பகுதி 33
திரும்பவும் இயக்கத் தலைவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் டெல்லி அழைக்கப்பட்டிருந்தார்கள். இம்முறை செயலதிபர் உமாமகேஸ்வரன் வாசுதேவாவையும் அழைத்து வந்திருந்தார். எல்லா இயக்கங்களுக்கும் ஒரு ஹோட்டல். உமாமகேஸ்வரன் வழமை போல் என்னோடுதான் தங்கினார். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் வேறு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். ராஜீவ் காந்தி அரசின் புதிய வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி ரகசியமாக இயக்கங்களை தனியாகவும், தமிழர் விடுதலைக் கூட்டணி தனியாகவும் சந்தித்துப் பேசினார். சந்திப்புகள் தனியார் ஓய்வு விடுதியில் நடந்தன.
இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை தமிழ் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண பிரதமர் ராஜீவ் காந்தி விரும்புவதாகவும் அதற்கு இயக்கங்களின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்டார். அதே மாதிரி தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் ஆட்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிந்தோம்.
திரும்பவும் 85 ஆம் ஆண்டு மே மாதம் என நினைக்கிறேன். இயக்கங்கள் எல்லாம் அழைக்கப்பட்டு இந்திய வெளிநாட்டு உளவுத்துறை ரா அதிகாரிகளும் சந்தித்து சமகால நிலைமைகளை பற்றி கதைத்தார்கள். புளொட் இயக்கத்தில் கூடுதலாக வாசுதேவா கலந்து கொண்டார். ரா அதிகாரிகளுடன் பேசும்போது எல்லா இயக்கமும் தங்களுக்கு கூடுதலாக ஆயுதங்கள் தரவேண்டும், பயிற்சிகள் தர வேண்டும். தங்களால் பெரிய மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என உறுதிபடக் கூறினார்கள். தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்கள். வழமை போல் ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் தான் இந்தியாவுக்கு நம்பிக்கையானவர்கள், தங்களால் இலங்கையில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று கூறி மற்ற இயக்கங்களை போட்டுக் கொடுத்தார்கள். ஈரோஸ் இயக்கம் கூடுதலாக புளொட் இயக்கமும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் இலங்கை அரசோடு ரகசிய தொடர்பு இருப்பதாக கூடுதலாக போட்டுக் கொடுத்தார்கள்.
டெல்லியில் ரகசிய பேச்சுவார்த்¬தையில் இயக்கங்கள் இருக்கும் போது வல்வெட்டித்துறையில் சில விடுதலைப்புலி இளைஞர்களை கைகளை கட்டி சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றதாக செய்திகள் வந்தன. பிரபாகரனின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் ரொமேஷ் பண்டாரி எங்களை சந்தித்தபோது அவர் தமிழ் விடுதலை இயக்கங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை பற்றிப் பேசவே ஜெயவர்த்தனா அரசு மறுப்பதாக கூறினார். அதேநேரம் இந்திய அரசு முடிந்தளவு அரசியல் பிரயோகம் செய்து ஒரு தீர்வு கொண்டுவர முயற்சிகள் செய்யும் எனக் கூறினார். அப்போது பிரபாகரன் திடீரென தன்னால் இலங்கை அரசை ஒரு தீர்வுத் திட்டத்துக்கு கொண்டுவர, பேச்சுவார்த்தைக்கு வரச்செய்ய முடியும் என கூறினார். இதைக் கேட்டவுடன் எல்லோரும் திகைத்து விட்டார்கள். ரொமேஷ் பண்டாரி பிரபாகரனை பார்த்து எப்படி முடியும் எப்படி முடியும் என்று கேட்டார். பிரபாகரன் தன்னால் முடியும் பொறுத்திருந்து பார்க்க சொன்னார். திலகர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார். மற்ற எல்லா இயக்கத் தலைவர்களும் பிரபாகரனை ஒரு ஏளன சிரிப்புடன் பார்த்தார்கள். கூட்டம் முடிந்து வரும்போது ஹோட்டலில் வைத்து ஐந்து இயக்கங்களும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் தங்கள் தங்கள் அறைகளுக்கு போய் விட்டார்கள். நானும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் வாசுதேவா ரூமில் இருந்து கதைத்துக் கொண்டிருந்த நேரம் எமது ரூமுக்கு ஈரோஸ் ரத்ன சபாபதி வந்தார். எல்லோரும் பிரபாகரன் இலங்கை அரசை பணிய வைக்க முடியும் என்று கூறியதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். செயலதிபர் உமாமகேஸ்வரன் பிரபாகரன் ஒரு மடையன், நடைமுறை சாத்தியமில்லாத செய்திகளைக் கூறுவதே அவனின் பழக்கம் என்று கூறி, 83 ஆம் ஆண்டு நடந்த ஒரு தகவலையும் கூறினார். ஜாமினில் இருந்து விலகி தப்பிபோவதைப் பற்றி தமிழ்நாட்டு மந்திரி காளிமுத்துவிடம் கூறி, புலவர் புலமைப்பித்தன் மூலம் தனக்கும் தான் தப்பி போவதை பற்றி செய்தி அனுப்பியதாக கூறி, அப்போது காளிமுத்து பிரபாகரனும் நீங்கள் தப்பி போவதால் இந்திய அரசின் பகையையும் சேர்த்து கொள்ள போகிறீர்கள் எனக் கூற பிரபாகரன் இந்திய அரசையும் தேவையானால் எதிர்க்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்த செய்தியை புலமைப்பித்தன் பிரபாகரன் எப்படிப்பட்ட நெஞ்சுரம் கொண்டவர் என பாராட்டியதாக கூறினார். அப்போது தான் புலமைப்பித்தனிடம் வார்த்தைகளில் எது வேண்டுமானாலும் வீரமாக கூறலாம், அமெரிக்க படை, இந்தியப்படை, பிரிட்டிஷ் படையை கூட எதிர்க்க தயார் என வாய்ச்சவடால் விடலாம் என்று தான் கூறியதாக கூறினார். நடைமுறை சாத்தியம் என்று ஒன்று இருக்கிறது என்றார். செயலதிபர் உமாமகேஸ்வரன் மேலே கூறிய விடயம் உண்மை. புலமைப்பித்தன் வரச்சொல்லி செயலதிபர் போன போது கூட நானும் மாறனும் போயிருந்தோம்.
இப்போது இதை எழுதும் போது, பிரபாகரன் அன்று கூறியபடி பிற்காலத்தில் இந்தியப் படையை தைரியமாக எதிர்த்து நின்றது உண்மை.
டெல்லியில் சம்பவம் நடந்து ஒரு வாரம் பத்து நாட்களில் அனுராதபுரத்தில், வில்பத்து காட்டில் சிங்கள மக்கள், புத்த பிக்குகள் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையை விடுதலைப் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் மறுத்தன. ஆனால் இது விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டது . இலங்கை அரசு திகைத்து நின்றது. அதன் பின்பு இலங்கை அரசு இந்திய அரசோடு தான் பேச்சுவார்த்தைக்கு வர தயார் என அறிவித்தது. இது பிரபாகரனின் சாதனை. உடனடியாக திம்புவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்னையிலும் டெல்லியிலும் ஏற்பாடுகள் நடக்க தொடங்கின.ராஜீவ் காந்தி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும், இந்த இலங்கை தமிழின போராட்டம் முடிவு பெற வேண்டும் என்று விரும்பியதாக டெல்லி பத்திரிகையாளர்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசு இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைய வேண்டும் அதுவும் இலங்கை தமிழ் குழுக்களே பேச்சுவார்த்தையை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று நினைத்தது. தமிழ் இயக்கங்கள் இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் அமிர்தலிங்கம் முன்னணிக்கு வந்து விடுவார் என்று நினைத்தனர். அதே நேரம் பேச்சுவார்த்தையை எதிர்த்தால் இந்தியாவை பகைக்கவேண்டி வரும். அதோடு பேச்சுவார்த்தை தங்களால் உடைந்துவிட்டது என்று காட்டாமல் இலங்கை அரசாங்கமே பேச்சுவார்த்தையில் பின்வாங்க வேண்டும், இலங்கை அரசு ஒரு காலமும் ஒப்பந்தம் மூலம் இலங்கை தமிழருக்கு எந்த உரிமையும் கொடுக்காது என உலகத்துக்கு காட்ட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் அமிர்தலிங்கம் குழுவினர் இந்தியாவையும் பகைக்கக் கூடாது, தமிழ் விடுதலை இயக்கங்களையும் பகைக்க வைக்க கூடாது என்ற நிலையில் இருந்தார்கள்.
டெல்லி பத்திரிகை நண்பர்களில் எமக்கு மிக நெருங்கியவராக பி.டி.ஐ செய்தி ஸ்தாபனத்தின் தலைமை நிருபர் தமிழர் சந்திரசேகரன் இருந்தார். எப்படியும் ஒரு பேட்டி எடுத்து போட்டு விடுவர். பி.டி.ஐ செய்திகள் உடனுக்குடன் உலகம் முழுக்க பரவிவிடும். அதே மாதிரி சித்தார்த்தன் வந்து இருக்கும் பொழுதெல்லாம் வந்து மிக நீண்ட நேரம் பேசுவார். அவர் மூலம் நாங்கள் செய்திகளை இந்திய அரசின் இலங்கை நிலைப்பாடு, இலங்கை அரசின் நிலைப்பாடு, மற்ற இயக்கங்களின் நிலைப்பாடுகள பற்றி அவர் மூலம் நட்புரீதியாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கும்.
1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 தொடக்கம் 13 ஆம் திகதிவரை நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தைக்கு போக சித்தார்த்தன் ஆட்கள் டெல்லி வந்தபோது சித்தார்த்தனை சந்தித்த பி.டி.ஐ நிருபர் சந்திரசேகர் தினசரி மீட்டிங் முடிந்த பின்பு நடந்த செய்திகளை எனக்கு போன் செய்து கூறமுடியுமா எனக்கேட்டார். ஆனால் இந்திய உளவுத்துறை தினசரி மீட்டிங் முடிந்த பின்பு ஒவ்வொரு இயக்கத் செய்திகளைக் கூற ஒரு ஹாட்லைன் தொலைபேசி ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். இரவு 8 மணிக்கு தான் பேசுவார்கள். சித்தார்த்தன் வாசுதேவா, சென்னைக்கு செயலதிபர் உமாவுடன் பேசிவிட்டு, டெல்லிக்கு எனது தொலைபேசி எண்ணுக்கும் சித்தார்த்தன் போன் பேசுவார். அப்போது பி.டி.ஐ நிருபர் சந்திரசேகர் என்னுடன் இருந்து அன்று நடந்த கூட்டத்தின் விபரங்களை அறிந்து அடுத்தநாள் வெளியிட்டு விடுவார். இந்திய அரசு திம்பு பேச்சுவார்த்தை பற்றி ஒரு அறிக்கை கூட நிருபர்களுக்கு கொடுப்பதில்லை. உளவுத் துறை அதிகாரிகளுக்கு பெரிய சந்தேகம் எப்படி செய்தி லீக் ஆகிறது என்று. எல்லோரினதும் சந்தேகங்களும் ஈரோஸ் இயக்கத்தின் மேல் தான் இருந்தன. நாங்கள் தப்பிவிட்டோம்.
திம்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசின் சார்பில் இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் h.w. ஜெயவர்தனா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் அண்டன், மற்றும் திலகர், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் வரதராஜ பெருமாள், கேதீஸ்வரன், ஈரோஸ் சார்பில் ராஜீவ் சங்கர், ரத்ன சபாபதி, telo சார்பில் சார்ல்ஸ், மோகன், புளொட் சார்பில் வாசுதேவா, சித்தார்த்தன் கலந்து கொண்டார்கள்.
முதலாவது சுற்று பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கும் வராமல் இழுபறியாக இருந்ததாக சித்தார்த்தன் கூறினார். இந்திய அரசு மிக நம்பிக்கையாக இருந்தது. மிகத் தீவிரமாகவும் இருந்தது பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க.
பகுதி 34
திம்பு முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிந்தவுடன் செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வந்தபோது நாங்கள் இருவரும் பெரியவர் ஜி.பார்த்தசாரதி அவர்களை சந்திக்கச் சென்றோம். எங்களை வரவேற்று பேசிய அவரிடம் செயலதிபர் உமாமகேஸ்வரன் திம்பு பேச்சுவார்த்தை பற்றிய செய்தியை சொல்லத் தொடங்கிய உடன், ஜி.பார்த்தசாரதி அவர்கள் கையைக் காட்டி நிப்பாட்டி விட்டு, தான் இப்போது இலங்கை பிரச்சனை மற்றும் வெளிநாட்டு ஆலோசனைக் குழுவில் இருந்தும் ஒதுங்கி விட்டதாகவும், அதனால்தான் எந்த ஆலோசனையும் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், இனிமேல் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என பக்குவமாகக் கூறிவிட்டார். நாங்களும் அவர் எங்களுக்கு செய்த உதவிகளுக்கு நன்றி கூறி விடைபெற்றோம். G.பார்த்தசாரதியிடம் கூடுதலாக உதவி பெற்றது நாங்கள் தான். அவரை கூடுதலாக சந்தித்ததும் நான் மட்டும்தான் என நினைக்கிறேன்.
பின்பு இருவரும் வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி அவரின் வீட்டில் சந்தித்தோம். இலங்கை தமிழ் பிரச்சினைக்கு எப்படியும் ஒரு தீர்வு காணலாம் எனக் கூறினார். நாங்கள் உட்பட எல்லா இயக்க தலைவர்களும், இலங்கைப் பிரச்சினைக்கு பொறுப்பான ரா உளவுத்துறை இணைச்செயலாளர் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும், எமது செயலதிபர் ரா அமைப்பின் தலைவரை கிரிஷ் சந்திர சக்சேனா அவர்களை சந்திக்க விரும்பினார். தனது விருப்பத்தை ரொமேஷ் பண்டாரியிடம் தெரிவித்தபோது அவரும் உடனடியாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். ரா உளவு அமைப்பின் தலைவரை அவரின் வீட்டில் செயலதிபர் உமாமகேஸ்வரனும் நானும் சந்தித்தோம். 87 ஆம் ஆண்டு வரை குறைந்தது ஏழு அல்லது எட்டு தரம் சந்தித்திருப்போம். எங்கள் சந்திப்பின்போது நாங்கள் தேய்ந்து போன ரெக்கார்ட் மாதிரி, அதாவது நாங்கள் தான் இந்தியாவுக்கு மிக நெருக்கமானவர்கள், மற்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிரான சக்திகளோடு தமிழ்நாட்டில் சேர்ந்து இயங்குகிறார்கள், இலங்கை அரசுக்கு கூட தகவல்கள் பரிமாறுகிறார்கள் என்று கூறினார். (# மேலே மற்ற இயக்கங்களைப் பற்றி கூறிய அவ்வளவு குற்றச்சாட்டுகளையும் எங்கள் புளொட் தான் செய்தது. உமாமகேஸ்வரன் முதல் காரணம் என்று பின்பு தெரிய வந்தது#) ரா தலைவரும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிரித்துக் கொண்டு இருப்பார். எமது செயலதிபர் ஆயுதமும் பயிற்சியும் எங்களுக்கு கூடுதலாக வேண்டும் என கூறும்போது இணைச்செயலாளர் அல்லது சென்னை ரா அமைப்பின் DIG சந்தித்துப் பேசும்படி கூறுவார்.
இரண்டாவது திம்பு பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ஆரம்பித்தது. பேச்சுவார்த்தையில் கலவரம் ஏற்பட்டு இரண்டு நாளில் முடிந்தது. முதல் பேச்சுவார்த்தைக்கு போனவர்களில் டெலோ இயக்கம் மோகனை எடுத்துவிட்டு நடேசன் சத்தியேந்திரா என்பவரை லண்டனில் இருந்து அழைத்து தங்கள் பிரதிநிதியாக அனுப்பினார்கள். சத்தியேந்திரா குறித்து மற்ற இயக்கங்களில் சலசலப்பு ஏற்பட்டது. சத்தியேந்திரா ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவருக்கு மிக நெருங்கியவர். அதோடு முன்பு JR அமைச்சின் தொழில்துறை அமைச்சர் செயலாளராக இருந்தவர் என நினைக்கிறேன். சத்தியேந்திரா வந்தது டெலோ அமைப்பின் ஆலோசகர் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் தான் அழைத்து வந்தது என பேசிக்கொண்டார்கள். அப்போது எல்லா இயக்கமும் குறிப்பாக பிளாட், சந்திரகாசன் CIA ஏஜண்ட் என பகிரங்கமாக குறிப்பிடுவோம். நாங்கள் சத்தியேந்திரா வந்ததை சி.ஐ.ஏ பேச்சுவார்த்தையை குழப்ப தனது ஏஜெண்டுகளை அனுப்பியுள்ளது என பகிரங்கமாகவே கூறினோம். இதே காலகட்டத்தில் முக்கியமான ஒரு செய்தியைக் கூற வேண்டும். ரா உளவு இயக்கத்தின் தமிழ்நாடு பொறுப்பாளர் இலங்கை விடுதலை இயக்கங்களை நேரடியாக கையாண்டவர் DIG உன்னி கிருஷ்ணன். இவர் பின்னாளில் இந்திய மத்திய உளவுத்துறை IB ஆல் கண்காணிக்கப்பட்டு அமெரிக்க ஏஜென்டாக செயல்பட்டதை ஆதாரத்துடன் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உன்னி கிருஷ்ணன் சந்திரகாசனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.
திம்புவில் பேச்சுவார்த்தை பற்றி நான் கேள்விப்பட்டது, இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் குழப்பக் கூடிய விதத்தில் பேசியதாகவும், அதற்கு தீ வைப்பது போல் சத்தியேந்திரா மிகக் கடுமையாக பேசி நிலைமையை மோசமாக்கும் தகவல்கள் வந்தன. உடனடியாக இந்திய வெளியுறவு செயலாளர் ரமேஷ் பண்டாரி திம்பு போய் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு நிலைமையின் சூட்டை தணித்து சகஜ நிலைக்கு கொண்டு வரும் போது, சத்தியேந்திரா, ரொமேஷ் பண்டாரியின் பேச்சில் குற்றம் கண்டுபிடித்து, இந்திய அதிகாரிகளின் மேல் பிரச்சினையைத் திசை திருப்பி தான் வந்த வேலையை சுலபமாக முடித்துக் கொண்டார்.பேச்சுவார்த்தை குழம்பியது. எல்லா இயக்கங்களுக்கும் சந்தோசம். ஆனால் சித்தார்த்தன் சத்தியேந்திரா தவறைச் சுட்டிக் காட்டியுள்ளார். ரொமேஷ் பண்டாரி பேசியதில் எந்தக் குற்றமும் இருக்கவில்லை என்ற உண்மையை துணிச்சலுடன் கூறினார். பின்பு சித்தார்த்தன் இப்படிக் கூறியது எமது செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு பிடிக்கவில்லை. அவர் கூறினார் இவர்கள் அடிபடட்டும், நல்லது, அமிர்தலிங்கத்தை வைத்து இந்தியா எடுக்கும் தீர்வுத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்க கூடாது என்று கூறினார்.
எல்லா உண்மைகளையும் அறிந்த, மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கடுங்கோபத்தில் இருந்தார். இலங்கை அரசு, விடுதலை இயக்கங்கள் தான் பேச்சுவார்த்தையே உடைத்தன என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். உடனடியாக இந்திய அரசு அன்டன் பாலசிங்கம், சந்திரஹாசன், மூவரையும் லண்டனுக்கு நாடு கடத்தினார்கள். இதை தி.மு.க தலைவர்கள் எதிர்த்தார்கள். குறிப்பாக வை.கோபால்சாமி பாராளுமன்றத்தில் இதைப் பற்றி பேசி எதிர்ப்பு தெரிவித்தார். இதே நேரம் சித்தாத்தன் இந்திய அரசுக்கு ஆதரவாக பேசிய பேச்சால் ஏற்பட்ட நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் டில்லி வந்தார். நாங்கள் ரொமேஷ் பண்டாரியை சந்தித்தோம். அவர் கவலைப்பட்டார். தனது பதவிக்காலத்தில் இச் சம்பவம் ஒரு கரும்புள்ளி என கூறி வருத்தப்பட்டார். சித்தார்த்தன் மட்டும் உண்மையை கூறி இருக்காவிட்டால் உண்மை வெளியில் வந்து இருக்காது, தன்னை குற்றவாளியாக குறிப்பிட்டு இருப்பார்கள் என்று கூறி சித்தார்த்தனுக்கும் எமது இயக்கத்திற்கும் நன்றி கூறினார். இந்திய அரசு ஜெயவர்த்தனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாகவும் கூறினார்.
நாங்கள் எப்பவும் வை.கோபால்சாமி எம்.பி யுடன் நல்ல தொடர்பில் இருப்போம். வீட்டுக்குப் போய் பேசிக்கொண்டிருக்கும் போது, மூவரையும் நாடுகடத்தியது பற்றி பேச்சு வந்தபோது, செயலதிபர் வை.கோவிடம் நீங்கள் நாடு கடத்தப்பட்ட மூவருக்கு ஆதரவாக பேசி இருக்கக் கூடாது என கூறினார். அதோடு அவர்கள் சி.ஐ.ஏ ஏஜெண்டுகள் எனவும் கூறினார். வை.கோ அவர்கள் உமாவின் பேச்சை ஏற்றுக் கொள்ளவில்லை. இருக்கட்டும், தமிழ் நாட்டில் அடைக்கலம் தேடி வந்தவர்களை மத்திய அரசு நாடு கடத்த நாங்கள் அனுமதித்தால், நாளை உங்கள் எல்லோரையும் ஒவ்வொரு காரணம் சொல்லி நாடு கடத்துவார்கள், அப்பொழுது இன்னொரு இயக்கம் உங்களை சி.ஐ.ஏ ஏஜென்ட் என்று கூறும், தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருந்தால் தான் மத்திய அரசு தமிழ் இயக்கங்கள் மேல் கை வைக்காது எனக் கூறினார்.
வழக்கம் போல் நாங்கள் பத்திரிகையாளர்களையும், வெளிநாட்டுத் தூதுவராலயங்களையும் சந்தித்துவிட்டு செயலதிபர் சென்னை திரும்பினார்.செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி ஒரு அதிர்ச்சியான செய்தி இலங்கையில் இருந்து வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பிக்கள் திரு தர்மலிங்கம் அவர்களையும் ஆலாலசுந்தரம் அவர்களையும் தமிழ் விடுதலை இயக்கம் ஒன்று சுட்டுக் கொன்றுவிட்டதாக. திரு தர்மலிங்கம், நமது இயக்க திம்புவில் கலந்துகொண்ட சித்தார்த்தனின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக எல்லா இயக்கங்களும் விடுதலைப் புலிகள் மேல் சந்தேகப்பட்டு அறிக்கையும் கொடுத்தார்கள். விடுதலைப் புலிகள் மறுத்தார்கள். சித்தார்த்தன் தன்னை சந்தித்து அனுதாபம் தெரிவித்து எல்லோரிடமும் இந்தக் கொலையை பிரபாகரன் செய்திருக்க மாட்டார், தனது அப்பாவிற்கும் பிரபாகரனுக்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் telo தான் இக் கொலைகளை செய்ததாக உறுதிப்படுத்தினார்கள். அதோடு வேகமாக ஒரு கதை பரவியது. இந்த கொலையை தமிழர் விடுதலைக் கூட்டணியை பயமுறுத்துவதற்காக இந்திய ரா உளவுத்துறை TELO இயக்கத்தை வைத்து கொலை செய்ததாக, இந்தக் கதை இன்றுவரை பேசப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு கிடைத்த சில செய்திகளை நாங்கள் மறைத்து விட்டு இந்திய உளவு ரா தான் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் அவர்களை கொன்றதாக ரகசியமாக இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்ப தொடங்கினோம். தமிழர் விடுதலைக் கூட்டணி குழுவினர் இந்திய அரசுக்கு மிக நம்பிக்கையாக இருந்தார்கள். அதோடு இந்திய அரசு இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை அமிர்தலிங்கத்தின் தலைமையில் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்தார்கள். இதை தமிழ் இயக்கங்களும் விரும்பவில்லை, இலங்கை அரசாங்கமும் விரும்பவில்லை. இந்திய உளவுத்துறை ரா தலைவர் முதல் மற்றவர்கள் வரை பிரதம மந்திரிக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். கே.ஜி.பி, CIA, Pakistan உளவுத்துறை போல் தன்னிச்சையாக செயல்பட்டதாக தெரியவில்லை. சித்தார்த்தன் ரொமேஷ் பண்டாரிக்கு ஆதரவாக உண்மை பேசியது பிடிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையாக கூட இருக்கலாம். இது கிட்டத்தட்ட இந்திய நாட்டின் மானத்தை காப்பாற்றியது போல். இலங்கை அரசுக்கு மறைமுகமான ஆதரவான சந்திரகாசனின் சத்தியேந்திராவின் ஏற்பாட்டில் நடந்து இருக்கலாம். இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ரா உளவு அதிகாரி அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜென்ட் உன்னி கிருஷ்ணன் மூலம் இந்த கொலைகளை சி.ஐ.ஏ செய்திருக்கலாம். காரணம் இதன் மூலம் அமிர்தலிங்கத்தை பயமுறுத்தி இந்திய தீர்வுத் திட்டத்துக்கு ஒத்துவராமல் செய்வது. அடுத்தது இந்திய ரா அமைப்புக்கு டெலோ நெருக்கம் என்ற பெயர் இருந்தது. ரெலோ இயக்கத்தை வைத்து இந்த கொலையை செய்தால் ரா அமைப்பு தான் இந்த கொலையை செய்தது என்று கருத்து பரப்பப்பட்டு பிரச்சாரம் செய்தால் இந்திய ரா அமைப்பின் பெயர் சர்வதேச ரீதியில் இலங்கை தமிழர்களால் பரப்பப்பட்டு ரா அமைப்புக்கு கெட்ட பெயர் வரும். இந்தக் கொலைகளை சி.ஐ.ஏ தனது ஏஜன்ட் உன்னி கிருஷ்ணனை வைத்து செய்திருக்கலாம் என்று டெல்லி பத்திரிகையாளர்கள் மூலம் அறியப்பட்டது.
இதைப் பற்றி நமது செயலதிபர் உமாமகேஸ்வரனிடம் கேட்டபோது அவர் யாரிடமும் விவாதிக்க வேண்டாம். கேட்டால் telo இயக்கம் மூலம் ரா தான் செய்தது என்று தகவல் உண்மையானது தான் என்று கூறச் சொன்னார்.
திம்பு பேச்சுவார்த்தையில் நடந்த முழு உண்மைகளையும் முதலமைச்சர் வரதராஜ பெருமாளும் சித்தார்த்தன் எம்.பி அவர்களும் தான் வெளிப்படுத்த வேண்டும். இவர்கள் நேரடியாக நடந்த உண்மை சம்பவங்களை கூறினால் பல தெளிவு பிறக்கும். திம்பு பேச்சுவார்த்தையில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டவர்கள்.
பகுதி 35
பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ரொமேஷ் பண்டாரி இலங்கைக்குப் போய் ஜெயவர்த்தனா உடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இந்திய அரசு வெளியுறவுத்துறை எல்லா முக்கிய விடுதலை இயக்கங்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் உத்தியோகபூர்வமாக முதல் அழைப்பை டெல்லி வரும்படி கூறியது, அக்டோபர் 6ஆம் தேதி 1985ஆம் ஆண்டு. ஒரு நாளைக்கு முன்பாகவே எல்லோரும் டெல்லி வந்து விட்டார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள். எமது இயக்கம் சார்பாக அரசியல்துறை செயலர் வாசுதேவா, கனகராஜா, செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். வழமைபோல் செயலதிபர் உமாமகேஸ்வரன் எமது டெல்லி அலுவலகத்திலேயே வந்து தங்கிவிட்டார்.
அதே நேரம் சென்னைக்கு தமிழ் விடுதலை இயக்கங்களை சந்திக்க வந்த விஜய குமாரதுங்க, சந்திரிக்கா அவர்கள் கட்சி செயலாளர் ஓசி அபயகுணவர்தன போன்றவர்கள் புதுடில்லிக்கும் வந்து ஜன்பத் ஓட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்கள் செயலதிபர் உமாமகேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக தகவல் கொடுத்தார்கள். 10:00 மணி போல் செயலதிபர் உமாமகேஸ்வரனும், கனகராஜ் வும், நானும் அவர்களைப் போய் சந்தித்தோம். எமது சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்தது.
நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் நீண்ட நேரம் வாசுதேவா கனகராஜ் ஆகியோர் ஓட்டலில்தான் நேரம் செலவழிப்போம். இம் முறை எல்லா இயக்கங்களும் மிக மகிழ்ச்சியாக ஒருத்தருடன் ஒருத்தர் பேசிக்கொண்டோம். நாங்கள் இருக்கும் இடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் அவர்கள் மட்டும் வரமாட்டார்கள். அந்த ஓட்டலில் நாங்கள் இருந்த அறைகளுக்கு பக்கத்தில் ஒரு வரவேற்பறை இருந்தது. அதில் தான் நாங்கள் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தோம். இதை இப்போது நான் எழுதும் போது கூட யாரும் நம்ப மாட்டார்கள். லண்டனிலிருந்து அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ சேர்ந்த யோகசங்கரியும் வந்திருந்தார். யோகசங்கரியும் அவருக்கு அடுத்ததாக நானும் அதில் நல்ல குண்டாக இருந்தோம். பிரபாகரன் பொத்தாம் பொதுவாக சிரித்துக்கொண்டு, இவர்கள் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு, இந்திய அதிகாரிகளிடம் காட்டக் கூடாது. ஏனெனில் நாங்கள் அவர்களிடம் இயக்கங்களிடம் பணக்கஷ்டம் சாப்பாடு கஷ்டம் என்று கூறி உதவி கேட்டால் அவர்கள் இவர்களை பார்த்து விட்டு நாங்கள் பொய் சொல்வதாக நினைப்பார்கள். உதவி செய்ய மாட்டார்கள் எனக்கூற எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. நானும் யோகசங்கரியும் உடனடியாக எங்களைப் பார்த்தால் தான் கட்டாயம் உதவி செய்வார்கள். காரணம் எங்களைப் பார்த்தால் மிக வசதியான செட்டியார் மாதிரி இருப்பதால் பணத்தை நாங்கள் சிக்கனமாக செலவு செய்வோம் என நம்புவார்கள் என கூற, ஒரே சிரிப்புதான்.
செயலதிபர் உமாமகேஸ்வரனும், ஈரோஸ் ரட்ணசபாபதியும் ஓரிடத்தில் இருந்து கதைக்க, வாசு தேவா, கனகராஜா மற்ற தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் செயலதிபர் உமாவிடம் கேட்டுவிட்டு, பிரபாகரன், திலகர் இருந்த இடத்துக்குப் போய் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரபாகரனும், திலகரும் மிக நன்றாகப் பேசினார்கள். எம்.ஜி.ஆரை பற்றியும் சண்டைக் காட்சிகளைப் பற்றியும். நாங்கள் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ஈரோஸ் பாலகுமார் அமைதியாக வந்து இருந்து நாங்கள் என்ன பேசுகிறோம் என்று கண்காணித்தபடி இருந்தார். நாங்கள் உப்பு சப்பில்லாத எம்.ஜி.ஆரை பற்றி கதைப்பதை அறிந்து அவரும் எங்களுடன் கலந்து கொண்டார். உண்மையில் அந்த நேரம் யாரும் நல்ல முயற்சி எடுத்திருந்தால் இயக்கங்களுக்குள் நல்ல ஒற்றுமை ஏற்பட்டு இருக்கும். எல்லோரும் கலகலப்பாக பேச்சுவார்த்தையை பற்றி எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் திம்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு எல்லோரும் மிகத் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்ததை பார்த்தவன் நான்.
இரவுச் சாப்பாடு எல்லோரும் ஒற்றுமையாக ரெஸ்டாரன்ட் போய் சாப்பிடுவோம். நாங்கள் சாப்பிட்டு போகும் வரை எத்தனை மணியாக இருந்தாலும் அமிர்தலிங்கம் குழுவினர் சாப்பிட வர மாட்டார்கள். நாங்கள் ரூமுக்கு வந்த பின்பு செயலதிபர் உமாமகேஸ்வரன் எங்களிடம் இப்ப போய் ரெஸ்டாரண்ட்டில் அமிர்தலிங்கத்தை போய் பார்க்கச் சொல்லுவார். நான், கனகராஜா, வாசுதேவா மூவரும் போய் தேடினால், அவர்கள் மூவரும் ஒரு மூலை டேபிளில் அமர்ந்து ரகசியமாக குடித்துக் கொண்டிருப்பார்கள். எங்களைப் பார்த்தவுடன் திகைத்து போய், வாசுதேவாவை இரகசியமாக கூப்பிட்டு, உமாமகேஸ்வரன் அல்லது மற்ற தலைவர்கள் யாரும் இங்கு நிற்கிறார்களா என பயந்து போய் கேட்பார்கள். நாங்கள் இல்லை என்றதும், அவர்கள் பார்த்தார்கள் என்றால் போட்டோவும் எடுத்து தங்கள் இயக்க வெளியீடுகளில் போட்டு எங்களை ஒரே பாடாய் படுத்தி விடுவார்கள் என சந்தோசமாய் கூறினார்கள். நீங்கள் யாரும் போய் சொல்லி விடாதீர்கள் என கூறினார்கள். நாங்கள் போய் செயலதிபர் உமாவுடன் கூறினால், அவர் எங்களிடம் மற்றவர்களிடம் இதைக் கூற வேண்டாம் என கூறினார். அமிர்தலிங்கம் ஆட்கள் குளிர் தாங்க குடிக்கிறார்கள் என்றார்.
அடுத்தநாள் பகல் 2 மணி போல் இந்திய வெளியுறவு செயலக பேச்சுவார்த்தை கூட்ட அரங்கில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. உடனடியாக டெல்லி தூர்தர்ஷன் டெலிவிஷனில் இருந்து வீடியோ எடுத்து, படங்கள் எடுத்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை முதல்முறையாக வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார்கள். இது இலங்கை அரசுக்கு எச்சரிக்கை மணி போல் பட்டது.
அந்தப் பேச்சுவார்த்தையில் அமிர்தலிங்கம், செயலதிபர் உமாமகேஸ்வரன், ரத்ன சபாபதி ஆகியோர் தான் கூடுதலாக கருத்துக்கள் சொன்னார்கள். அதை திலகர் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். சில வேளைகளில் நேர் எதிராக இருந்த செயலதிபர் உமாமகேஸ்வரன், பிரபாகரன் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறியதும் நடந்தது. பத்மநாபாவும் கேட்டதுக்கு பதில், ஆனால் ஸ்ரீ சபாரத்தினம் ஒரு புன்சிரிப்பு தான். அவருடன் வந்த சார்ல்ஸ் சில கருத்துக்களைக் கூறினார். சார்ல்ஸ் இப்ப லண்டனில் இருப்பதாக அறிகிறேன். ரொமேஷ் பண்டாரி எங்களுடன் பேசிவிட்டு உடனடியாக நேரடி தொலைபேசி மூலம் இலங்கை அரசுடனும் பேசுவார். அவர்களின் கருத்தை எங்களிடம் கூறுவார். இந்தக் கூட்டம் மிகவும் கலகலப்பாக சிரிப்புமாக முடிந்தது. ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. ஆனால் இயக்கங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆறு மணி போல் கூட்டம் முடிந்தது. கூட்டம் முடியும் நேரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பா.சிதம்பரம் எம்.பி, ரங்கராஜன் குமாரமங்கலம் எம்.பி ஆகியோர் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். பா.சிதம்பரமும் ரங்கராஜன் குமாரமங்கலமும் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள் என்பதால் என்னைச் சுகம் விசாரித்து பேசிக்கொண்டிருக்கும் போது சிதம்பரம், ரங்கராஜன் இடம் இவரைத் தெரியுமா என்று கேட்க, ரங்கராஜன் காலையில் எழும்பி கதவை திறந்தால் இவன் முகத்தில் தான் முழிக்கிறேன் என்று கூறி, தனது எதிர் வீட்டில் தான் நான் இருப்பதாக கூறினார். இம்முறை பேச்சுவார்த்தையில் எல்லோரும் மிக மகிழ்ச்சியாக இருந்தோம்.
அடுத்த நாள் காலையில் எல்லோருக்கும் சென்னைக்கு விமானம். செயலதிபர் உமாமகேஸ்வரன் மட்டும் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு டெல்லியில் 2 நாள் இருந்து சில சந்திப்புகளை நடத்தி விட்டு சென்னை சென்றார்.
திம்பு பேச்சு வார்த்தைக்கு பின்பு சந்திப்பு ....
போராளிகள் குழுக்களையும், தமிழ் தலைவர்களையும் முதன் முறையாக இந்தியா அதிகாரப்பூர்வமாக உலகத்துக்குக் காட்டி ஒன்றிணைத்த நேரம்.இங்கே பேச்சுவார்த்தையில் உள்ளோர் பெயர்கள் : ரொமேஷ் பண்டாரி (forign secretary) - குர்தீப் சகாதேவ் (Asst.forign secretary) - சம்பந்தன் (TULF), சிவசிதம்பரம் (TULF) ,- அமிர்தலிங்கம் (TULF) ,- உமாமகேஸ்வரன் (PLOTE), - வாசுதேவா (PLOTE), - வெற்றிச்செல்வன் (PLOTE), - கனகராஜா (PLOTE), - யோகி (LTTE), - லோரன்ஸ் திலகர் (LTTE), - பிரபாகரன் (LTTE), - ரட்ணசபாபதி (EROS),- பாலகுமார் (EROS),- - றொபர்ட் (TELO), - சிறீ சபாரட்னம் (TELO) - ? - ? - பத்மநாபா (EPRLF), - கேதீசுவரன் (EPRLF), - சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை)
1985 ல் தமிழீழ விடுதலை இயக்கத் தலைமைகளும் தமிழ் அரசியல் தலைமையும் இணைந்து டில்லியில் ரொமேஷ் பண்டாரி அவர்களை சந்தித்த ஒரு பொன்னான நினைவு இது...
பகுதி 36
இந்திய பேச்சுவார்த்தை எழுதுவதற்காக 85 ஆம் ஆண்டு நடந்த பல விடயங்களை எழுதவில்லை. இனி தொடர்கிறேன். 85 ஆம் ஆண்டு வருட ஆரம்பத்தில் செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லிக்கு என்னிடம் ரெண்டு பேரை அனுப்பி வைத்தார். அவர்கள் கேட்கும் உதவியை செய்து கொடுக்கும்படி கூறினார். அப்படி வந்தவர்கள் செயலதிபர் உமாவின் சகோதரர் முறையான நாகலிங்கம் அவர்களும், கந்தசாமி என்பவரும். கந்தசாமி எமது இயக்க வேலையாக லண்டனுக்குப் போக இருப்பதாகவும், எனக்குச் சொன்னார்கள். நானும் என்னோடு அவர்களை தங்க வைத்து டெல்லி ஏர்போர்ட்டில் லண்டனுக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் லண்டன் சீனிவாசன் போன் செய்து கூறினார், நீங்கள் அனுப்பிய கந்தசாமி என்பவரை லண்டன் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி டெல்லி அனுப்பி விட்டார்கள் என்று. நானும் நாகலிங்கமும் போய் கந்தசாமியை அழைத்து வந்தோம். அவர்கள் சென்னை போய் திரும்பவும் உடனடியாக டெல்லி வந்தார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரன் எனக்கு போன் செய்து இவர்களை யாரும் சந்திக்காதவாறு வேறு இடத்திலோ அல்லது ஹோட்டலில் தங்கவைக்கும்படி கூறினார். நானும் அண்ணா தி.மு.க பாராளுமன்றக் குழுத் தலைவர் மோகனரங்கம் எம்.பி யிடம் கேட்டு அவரின் வீட்டில் ரகசியமாக தங்க வைத்து இருந்தேன். நான் உணவு வாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். இவர்களின் நடவடிக்கை மர்மமாக இருந்ததால் சென்னையிலிருந்த கழக நிர்வாக பொறுப்பாளர் எனது நண்பர் மாதவன் அண்ணாவிடம் விசாரித்தேன். அப்போதுதான் கந்தசாமி இலங்கை பொலிஸ் அதிகாரி என்றும் இலங்கை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான தொண்டமான் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் என கூறினார். செயலதிபர் உமா இரண்டு வாரங்களின் பின்பு அவர்களை சென்னைக்கு அனுப்பச் சொன்னார். அதன் பின்பு வந்த செய்திகள் எப்ப என்று நேரகாலம் மறந்து விட்டது. எப்போ என்று அந்த நாளை தெரிந்த தோழர்கள் பதிவிட்டால் நல்லது. சென்னையில் பேசன் நகர் உள்ள பாலசிங்கத்தின் வீட்டில் வெடிகுண்டு வெடித்து பாலசிங்கம் இருந்த வீடு கொஞ்சம் சேதம் அடைந்தது. இது சம்பந்தமாக தமிழ்நாடு காவல்துறை சிலரை கந்தசாமி உட்பட கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கு இப்பவும் நடக்கிறது. பிற்காலத்தில் இது பற்றி நான் அறிந்த செய்தி, இலங்கை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி உமாமகேஸ்வரன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பாலசிங்கம் முதல் முக்கிய விடுதலைப் புலித் தலைவர்களை கொல்ல போலீஸ் அதிகாரி கந்தசாமியை அனுப்பி உதவி செய்ய கூறியதாக அறியக்கூடியதாக இருந்தது. இது சம்பந்தமாக 86 ஆம் ஆண்டு பின்தள மாநாட்டுக்கு முன்பு செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கு மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்.
85 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சந்ததியாரும் ஒருவரை அனுப்பி அவருக்குத் தேவையான உதவிகள் செய்யும்படியும், அவர் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானவர் எனக் கூறி எனது சுகம் மற்றும் எனது வேலைகளை பற்றி கேட்டு, தூர இருந்து வேலை செய்தாலும் இயக்கத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என அறிவுரை கூறினார். இதுதான் அவருடன் நான் கடைசியாக பேசியது. அவர் அனுப்பியவர் இலங்கையின் முக்கிய அட்வகேட் ருத்ரமூர்த்தி அவர்கள். கொழும்பில் சிறைப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக வாதாடியவர் என கேள்விப்பட்டேன். எல்.கணேசன் எம்பி வீட்டில் இருந்த இந்திய நண்பர்களுக்கு அவரை நன்றாக பிடித்து விட்டது. காலையில் எழும்பி குளித்து விபூதி பூசி சாமி கும்பிடுவார். சைவ சாப்பாடுதான் சாப்பிடுவார் அதுவும் தனது காசில். காலையில் அவர் டெல்லியில் புகழ் பெற்ற மனித உரிமை அமைப்புகள், வக்கீல்கள் சங்கம், தனிப்பட்ட புத்திஜீவிகள் எல்லோரையும் தொடர்பு கொண்டு அவரை சந்திக்கச் சென்றார். நான்தான் அவரை ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு அவர் குறிப்பிடும் இடங்களுக்கு கூட்டிக் கொண்டு போவேன். எல்லோரும் அவரை மிகவும் மரியாதை கொடுத்து பேசுவார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சனை, இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறுவார். சில நாட்களில் நான் அவருடன் போக முடியாவிட்டால், எனது இந்திய நண்பர் சம்பத் என்பவர் அழைத்துக்கொண்டு போவார். ஒரு மூன்று வாரத்தின் பின்பு ருத்ரமூர்த்தி அவர்கள் ஓர் உள்ளரங்க கூட்டத்தைக் கூட்டினார். அதில் கிட்டத்தட்ட 300 பேர் வரை வந்தார்கள். வந்தவர்கள் அறிவுஜீவிகள், சீனியர் பத்திரிகையாளர்கள், புகழ்பெற்ற வக்கீல்கள் எல்லாம் வந்தார்கள். அவர் தான் தயாரித்த இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமான சிறு புத்தகம் ஒன்றையும் எல்லோருக்கும் கொடுத்தார். அதோடு இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்தார் அடுத்த நாள் சென்னைக்கு புறப்பட்டு விட்டார். இப்போது அவரைப் பற்றிய தகவல் அறிய முடியவில்லை. மிக அருமையான மனிதர்.
எமது இயக்கத்துக்கு பல உதவிகள் புரிந்த புத்தளம் டாக்டர் இலியாஸ் சென்னையில் இருந்து டெல்லி வந்தார். அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி சென்னை அலுவலகத்தில் இருந்து கூறினார்கள். தேவையான வைத்திய கருவிகளை வாங்கி கொடுத்தேன். அவர் வாங்கிய முக்கிய கருவிகள் முஸ்லிம் இளைஞர்களுக்கு சுன்னத் செய்வதற்கான கருவிகள். அவர் இரண்டு முறை டெல்லி வந்து போனார். ஒவ்வொரு முறையும் ஆகக்கூடியது இரண்டு மூன்று நாள் தான் இருப்பார்.
பேச்சுவார்த்தைக்கு டெல்லி வந்தபோது வாசுதேவா என்னிடம் தனிப்பட்ட முறையில் இயக்கத்தில் சில பிரச்சினைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறினார். சந்ததியார் எமது கழகத்தை உடைக்க முயற்சி செய்வதாக கூறினார். அங்கு ஒரே குழப்பமாக இருப்பதாகக் கூறினார். பெருசு இடம் (உமா) இதைப் பற்றி கேட்க வேண்டாம் என கூறினார். உண்மையில் நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை. டெல்லி வேலைகள் உற்சாகமாகவும் பரபரப்பாகவும் இருந்தபடியால் நான் அதில் தான் கவனம் செலுத்தினேன் என்பது உண்மை. இதுவும் பாரதூரமானதாக இருந்தால் செயலதிபர் உமா என்னிடம் கூறுவார் தானே என நினைத்தேன்.
இவர்கள் பேச்சுவார்த்தைக்கு டெல்லிக்கு வரும் முன்பே சந்ததியாரை பிடித்து கொலை செய்த விடயம், டேவிட் ஐயா காவல்துறையில் புகார் செய்து அந்த விடயம் பரபரப்பாகி பத்திரிகையில் வந்த பிறகுதான் டில்லியில் எனக்கு தெரிந்தது. பத்திரிகைகளில் நமது இயக்கம் சார்பாக சந்ததியாரைபற்றி பல அவதூறான செய்திகளை செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறியிருந்தார். ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து ஓடிவிட்டார் என்ற பல கதைகள். கொலை செய்யப்பட்டார் என்றும் செய்திகளும் வந்தன. இந்திய உளவு அதிகாரிகள் ரா, IB அதிகாரிகள் இந்த விடயம் பற்றி தங்களுக்கு விபரம் வேண்டும் என்றார்கள்.நான் தொலைபேசி மூலம் செயலதிபர் உமாமகேஸ்வரனிடம் இதைப் பற்றிக் கூறி விபரம் கேட்டபோது உடனடியாக என்னை சென்னை வர சொன்னார். 85 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என நினைக்கிறேன், ரயிலில் சென்னைக்கு சென்றேன். எமது நிர்வாகப் பொறுப்பில் இருந்த மாதவன் அண்ணா வீட்டில் தங்கிக் கொண்டு, எமது செயலதிபர் உமாவை சந்தித்தேன்.
செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லியில் அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் சந்ததியார் பற்றி கூறும்போது, சந்ததியார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பயிற்சி பெறும் தோழர்களிடம் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறி, இந்தியாவுக்கு எதிராக எமது இயக்கத்தை திசைதிருப்ப பார்ப்பதாகவும், வங்கம் தந்த பாடம் மொழிப்பெயர்ப்பு புத்தகத்தை தமிழில் அச்சடித்து இயக்கத் தோழர்களுக்கும், இலங்கையிலுள்ள தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுப்புவதாகவும், இந்தியாவுக்கு எதிரான தீவிரப் பிரச்சாரம் செய்வதாகவும், அதோடு அவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் இலங்கையைச் சேர்ந்த ராதா என்ற பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றும் கூறச் சொன்னார். பத்திரிகையாளர்களிடம் கூறும் போது மட்டும் ராதா என்ற பெண்ணுடன் தலைமறைவாகி விட்டதாக கூறச் சொன்னார். இந்திய உளவு அதிகாரிகளிடம் கூறும் போது மட்டும் சந்ததியார் இந்திய எதிர்ப்பில் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்வதால் சந்ததியாருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது என்று கூறச் சொன்னார்.
உடனடியாக அன்றே என்னை டெல்லிக்கு கிளம்பச் சொன்னார். நானும் அன்றே கிளம்ப ஆயத்தம் ஆனேன். பின்பு நான் எனக்கு நெருக்கமான மாதவன் மற்றும் இரண்டு தோழர்களை சந்தித்துப் பேசியபோது அவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு, ரகசியமாக இயக்கம் முன்பு போல் இல்லை, முகாம்களில் எமது தோழர்களையே சந்தேகப்பட்டு கொலைகள் செய்வதாகவும், இதற்காக மூர்த்தி என்பவர் தலைமையில் ஒரு குரூப் செயல்படுவதாகவும் அதற்கு கந்தசாமி தலைமை தாங்குவதாக கூறி கவலைப்பட்டார்கள். யாரும் யாரையும் நம்பி கதைக்க வேண்டாம் எல்லோரையும் எல்லோரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். தாங்களும் விதியே என்று மனது உடைந்து வேலை செய்கிறோம், ஒரு சந்தோசமும் இல்லை என்றார்கள். நானும் பலவித யோசனைகளுடன் டெல்லி புறப்பட்டு விட்டேன். நான் சென்னை வந்த நேரம் சென்னையில் பெரும் புயலடித்து இருந்தது. ஆந்திராவில் ரயில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இரவு 8 மணிக்கு டெல்லி போகும் GT எக்ஸ்பிரஸ் என்ற ரயில், சுற்றுப் பாதையில் டெல்லி போகும் என்று கூறிவிட்டார்கள். 64 பேர் பயணம் செய்யும் ஒரு பெட்டியில் இரண்டு பேர்தான் இருந்தோம். அதே மாதிரிதான் மற்ற பெட்டிகளில் பயணிகள் இருந்தார்கள். 40மணி நேரத்தில் டெல்லி போகும் வழமையான ரயில், ரயில் தாமதமாக, தாமதம் மட்டும் 72 மணி நேரம், கிட்டத்தட்ட அஞ்சு நாள் பயணம். வாழ்க்கையே வெறுத்துவிட்டது. மாலை 6 மணி போல் எனது இருப்பிடத்துக்கு சென்றேன். பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் இரண்டு நாளாக தொலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது என்று கூற நான் விபரம் கூறினேன். பின்பு தொலைபேசி அடிக்க எடுத்துப் பேசினேன். சென்னை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி. அவர்களிடமும் இப்பதான் டெல்லி வந்தேன், தாமதத்திற்கான காரணத்தையும் கூறினேன். அவர்கள் செயலதிபர் உமாமகேஸ்வரன் 6 மணி விமானத்தில் டெல்லி வருவதாகவும் அவரை போய் கூட்டி வரும்படி கூறினார்கள். நான் உடனடியாக கைகளை கழுவி உடுப்புகளை மாற்றி விட்டு முதலில் போய் இருவருக்கும் சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு, எனது ஸ்கூட்டரில் ஏர்போர்ட் போய் இரவு 10 மணி போல் செயல் அதிபரை கூட்டி வந்தேன். அவரும் என்னிடம் எனது பயண விவரங்களை கேட்டு விட்டு, நீர் ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ணிவிட்டு வந்து சொல்லி இருந்தால் ஃப்லைட் டிக்கெட் போட்டு தந்திருப்பேன் என்றார்.
அடுத்த நாள் காலை இந்திய உளவுத் துறை அதிகாரியை பார்த்து பேச, ரா அதிகாரி சந்ததியாரை பற்றி செயலதிபர் உமாமகேஸ்வரன் கூறிய காரணங்களை எல்லாம் கேட்டுவிட்டு, நீங்கள் உங்கள் இயக்க பிரச்சினைகளை உங்கள் நாட்டில் போய் பார்த்திருக்க வேண்டும். உங்கள் இயக்கத்தை பற்றி வரும் ரிப்போர்ட்டுகள் நன்றாக இல்லை என முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார். பின்பு ஐ.பி அதிகாரிகள் சந்தித்து போது அவர்கள் மிகக் கடுமையாக கண்டித்தார்கள். தமிழ்நாட்டில் கொலை செய்ததை மரண தண்டனை கொடுத்ததாக பெருமையாக கூறுகிறீர்கள். இந்திய சட்ட ஒழுங்கிற்கு இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். சந்ததியார் இந்தியாவுக்கு எதிராக நின்றால் அவரை இயக்கத்தை விட்டு விலக்கி இருக்கலாம். இப்படி எத்தனை பேரை கொலை செய்யப் போகிறீர்கள். தமிழ்நாடு பொலிஸார் நெருக்கமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு நெருக்கடி கொடுத்தால் இந்த கொலை போன்ற விஷயங்களுக்கு இந்திய அரசு உங்களுக்கு உதவிக்கு வராது என கடுமையாக கூறிவிட்டார்கள்.
அவர்கள் போன பின்பு கொஞ்சம் யோசித்த எமது செயலதிபர் உமாமகேஸ்வரன், எல்லோரையும் கூட்டிக்கொண்டு இலங்கைக்குப் போக வேண்டியதுதான். இவர்கள் யார் எங்கள் இயக்க விடயங்களில் தலையிட இவர்களுக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
அடுத்த நாள் மீண்டும் ஒரு குழப்ப முயற்சியில் ஈடுபட்டோம்.தொடரும்...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 10
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode