார். சின்ன சின்ன கடைகள். நான் நினைக்கிறேன் ஒரு ரூபாய்க்கு கிட்டத்தட்ட சின்ன சின்ன 10 இட்லிக்கு மேல். தேனீர் அம்பது காசு என்று நினைக்கிறேன். எனக்கும் அவர்கள் எழுத்து வேலைகள், மற்றும் அவர்கள் செய்த வேலைகளில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். அங்கு முகாம்களில் இருந்து வந்து போகும் தோழர்களின் காரசாரமான பேச்சு சத்தங்கள் தான் பயங்கரமாக கேட்டது. செயலதிபர் உமாமகேஸ்வரன் உட்பட முன்னணி தோழர்கள் கூடிக்கூடி பேசுவதும் போவதும் வருவதுமாக பிஸியாக இருந்தார்கள். முன்னணி தோழர்களையும் லெபனான் பயிற்சிக்கு போய் வந்த தோழர்களையும் மட்டும் தான் எனக்கு தெரியும். முகாமில் இருந்து வந்த தோழர்களுக்கு என்னை தெரியாது. எனக்கும் அவர்களை தெரியாது. அவர்கள் முன்னணி தோழர்களை பார்த்து முறைத்த மாதிரியே என்னையும் கோபமாகப் பார்த்தார்கள். மாதவன் அண்ணா என்னை தனியாக வெளியில் போக வேண்டாம் என்று எச்சரித்தார்.

தளத்தில் இருந்து வந்த தோழர்கள் யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் அதில் விவசாய அணி தலைவராக செயலாளராக வந்திருந்த சுதுமலை சேர்ந்த பரிபூரண ஆனந்தன் என்னோடு ஒன்றாக படித்தவர். சுதுமலையில் வீடுகளும் அருகருகில். அவர் மட்டும் என் அருகில் வந்து என்னை பற்றி விசாரித்து எல்லாம் கேட்டுவிட்டு, நீங்கள் எல்லாம் சேர்ந்து பயிற்சிக்கு வந்த நூற்றுக்கணக்கான தோழர்களை கொலை செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு மனசாட்சியே இல்லையா, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். நான் முதல் முறையாக இப்போதுதான் முகாம் பக்கம் வருகிறேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதை அவர் ஏற்கவில்லை. ஆனாலும் நட்புடன் பேசி விடைபெற்றார். அவரின் இயக்க பெயர் தெரியவில்லை, மறந்துவிட்டேன்.

நான் எமக்கு பல உதவிகள் செய்த ஒரத்தநாட்டைச்சேர்ந்த இளவழகன், ராமசாமி போன்றவர்களை சந்திக்க விரும்பினேன். மாதவன் அண்ணா தடுத்துவிட்டார். இப்போ அவர்கள் ராஜன் தோழருக்கு முழு உதவியும் செய்கிறார்கள். அங்கு போனால் இங்கு பிரச்சனை வரும் என்று கூறி தடுத்துவிட்டார். ஒரு மூன்று ஆண்டுகளில் எவ்வளவு மாற்றம். தளத்தில் இருந்து வந்தவர்கள் இங்கு மாநாடு நடப்பதை விரும்பவில்லை. அதேநேரம் தள அரசியல் செயலாளர் ராஜனோடு நின்றார். அங்கு நான் கேள்விப்பட்டது தளத்தின் அரசியல் பொறுப்பாளர் என்ற பெரிய பதவியை வைத்திருந்த ஈஸ்வரன் இங்கு செயலதிபர் உமாமகேஸ்வரன், ராஜனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சி செய்யாமல் சண்டையை பெரிதாக்கி, தமிழ்நாட்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சிதறச் போகச் செய்து, தளத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவராக முயற்சி செய்வதாக எல்லோரும் பேசிக் கொள்ளப்பட்டது. முகாமில் இருந்த தோழர்களுக்கும் ஈஸ்வரன் மேல் கடும் கோபம் இருந்தது.

செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு மிக மிக நெருக்கமாக இருந்த பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான செந்தில், பாபுஜி போன்றவர்கள் தள மாநாட்டுக்கு போய் வந்தபின், குற்றச்சாட்டுகளை செயலதிபர் உமாமகேஸ்வரன், கந்தசாமி மேல் சுமத்திவிட்டு மத்தியகுழு உறுப்பினர் என்ற கோதாவில் ராஜனுக்கு ஆதரவளித்தார்கள். அன்றும் முகாம்களில் இருந்த பல தோழர்கள் செந்தில், பாபுஜிக்கு எதிராக இருந்த தோழர்கள் ராஜனை ஆதரிக்க தயங்கினார்கள். செந்தில், பாபுஜி இல்லாவிட்டால் பெருமளவு தோழர்கள் ராஜனை ஆதரித்து இருந்திருப்பார்கள். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முகாம் தோழர்கள் எல்லாம் கிட்டத்தட்ட 100 பேர் வரை இருக்கும் ஒரு முகாமில் இருந்தார்கள். ஒரத்த நாட்டில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இரவில் பரபரப்பாக இருக்கும் மாணிக்கம்தாசன் ஆயுதங்களுடன் சில தோழர்களுடன் பரபரப்பாக வாகனத்தில் திரிவார். கந்தசாமி, PLO பவன் போன்றவர்கள் ஒரு பக்கம் பாதுகாப்பு கொடுப்பார்கள். காரணம் ராஜன் எங்களை ஆயுதங்களுடன் தாக்க வருவதாகவும், பல முகாம்களை தாக்க ராஜன் ஆதரவாளர்கள் போய் வருவதாகவும் பலவித வதந்திகள் அப்போது உலாவின. எதையும் நம்ப முடியாது. நம்பாமலும் இருக்க முடியாது. PLO பவன் தனது தொடர்பில் இருந்த TELO இயக்க முக்கிய தோழர்களிடம் இருந்து சில புதிய ஆயுதங்களை தற்காலிகமாக வாங்கிக்கொண்டு வந்திருந்தார். புதிய ஆயுதங்களை பார்த்த தோழர்களுக்கு பெருந்தொகையான ஆயுதங்கள் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஏற்பாடு செய்து விட்டதாகவும் முதல் பகுதி வந்துவிட்டதாகவும் கதைகள் பரவத் தொடங்கின. இப்படியான கதைகள் எமது பக்கத்தில் இருந்து பரப்பப்பட்டன.

இதேநேரம் கண்ணன், வாசுதேவா, செயலதிபர் உமாமகேஸ்வரன் என்னை அழைத்து நாளை காலை மாநாட்டுக்கு தெரிவுசெய்யப்பட்ட தோழர்கள் உள்ள முகாம் போய் என்னை தங்க சொன்னார்கள். அங்கு தோழர்களிடம் எமக்கு சாதகமான சில செய்திகளை கூறச் சொன்னார்கள். அதேநேரம் முகாமில் இருந்த தோழர்களுக்கு எமது பக்க நம்பிக்கையான சில தோழர்களுக்கு என்னைப் பற்றியும் சில செய்திகளை சொல்லி அனுப்பியிருந்தார்கள். அதாவது எமது இயக்கத்துக்கு இந்திய அரசாங்கத்தோடு பயிற்சி மற்றும் ஆயுதம் வாங்குவதற்கு இவர்தான் தொடர்பில் உள்ளவர் என்றும் வதந்தி பரப்பப்பட்டது.

அடுத்தநாள் நான் மாநாட்டில் பங்குகொள்ளும் தோழர்கள் இருந்த முகாம் புறப்பட்டேன். மாதவன் அண்ணா ஆனந்தி அண்ணா போன்றவர்கள் பல எச்சரிக்கைகள் செய்து அனுப்பினார்கள்.
தொடரும்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 10

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 11

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 12