விமலேஸ்வரன் பற்றிய நினைவுகள் 33 வருடங்களாக பதிவாகித்தான் வந்தது.

விஜிதரன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த கலைப்பிரிவு மாணவன் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிராகவும், விஜிதரனை விசாரிப்பதாயின் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் மத்தியில் வைத்து விசாரிக்கப்படுவது தான் சரியானது என்ற கோரிக்கையை அனைத்து இயக்கங்களையும் நோக்கி முன்வைத்தும் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போரட்டத்தினை பல்கலைக்கழகத்தினுள்ளே அன்று நடாத்தினர்.

விஜிதரன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டது நவம்பர் மாதம் 1986 ம் ஆண்டு.

காணாமலாக்கப்பட்ட விஜிதரனை எப்படியாவது விடுவித்துத் தரும்படி அவனது பெற்றோர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒழுங்கு செய்யப்பட்ட பகிரங்க கூட்டத்தில், பெருமளவு மாணவர்கள் குழுமியிருந்த அக்கூட்டத்தில் கண்ணீர் மல்க கதறியழுதனர். நான் இந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் பௌதீக ஆய்வுகூட போதனாசிரியராக கடமையிலிருந்தேன். அன்றைய நாளில் இக் கூட்டத்தில் நானும் பிரசன்னமாயிருந்தேன்.
அந்தப் பெற்றோரின் கண்ணீரும் கதறலும் அங்கிருந்த எல்லார் நெஞ்சையும் தொட்டது.

இந்த சாகும்வரையான உண்ணாவிரதத்தில் தன்னையும் ஈடுபடுத்தி, அங்கு விஜிதரனை விடுவிப்பது மட்டுமல்லாமல், போராளிக் குழுக்களால் இயக்கங்களால் மக்களுக்கு பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரம் வேண்டும் என, அந்த மக்களின் விடுதலைக்காகவே போராடுகிறோம் எனக் கூறிக்கொண்ட அனைத்து இயக்கங்களையும் நோக்கி கோரிக்கைகள் வைத்து போராடியதற்கு தண்டனை தான் விமலேஸ்வரன் படுகொலை. விமலேஸ்வரன் அப்போதே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டப் பந்தலிலே வைத்தே கிட்டு மற்றும் திலீபனினால் மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டான்.

நேரடியாகவே கிட்டு, திலீபன் சகிதம் பல்கலைக்கழகத்திற்கு வந்து, சாவது தான் அவர்களது போராட்டம் என்றால் அவர்கள் சாகட்டும், அப்படியில்லாமல் போராட்டத்தை முறித்துக் கொண்டு விலகினால் அவர்களுக்கு மரணதண்டனை நாங்கள் தருவோம் என்று தூஷண வார்த்தைகளை கொட்டி அச்சுறுத்திச் சென்றார்கள்.

புலிகள் மட்டுமே போராளிகள் மேல் இந்த அச்சுறுத்தலை அன்று நேரிலே பகிரங்கமாக விடுத்தார்கள்.

இங்கு குறித்துக் கொள்ள வேண்டிய விடயம் ஒன்று என்னவெனில் விஜிதரன் காணாமலாக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளிவராமல் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு இருந்த காலம். இயக்கங்கள் இராணுவ நடமாட்டம் முற்றாகவே இல்லாதிருந்த யாழ் வீதிகளில் ரோந்து நடவடிக்கை முதற்கொண்டு யாழ்ப்பாணம் இயக்கங்களின் முழுக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த காலம். இவர்கள் கட்டுப்பாட்டுகளையும் கண்காணிப்புகளையும் மீறி எந்த அசம்பாவிதங்களும் நடக்கவே முடியாது. இயக்கங்களுக்கு தெரியாமல் யாரும் கடத்தப்படவோ காணாமலாக்கப்படவோ முடியாது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அரசுக்கு எதிராகவே போராட்டம் செய்ய முடியும். அது போலவே இயக்கங்களின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் குடாநாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் ஏதோ ஒரு இயக்கத்தின் விரோதியாக கணிக்கப்பட்டதாலேயே காணாமல் ஆக்கப்பட்டிருந்தான்.

இந்தக் கேள்விகள் எல்லாம் கடத்திக் காணாமலாக்கியவர்களுக்கு மட்டும் தான் அளவுகடந்த எரிச்சலையும் கோபத்தையும் ஊட்ட முடியும்.

எனவே சாகும்வரை உண்ணாவிரதப் போராளிகள் மேல் மரணதண்டனைத் தீர்ப்பை அவர்கள் வழங்கினார்கள். அன்றே விமலேஸ்வரன் உயிர் குறிவைக்கப்பட்டது.

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. அப் போராட்டத்தில் முன்னின்றவர்களில் ஒருவனான விமலேஸ்வரன் தலைமறைவு வாழ்க்கைக்குப் போனான்.

கொழும்பிலும், வன்னேரிக்குளம் மற்றும் தனது சொந்த ஊரான பூநகரி போன்ற இடங்களிலும் பல மாதங்களாக தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த விமலேஸ்வரன் இறுதியில் இந்திய இராணுவத்தின் வருகைக்குப் பின்னால், புலிகள்-இந்திய இராணுவ மோதல்கள் யாழ் குடாநாட்டில் ஓய்வுக்கு வந்ததன் பின்னால் யாழ் குடாநாட்டுக்கு திரும்பி வரும் முடிவை எடுத்ததாக தெரிகிறது.
தனது தலைமறைவு வாழ்க்கையால் பட்டப்படிப்பை இடைநடுவில் கைவிட வேண்டியிருந்த விமலேஸ்வரன் மீண்டும் இறுதியாண்டு தேர்வுக்கு தன்னை தயார்படுத்தும் முயற்சியில் தனது சில பழைய சக மாணவர்களோடு இரகசிய தொடர்புகளை மேற்கொண்டிருந்தான். சுன்னாகம் மின்சாரநிலையத்துக்கு அருகிலமைந்த கலட்டிக் கிராமத்தில் மீண்டும் தலைமறைவு வாழ்வை யாழ் குடாநாட்டிலும் மேற்கொள்ளும் சூழல் அன்றிருந்தது.

எனினும், இந்திய பிராந்திய மேலாதிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டில் புலிகளும் தானும் ஒரு அணி. எனவே அப்போதைக்கு புலிகள் இந்திய சார்பு சக்திகள் மேலேயே அதிகம் கண்ணாயிருப்பார்கள் என்ற கணிப்பில் தனக்கு அது குறித்து ஒருவகை உத்தரவாதம் நேரடியாக அல்லாமல் இடைப்பட்டவர்களால் தரப்பட்டதாக அவனை நான் பல்கலைக்கழக முன்வீதியில் தற்செயலாக சந்தித்துக்கொண்ட போது, ஏன் இப்படி பகிரங்கமாக தனியே திரிகிறாய் என்ற எனது ஆதங்கத்துக்கு பதிலளித்தான்.

அதுவே விமலேஸ்வரனோடு நான் சந்திந்த கடைசித் தருணமும், பரிமாறிய வார்த்தைகளும்.

இதற்கு முதற்தடவை அவனை நான் கொழும்பில் சந்தித்து பின்னர் பூண்டுலோயா வரை ஒன்றாக பயணித்திருந்தோம்.
பின்னர் புலிகள்-இந்திய இராணுவ மோதற் காலத்தில், நாங்கள் உள்ளுர் அகதிகளாக இடப்பெயர்ந்து வன்னேரிக்குளத்தில் தங்கியிருந்து மோதல் முடிவுற்ற பின்னர் காட்டுவழிப் பாதையில் டிராக்டர் வண்டியில் யாழ் குடாநாட்டுக்கு திரும்பிச் செல்லும் வேளை, விமலேஸ்வரன் அடையாளம் காணமுடியாதளவு தாடி, தலைமுடி சகிதம் எதிர்வழியில் பூநகரியிலிருந்து வன்னேரிக்குளம் நோக்கி சென்றதாகவும், அவ்விடத்தில் வைத்து தன்னை வெளிப்படுத்தி பேசி பரபரப்பாக்குவதை தவிர்த்ததாகவும் கடைசியாக என்னைச் சந்தித்தபோது கூறினான்.

இப்படியெல்லாம் அவதானத்துடன் நடந்து கொண்ட அவன், என்னையும் நோக்கி ஆபத்துக்கள் இருக்கின்றன என எச்சரித்து, எங்கேயாவது வேறு நாடுகளுக்கு போக வாய்ப்பு வந்தால் போய்விடும்படி எனது மனைவியிடம் கூறிச் சென்றிருக்கின்றான்.
ஆனால் இனி தனக்கு நடமாடுவதற்கு எந்த ஆபத்தும் இல்லை என அவனுக்கு நம்பிக்கையளித்த வார்த்தைகளை யார் அவனுக்கு வழங்கினார்கள்? அந்தப் பொறியில் எவ்வாறு அவன் விழுந்தான்?

சாகும்வரை உண்ணாவிரதப் போராளியாக இருந்து போராட்டம் கைவிடப்பட்டதற்குப் பின்னால் மரணதண்டனை துரத்த தலைமறைவு வாழ்க்கைக்குப் போய் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்த பின்னும் கொலையாளிகள் பின்தொடர்ந்து அவனை சட்டநாதர் கோவில் வீதியில் வைத்து 1988 ம் ஆண்டு 18 ம் திகதி யூலை படுகொலை செய்தனர். தனது சக மாணவன் காணாமலாக்கப்பட்டு சாகடிக்கப்பட அவனுடைய விடுதலைக்காக குரல் கொடுத்த விமலேஸ்வரனும் தெருவில் அனாதைப் பிணமாக வீழ்த்தப்பட்டான்.
அவனுடைய உடலை பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்தும் முயற்சி அவனுடைய உறவினர்கள் என்ற போர்வையில் நின்ற புலிகளால் முறியடிக்கப்பட்டு உடலம் அவனது சொந்த ஊரான யாழ்குடாநாட்டுக்கு வெளியிலிருந்த பூநகரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இப் படுகொலைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் திரண்டுவிடக் கூடாது என்று புலிகள் வகுத்த வியூகம் அரங்கேறியது.
புலிகளால் இப் படுகொலை குறித்த செய்திகள் பிரசுரமாகக் கூடாது என்று அச்சுறுத்தல் இருந்தபோதும் அதையும் மீறி அன்று வந்த பத்திரிகைச் செய்தி ஒன்று இங்கு இணைக்கப்படுகிறது.

vimales

vimales

இங்கு இந்தப் பின்னணியில் 33 வருடங்களாக இதனை நாங்கள் எழுதியும் பேசியும் வருகின்றோம்.

ஆனால் குருபரன் இப் படுகொலை குறித்து 33 வருடங்களாக பொது வெளியில் பகிராதிருந்ததற்கான காரணம் எதுவோ?

அப்படிப் பகிரும் இவ்வேளையிலும் கூட ஒரே தொட்டிலில் வைத்து இரு பிள்ளைகளை தாலாட்டுமாற் போல் அகிலன் மற்றும் செல்வன் கொலையாளி சிவராமையும், புலிகளால் கொல்லப்படாமல் விடப்பட்டால் அந்த சிவராமாலேயே கொல்லப்பட்டிருக்கக் கூடிய விமலேஸ்வரனையும் ஒன்றாக ஒரு தட்டில் வைத்து எழுதுவது எந்த வகை என்று புரியவில்லை. புளட் இயக்கத்திலிருந்து அதன் அரசியல் மற்றும் உட் படுகொலை முரண்பாடுகளுக்கு எதிராக நின்று போராடியவர்களை வேட்டையாட துப்பாக்கியோடு அலைந்து திரிந்த அகிலன் மற்றும் செல்வன் படுகொலையின் சூத்திரதாரியான சிவராம் இடத்துக்கு, அதே புளட்டின் படுகொலைக்கு எதிராக போராடி வெளியேறிய விமலேஸ்வரனை தரமிறக்க சமப்படுத்த முடியுமா?

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இளைஞர்களுக்கும் அஞ்சலி செலுத்தி உமாமகேஸ்வரனுக்கும் அஞ்சலி செய்ய முடியுமா?
சந்ததியாருக்கும் அஞ்சலி செலுத்தி உமாமகேஸ்வரனுக்கும் அஞ்சலி செய்ய முடியுமா?
பிரபாகரனுக்கும் அஞ்சலி செலுத்தி மகிந்த ராஜபக்சவுக்கு புகழாரம் சூட்ட முடியுமா?