பகுதி 29
(நான் எனது முகநூலில் எனது அனுபவங்களை எழுதுவது வெளிநாட்டில் இருக்கும் பல தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் அதாவது இயக்கத்தை விட்டு விலகியவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் நான் எனது அனுபவங்கள் எழுதுவது தவறு என்றும் எழுதக் கூடாது என்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் யாரையும் எனது முகநூலை பார்க்க படிக்க சொல்லவில்லை. விருப்பமில்லாத நபர்கள் என்னை தடை செய்து விட்டு போகட்டும். நான் எனது அனுபவங்கள் பதிவாக இருக்கட்டும் என்று மட்டும்தான் போடுகிறேன் ஒழிய. யாரும் லைக் போட வேண்டும் என்ற கருத்து சொல்ல வேண்டும் என்றோ போடவில்லை என்பதை திரும்பவும் தெரிவித்துக் கொள்கிறேன்).
எனது 27வது பதிவில் ஆலடி அருணா எம்.பியின் வீடு பற்றி எழுதி இருந்தேன். அதில் நண்பர் பரதன் அந்த வீட்டில் இருந்த கேரளா குடும்பத்தில் இருந்த பெண்களை மூன்று பெண் குட்டிகள் பற்றி குறிப்பிடவில்லை என கவலைப்பட்டு இருந்தார். பின்பு அந்த பின்னூட்டத்தை எடுத்து விட்டார். இதைப்பற்றி இதில் குறிப்பிடுகிறேன். ஆலடி அருணா MP எனக்கு வீடு கொடுக்கும் போது, கூறினார் பக்கத்தில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், சுற்றியிருக்கும் வீடுகள் எல்லாம் இந்திய எம்.பி மார்களின் வீடுகள் அங்கும் பெண் பிள்ளைகள் இருப்பார்கள். உங்களால் எந்த ஒரு கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது. எனக்கு மட்டுமல்ல, ஈழப் போராளிகளுக்கும் அது கெட்ட பெயராக அமைந்து விடும். ஆனால் உங்களால் எந்த ஒரு கெட்ட பேரும் வராது என நம்புகிறேன். சிறு கெட்ட பேர் வந்தாலும் துரத்தி விடுவேன் என கூறினார்.
எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் அடிக்கடி டெல்லி வந்து போவார். அவர் எப்போதும் என்னோடு ஆலடி அருணா வீட்டில்தான் தங்குவார். மாலை நேரங்களில் பக்கத்தில் வாடகைக்கு இருக்கும் கேரளா குடும்பத்தில் பெண்கள் கல்லூரி விட்டு வந்து பின்பக்கம் பேட்மின்டன் விளையாடுவார்கள். எங்கள் செயலதிபர் உமாமகேஸ்வரனும் அவர்களோடு போய் விளையாட முயற்சி செய்வார். அவர்கள் ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் போய் விடுவார்கள். குளிர்காலத்தில் வெயில் பார்க்க வெளியில் வந்து கதிரை போட்டு இருப்பார்கள். எமது செயலதிபர் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கதிரையும் எடுத்துப் போட்டு வெளியில் போய் இருப்பார். எனக்குத் ரொம்ப தர்மசங்கடமாக இருக்கும். பலமுறை ஆலடி அருணா எம்.பி கூறிய வார்த்தைகளே அவருக்கு கூறி இருக்கிறேன். என்னை அலட்சியமாக பார்ப்பார். இந்த செய்திகளை எழுத விரும்பவில்லை. ஆனால் பரதன் தனது பின்னூட்டம் மூலம் எழுத வைத்துவிட்டார்.
ஷெர்லி கந்தப்பா ஜெர்மன் மனைவி மோனிகா உடன் வளர்ப்பு பிள்ளைகளுடனும் டெல்லி வந்து ஜெர்மனி போனார்கள். டெல்லியில் இருக்கும் போது இருவரும் சில வெளிநாட்டு தூதரகங்களை சந்தித்தோம். எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இலங்கை அரசின் கைகளில் விழுந்து குறிப்பாக உமாமகேஸ்வரன் அத்துலத் முதலியின் கைகளில் சரணடைந்து விடுதலையையும் எமது இயக்கத்தையும் அழித்ததற்கு முழு காரணமும் இந்த ஷெர்லி கந்தப்பா தான் என முக்கியமான தோழர்களுக்கு தெரியும். இது பற்றி பின்பு விவரமாக எழுதுகிறேன்.
இந்திரா காந்தி இறந்த பின்பு ராஜாநித்யன் டெல்லி வந்து இருவரும் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள், வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து எமது பிரச்சினைகளை விளக்கினோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் திருகோணமலை தளபதி மறைந்த ஜெயச்சந்திரன், விடுதலைப் புலிகளின் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் சார்லஸ் அன்டனி ஆகியோரின் அரசியல் குரு இடதுசாரி சிந்தனை உள்ள பயஸ் மாஸ்டர் லெசோத்தோ நாட்டில் இருந்து இந்தியா வந்து செயலதிபர் உமாமகேஸ்வரன், சந்ததியாரை சந்திக்க, சந்ததியார் அவரை டெல்லிக்கு அனுப்பி பயஸ் மாஸ்டரின் தொடர்புகளை சந்திக்கச் சொன்னார். அக் காலகட்டத்தில் பயஸ் மாஸ்டர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கத்தின் ரகசிய வேலைகளை செய்து வந்தார் என அறிந்தேன். அவரோடு போய் ANC ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கம், சுவப்போ நபிபியா விடுதலை இயக்கம் சந்தித்துப் பேசினோம். இரண்டு விடுதலை இயக்கங்களும் எங்களோடு மிக நன்றாக தொடர்பில் இருந்தார்கள். ANC இந்திய பிரதிநிதி திரு முல்லா மிக அருமையானவர். எங்களுக்கு நல்ல புத்திமதிகளை கூறுவார். என்னோடு தங்கியிருந்த சைமன் என்ற தோழருக்கு அவரை மிகவும் பிடிக்கும். பயஸ் மாஸ்டர் இரண்டு தரம் இந்தியா வந்தார். சந்ததியாரின் கொலையின் பின்பு மனம் வெறுத்து எங்கள் இயக்கத்தோடு இருந்த தொடர்பை விட்டு விட்டார். என்னோடு தனிப்பட்ட முறையில் இன்று வரையில் தொடர்பில் இருக்கிறார்.
84 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய லோக்சபா பொதுத்தேர்தல் நடந்தது. இந்திரா காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டிலிருந்து புதிய எம்.பிக்கள் வந்தார்கள். இதேநேரம் செயலதிபர் உமாமகேசுவரன் மூன்று, நான்கு வருடங்களின் பின் தளத்துக்கு அதாவது இலங்கைக்குச் சென்றார். அவரது இந்தப் பயணம் எமது வளர்ச்சியை விட, இயக்க அழிவுக்கு வழி கோலியது என்பதுதான் உண்மை. சுழிபுரத்தில் ஆறு விடுதலைப்புலி இயக்க சிறுவர்களை கொலைசெய்து, கடற்கரையில் புதைத்து விட்டார்கள் என நினைக்கிறேன். அந்த நேரம் செயலதிபர் உமாமகேஸ்வரன் சுழிபுரத்தில் அல்லது வட்டுக்கோட்டையில் இருந்திருக்கிறார். அவர் அதைத் தடுத்து இருக்கலாம். அதைவிட மோசம் அதை மறைக்க நாங்கள் விட்ட அறிக்கைகள். எனக்கு டெல்லியில் கூற, அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை, விடுதலைப்புலிகளின் சூழ்ச்சி என்று பிரச்சாரம் செய்ய அறிக்கை அனுப்பினார்கள். நானும் அதை நம்பி பிரச்சாரம் செய்து பின்பு உண்மை வெளிவர அசிங்கப்பட்டது உண்மை.
செயலதிபர் இலங்கை பயணம் பத்திரிக்கைகளில் வந்து இந்திய அதிகாரிகள் குறிப்பாக ஜி.பார்த்தசாரதி என்னை கூப்பிட்டு விசாரித்தார். செயலதிபர் உமாமகேஸ்வரனை டெல்லி வரச் சொன்னார்.
அவர் உமாமகேஸ்வரன் இடம் ரொம்பவே வருத்தப்பட்டார். « இந்தியாவிலும் இந்திராகாந்தி இல்லாத நேரம் ஒரு குழப்பநிலை இருக்கும்போது நீங்கள் அங்கு போய் இருந்தது தவறு. ஏதாவது நடந்திருந்தால் அல்லது உங்களை இலங்கை அரசு கைது செய்து இருந்தால் இங்கே இருக்கும் ஆயிரக்கணக்கான இயக்கத் தோழர்களின் நிலைமை என்ன? இந்தியாவுக்கும் கெட்ட பெயர் தானே வரும். இந்திய தேர்தல் முடிந்த பின்பு எங்களிடம் சொல்லிவிட்டு நீங்கள் போயிருக்கலாம். அங்கு போயும் கொலை பிரச்சனை என்று கேள்விப்பட்டோம். அது உங்கள் நாட்டில் இருந்த பிரச்சினை என்பதால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் இந்திய பத்திரிகைகளில் இந்த செய்தி பெரிதாக அடிபட்டால் மக்கள் மத்தியில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு மதிப்பு இருக்காது » என கூறினார். செயலதிபரும் இனிமேல் இப்படியான தவறு நடக்காது என கூறி விட்டு வெளியில் வந்து அந்த ஆள் கிடக்கிறார் என்று சொன்னார்.
டெல்லியில் நமது வேலைகள் வழமைபோல் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தன. வாழப்பாடி ராமமூர்த்தி எம்.பி அவர்கள் டெல்லியில் புகழ்பெற்ற பேராசிரியர்கள், கணவன் மனைவி சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தார். இவர்கள் டெல்லி யுனிவர்சிட்டியில் தமிழ் பேராசிரியராக இருந்தார்கள். அவர்கள் டெல்லியில் பலதரப்பட்ட தமிழ் மாணவர்கள், மத்திய அரசு தமிழ் அதிகாரிகள், தமிழ் அறிஞர்கள் போன்றவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி விட்டார்கள். டெல்லி ஐ.ஐடி, ஜே.என்.யூ யூனிவர்சிட்டி தமிழ் மாணவர்கள், டெல்லி யுனிவர்சிட்டி தமிழ் மாணவர்கள் எமது ஈழ விடுதலை போராட்டத்துக்கு மிக ஆதரவாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விடுதலை இயக்கத்தையும் ஆதரிக்கவில்லை. எங்களிடம் இலங்கை அரசின் வன்முறை படங்களை வாங்கி பலமுறை யுனிவர்சிட்டி ஐ.ஐ.டி இடங்களில் கண்காட்சி வைத்தார்கள். பணம் சேகரித்து எங்களிடம் கொடுத்தார்கள். அடுத்தடுத்த வருடங்களில் எல்லா விடுதலை இயக்கங்களின் உண்மை முகங்கள் தெரிய தொடங்கின. கொலை, போதைமருந்து கடத்தல், சகோதர படுகொலை, தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பது போன்ற எல்லா செய்திகளும் அந்த மாணவர்கள் ஊருக்கு போய்வரும் போது அறிந்து மற்றவர்களிடமும் கூறி எமது இயக்கங்களின் ஈழ விடுதலையை இது ஒரு விடுதலைப் போராட்டமே இல்லை என்று நேரடியாக எங்களிடம் கூறினார்கள். எங்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டார்கள். ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டினர்.
ராஜீவ் காந்தி புதிய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கும் படலமும் அதிகாரிகளை சந்திக்கும் நானும் சித்தார்த்தனும் தீவிரமாக இறங்கினோம்.
கீழே உள்ள படங்கள் கலாநிதி சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், மற்றும் ஷெர்லி கந்தப்பா.
பகுதி 30
85 ஆம் ஆண்டு பலவித அனுபவங்களை தந்த ஆண்டு. எமது இயக்கத்தின் முழுநேர விடுதலைப் போராளிகளாக வேலை செய்ய, லண்டனில் இருந்து அங்கு வேலை செய்த தோழர்கள் வசந்தன், பரதன் போன்றவர்கள் டெல்லி வழியாக சென்னை வந்தார்கள். இதில் செயலதிபர் உமாமகேஸ்வரனிடம் கேட்டு பரதனே இரண்டு மாதம் கிட்ட டெல்லியில் எனக்கு உதவியாக வேலை செய்ய கேட்க பரதனை திரும்ப டெல்லி அனுப்பி வைத்தார். டெல்லி வந்த பரதனும் பெயர் மாறி சாரங்கன் என்ற இயக்கப் பேரோடு, எங்கள் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அதோடு எங்கள் தொடர்புகளில் இருந்த வெளிநாட்டு தூதரக அதிகாரிகளையும். பத்திரிகையாளர்களையும் , லண்டன் சித்தார்த்தன் உடன் சேர்ந்தும், என்னுடன் சேர்ந்தும் சந்தித்தார். இது பற்றிய டெல்லி கிளைக்கு பரதன் கைப்பட எழுதிகொடுத்த சில குறிப்புகள். என்னிடம் இன்னும் உள்ளன. அந்த நேரம் சீனிவாசனின் ஆயுதக் கொள்வனவு சம்பந்தமாக ஹொங்கொங் போக சென்னையிலிருந்து ரமேஷ் அல்லது திருஞானம் டெல்லி வந்திருந்தார்.
பரதன் லண்டனில் இருந்து டெல்லி வரும்போது அவரை வரவேற்று கூட்டி வர நானும் ரமேஷும் தான் போயிருந்தோம். ஜெர்மனியிலிருந்து ஒன்றுபட்ட புலிகளின் ஜெர்மன் அமைப்பாளர் முன்பு இருந்தவர், தற்போது எமது இயக்கத்துக்கு ஜெர்மனி நாட்டுக்கு பொறுப்பாக இருந்த பரமதேவா டெல்லி வந்து சென்னை போனார். நாங்கள் இருந்த எல்.கணேசன் எம்.பி வீட்டுக்கு, கீழ் வீட்டில் இருந்த நமது நெருங்கிய நண்பர் சம்பத் வேங்கா எம்.பியின் மகன் தனது வீட்டில் அவரை தங்க வைத்துக்கொண்டார். venga எம்.பி சென்னை போகும்போது இலவசமாக ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பரமதேவா அவர்களையும் கூட்டிக்கொண்டு போனார். venga mp அந்த காலத்தில் அறிஞர் அண்ணாவுக்கு நெருங்கியவர். அண்ணாவுக்குப் பின் கட்சியில் ஒதுக்கப்பட்டு விட்டார். பின்பு கலைஞர் திமுக ராஜ்யசபா எம்.பி ஆக்கினார். 1978 முதல் 1984 ஏப்ரல் வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தார். டெல்லியில் எமக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்த நண்பர்களை பற்றி தனிப் பதிவுகளாக போட உள்ளேன். நன்றி மறப்பது நன்றன்று.
பரமதேவா வரும்போது ஒன்றுபட்ட விடுதலைப் புலிகள் காலத்தில் பிரபாகரன், « கரிகாலன் » என்ற பெயரில் ஜெர்மன் கிளைக்கு எழுதிய பல கடிதங்களை கொண்டு வந்திருந்தார். அதில் உமா மகேஸ்வரனை பற்றியும் அவரின் தவறான நடவடிக்கைகளை பற்றியும் எழுதியிருந்தார். அதோடு லண்டன் கிருஷ்ணன் நிதிமோசடி செய்வதாகவும் விடுதலைப்புலி அமைப்புக்கு சேகரித்த சொத்துக்கள் அவர் தனிப்பட்ட முறையில் பாவிப்பதாகவும் பல கடிதங்கள் இருந்தன.
சித்தார்த்தனும் லண்டனில் இருந்து டெல்லி வந்தார். நானும் சித்தார்த்தனும் காலத்தை விரயம் செய்யாமல் புதிய எம்.பிகளை முடிந்தளவு சந்திக்க தொடங்கினோம். தி.மு.கவின் டி.ஆர். பாலு எம்.பி, ஆந்திரா தெலுங்கு தேச கட்சி என்.டி ராமராவ் இன் நெருங்கிய நண்பர் உபேந்திரா எம்.பி, அ.தி.மு.க ஜக்கையன் எம்.பி, கோவை காங்கிரஸின் பி.குப்புசாமி எம்.பி மற்றும் பலரை சந்தித்தோம். பெயர்கள் நினைவில் இல்லை. நினைவில் வரும் போது எழுதுவேன். வீடு ஒதுக்கப்படும் வரை தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த குறிப்பாக சிதம்பரம் எம்.பி சந்தித்து எமது போராட்டம் எமது வரலாறு எல்லாவற்றையும் எங்களுக்கு சாதகமான முறையில் அவரிடம் கூறுவோம். அவர் குறிப்புகள் எடுத்துக் கொள்வார். அடுத்த நாள் வரச் சொல்லுவார். அவரிடம் நாங்கள் மறைத்த விஷயங்களை தகுந்த புள்ளி விபரங்களுடன் எங்களிடம் கூறி எங்களை வாயடைக்கச் செய்ய குறிப்பாக மலையகத் இந்திய தமிழருக்கு வடக்குத் தமிழ் தலைவர்கள் செய்த துரோகங்கள் அவமானங்கள் பற்றியெல்லாம் பேசுவார். பத்து பதினைந்து நாள் தொடர்ந்து சந்தித்திருப்போம். அவர் பாராளுமன்ற நூல்நிலையத்தில் போய் இலங்கை பற்றிய செய்திகள் ஆவணங்களை படித்து எங்களை விட சிறப்பாக கூறுவர். எமது இயக்க வரலாறு அதுவரை வந்த இயக்கங்களின் மறுபக்கங்கள் சிதம்பரத்துக்கு அத்துபடி. அன்றிலிருந்து நானும் சித்தார்த்தனும் முடிவு பண்ணினோம். எங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் எமக்கு மட்டும் சாதகமான செய்திகளை கூறி பிரச்சாரம் செய்யக்கூடாது என்று மட்டும்.
எல்.கணேசன் எம்.பி வீட்டில் வந்து தங்கிசெல்லும் பல தமிழ்நாட்டு தொழிற்சங்கவாதிகள் என்னை புதிதாக வந்துள்ள காங்கிரஸ் எம்.பி ரங்கராஜன் குமாரமங்கலத்தை சந்தித்து நட்பை வளர்த்துக் கொள்ள சொன்னார்கள். நானும் அவருடன் சென்னையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது தான் வரும்போது சந்திப்பதாகவும், தனது மனைவி மாமியார் வீடு டெல்லியில் இருப்பதாக கூறி விலாசமும் கொடுத்தார். அவரின் மனைவி ஒரு பஞ்சாபி. ரங்கராஜன் குமாரமங்களத்தை டெல்லியில் சந்தித்தேன். அவருக்கும் சிறுவயது தான், வித்தியாசமான கலகலப்பான அரசியல்வாதி. தோளில் கை போட்டு தான் பேசுவார். இவரின் அப்பா மோகன் குமாரமங்கலம் இந்திரா காந்தியுடன் லண்டனில் படித்தவர். இடதுசாரி சிந்தனை உள்ளவர். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை பிரிக்க மத்திய மந்திரியாக இருந்த இவரைத்தான் இந்திராகாந்தி பயன்படுத்தியதாக கூறுவார்கள். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அம்மா வங்காளி. தீவிர இடதுசாரி ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பெரியப்பா இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தவர். ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று ரங்கராஜன் குமாரமங்கலத்தின் கூற முடியாது. அவர் எல்லோரிடமும் மிக எளிமையாகத் தான் பழகுவார். பிற்காலத்தில் டெல்லியில் வெளிநாட்டுக்குப் போக வந்து கள்ள பாஸ்போர்ட்கள், கள்ள விசா காரணமாக பல இலங்கைத் தமிழ் பெண்கள் குழந்தைகள் ஆண்களை ஜெயிலிலிருந்து பிணையில் வெளியில் எடுக்க இவரது பதவியும் இவரின் மனைவி கிட்டி குமாரமங்கலம் ஒரு அட்வகேட் எனக்கு மிகவும் துணையாக இருந்தார்கள். திகார் ஜெயிலில் இருக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களை விடுவிக்கும்படி நான் கேட்டுக் கொண்டதன்படி லோக்சபாவில் பாராளுமன்றத்தில் பேசினார். அவர் பேசிய குறிப்புகளை கீழே இணைக்கிறேன் இன்னும் தொடர்கிறேன். ரங்கராஜன் குமாரமங்கலம் ராஜீவ் காந்தியின் சிறுவயதிலிருந்து குடும்ப நண்பராக இருந்தவர்கள்.
பகுதி 31
ரங்கராஜன் குமாரமங்கலத்தின் ஒதுக்கப்பட்ட வீடு நாங்கள் இருந்த L.கணேசன் MP இன் நேர் எதிர் வீடு. எனக்கும் அவருக்குமான தொடர்பு மிக நெருக்கமாக இருந்தது. அவர் வீட்டில் இருக்கும் போது இருவரும் எமது பிரச்சினைகள் பற்றி விபரமாக கேட்டு அறிந்துகொள்வார். அவர் ஒரு தொழிற்சங்கவாதி என்றபடியால் எந்த நேரமும் அவரைச் சுற்றி ஒரு பெரிய சகல இன தொழிற்சங்கவாதிகளும் இருப்பார்கள். ஈழ விடுதலை இயக்கங்களில் எனக்கு மட்டும் தான் அவரை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. எமது விடுதலைப் போராட்டத்திற்கு எமது இயக்கம் அவரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குறை எனக்கு உண்டு. அவர் புதிய வெளிநாட்டு செயலாளரை சந்திக்க வேண்டுமானால் அவரை அறிமுகப் படுத்துகிறேன் என்றார்.
நானும் செயலதிபர் உமாவிடம் இதுபற்றி தொலைபேசி மூலம் கூறியபோது நல்ல விடயம் விரைவில் தான் டெல்லி வருவதாக கூறினார்.
இன்னொரு புதிய எம்பி அண்ணா திமுகவை சேர்ந்தவர், பெரியகுளம் தொகுதி திரு கம்பம் செல்வேந்திரன். அவர் புளட் பிரதிநிதி டெல்லியில் இருப்பதாக கேள்விப்பட்டு என்னை சந்திக்க விரும்பினார். அவரும் நாங்கள் இருந்த நோர்த் அவென்யூ தான் வீடு. அவரைப் போய் பார்த்தபோது அப்போது கிட்டத்தட்ட அவருக்கும் என் வயது தான் இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு ரொம்ப மதிப்பு கொடுத்து வரவேற்று பேசினார். தேனி முகாம் பற்றியும், பல தோழர்களின் பெயர்களை கூறியும் விசாரித்தார். உண்மையில் அவர் கூறிய பெயர்களில் உள்ள தோழர்களே எனக்கு தெரியாது. நான் உங்களுக்கு எப்படி அவர்களை எல்லாம் தெரியும் என்றேன். அவர் கூறினார் தான் முழுநேரமும் தேனி முகாமில்தான் இருந்திருப்பதாக, எல்லாத் தேனி முகாம் தோழர்களும் நெருக்கமானவர்கள் என்று கூறினார். எனக்கு பெரிய ஆச்சரியம். செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வந்தபோது கம்பம் செல்வேந்திரன் எம்.பி வீட்டுக்கு அழைத்து போனேன். செயலதிபர் உமாவைப் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். அவர் எம்.பியாக இருந்தும் செயலதிபர் உமா முன்னால் உட்காரவில்லை. கைகளை கட்டியபடியே பேசினார். நான்தான் அவரைப் பற்றிய விபரங்களையும் தேனி முகாமில் அவர் நெருக்கம் என்றும் செயலதிபர் உமாவிடம் விளக்கம் கூறினேன். செல்வேந்திரன் எம்.பியை ரொம்ப நேரம் சங்கடப்படுத்தாமல் செயலதிபர் விடைபெற்றார்.
ரங்கராஜன் குமாரமங்கலம் எம்.பி தான் கூறியபடி இந்திய வெளிவிவகார செயலாளர் ரமேஷ் பண்டாரி அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். நானும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் போய் சவுத் பிளாக் எனப்படும் புகழ்பெற்ற இந்திய அரச கட்டிடங்களில் இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் முதல் முறையாக செயலாளர் ரமேஷ் பண்டாரியை சந்தித்தோம். அவர் கூடவே துணைச் செயலாளர் இருந்தார். அவரை நான் முன்பே பலமுறை சந்தித்திருக்கிறேன். ரொமேஷ் பண்டாரி சந்தித்த முதல் போராளித் தலைவர் செயலதிபர் உமாமகேஸ்வரன் தான். அவரிடம் பேசும்போது நாங்கள் என்றும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்போம். இலங்கை அரசை பணிய வைக்க இந்தியா எங்கள் அமைப்புக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கூடுதலாக தரவேண்டும், என்றும் மற்ற எல்லா இயக்கங்களும் இந்தியாவுக்கு விரோதமாக செயல்படுவதாகவும் போட்டுக் கொடுத்தோம். நாங்கள் கூறியவாறே விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, மற்றும் ஈரோஸ் தனித் தனியாக சந்திக்கும் போது இதே மாதிரிதான் போட்டுக் கொடுத்தார்கள். ஈரோஸ் மட்டும் கூடுதலாக போட்டுக் கொடுத்தார்கள். இது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்பீர்கள். அங்கு வேலை செய்யும் தமிழ் அதிகாரிகள், அவர்கள் மட்டுமல்ல முக்கியமான அமைச்சுக்களில் வேலை செய்த தமிழர்கள் கூட என்னோடும் மற்ற இந்தியன் நண்பர்களோடும் நெருக்கமான நட்பை பேணியவர்கள் அதோடு அவர்கள் எம்.பி மாரின், வீடுகளில், குவாட்டஸ் இல் வாடகைக்கு இருப்பவர்கள். அவர்கள் மூலம் இந்த செய்திகள் எங்களுக்கு வரும். அவர்கள் என்னிடம் என்னப்பா உங்க தலைவர்மார், ஒருத்தர ஒருத்தர் குறை சொல்லியே இந்தியாவிடம் உதவி கேட்கிறார்கள். நல்லா விளங்கிடும் உங்க விடுதலைப் போராட்டம் எனக் கூறுவார்கள். நான் டெல்லியில் இருந்த இடம் அப்படி எல்லா செய்திகளும் அறியக்கூடியதாக இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப், காங்கிரஸின் எம்.பி இரா.அன்பரசு வீட்டில் தங்கியிருந்தார்கள். அங்கு அவர்கள் அரசியல் வேலை செய்ததை விட, எம்.பி மூலம் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலை செய்ததாக அறிந்தேன். அதோடு கூட்டாக தொழில் செய்வதாகவும் செய்திகள் வந்தன. ஈரோஸ் நேரு என்பவர் வெளி இடத்தில் தங்கியிருந்தார். அவரின் வேலைகள் எல்லா இடங்களிலும் போய் மற்ற இயக்கங்களையும் குறை சொல்லுவது மட்டுமே. நாங்கள் எங்கள் அறிக்கைகள் பிரசுரங்கள் மூலம் மற்றவர்களை விட நாங்க சிறந்தவர்கள் என்று மறைமுகமாக அறிவிப்போம். இந்திய அரசு அதிகாரிகளிடம் மற்ற இயக்கங்களைப் பற்றி மோசமாக அதாவது எங்களைத் தவிர மற்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்று போட்டு கொடுப்போம் இதைத்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை நாங்களும் மற்ற இயக்கங்களும் செய்த வேலை. ஆனால் வெளியில் இந்திய எதிர்ப்பாளர்கள் என்றும் காட்டிக் கொள்வோம். விடுதலைப் புலிகள் உட்பட.
இதே ஆண்டு லண்டன் சீனிவாசன் மூலம் ஹாங்காங், ஆயுதங்கள் வாங்கப்பட்டு சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு ஆயுதங்கள் கன்டெய்னர் மூலம் வந்தன. அந்த ஆயுதங்கள் எங்கள் தவறால் சுங்கத்துறையால் பிடிபட்டன. ஆனால் செயலதிபர் உமாமகேஸ்வரன் தனது தவறை மறைத்து முகாம் தோழர்களிடம் தனக்கு எதிராக இந்தியா வேலை செய்வதாகவும் அந்த ஆயுதங்களை இந்திய ரா உளவுத்துறை பிடித்துவிட்டதாகவும் கதை சொன்னார். பின்தள மாநாட்டில் தனது தவறுக்காக அதற்காக மன்னிப்பும் கேட்டார். இது சம்பந்தமாக இன்றும் உண்மை அறியாமல் தங்களுக்கு தோன்றியபடி பதிவுகளை விட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவை இத்துடன் இணைக்கிறேன்.
1984 ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயுதம் இறக்குமதி செய்த விடயம் சம்பந்தமாக பலவித வதந்திகள் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஏன் உமாமகேஸ்வரன் கூட தான் செய்த தவறு தெரியக்கூடாது என்று 86ஆம் ஆண்டு இயக்கத் தோழர்கள் இடம் உண்மையை மறைத்து இந்திய அரசாங்கம் தான் ஆயுதங்களை பிடித்தது என்று பொய் கூறினார். பின்பு பின்தள மாநாட்டின்போது மன்னிப்பு கேட்டார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளை உறுப்பினர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த கதிரவேற்பிள்ளை சீனிவாசன் இயக்கத்திற்கு ஆயுதம் வாங்க 1984 ஆண்டு முயற்சிகள் செய்தார். அவருக்கு உதவி செய்ய மிக ரகசியமாக டெல்லியில் நானும், சென்னையில் ரமேஷ் என்கிற நிலா நேசம் என்பவரும் (தற்போது கனடாவில் இருக்கிறார்) இந்த ஆயுதம் சம்பந்தமாக உமாமகேஸ்வரனுக்கு நேரடி தொடர்பாளராக நியமிக்கப்பட்டோம். சீனிவாசன் ஹொங்கொங் போய் ஏற்பாடுகள் செய்ய, சென்னையில் இருந்து டெல்லி வழியாக ரமேஷ் ஹொங்கொங் அனுப்பப்பட்டார். சில வேலைகளை முடித்துவிட்டு ரமேஷ் ஒரு வாரத்தில் திரும்பி விட்டார்.
சீனிவாசனுக்கு ஹாங்காங்கில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தனது 10 வயது மகளை பணத்தை எடுத்து வர ஏற்பாடு செய்தார். இது தெரிந்து அங்கிருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தற்போதைய தலைவர் சித்தார்த்தன், சீனிவாசனை கடுமையாக கண்டித்து வேறு வழியில் பணத்தை அனுப்பியுள்ளார். சீனாவிலிருந்து வந்த ஆயுதங்களை இந்தியாவில் ஆந்திராவுக்கு போகும் பழைய பேப்பர்கள் என பதிவு செய்து அனுப்பி அந்தக் அந்தக் கொள்கலனை ஏற்றி வந்த கப்பல் சிங்கப்பூரிலிருந்து அந்த கொள்கலன் சென்னைக்குப் போகும் கப்பலில் மாற்றப்படவேண்டும். சீனிவாசன் சிங்கப்பூரில் வேலை செய்த தனக்குத் தெரிந்த பல இளைஞர்களை அழைத்து சீன கொள்கலனில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய சிங்கப்பூர் கொள்கலனில் மாற்றியபோது ஆயுதங்களோடு இருந்த சீனமொழி பத்திரிகைகளை அகற்றிவிட்டு சிங்கப்பூரில் இருந்த ஆங்கில பழைய பத்திரிகைகளை வாங்கி அடுக்கி ஆயுதங்களை மறைத்துள்ளார்.
தலைவர் உமாமகேஸ்வரனுக்கு எல்லா விபரங்களும் அனுப்பப்பட்டு உமாமகேஸ்வரனும் சென்னையில் அந்தக் கொள்கலனை வெளியில் எடுக்க ஆந்திராவைச் சேர்ந்த சென்னையில் தொழில்செய்யும் அண்ணாநகரில் இருந்த கன்டைனர் கிளியரன்ஸ் ஏஜென்ட் இடம் பத்தாயிரம் ரூபா கொடுத்து இந்த பழைய பேப்பர்கள் வருவதாகவும் ஆந்திராவில் உள்ள பேப்பர் மில்லில் செல்வதாகவும் கூறி ஏற்பாடு செய்துள்ளார். ஏஜென்ட் கஷ்டம் அதிகாரிகளுக்கு எல்லாம் காசு கொடுத்து திறக்காமல் வெளியில் கொண்டு வரக் கூடியவர். அந்த ஏஜன்ட் முதலில் போய் சாதாரணமாக கொள்கலனை திறந்து பார்த்துள்ளார். மறைவாக இருந்த ஆயுதங்களை பார்த்து விட்டார். பயந்துபோய் கொள்கலனை மூடி விட்டு வந்தவர். உமாவிடம் சண்டை பிடித்துள்ளார். கூடுதல் காசு கேட்டுள்ளார்.
அந்த ஏஜென்டை சரிகட்ட உமாமகேஸ்வரன் தனது சகோதரியின் கணவர் ராஜ் துரையையும், வாமதேவனையும் அனுப்பியுள்ளார். இதைக் கேள்விப்பட்டு சென்னையில் இருந்த சித்தார்த்தன் அவர்களை திருப்பி அழைத்துவிட்டு அந்தப் பொறுப்பை பரந்தன் ராஜன் இடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். ராஜன் காசு கூட குறைய பேசி கச்சிதமாக கண்டனரை எடுத்து விடுவார் என சித்தார்த்தன் கூறி இருக்கிறார். ஆனால் உமாமகேஸ்வரன் ஒரு காசு கூட மேலதிகமாக செலவழிக்காமல் வாமதேவனும், ராஜதுரையும் எடுப்பார்கள் என நம்பிக்கையாக கூறியுள்ளார். ஏஜென்ட் இடம் போன ராஜதுரையும் வாமனும் முதலில் ஏஜென்ட்டை மிரட்டியுள்ளார்கள். ஏஜென்ட் கூடுதல் பணத்துக்கு பிடிவாதமாக இருந்துள்ளார். உடன் வாமன் கைத்துப்பாக்கியை எடுத்து ஏஜன்ட் இன் வாயில் வைத்து ரெண்டு நாளில் கண்டனர் எடுத்துத் தரவேண்டும், இல்லாவிட்டால் சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
ஏஜென்ட் பயப்படவில்லை. உடன் சுங்க இலாகா அதிகாரிகள் இடம் கன்டெய்னரில் ஆயுதங்கள் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஏஜென்ட் உமாமகேஸ்வரனை காட்டிக் கொடுக்கவில்லை. அக் காலக்கட்டங்களில் விடுதலை இயக்கங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த பொலீஸ் ஐ.ஜி மோகனதாசுக்கு அறிவித்துள்ளார்கள். கஸ்டம்ஸ் கூறியது ஆந்திராவிலுள்ள நக்சலைட்டுகளுக்கு சீனாவில் இருந்து ஆயுதம் வந்துள்ளதாக. ஆனால் மோகனதாஸ் மோப்பம் பிடித்து ஆயுதம் வந்துள்ளதாக பத்திரிகைகளுக்கு செய்தியும் கொடுத்து உமாமகேஸ்வரனை நெருங்கிய சமயம், உமா உடனடியாக சென்னையிலிருந்து சித்தார்த்தன் டெல்லிக்கு அனுப்பினார். நானும் சித்தார்த்தனும் போய் ஜி.பார்த்தசாரதி அவர்களை பார்த்தோம். அவர் எங்களை ரொம்ப திட்டினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. உமா ஏன் இப்படி முட்டாளாக இருக்கிறார். மிக ரகசியமாக முடிக்க வேண்டிய வேலையை ஏஜென்ட் துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டுமா? அதோடு மோகனதாஸ் இயக்கங்களுக்கு எதிராக கடுமையாக இருப்பதாகவும் எம்.ஜி.ஆரால் கூட மோகனதாசை சிலவேளை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாகவும் கூறினார்.
இந்த விபரங்கள் பத்திரிகையில் வந்தபடியால் இந்த ஆயுதங்களை எடுக்க மத்திய அரசால் உதவி செய்ய முடியாது என்று கூறினார். காரணம் பத்திரிகைகளும் இலங்கை உட்பட இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இந்தியாவின் மேல் எதிரான பிரச்சாரங்கள் செய்யக்கூடும். அதோடு எந்த காரணம் கொண்டும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (பிளாட்)இந்த ஆயுதங்கள் வந்தன என்று யாரிடமும் கூற வேண்டாம் மறுத்து விடுங்கள். காரணம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தான் என்று செய்தி பரவினால் தமிழ்நாடு பொலிஸார் கட்டாய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார். அவ்வளவு தான் நடந்தது உண்மை எங்கள் இயக்கம் செய்த தவறால் தான் ஆயுதங்கள் பிடிபட்டனர்.
பின்பு சென்னை வந்த சீனிவாசன் உமாமகேஸ்வரன் இடம் மிகவும் சண்டை பிடித்தார். தன் உயிரைப் பணயம் வைத்து கொண்டு வந்த ஆயுதங்களை கிளியர் பண்ண எடுக்க முடியாத நீ எல்லாம் ஒரு தலைவன் உனக்கு ஒரு இயக்கம் என முகத்துக்கு நேராக கேட்டுவிட்டு இயக்கத்தை விட்டு விலகிப் போய்விட்டார்.
பகுதி 32
1985 ஆண்டு டெல்லியில் இலங்கையிலுள்ள விடுதலை இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் முக்கிய சந்திப்புகள் நடந்தன. முதலில் அதைப் பற்றி பார்ப்போம். இந்திரா காந்தி மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தி பிரதமராக வந்து இரண்டொரு மாதங்களில் எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் டெல்லி வரும்படி அழைப்பு வந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி அழைப்பு வரவில்லை. விடுதலைப் புலிகளின் சார்பில் பிரபாகரன், திலகர், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் பத்மநாபா, கேதீஸ்வரன், ஈரோஸ் சார்பில் பாலகுமார், ரத்ன சபாபதி, டெலோ சார்பில் ஸ்ரீசபாரத்தினம் கூட வந்தவர் பெயர் நினைவில் இல்லை, புளொட் சார்பில் செயலதிபர் உமாமகேஸ்வரன் மட்டும் வந்தார், டெல்லியில் அவருடன் நானும் சேர்ந்து கொண்டேன். எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் ஒரே ஓட்டலில் தங்கும் இடம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ஹோட்டல் தாசப்பிரகாஷ் என நினைக்கிறேன். செயலதிபர் உமா தனக்கு ரூம் வேண்டாம் என்று கூறி விட்டு என்னோடு வந்து தங்கிவிட்டார். அடுத்த நாள் காலை 10 மணிக்கு ஹோட்டல் தாசப்பிரகாஷ் வரச் சொன்னார்கள்.
காலையில் நாங்கள் அங்கு போனபோது எல்லா இயக்கத்தவர்களும் தயாராக வரவேற்பறையில் இருந்தார்கள். இந்திய அதிகாரிகள் தனித்தனி கார்களில் எங்களைக் கூட்டிக்கொண்டு பெரியவர் ஜி.பார்த்தசாரதி அவர்களின் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். ஜி.பி அவர்களும் அவர்களின் செயலாளர் அய்யாசாமி அவர்களும் எல்லோரையும் வரவேற்றார்கள். இதுதான் எல்லா இயக்கமும் சேர்ந்து ஒரு இந்திய அதிகாரிகளை சந்தித்த முதல் நேரம். பெரியவர் ஜி.பார்த்தசாரதி எல்லா தமிழில் விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் தெளிவாக ஒரு செய்தியைச் சொன்னார். அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது.
நாளை நீங்கள் இந்திய அதிகாரிகளையும் மத்திய அமைச்சரையும் சந்திக்கும்போது அவர்கள் உங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பது தனிநாடு எடுப்பதற்கு என்ற ரீதியில் கூறுவார்கள். ஆனால் உண்மையில் அது அல்ல காரணம். இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக இல்லை அமெரிக்காவின் நட்பு வளையத்தில் உள்ளது. திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் போன்றவை அமெரிக்க அரசு பெற்றுக்கொண்டது. இந்திய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக இருக்கும் என்பது உண்மை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கியபோது பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் ஒரு முடிவெடுத்து அந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். அதாவது இலங்கை அரசை பணிய செய்வதற்கு, அதாவது ஜெயவர்தனா அரசை நெருக்கடிக்குள்ளாகி இந்தியாவுக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் ஒரு நல்ல தீர்வு திட்டம் ஏற்படுத்தித் தர முடிவு செய்தோம். அதன்படி இந்தியா வந்து குவிந்துள்ள 4 பெரிய விடுதலை இயக்கங்களுக்கும் பயிற்சியும் ஆதரவு கொடுத்து இலங்கைக்கு அனுப்பி, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும்போது, இந்தியா மறுபுறம் அரசியல் ரீதியான நெருக்கடிகள் கொடுத்து நல்ல தீர்வை பெற்றுத் தர முடிவு செய்துள்ளோம். உங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பது தனிநாடு எடுப்பதற்காக என்று கூறினாலும் நீங்கள் அதை நம்ப வேண்டாம் என்பதை நீங்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தனித் தமிழ்நாடு கேட்டு போராட்டங்கள் நடந்தன. இப்ப அந்தப் போராட்டங்கள் இல்லை என்றாலும் நீறு பூத்த நெருப்பாக தனித் தமிழ்நாடு ஆர்வம் உள்ளது.
இலங்கையில் தனித் தமிழ் ஈழம் இந்தியா எடுப்பதற்கு உதவி செய்தால் இங்கும் பழையபடி தனித்தமிழ்நாடு போராட்டம் தலைதூக்கும் என்பது இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரியும். உங்களுக்கு இப்போது வெளிநாட்டு தொடர்புகள் ஒரு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தக்கூடிய தகுதிகள் எல்லாம் இருப்பதாக நினைக்கிறேன். இந்திய பயிற்சி , மற்றும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நீங்கள்நீங்கள் நாட்டுக்கு உங்கள்ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்.அங்கு நீங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்யுங்கள் மக்களுக்கு பாதுகாப்பாக இருங்கள். ஒவ்வொரு இயக்கங்களும் உங்களுக்குள் முரண்படாமல் உங்களுக்கு அதாவது ஒவ்வொரு இயக்கங்களும் தாங்கள் பாதுகாப்பாக இயங்க கூடிய இடங்களை தெரிவு செய்து அங்கு இயங்குங்கள். இங்கு பயிற்சி பெற்ற உங்கள் ஆட்களைக் கொண்டு நீங்கள் இலங்கையில் வைத்தே கூடுதலாகப் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுங்கள். இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுப்பதை நிறுத்துங்கள் அது உங்களுக்குப் பொருளாதார ரீதியிலும் கஷ்டத்தை கொடுக்கும்.இங்குள்ள மக்களோடு காலப்போக்கில் முரண்பட்டு பாரதூரமான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம் இங்கு. தமிழ்நாடு அரசாங்கம், தமிழ் நாட்டு அதிகாரிகள் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று.
நாங்கள் அமிர்தலிங்கம் மூலம் பெற்றுத் தரும் நல்ல ஒரு தீர்வை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் கடந்தகால ஒப்பந்தங்களைப் போல் இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தையும் மீறி தமிழருக்கு எதிராக நடந்தால் என்ன செய்வதென்று. இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது. முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி இதில் உறுதியாக இருந்தார். அப்படியும் இலங்கை அரசு தமிழருக்கு எதிரான நிலையை எடுத்தால் பெரிய போராட்டத்தை அங்கிருந்தே நடத்துங்கள். உங்களுக்குத்தான் இந்தியாவில் பெற்ற பயிற்சியும் ஆயுதங்களும் அனுபவமும் இருக்கிறது. அதோடு வெளிநாட்டு ஆதரவுகளையும் திரட்டக் கூடிய அனுபவம் வந்துவிட்டது. அப்போது இந்தியாவின் மனநிலைகள் கூட மாற்றம் ஏற்படலாம். தமிழ் ஈழத்தை கூட ஆதரித்து அங்கீகரிக்கலாம். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். நம்பிக்கையோடு இருங்கள். நாளை உங்களுக்கு இந்திய அதிகாரிகள் தமிழீழம் பற்றி கொடுக்கும் வாக்குகளை நம்ப வேண்டாம் என்று பல புத்திமதிகளை கூறி எங்களை அனுப்பி விட்டார்.
வெளியில் வந்த தலைவர்கள் எல்லோரும் குழம்பிப் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்ப ஹோட்டலுக்குப் போய் அங்கிருந்த தனிமையான ஒரு ரிசப்ஷன் அறையில் செயலதிபர் உட்பட நாங்கள் எல்லோரும் இதைப்பற்றி ஒற்றுமையாக கதைக்க தொடங்கினார்கள். அதாவது யாரும் அமிர்தலிங்கம் தலைமையில் ஒரு தீர்வு வருவதை விரும்பவில்லை. எல்லோரும் அமிர்தலிங்கத்தின் தலைமையில் ஏற்படும் தீர்வை எப்படியும் தடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். செயலதிபர் உமாமகேஸ்வரனும் ஈரோஸ் ரத்னசபாபதி நீண்ட நேரம் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பின்பு நடனசபாபதி எல்லோருக்கும் பொதுவாக அமிர்தலிங்கத்துக்கு எதிரான முடிவை நாங்கள் வெளியில் காட்டிக் கொண்டால் அது எமக்கு எதிராக திரும்பி விடும் என்று கூறி முடிக்க, பிரபாகரன், செயலதிபர் உமாமகேஸ்வரன் இருவரும் வெளிப்படையாகவே இதை செயல்படுத்த விடக்கூடாது என்று கூறினார்கள். அமிர்தலிங்கத்தை இந்திய அரசு வளர்த்து விடும் என்ற பயத்தில் முதல்முறையாக அமிர்தலிங்கத்தின் மேல் இயக்கங்கள் தங்கள் வெறுப்பை வளர்த்துக் கொண்ட பெரிய சந்தர்ப்பம் என நினைக்கிறேன். அடுத்த நாள் காலை அதிகாரிகள் எங்களை எல்லாம் வசந்த் விகார் என்ற இடத்தில் இருந்த பெரிய ஒரு கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்துப் போனார்கள். அங்கு எங்களை சந்திக்க ராஜீவ் காந்தியின் நண்பரும் இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இணை அமைச்சர் அருண் நேரு அவர்கள் வந்தார். அவர் வருவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகாரதொனியில் எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். பொதுவாக இயக்கத் தலைவர்கள் இடம் அவர்கள் அவர்கள் இயக்கங்கள் பற்றியும் அறிந்து கொண்டு இந்தியா உங்களுக்கு தனிநாடு பெற, பயிற்சியும் ஆயுதமும் கொடுக்கிறது நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிகாரத் தொனியில் மிக நல்ல முறையில் பேசினார். பின்பு அவருடன் வந்த ஒரு IB உளவுத்துறை சேர்ந்த அதிகாரியைக் கூப்பிட்டு ஏதோ பேசினார். எங்களைப் பார்த்து கொஞ்சம் கடுமையான தொனியில் தமிழ்நாட்டிலிருந்து எங்களுக்கு வரும் உங்களை இயக்கங்களைப் பற்றிய செய்திகள் நன்றாக இல்லை. நீங்கள் இந்திய அரசுக்கு, தமிழ்நாட்டு அரசுக்கு எதிரான உள்ளூர் அமைப்புகள் இயக்கங்கள் ஆகியவற்றோடு சேர்ந்து இயங்குவதாக அவர்களை ஊக்கப்படுத்தி இந்திய அரசுக்கு எதிராக ஆயுத, அரசியல் பயிற்சிகள் கொடுப்பதாக கவலை தரும் செய்திகள் இருக்கின்றன மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு உளவுத் துறை போன்றவை நமக்கு ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் நாட்டு பிரச்சினைக்காக இங்கு வந்தீர்கள். இங்கு வந்து உங்கள் நோக்கத்தை பார்த்துக் கொள்வதை விட்டு இந்திய அரசுக்கு எதிரான சக்திகளோடு சேர்ந்து இயங்குவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்களுக்கு எங்கள் உள்நாட்டு பாதுகாப்பு முக்கியம். தொடர்ந்து இந்த தவறை செய்யாமல் நீங்கள் இங்கு வந்த நோக்கத்தை மட்டும் பாருங்கள் என்று கடுமையாகக் கூறினார். உடன் எல்லா இயக்கங்களும் நாங்கள் அந்த தவறுகளை செய்யவில்லை. இலங்கையிலிருந்து சிறுசிறு தமிழ் குழுக்கள், அவர்கள்தான் தங்கள் வளர்ச்சிக்காக இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளோடு சேர்ந்து இயங்குவதாக சத்தியம் செய்யாத குறையாக கூறினார்கள். நான் நேரடி சாட்சியாக இருந்தேன். பயிற்சிக்கு வந்த இளைஞர்களை கொலைகள் செய்ததாகவும், தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பது, மாபியா கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பது, குற்றச்சாட்டுகளை கூறி திரும்பவும் எச்சரித்தார். அருண் நேருவொடு மீட்டிங் முடிந்து வந்த பின்பு ஒரு இயக்கங்களும் சரியாக ஒருத்தருக்கு ஒருத்தர் முகம் கொடுத்து பேசவில்லை. அன்று இரவு எல்லோருக்கும் சென்னைக்கு பயணம் செய்ய விமான டிக்கெட் கொடுத்தார்கள். நானும் செயலதிபர் உமாமகேஸ்வரனும் சில பத்திரிகை நண்பர்களை சந்தித்துவிட்டு எமது அறைக்கு திரும்பியபோது, முன்பே பழக்கமான IB உளவுத்துறை அதிகாரிகள் வந்து செயலதிபர் உமாவோடுmபேசினார்கள். நாங்கள் அவர்களிடம் மற்ற இயக்கங்கள் எல்.டி.டி உட்பட யார் யார் இந்திய அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளோடு தொடர்பு இருப்பதை விலாவாரியாக கூறினோம். போட்டுக் கொடுத்தோம். அந்த அதிகாரிகள் சிரித்துக்கொண்டு இதையேதான் மற்ற இயக்க தலைவர்களும் தனித்தனியே ரகசியமாக ஒவ்வொரு இயக்கத் தொடர்பு கொள்ளும் பற்றி விலாவாரியாக எங்களிடம் இன்று கூறினார்கள்.எங்களுக்கு தமிழ்நாடு உளவுத்துறை விபரமான ரிப்போர்ட் அனுப்பி உள்ளது. தயவு செய்து இனியாவது, பிரச்சினைகளின் விபரீதத்தை புரிந்து கொண்டு செயல்படுங்கள் என்று புத்திமதி கூறினார்கள். இந்த இரு அதிகாரிகளும் தான் முதன் முதலில் சென்னை மத்திய சிறையில் செயலதிபர் உமாமகேஸ்வரனையும், பிரபாகரனையும் சந்தித்து முதல் ரிப்போர்ட் இந்திய அரசுக்கு கொடுத்தவர்கள்.
தொடரும்...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 9
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode